சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் எனப் படுகிறது. அதிக தெய்வபக்தி உள்ளவனே சூரபத்மன். பொதுவாக அரக்கர்கள் என இவர்களைக் குறிப்பிடுவதின் காரணமே, தம் தெய்வபக்தியையும், படித்திருக்கும் விசாலமான படிப்பையும், செய்திருக்கும் தவங்களையும், அதனால் அடைந்திருக்கும் அதி விசேஷமான வரங்களையும் ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தாமல், மக்களுக்குத் துன்பம் இழைக்கும் வழியிலேயே செலவிடுவதே காரணம். அதீதமான தெய்வசக்தியைப் பெற்ற சூரபத்மன் அந்தச் சக்தியின் உதவியால் மூன்று உலகையும் ஆண்டு வந்தான். ஆனால் ஆணவம் மிகக் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்ய ஆரம்பித்து மக்களைத் துன்புறுத்தினான். இந்தச் செயல்களை அழித்து சூரனை நல்வழிப்படுத்தவே கந்தன் திருஅவதாரம்.
சூரனின் சகோதரர்களை ஒழித்த முருகக் கடவுள் சூரனுடன் போர் செய்தார். முருகன் = அருள் என்றால் சூரன்= இருள், முருகன்= கருணை என்றால் சூரன்= கொடுமை, முருகன்= அறிவு என்றால் சூரன் = அறியாமை என்னும் மருள். சூரனின் ஒரு பாதி "நான்" மறுபாதி "எனது" இந்த இரண்டையும் கொண்ட சூரன் மாமரமாக மாறிக் கடலடியில் தலைகீழாக நின்று முருகனை ஏமாற்ற நினைத்தான். ஆனால் அவனால் முடியலை. கந்தனின் வெற்றிவேல், சொன்னதைச் செய்யும் தீரவேல் அந்த மரத்தை இருபகுதியாகப் பிளந்தது. ஒரு பாகம் ஆண்மயிலாகவும், மற்றொரு பாகம் சேவலாகவும் மாற்றி முருகன் ஆண்மயிலைத் தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் வைத்துக் கொண்டார்.
இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடலில் நீராடிவிட்டுப் பின்னர் அங்கே இருக்கும் நாழிக்கிணறு என்றழைக்கப் படும் ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடுகின்றனர்.
படங்கள் உதவி: திகழ்மிளிர். கேட்காமல் எடுத்ததுக்கு மன்னிக்கவும்.