எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, May 27, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!

உலகம்மைக்குத் திருவிளையாடல் புரியும் எண்ணம் வந்துவிட்டது. நமசிவாயக் கவிராயரின் புகழையும் உலகோர் அறியச் செய்யவேண்டும். ஆகவே வெற்றிலைக் காவி எச்சில் பட்ட அந்த ஆடையுடனேயே அம்பாள் சென்று மறைந்தாள். மறுநாள் காலை அர்ச்சகர் கோயிலுக்கு வந்து அம்பாளின் முதல்நாள் அலங்காரத்தைக் களைய முற்படுகையில் ஆடையில் படிந்திருந்த வெற்றிலைக் காவி எச்சில் திவலைகளைக் கண்டு யாரோ, நாத்திகனோ என்னமோ இவ்வாறு செய்திருக்கின்றானே என மனம் வருந்தினார். மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உடனே பிராயச் சித்தம் செய்ய அர்ச்சகருக்குக் கட்டளை இட்டுப் பின்னர் இந்தப் படுபாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிக்கவேண்டும் எனக் கூறி அவ்வாறே நாடெங்கும் தெரியப் படுத்தினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி நமசிவாயக் கவிராயரைப் பற்றிக் கூறி, இது அவரறியாமல் நடந்த ஒன்று என நடந்ததைக் கூற, மன்னன் மறுநாள் காலை கவிராயரை அவைக்கு வரவழைத்தான். என்னதான் அம்பிகையே கனவில் வந்து சொல்லி போயிருந்தாலும் மன்னன் கவிராயரின் பக்தியை அளவிட எண்ணினான்.

அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொற்கம்பிகளால் அதைச் சுற்றிக் கட்டினான். அந்தப் பூச்செண்டு சற்றும் அலுங்காமல் குலுங்காமல் அம்பாளின் கரத்திலிருந்து வருமாறு பாடல் பாடுமாறு கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி ஒன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கையில் இருந்த பூச்செண்டைச் சுற்றிக் கட்டியிருந்த கம்பிகள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இத்தகைய சிறப்புக் கொண்ட தலம் பாபநாசம். நம் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபநாசரைத் தரிசனம் செய்து கொள்ளலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் இந்தத் தலத்தைக் குறித்துப் பாடி இருக்கின்றனர்.

//பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே. //

திருஞானசம்பந்தர் பதிகம்


உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே
திருநாவுக்கரசர் தேவாரம்

மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் இடம் பெற்றிருக்கின்றதாய்த் தெரிந்து கொள்கின்றோம். கோயில் மிகப் பெரிய கோயிலே. கோயிலின் முன் தாமிரபரணி ஆறைக் கண்டாலே மனம் சொல்லவொணா மகிழ்ச்சியில் குதிக்கின்றது. நீராடும் வசதிகளோடு அமைந்துள்ளது. நாங்கள் சென்ற நேரம் உச்சிக்கால வழிபாட்டு நேரம். குருக்கள் நன்றாய், நிதானமாய் வழிபாடுகளை நடத்துகின்றார். அங்கிருந்து மற்ற எந்தக் கோயில்கள் முக்கியம் , எப்போது தரிசனம் செய்யலாம் என்ற தகவல்களையும் தருகின்றார். கோயிலின் சுற்றுப் புறத்தையும், அமைதியையும் பார்த்தால் அங்கேயே ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொண்டுவிட்டால் நல்லா இருக்குமேனு மனதில் ஏக்கம் வருகின்றது.

5 comments:

குப்பன்.யாஹூ said...

அருமை, நன்றிகள் பல, அறிய தகவல்களை பகிர்ந்தமைக்கு என்றென்றும் நன்றி.

குப்பன்_யாஹூ

கபீரன்பன் said...

///கோயிலின் சுற்றுப் புறத்தையும், அமைதியையும் பார்த்தால் அங்கேயே ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொண்டுவிட்டால் நல்லா இருக்குமேனு மனதில் ஏக்கம் வருகின்றது///

அம்மாதிரி சந்தர்பங்களில் எனக்கு அங்கேயே பக்கத்தில் ஏதாவது ஒரு வீடு பிடிச்சு இருந்துவிட முடியுமான்னு தோணும் :)))

Geetha Sambasivam said...

விடாமல் தொடர்ந்து படித்து வருவதற்கு மிக்க நன்றி, குப்பன் யாஹூ அவர்களே.

Geetha Sambasivam said...

@கபீரன்பன்,
//அம்மாதிரி சந்தர்பங்களில் எனக்கு அங்கேயே பக்கத்தில் ஏதாவது ஒரு வீடு பிடிச்சு இருந்துவிட முடியுமான்னு தோணும் :)))//

ரொம்பச் சரியான வார்த்தை, பல இடங்களையும் பார்க்கும்போது இப்படித் தான் தோணி இருக்கு. முக்கியமா பாபநாசம் அமைதியே தனி. ஆனால் குற்றாலத்தில் இந்த அமைதியை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. :((((

Geetha Sambasivam said...

@தமிழர், நன்றி, அழைப்புக்கு.