எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, October 03, 2006

35.ஓம் நமச்சிவாயா-6

பசுபதி நாதர் கோவில் மற்றும் பூடா நீல்கண்ட் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்புவதற்குள்ளேயே மணி 1 ஆகி விட்டது. கடைசியாக "ஸ்வயம்புநாத்" கோவில். இது புத்தர்களின் கோவில். கிட்டத்தட்ட ஒரு புத்த விஹாரம். கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளி ஒரு சிறிய மலை மேல் இருக்கிறது. ஊரே ஒரே ஏஏஏஏற்றமும் இறக்கமும் உள்ளது. குறுகலான தெருக்கள். அதில் ட்ராஃபிக் ஜாம் வேறு. நம் ஊரில் என்றால் ஒரே டென்ஷன் ஆகிவிடுவார்கள். இங்கே அதைப் பற்றிக் கவலையே இல்லை. ஒரு வழியாக ஸ்வயம்புநாத்" கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். இங்கே உள்ள புத்தர் சிலை மிகப் பெரிது. அநேகமாக எல்லா ஹிந்திப் படத்திலும் நடித்த புத்தர் கோயில் இதுவாக இருக்கும். 4 பக்கமும் பார்க்குமாறு வடிவமைக்கப் பட்ட மிகப் பெரிய புத்தர் சிலை குன்றின் உச்சியில் இருக்கிறது. சில பல படிகள் மேலே ஏறிப் போய்த் தான் தரிசனம் செய்ய வேண்டும். சரி, கைலாஷ் மலையில் "பரிக்ரமா" செய்ய உதவி என்று எல்லாருமே ஏற முடியாமல் ஏறிப் போனோம். படிகள் இருக்கின்றன, என்றாலும் சில இடங்களில் செங்குத்தான அமைப்பாக இருப்பதால் ஏறச் சிரமம் தான் எல்லாருக்குமே. ஒரு வழியாக மேலே ஏறிப் போய்ப் பார்த்தோம். புத்தரின் 4 முக தரிசனமும் தெரியும் 4 பக்கமும் போய்ப் பார்த்தால் உயரே இருந்து காட்மாண்டு நகரம் பூராவும் தெரிகிறது. மிகப் பெரிய நகரமாக இருக்கிறது. கீழே "பாக்மதி" நதி வளைந்து வளைந்து ஓடுவது ஒரு வெள்ளிக் கோடாகத் தெரிகிறது. உயரே கோவிலில் சின்னச் சின்னச் சன்னதிகள், அதில் சில புத்தர் சிலைகள், நம் ஊர் அம்மன் மாதிரிச் சிலைகள், பிறகு வெளியே வந்தால் எல்லாரும் கையால் உருட்டி விடும் பித்தளை ட்ரம் போன்ற அமைப்பு சுவற்றைச் சுற்றி. என்ன காரணம் என்று தெரியாமலேயே நாங்களும் அதை ஒவ்வொன்றாக உருட்டி விட்டு வந்தோம். கோவிலுக்கு எதிரேயே ஒரு புத்த பிட்சுக்களின் மடாலயமும்,பள்ளியும் இருக்கிறது. பல இளம் பிட்சுக்கள் (இளம் என்றால் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட) காலில் செருப்புக் கூட இல்லாமல் மலை ஏறி வழிபட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஒரு 20 வயதுக்கு உட்பட்ட பிட்சு காவல் மாதிரி கூட வருகிறார் " ஸ்வயம்புநாத்" மலை ஏறும், இறங்கும் பாதை பூரா ருத்திராட்சம், ஸ்படிகம், பவளம், முத்து, கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகள். எல்லாரும் கடைகளைச் சூழ்ந்து கொள்ள நான் மட்டும் வண்டிக்குப் போய்விட்டேன். என்னை இந்த மாதிரி "ஷாப்பிங்" அவ்வளவாகக் கவர்ந்தது கிடையாது. முதலில் போகும் ஊரில் எல்லாம் சாமானாக வாங்கிக் குவித்தால் எங்கே வைத்துக் கொள்வது? அதை என்ன செய்வது? சற்றும் உபயோகம் ஆகாத பொருட்கள் என்று என்வரை அபிப்பிராயம். என் கணவரும் சில மணி, தட்டு, சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு விலையைக் கேட்டு மயக்கம் வந்து, வண்டிக்குத் திரும்பி விட்டார். பின் எல்லாரும் ஹோட்டல் அறைக்குப் போய்ச் சாப்பிடப் போனோம்.சாப்பாடு தயார் ஆகாத நிலையில் எல்லாரும் சூழ்ந்து கொண்டு அவசரப் படுத்தினர். எல்லாருக்கும் அவ்வளவு பசி. இதற்குள் மணி மூன்று ஆகிவிட்டது. சென்னையில் இருந்து ரெயில் மூலம் வருபவர்கள் ஒரு 22 பேர் வந்து சேர்ந்தார்கள். பின் எல்லாரும் அன்று இரவுச் சாப்பாட்டுக்குப் பின் கூடிப் பேசி மறுநாள் பிரயாணத்திற்குத் தயார் ஆகவேண்டியது பற்றி விவாதிக்க ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப் பட்டது. அவ்வளவில் எல்லாரும் அவரவர் அறைக்குப் போனோம்.

மாலை நாங்கள் கணினி சேவை மையம் போய் ஒரு மெயில் கொடுத்தோம் யு.எஸ்ஸுக்கு. அதையே பையன், பெண் இரண்டு பேருக்கும் அனுப்பினோம். அதற்கே 20ரூ வாங்கி கொண்டான் அந்த சேவை மையம் நடத்தும் பையன். என்னோட மெயில் அக்கவுண்டைச் செக் செய்து விடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. என் கணவர் கிட்டத் தட்ட என்னை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார். சரி, டீயாவது சாப்பிடலாம் என்று அங்கிருந்த ஒரு லோக்கல் டீக்கடை என்று சொல்லப்பட்ட இடத்துக்குப் போனோம்.டீ தயாரித்துக் கொடுத்தாள் அந்தப் பெண்மணி. ரொம்பக் குறந்த அளவே உள்ள அந்தத் தேநீருக்குப் பதினைந்து ரூபாய் ஆனது. இந்தியாவின் மேல் பாசம் அதிகமாகப் பொங்கி வழிய ஆரம்பித்தது. இதுக்கே இப்படியா இன்னும் இருக்கு பார் என்றது எங்கள் விதி. அது கை கொட்டிச் சிரித்தது எங்கள் யார் காதிலும் விழவில்லை. ஹோட்டல் அறைக்குப் போனோம். சற்று நேரத்தில் இரவுச் சாப்பாடு மற்றும் மீட்டிங்கிற்கு அழைப்பு வந்தது. எங்கள் "அன்னபூர்ணா ட்ராவல்ஸ்" மனோஹர் எங்களுக்கு நேபாளத்தில் இருக்கும், எங்கள் எல்லாரையும் கைலை யாத்திரைக்கு அழைத்துப் போகப் போகிற "எகோ ட்ராவல்ஸ்"ஸின் முக்கிய நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். சாப்பாடு முடிந்து மீட்டிங் ஆரம்பம் ஆனது. உடனேயே எங்கள் குழுவில் இருந்தவர்களின் குறைகளும் ஆரம்பித்தன. கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மீட்டிங்கில் முதலில் எங்களுக்குப் பேச வாய்ப்புக் கொடுங்கள், பிறகு நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள் என்று எங்கள் குழுவினர் சொல்ல ட்ராவல்ஸ்காரர்கள் முதலில் திகைத்தாலும் பின் சரி என்றார்கள். அன்று காலைக் காப்பி கொடுக்கவில்லை என்பதில் இருந்து ஆரம்பித்து பசுபதிநாதர் கோவிலில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தரவில்லை என்பது வரை எல்லாரும் அவரவர் மனத்தில் உள்ள குறைகளைச் சொல்ல அவர்கள் கேட்டுக் கொண்டு திரும்பி வரும்போது மறுபடி தரிசனம் செய்து வைக்கிறோம் எனச் சொல்லி சமாதானம் செய்தார்கள். சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் சிலரின் குறை. ஆகவே அம்மாதிரிக் குறை சொன்னவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப் பட்டது. ஓரளவு சமாதானம் ஆகி மீட்டிங் ஆரம்பம் ஆனது.

2 comments:

Geetha Sambasivam said...

இரண்டு, மூன்று நாளாகவே வேலை கொஞ்சம் ஜாஸ்தி. பாதி பப்ளிஷ் பண்ணுவேன், ஏதாவது வேலை வரும், அல்லது யாராவது கூப்பிடுவார்கள், போய் விடுவேன் அணைத்து விட்டு, அதனால் சில சமயம் முடியாமல் போகிறது. இன்னும் சில வலைப்பக்கங்கள் போய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. குழுவாக நாங்கள் இப்போது தான் முதல் முறையாகப் போனோம். இது வரை போய் வந்தது எல்லாமே இந்தியாவுக்குள், நமக்கோ மொழிப் பிரச்னை இல்லை, ஆகவே நாங்களாகத் தான் போவோம், வருவோம்.

Porkodi (பொற்கொடி) said...

samdhanam aagi meeting mudinjuda arambichuda?!