எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, August 28, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் ---திருக்கோயில் வழிபாட்டு முறைகள் --பகுதி 6

இவர்களைத் தவிரவும், தெய்வ வடிவங்களைச் செதுக்கும் சிற்பிகள், கொடிகளுக்கு வர்ணம் தீட்டும் சம்மியர்கள், புதிய நகையைச் செய்து கொடுத்துப் பழையனவற்றைப் புதுப்பிக்கும் பொற்கொல்லர்கள், பாத்திரங்கள் செய்யும் கன்னார்கள், கோயில் மணிகள், சேமக்கலங்கள், நிலைவிளக்குகள், பீடங்கள், படிகள் ஆகியனவற்றைச் செய்யும்  உலோக வேலைக்காரர்கள் ஆகியோரும் இவர்களில் உண்டு.

அடுத்த தொகுதியில் தையற்காரர்கள், தச்சர்கள், நெசவாளர்கள் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் கோயில் தூண்களிலும், பந்தல் கூரைகளிலும் தொங்கவிடப்படும் விதானங்கள், மடிப்புத் தொங்கல்கள் முதலியனவற்றைத் தைத்துச் சரிகை வேலைப்பாடுகள் , சித்திரவேலை போன்றவற்றால் அழகு செய்வார்கள்.  சுவாமிக்குரிய ஆடைகள், தோரணம், கொடி போன்றவற்றையும் தயாரிப்பார்கள்.  சுவாமி வீதி உலா வருகையில் பிடிக்கும் குடைகள், ஆலவட்டங்கள், விருதுச் சின்னங்கள், பல்லக்கை அலங்கரிக்கும் மேற்புறத் துகில்கள்  முதலியவற்றைத் தச்சர்களும், பூமாலைகள் தொடுப்பதற்கான சரிகைகள், சாமரைகள், ஒட்டடை நீக்கிகள், தொங்கும் குஞ்சங்கள் ஆகியவற்றை நெசவாளர்களும் செய்து வந்தனர்.

அடுத்த பணியாளரில் முக்கியமானவர்கள் சலவைக்காரர்கள் ஆவார்கள்.  இவர்கள் சுவாமிக்குச் சார்த்தப்படும் ஆடைகளைத் துவைத்து உலர்த்தியும் பூஜையின் போது பயன்படும் தட்டுக்களை மூடும் துணிகளையும் துவைப்பார்கள். சுவாமியின் ஆடைகளைச் சிறப்புச் சலவையாளர் தினம் தினம் துவைப்பார்.  அப்படி ஒரு சலவையாளருக்குக் கோயிலொழுகில் சிறப்பானதொரு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி சுல்தானின் காலத்தில் இங்கே நடந்த படையெடுப்பில் கவர்ந்து செல்லப்பட்ட அழகிய மணவாளர் பல வருடங்கள் கழித்துத் திரும்ப இங்கே வந்தபோது அவரைப் பிரதிஷ்டை செய்யக் காரணமாக இருந்தவர் ஒரு கண் தெரியாத வயதான சலவைக்காரரே.

தினம் தினம் அழகிய மணவாளரின் ஆடையைத் துவைத்து அந்த நீரைப் பிரசாதமாக அருந்தும் வழக்கம் உள்ள அந்தச் சலவைக்காரர் அடி மனதில் அந்த நீரின் வாசம் தங்கி இருந்தது.  பின்னர் வெகு காலம் கழித்து வந்த அழகிய மணவாளர் முதலில் இங்கே இருந்தவர் தானா எனப் பலருக்கும் சந்தேகம்.  ஆகவே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்ரஹத்திற்கும், அறுபது ஆண்டுகள் கழித்து வந்த அழகிய மணவாளருக்கும் திருமஞ்சனம் செய்விக்கப் பட்டு அந்த ஆடையை இந்த வயது முதிர்ந்த கண் தெரியாத சலவைக்காரரிடம் கொடுக்க அவர் அந்த ஆடைகளைப் பிழிந்து அந்த நீரை உட்கொண்டதும், அழகிய மணவாளர் தான் இங்கே இருந்த பெருமாள் என்பது புரிந்து, "இவரே நம்பெருமாள், இவரே நம் பெருமாள்!" என்று ஆனந்தக் கூச்சலிட்டாராம்.  ஆகவே அன்று முதல் அழகிய மணவாளரும் நம்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார்.  இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன்.

அடுத்த தொகுதியினர் குயவர்கள்.  தினம் தினம் நிவேதனத்துக்குப் பயன்படும் மட்பாண்டங்களை இவர்களே செய்து தருவார்கள்.  குயவர்களுக்கு அடுத்துப்  படகோட்டிகள்.  அந்நாட்களில் காவிரியில் நீர் வரத்து இருந்து வந்திருக்கிறது என்பதால், காவிரியின் அக்கரையில் இருந்து திருமடைப்பள்ளிக்குத் தேவையான பால், தயிர் போன்றவற்றையும் மற்றப்பொருட்களையும்  கொண்டு வந்து சேர்ப்பார்கள்.  இவர்களைத் தவிர இசைவாணர்கள், நடன ஆசிரியர்கள் போன்றோரும் கோயிலைச் சேர்ந்த பணியாளர்களே ஆவார்கள்.

முதலில் சொன்ன பத்துத் தொகுதியினரோடு இவர்கள் பத்துத் தொகுதியினரும் சேர்ந்து மொத்தம் இருபது தொகுதியினர் கோயில் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர்.  இவர்களை ஆள எந்த சபையுமோ, அல்லது குழுவோ இல்லை.  கோயிலின் ஆட்சித் தலைவரையே அது முழுதும் சார்ந்திருந்தது.  அடுத்து ஆட்சித் தலைவரின் பணிகள் எப்படிப்பட்டது எனப் பார்க்கலாம்.

1 comment:

ஸ்ரீராம். said...

படிச்சாச்...