எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, July 05, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! திருச்செந்தூர்! 2

இந்தக் கோயிலின் அமைப்பு ஓம் வடிவத்தினால் ஆனது என்று சொல்லுவார்கள். பிள்ளையார் சந்நதி, வள்ளி, தேவசேனா சந்நதி, திருமால் சந்நதி எல்லாம் சேர்ந்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்ற எழுத்தைப் போல் வரும் என்று சொல்கின்றனர்.

சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் எனப் படுகிறது. அதிக தெய்வபக்தி உள்ளவனே சூரபத்மன். பொதுவாக அரக்கர்கள் என இவர்களைக் குறிப்பிடுவதின் காரணமே, தம் தெய்வபக்தியையும், படித்திருக்கும் விசாலமான படிப்பையும், செய்திருக்கும் தவங்களையும், அதனால் அடைந்திருக்கும் அதி விசேஷமான வரங்களையும் ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தாமல், மக்களுக்குத் துன்பம் இழைக்கும் வழியிலேயே செலவிடுவதே காரணம். அதீதமான தெய்வசக்தியைப் பெற்ற சூரபத்மன் அந்தச் சக்தியின் உதவியால் மூன்று உலகையும் ஆண்டு வந்தான். ஆனால் ஆணவம் மிகக் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்ய ஆரம்பித்து மக்களைத் துன்புறுத்தினான். இந்தச் செயல்களை அழித்து சூரனை நல்வழிப்படுத்தவே கந்தன் திருஅவதாரம்.

சூரனின் சகோதரர்களை ஒழித்த முருகக் கடவுள் சூரனுடன் போர் செய்தார். முருகன் = அருள் என்றால் சூரன்= இருள், முருகன்= கருணை என்றால் சூரன்= கொடுமை, முருகன்= அறிவு என்றால் சூரன் = அறியாமை என்னும் மருள். சூரனின் ஒரு பாதி "நான்" மறுபாதி "எனது" இந்த இரண்டையும் கொண்ட சூரன் மாமரமாக மாறிக் கடலடியில் தலைகீழாக நின்று முருகனை ஏமாற்ற நினைத்தான். ஆனால் அவனால் முடியலை. கந்தனின் வெற்றிவேல், சொன்னதைச் செய்யும் தீரவேல் அந்த மரத்தை இருபகுதியாகப் பிளந்தது. ஒரு பாகம் ஆண்மயிலாகவும், மற்றொரு பாகம் சேவலாகவும் மாற்றி முருகன் ஆண்மயிலைத் தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடலில் நீராடிவிட்டுப் பின்னர் அங்கே இருக்கும் நாழிக்கிணறு என்றழைக்கப் படும் ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். இந்த நாழிக்கிணறு ஏழு அடி ஆழமே உள்ளது எனவும், எப்போதும் இதில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் எனவும் சொல்கின்றனர். சூரனோடு போரிட சுப்ரமணியர் வந்தபோது அவருடன் போரிட்ட படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக முருகன் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்தார் என்றும் அதனாலே இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தக் கிணற்றுக்கு ஸ்கந்த புஷ்கரணி என்ற பெயரும் உண்டு.வள்ளி ஒளிந்திருந்ததாகச் சொல்லப் படும் வள்ளி குகையும் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. அதுக்குத் தனியாக் கட்டணம் செலுத்தணும். உள்ளே செல்லுவது கொஞ்சம் கஷ்டம் தான். மெதுவா உட்கார்ந்து உடலை வளைத்து நெளித்தே போகணும். கழுத்து பிரச்னை என் கணவருக்கு அதிகமா இருந்ததால் கொஞ்சம் யோசிச்சுட்டுப் போகவேண்டாம்னு முடிவெடுத்தோம். ஏற்கெனவே பார்த்தாலும் திரும்பிப் பார்க்க ஆசைதான். ஆனால் அந்தச் சமயம் அவருக்குப் பிரச்னை அதிகமா இருந்தது. நாழிக்கிணற்றின் அருகே நெருங்கவே முடியலை. கூட வந்தவர் கிட்டே சொல்லிக் கொஞ்சம் நீர் கொண்டுவரச் செய்து மேலே தெளித்துக் கொண்டோம். அவ்வளவே முடிந்தது. கோயிலுக்குள் நுழைய ஷண்முகவிலாசம் மண்டபத்தைக் கடந்தே செல்லவேண்டும். அங்கே வெகு தூரத்தில் இருந்தும் வந்த பயணிகள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக இருக்கும்.


படங்கள் உதவி: திகழ்மிளிர். கேட்காமல் எடுத்ததுக்கு மன்னிக்கவும்.

2 comments:

குப்பன்.யாஹூ said...

பதிவிற்கு நன்றி, நாழிக் கிணறையும் , வள்ளி குகை யையும் , திருசெந்தூர் பனம் கருப்பட்டி பொட்டலத்தையும் எங்கள் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.

செந்தூர் கடலை பார்க்கும் பொது எல்லாம் எனக்கு தோன்றுவது, கற்றது கை மண் கல்லாதது உலக அளவு என்பதே.

குப்பன்_யாஹூ

கபீரன்பன் said...

எட்டு வருஷத்துக்கு முந்தி குமரி வரை சென்று திரும்பும் வழியில் குமரனையும் வழிப்பட்டு வரலாம் என்று போனால் கூட்டமான கூட்டம். பயண அயர்ச்சி மாலைக்குள் மதுரை திரும்ப வேண்டிய கட்டாயம் எல்லாம் சேர்ந்து முருகனை வெளிப் பிராகரத்திலி்ருந்தே நமஸ்கரித்து கடலில் காலை நனைத்து வந்தேன்.
தங்கள் கட்டுரையை படித்ததும் மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது. முருகன் தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்.
நன்றி