எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, April 22, 2009

ஜெய் சோம்நாத்- நிறைவுப் பகுதி!

எனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லப் படும் வண்ணம் சிற்பக் கலையில் சிறந்து விளங்கியது கோயில். அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம். ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது. பக்தனுக்காகப் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட எம்மான், இங்கே கல்லாலும், வில்லாலும், சொல்லாலும், கத்தியாலும், எத்தனை முறைகள் அடித்து நொறுக்கப் பட்டிருக்கும் என்பதை நினைத்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகுகின்றது. எல்லா வடநாட்டுச் சிவன் கோயில்களையும் போலப் பார்வதி தேவி, சிவலிங்கத்திற்குப் பின்னால் நின்ற வண்ணம் அருளாட்சி செய்கின்றாள். கூடவே விநாயகர், பிரம்மா, விஷ்ணு, துர்கை ஆகியோருக்கும் சந்நதிகள் இருக்கின்றன. அதிகம் கார்த்திகேயன் என அழைக்கப் படும் சுப்ரமணியர் சந்நதி காணப் படுவதில்லை. பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது. அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர்.

சர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும் காண முடிகின்றது. புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாய் கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலே ஸ்ரீகிருஷ்ணர் தன் உயிரைப் போக்கிக் கொண்ட இடம் சோம்நாத்தில் தான். சோம்நாத்திற்கு அருகே உள்ள வெராவல்லில் தான் பாலிகா தீர்த்தம் என்னும் தீர்த்தக் கரையில் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணரின் பாதத்தில் ஜரா என்னும் வேடன் அம்பு எய்து விடுகின்றான். இந்த அரசமரத்தைச் சுற்றியும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெராவலில் இருந்து ஒன்றரை மைல் நடந்தே, ஸ்ரீகிருஷ்ணரை பலராமர் மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றார். இங்கே வந்ததும் ஓர் ஆலமரத்தடியில் படுக்க, பலராமரோ தங்கள் இருவருக்கும் முடிவு வந்துவிட்டதை உணர்ந்து, அங்கே உள்ள ஒரு குகைக்குள் சென்று பாதாளத்தில் மறைகின்றார். அந்தக் குகை தாவுஜியின் குகை என்ற பெயரில் ஒரு கோயிலாக அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணரும் அங்கேயே தன் உயிரைப் போக்கிக் கொண்டு வைகுந்தம் சென்று விடுகின்றார். பாம்பாக உருமாறிச் சென்ற தன் அண்ணனையும், தன்னைத் தானே தன் சுய உருவிலும், பிரம்மா, சிவன் போன்ற மற்றத் தெய்வங்களையும் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் தாமரை போன்ற தன் நயனங்களை அழுந்த மூடிக் கொண்டார். ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்கள் ஒரு சிற்ப உருவில் பதிந்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல தன் மானுட உடலை விடுத்துத் தன் சுய உருவோடு யோக முறைப்படி கலந்தார் என பாகவதம் சொல்லுகின்றது. பதினைந்து வருடங்கள் முன்பு இங்கே எல்லாம் நடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் கல்லும், காடுமாய் இருந்தது. இப்போது செப்பனிட்டு, கட்டிடங்கள் எழுப்பி, மண்டபம் போல் அமைப்புகளுடன், ஒரு கீதா மந்திரும் அமைத்திருக்கின்றனர். பலராமர் குகை முன்னே கொஞ்சம் பயமாகவே இருக்கும் உள்ளே செல்ல. இம்முறை அப்படி இல்லை. அருகேயே ஹிரன்யா நதிக்கரையில் இன்னொரு சிவன் கோயிலும் உள்ளது.

Tuesday, April 21, 2009

ஜெய் சோம்நாத்!

இதன் பின்னர் கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோரால் ஆலயம் இடிக்கப் பட்டது. images.jpgsomnath.jpg

 

பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத்  ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை.  இந்திய சுதந்திரத்தின் போது ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார்.images.jpgtemple.jpg பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.

 

சோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம்  அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார். somnath-temple-706_m.jpgஇந்தப் படத்தில் காணும்படியான அருகாமையில் தற்சமயம் செல்ல முடியாது. மிகத் தொலைவிலேயே வண்டிகள் நிறுத்தப் படுகின்றன. கடுமையான பாதுகாப்பு உள்ளது. சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றார்கள். பொருட்கள் அனைத்தும் காவலர்களால் கடுமையான சோதனைக்குப் பின்னர் அவர்கள் பாதுகாப்பில் இருக்க நாம் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லவேண்டும். மற்றப் பணம் முதலியன இருந்தாலும் அவற்றைக் கைப்பையில் வைத்துக் காவலர்களிடம் கொடுத்துவிட வேண்டும். பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிச் சாவியை நம்மிடம் கொடுத்துவிடுவார்கள். ஒரே சாவிதான் ஆகையால் பத்திரமாய் வைத்துக்கொள்ள வேண்டும். படம் உதவி, கூகிளார் தான். பெரிய படமாய்ப் போட முடியலை.


நாளை இந்தக் கோயில் பற்றிய சில விவரங்களோடு இது முடிவடையும். மெயில் மூலம் போஸ்டிங் போடுகிறேன். படங்களைச் சேர்க்காமல் முன்னே கொடுத்தேன், எண்ணங்கள் பதிவிலேயும், மதுரை மாநகரம் பதிவிலேயும், இப்போப்படங்களையும் சேர்த்துக் கொடுக்கிறேன். சரியா வந்தால் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா எல்லாம். தேர்தல் நேரம், அப்புறமா யாருக்குமே சீட் கிடைக்காது. :P

Saturday, April 18, 2009

ஜெய் சோம்நாத்!

சோமநாதர் கோயில் சைவர்களுக்கு, அதாவது சிவனை வழிபடுபவர்களுக்கு முக்கியமான இடமாக இருந்து வந்தது. அதன் உயர்ந்த லகுளீச சம்பிரதாயமும், அதைக் கடைப்பிடித்த ஆசாரியர்களும் மிகவும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். இந்தக் கோயிலைக் கைப்பற்றினாலே நாட்டைப் பிடிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட அந்நியர்களில் முகமது கஜினி கி.பி.1025-ம் ஆண்டு இந்தக் கோயிலைத் தாக்கினான் முதல்முறையாக. சோமநாத ஜ்யோதிர்லிங்கமும் உடைக்கப் பட்டது. கி.பி 1000-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மீதும், இந்தியக் கோயில்கள் மீதும் படை எடுத்த முகமது கஜினி முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஷாஹி அரசர்களை விரட்டியதோடு, 1009-ம் ஆண்டு பிரசித்தி பெற்ற நாகர்கோட் கோயிலையும், 1011-ம் ஆண்டு தானேஸ்வரத்தின் சக்ரஸ்வாமி என்ற பெயர் பெற்ற விஷ்ணு கோயிலையும் இடித்தான். கன்னோஜி, மதுரா போன்ற நகரங்களும் சூறையாடப் பட்டன. அதிலிருந்து ஆரம்பித்துக் கடும் முயற்சியின் பேரில் கஜினியால் சோமநாதர் கோயிலும் இடிக்கப் பட்டது. அது குறித்து தாரிக்-இ-ஃபிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறுவது:

முகமது தன் பெரிய படையோடு கஜினியில் இருந்து கி.பி. 1024-ம் ஆண்டு புறப்பட்டான். முகமதிய ஆண்டு ஷபான் ஏ.எச். 415 என்று சொல்லப் படுகிறது. படையின் வீரர்களுக்குச் சம்பளம் இல்லை. ஆனால் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும் ஆவலிலே வந்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. எதிர்ப்புகள் அதிகம் இல்லாத பாதையில் எச்சரிக்கையோடு வந்த சுல்தான் சோமநாத்தில் முப்புறமும் கடலால் சூழப்பட்டும், கோட்டை கொத்தளங்களில் ஆயுதங்கள் தாங்கிய வீரர்களையும் கண்டான். இந்து அரசர்கள் ஆன பிரம்மதேவ், தபிஷ்லீம் என்ற இருவரின் படைகள் தலைமையில் போர் நடந்தது. முகமதியர்கள் சோர்வடையும் நேரம் கஜினி தன் குதிரையில் இருந்து கீழே இறங்கி தரையில் படிந்து வணங்கி, தன் படைகளுக்கு இறைவன் துணையை வேண்டினான். சுல்தானின் வீரத்தைக் கண்டு உற்சாகம் அடைந்த வீரர்கள் புது உற்சாகத்துடன் மோத ஆரம்பித்தனர். 5,000-க்கும் மேற்பட்ட ஹிந்து வீரர்கள் உயிரிழந்தனர். கோயிலை நெருங்கியதும், அற்புதமான எழிலோடு காட்சி அளித்த கோபுரம், சுல்தான் கண்களில் பட்டது. உள்ளே சிறந்த சிற்பங்களோடு, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட 56 கற்தூண்களும் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருந்தன.

அந்த அழகிய மண்டபத்தின் நடுவில் சோமநாதரின் சிலா உருவம். இரண்டடி பூமியில் பதிந்திருந்தது. சிலைக்கருகே சுல்தான் வந்து தன் கோடரியால் அதை உடைத்தான். கஜினிக்கு அனுப்பப் பட்டது அந்த உடைந்த சிலைத் துண்டுகள். சோமநாத லிங்கத்தின் துண்டுகளில் ஒன்று கஜினியில் உள்ள மசூதியின் வாயிலிலும், மற்றொரு துண்டு தனது அரண்மனை வாயிலிலும் கிடக்குமாறு ஆணையிட்டான் மன்னன். இன்றும் இவை கஜினியில் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மற்ற துண்டுகளில் இரண்டு மெக்காவுக்கும், மெதினாவுக்கும் அனுப்பப் பட்டன.

சுல்தானுக்குப் பெருமளவு பொன்னும், பொருளும் கொடுப்பதாயும் சிலையை உடைக்கவேண்டாம் எனவும் கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களால் கோரப் பட்டது. ஆனால் கஜினி பொன்னைப் பெற்றுக் கொண்டு போய்விட்டால் தான் விரும்பும் பட்டம் கிடைக்காது, சிலை விற்பவன் என்றே சொல்லுவார்கள் என நினைத்தான். ஆகவே சிலை உடைக்கப் பட்டது . என்று தாரிக்-இ-ஃபிரிஷ்டா என்னும் பாரசீக நூல் கூறும் செய்தி ஆகும். கஜினி எதிர்பாராமல் வந்து மோதியதாலேயே சோமநாதம் தகர்க்கப் பட்டது என்று சொல்லுகின்றனர். ஏனெனில் கஜினி வரப் போவதை அறிந்த இந்து மன்னர்கள் அனைவரும் பரம்தேவ் என்னும் அரசன் தலைமையில் ஒன்று கூடி முகமதின் வழியை மறைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கஜினி முகமதோ அவர்களை நேரில் சந்தித்துச் சண்டையிடாமல் அரபுக்கடற்கரை ஓரமாகவே வந்து, சிந்து வழியாக உள்ளே நுழைந்து முல்தான் வழியாகப் படை வீரர்களை வழி நடத்தினான். இதில் அவனுக்கும் பெருமளவில் உயிர்ச்சேதம் படைகளின் குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவை இறந்தன.


ஆனாலும் அப்போது மாலவத்தையும், குஜராத்தையும் ஆண்டு வந்த அரசர்கள் ஆன பீமனும் , போஜனும் சேர்ந்து இந்தக் கோயிலை உடனே கட்டினார்கள். அப்போது சக்கரவர்த்தியாக இருந்த சித்தராஜ ஜெயசிம்மன் என்பவன் இந்தக் கோயிலுக்கும்,கோயிலைத் தரிசிக்கச் செல்லும் யாத்ரீகர்களுக்கும் வரிவிலக்கு அளித்தான். அடுத்து வந்த குமாரபாலன் என்னும் அரசனும் கோயிலை விரிவு செய்து கொடுத்தான். மேலும் கோயிலுக்கு நடந்தே வந்து காணிக்கைகள் கொடுத்தான். அப்போது கன்யா குப்ஜத்தின் முக்கியஸ்தராய் இருந்து வந்த பாசுபத சைவத்தின் தலை சிறந்த ஆசாரியர் ஆன பாவா பிருஹஸ்பதி என்பவரை அழைத்துக் கோயிலின் புனர் சீரமைப்பு வேலைகளுக்கான அஸ்திவாரம் போட்டதோடு அவரின் ஆலோசனைகளின் பேரில் கோயிலையும் விரிவு செய்தான். பாவா பிருஹஸ்பதி சிவன் கோயில்கள் கட்டுவதில் அந்தக் காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்றவராய் இருந்து வந்தார். இவர் ஈசனின் அவதாரமாகவே கருதப் பட்டார். புதிய ஆலயம் கைலாச பர்வதம் போல ஒளி வீசிப் பிரகாசித்தது என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது எனச் சொல்கின்றனர்.

டிஸ்கி: சரித்திரக் குறிப்புகள் உதவி: IMMORTAL INDIA, VOLUME 2, BY J.H.DAVE, K.M. MUNSHI,
BHAVAN'S BOOK UNIVERSITY, PUBLISHED BY BHARATIYA VIDYA BHAVAN, BOMBAY. YEAR 1959, REPUBLISHED 1970

Thursday, April 16, 2009

ஜெய் சோம்நாத்!

லகுளீசர்கள்/லகுலீசர்கள்?? பற்றிய திரு வெங்கட்ராம் திவாகரின் குறிப்புகளில் இருந்து:

//கீதாம்மா!

காபாலிகர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. பாசுபத விரதிகளான லகுளீசர்கள் வேதம் கற்றவர்கள். ஆகமம் பயின்றவர்கள். மகுடாகம நிபுணர்கள். இப்போதும் காசியில் இவர்கள் பண்டிதர்களாகப் போற்றப்படுகின்றனர். பல புத்தகங்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சோழர்கள் காலத்தில் சமாதிக் கோயில் நிர்வாகங்களை இந்த குஜராத்திய லகுளீசர்கள் கவனித்துக் கொண்டார்கள். குறிப்பாக மாமன்னன் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர காலத்தில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் உடையாளூர் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ளன.//
***********************************************************************************

லகுலிசர்களைப் பற்றி திரு திவாகர் கூறியதைப் பார்த்தோம். மஹாபாரதத்திலும் வனபர்வத்தில் பீமனுக்கு புலஸ்தியர் இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை எடுத்துரைக்கிறார். அப்போது இங்கே ஈசன் அக்னி உருவில் நிரந்தரமாய் உறைந்திருப்பதாயும் பீமனுக்குச் சொல்லப் படுகின்றது. ஸ்காந்தத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் காலாக்னி ருத்ரனுடைய இடமாய் வர்ணிக்கப் படுவது தான் பின்னால் சோம்நாத் என்ற பெயரில் மாறி இருப்பதாகவும் ஐதீகம். சோமா என்றால் அம்பிகையுடன் சேர்ந்த ஈசனைக் குறிக்கின்றது. மேலும் ஸ்காந்த புராணத்தின் பிரபாஸ காண்டம் சொல்லுவதாவது: சோம்நாத் என்பதை ஹம்ஸ என்று சொல்லுகின்றது. சிவன் சக்தியான உமையுடன் ஐக்கியமாகி இருப்பதையே அது குறிப்பதாயும் சொல்லுகின்றது. “ஹம்ஸ” என்ற சொல்லிலேயே பரமபுருஷன் ஆன ஈசனும், ஈசனோடு ஐக்கியமான அம்பிகையான ப்ரக்ருதியும், அவர்களில் இருந்து பிறந்த பிரணவத்தையும் குறிக்கிறது. ஆகவே அம்பிகையும், ஈசனும் ஐக்கியமாகி உள்ள இந்த சோம்நாத் க்ஷேத்திரத்தின் மகிமை சொல்ல முடியாததாகும்.

இப்போது சோம்நாத்தின் சரித்திர முக்கியத்துவங்களைக் காண்போம். உலகிலேயே வேறெந்தக் கோயிலையும் விட மிக மிக அதிக அளவில் தாக்கப் பட்டு மூலஸ்தான மூர்த்தியே உடைத்தெறியப் பட்டது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. எனினும் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போலவே இந்தக் கோயிலும் ஒவ்வொரு முறையும் எழும்பி நின்றிருக்கின்றது. இனியும் நிற்கும். உலகப் புகழ் பெற்ற தாவர இயல் விஞ்ஞானியான ஜகதீஷ் சந்திரபோஸ், இந்தியாவின் கலாசாரத்தைப் பற்றிக்கூறுகையில், “ இந்த நாட்டின், இந்த இந்து மதம் என அழைக்கப் படும் நாகரீகத்தில் ஒரு அற்புத சக்தி இருக்கின்றது. அப்படிப்பட்ட அற்புத சக்தி இருப்பதாலேயே காலத்தினால் ஏற்படும் அனைத்து அழிவுகளையும், உலகத்திலே உள்ள பொருட்களைச் சிதைக்கும் மாறுதல்களையும் இது எதிர்த்தது, எதிர்க்க வல்லது.” என்று சொன்னார். எத்தகையதொரு தீர்க்க தரிசனம்? இன்றும் அப்படியே நடந்து வருவது இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. பல்வேறுவிதமான கலாசாரத் தாக்குதல்களிலேயும் நம் கலாசாரமானது இன்னும் உயிர்ப்புடனேயே இருந்து வருகின்றது என்று பெருமையுடனேயே சொல்லலாம். மஹாகவி பாரதியார் சொன்னது போல் நம் நாகரீகம் “மரணமில்லாத கற்பக விருக்ஷம்” அதற்கு எடுத்துக்காட்டுகளே, நம் கோயில்கள் ஆகும்.

இந்தப் பிரபாஸ பட்டணம் பற்றிய ஒரு குறிப்பு, இப்போதுள்ள சோம்நாத் நகரின் பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் கல்வெட்டுப் படி இந்தக் கோயில் சந்திரனால் பொன்னாலும், ராவணனால் வெள்ளியாலும், கிருஷ்ணரால் சந்தனத்தாலும், அதன் பின்னர் பீமதேவன் என்னும் மன்னனால் மணிகள் இழைக்கப் பட்ட கல்லாலும், கட்டப்பட்டுக் காலப் போக்கில் சிதிலமடைந்து, குமார பாலன் என்னும் மன்னனால் புதுப்பிக்கப் பட்டு மேரு என அழைக்கப் பட்டது. பீமன் என்னும் மன்னன் காலத்தில் கட்டப் பட்ட கற்கோயிலின் மிச்சம் இது எனச் சொல்லப் படுகின்றது. படங்கள் உதவி: கூகிளார். இப்போப் படம் எல்லாம் எடுக்க முடியலை. ஆனால் இந்த மிச்சம் இவ்வள்வு இல்லை எனினும் சிதைந்த கோயிலின் பகுதிகள் காணப் படுகின்றன.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப் பட்ட இந்தக் கோயில் அதன் பின்னர் ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நாலாம் தாராசேனன் என்பவனால் மீண்டும் கட்டப் பட்டது. அதன் பின்னர் கி.பி. 800-950 ஆண்டுகளுக்குள்ளாக சோமநாதர் ஆலயம் மீண்டும், மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. பத்தாம், பதினோராம் நூற்றாண்டில் கூர்ஜரம் என அப்போது அழைக்கப் பட்ட குஜராத்தின் பிரதிஹாரர்கள், தங்கள் சிற்றரசர்களிடம் செளராஷ்டிரத்தில் இருந்த இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஒப்படைத்துச் சிறப்பாய் நிர்வாகம் செய்யப் பட்டு சோமநாதம் புகழின் உச்சியில் இருந்தது. பிரபாஸ பட்டணம் என்ற இந்த சோமநாதம் கடற்கரையில் இருந்ததால் அயல்நாட்டு வாணிபத்திலும் சிறந்தே விளங்கி வந்திருக்கின்றது, பல நூற்றாண்டுகளுக்கும் மேலே. இஸ்லாமிய சமூகம் தோன்றும் முன்னர் இருந்தே வாணிபத்தில் புகழ் பெற்றிருந்த பிரபாஸ பட்டணத்தின் வாணிபம் பின்னும் சிறந்தே விளங்கியது. அரேபியக் கப்பல் தலைவன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கே மசூதி கட்டிக் கொள்ள அப்போதைய அரசன் அனுமதி கொடுத்ததோடு, மசூதியின் செலவுகளுக்காகவும், பராமரிப்புக்காகவும் சில கடைகளின் வருமானத்தையும் கொடுத்ததாய்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அப்போது இங்கே வந்த சில வெளிநாட்டு மற்றும் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி, இந்த ஆலயத்திற்கு வேண்டிய நீர் கங்கையில் இருந்தும், புஷ்பங்கள் காஷ்மீரத்தில் இருந்தும் தினந்தோறும் வந்தவண்ணம் இருந்தன. 10,000 கிராமங்களுக்கும் மேல் மானியமாய் கோயிலின் பராமரிப்புக்காக அரசனால் வழங்கப் பட்டிருந்தன. தினசரி வழிபாட்டிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்தணர்கள் நியமனம் செய்யப் பட்டிருந்தனர். இங்கே முண்டனம் செய்து கொள்ளுவது சிறப்பாய்க் கருதப் பட்டதால், முண்டனம் செய்யவென்றே 300க்கும் மேற்பட்ட நாவிதர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். 300 பெண்கள் ஈசனுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இசையும், நடனமும் செய்து இறைத்தொண்டாற்றி வந்தனர். கருவறையில் ரத்தினங்களால் இழைக்கப் பட்ட தீபங்கள் ஒளிர்ந்தன. 250 மாண்டு எடையுள்ள தங்கச் சங்கிலியால் ஆலயமணி கட்டப் பட்டிருந்தது. கோயிலின் பொக்கிஷ அறையில் பொன்னும், மணியும், ஆபரணங்களும், பொன்னாலும், வெள்ளியாலும் ஆன பூஜாப் பாத்திரங்களும் ஏராளமாய்க் குவிந்திருந்தன. கிரஹணம் சம்பவிக்கும் சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி கடல் நீராடி சோமநாதருக்கு வழிபாடுகளும், முன்னோருக்கு நீத்தார் கடனும் செய்தனர்.

இந்து ராஜாக்களின் காலத்திலே இந்தக் கோயில் மட்டுமின்றி, கோயிலில் வழிபாடுகள் நடத்தும் அந்தணர்களும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். போர்முறைகள் கற்பிப்பதில் இருந்து கோயில்கள் கட்டக் கற்பிப்பது வரையிலும் அனைத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். அரசர்கள் இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டே நாட்டை ஆண்டு வந்தனர். பெருமளவு மானியங்களையும் இவர்களுக்கு அளித்தனர். கோயிலை விட்டு அநேகம் அந்தணர்கள் வெளியே வருவதில்லை, எனினும் அரசர்கள் கோயிலுக்கு வந்து இவர்களைக் கண்டு ஆலோசனைகள் பெற்றுச் சென்றனர். இவர்களுக்கு அளிக்கப் பட்ட மானியங்களையும் சேர்த்துக் கோயிலின் வளர்ச்சிக்கும், மேலே கோயில்கள் கட்டவும் செலவு செய்யப் பட்டது. ஆகவே இந்தக் கோயிலுக்குப் பெருமளவு சொத்துக்கள் இருந்து வந்திருக்கின்றது. அந்நியர்கள் முதலில் இந்தக் கோயிலை அழித்தால் தான் இங்கே அவர்கள் ஆட்சியை நிறுவ முடியும் என்பதை உணர்ந்தார்கள். ஆகவே கோயில் முதலில் தாக்கப் பட்டது.

Friday, April 10, 2009

ஜெய் சோம்நாத்! 2

பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஸரஸ்வதி நதி, சமுத்திரம், சோமநாதர், (அம்பிகையுடன் கூடிய சோமநாதர்), சோமன் என்ற பெயரால் அழைக்கப் படும் சந்திரன், சோமநாதரின் தரிசனம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றிருந்தது. பின்னால் காலப் போக்கில் ஸரஸ்வதி நதி மறைந்து போய் விட்டது. இங்கே உள்ள சமுத்திரக் கரையில் கிருதஸ்மார மலை என அழைக்கப் பட்ட மலையில் இருந்து இந்த க்ஷேத்திரம் மேற்கே அமைந்திருந்தது.இந்த கிருதஸ்மார மலையும் இப்போது காணக்கிடைக்காத ஒன்று. ஸரஸ்வதி, பிப்பலனுக்குக் கிடைத்த அக்னியை ஏந்திக் கொண்டு வந்து சமுத்திரத்தில் விட்டதால் புனிதம் இழந்து இருக்கின்றாள். ஆனால் கிருதஸ்மார மலை அரசனோ ஸரஸ்வதியைக் கண்டு மணக்க எண்ணுகின்றான். அவள் புனிதமாய் இல்லை என்றாலும் பரவாயில்லை என அவளைத் தன்னில் தாங்குகின்றான். ஸரஸ்வதியோ தான் அக்னியை சமுத்திரத்தில் விட்டபின்னர் புனித நீராடிவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றாள். ஸரஸ்வதியின் கை அக்னி கிருதஸ்மாரனைத் தாக்குகின்றது. அக்னியின் கடுமை தாங்காமல் மலை அரசன் தூள் தூளாய்ப் போய் சாம்பல் ஆகிவிடுகின்றான். உடைந்த மலைக் கற்கள் எங்கும் பரவுகின்றன. அந்தக் கற்களே இப்போது கோயில்கள் கட்டப் பெருமளவில் பயன்படுவதாய் உள்ளூர் மக்கள் சொல்லுகின்றனர்.

பிரபாஸ காண்டம் மேலும் இந்த சோமநாத லிங்கத்தைப் பற்றி வர்ணிக்கும்போது சொல்லுவது என்னவெனில்:” ஒரு கோழிமுட்டை அளவே உள்ள இந்தச் சுயம்புலிங்கமானது பூமிக்கு அடியில் மறைந்திருந்தது. ஸ்பரிஸ லிங்கம் என்ற பெயருடன் இந்த லிங்கமானது ஒரு பாம்பு சுற்றிய வண்ணமும், சூரியனுடைய கிரணங்களின் பிரகாசத்துடனும் ஒளி மிகுந்து காட்சி அளித்தது.பூமிக்கு அடியில் இருந்த இந்த ஸ்பரிஸ லிங்கம் சந்திரனுக்காக பிரம்மா வெளியே கொண்டு வந்தார். அந்தக் கதை தெரிந்த ஒன்றே. தட்சனின் 27 பெண்களை மணந்த சந்திரன் அவர்களில் ரோஹிணியிடம் மட்டும் தனியாகப் பிரியம் வைக்க, மற்றப் பெண்கள் அதனால் துன்புற்றுத் தந்தையிடம் முறையிடுகின்றனர். தட்சன் சொல்லியும் சந்திரன் மனம் மாறாததால் தட்சன் சந்திரன் தேய்ந்து போகச் சாபம் கொடுக்கின்றான். சந்திரன், தன் பிரிய மனைவி ரோஹிணியோடு தன்னுடைய மாமனார் ஆன தட்சனின் சாபம் நீங்க இங்கே வந்து தான் ஸ்பரிஸ லிங்கத்தை 4,000 வருஷங்கள் வழிபட்டான். அவன் இழந்த ஒளியை இங்கே பெற்றதாலேயே இந்த க்ஷேத்திரம் பிரபாஸம் என்ற பெயரும் பெற்றது. பிரம்மாவின் ஆணையின் பேரில் சந்திரன் தன் மனைவி ரோஹிணியுடன் இங்கே சோமநாதருக்குக் கோயில் ஒன்று கட்டினான். பிரம்மா பூமியின் பிளவைத் தோண்டி உள்ளே பேரொளியோடு கூடிய ஸ்பரிசலிங்கத்தைச் சந்திரனுக்குக் காட்டினார். ஒரு கோழி முட்டை அளவே இருந்த அந்த லிங்கம் தேனாலும் தர்ப்பைப் புற்களாலும் மூடப் பட்டிருந்தது. அதன் மேலேயே பிரம்மாவால் எழுப்பப்பட்ட சிலையும் அமைந்தது. வேதமந்திரங்களுடன் அவற்றிற்கு வழிபாடு செய்யப் பட்டது.

ஏழுவகைப் பட்ட கர்க குலத்தவர்கள் அங்கே பாஷுபத யோகத்தில் ஈடுபட்டு சித்தி பெற்று உயர்வாக இருந்ததாயும் சொல்லப் படுகின்றது. இது தவிர, கெளசிக கோத்திரத்தினரும் சோமநாதரைப் பெருமளவு வழிபட்டிருக்கின்றனர். பாசுபத சம்பிரதாயத்தின் முக்கியச் சீடர்களாய் கெளசிகர், கர்க்யர், கெளருஷர், மைத்ரேயர் ஆவார்கள் என்றும் தெரிய வருகின்றது. இந்தப் பாசுபத சம்பிரதாயத்தின் மூலகர்த்தா லகுலிஸா என அழைக்கப் படுவார். லகுலிசா பாசுபதத்தில் ஒரு வகை. கிட்டத்தட்ட காபாலிகர் மாதிரி என்று சொல்லலாம். இதன் முதல் குரு பெயர் லகுலிசா என்று சொல்கின்றனர். ஆகவே அவர் பெயரிலேயே இந்த சம்பிரதாயமும் அழைக்கப் படுகின்றது. இவர் ஈசனின் கடைசி அவதாரமாகவும், அதே சமயம் 28வது அவதாரமாகவும் கருதப் படுகின்றார். பரோடாவில் உள்ள ஒரு அந்தணக் குடும்பத்தில் உடலோடு அவதாரம் எடுத்ததாய்க் கருதப் படுகின்றார். அவர் காயாரோஹணம் என்னும் இடத்தில் ஒரு மரணமடைந்தவரின் உடலில் புகுந்தார் எனவும் சொல்லப் படுகின்றது.

மஹாபாரதம் ஆதி பருவத்தில் பிரபாஸ க்ஷேத்திரம் பற்றிக் கூறும்போது, அர்ச்சுனன் இங்கே வந்தபோது தான் சுபத்ரையைக் கண்டு அவளிடம் காதல் கொண்டு மணக்க எண்ணி, பலராமருக்குப் பயந்து சுபத்ரையோடு ஓடிவிடத் திட்டம் போட்டான் எனச் சொல்லுகின்றது. இது தவிரவும், வன பருவத்திலும், பீமனிடம் பிரபாஸ தீர்த்தம் பற்றிச் சொல்லப் படுகின்றது. தருமரும்,திரெளபதியும் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் முன்னர் இங்கே வந்து நீர் மட்டுமே அருந்தி விரதம் இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேல் சரஸ்வதி நதி அப்போது ஓடிக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும் பாரதம் விநாசனா என்னும் ஊருக்கருகே மறையும் நதியானது, சாமாசோபேதா என்னும் ஊருக்கருகே செளராஷ்டிரக் கடல் கரையில் கடலுடன் கலப்பதாயும், இந்த இடத்தில் தான் லோபாமுத்ரை தன்னுடைய கணவர் ஆன அகஸ்தியரைக் கண்டதும், மணந்து கொண்டதும் என்றும் சொல்லுகின்றது.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலே சந்திரன் இங்கே வந்து வழிபட்டு தன் இழந்த செளந்தரியத்தையும் ஒளியையும் திரும்பப் பெற்றதே மிகச் சிறப்பாய்க் கூறப் படுகின்றது.





மேல் அதிகத் தகவல்களுக்கு மதுரைக்கு அருகே உள்ள அரிட்டப் பட்டி பற்றிய குறிப்புகளில்இங்கேபார்க்கவும்.


On the right side of sanctum sanctorum is a beautiful sculpture of Shiva in the form of `Lakulisa.' There are several sects in Saivisim and one of them is `Lakulisa Pasupatham.' The presiding deity of this sect is Lord Shiva. On the left, rests Lord Vinayaka.

The Lakulisa Shiva is apparently a rare specimen in Tamil Nadu. One similar sculpture is found at Kudimallam near Vellore, where Lord Shiva is seen in a standing posture. (Hinduonline 2005)

Thursday, April 09, 2009

ஜெய் சோம்நாத்! 1

ரிக் வேதத்தில்
யத்ரகங்கா ச யமுனா யத்ர ப்ராச்சி ஸரஸ்வதி
யத்ர ஸோமேஷ்வரோ தேவஸ்தத்ர மாம்ருதம் க்ருதீந்த்ராயேந்தோ பரிஸ்ரவ! என்று சொல்லப் பட்டிருப்பதாய்க் கூறுகின்றது சோமநாத் கோயிலின் பெருமை பற்றிக் கூறும்போது. இங்கே காணப்படும் 1869-ல் சோம்நாத் கோயிலின் தோற்றத்தைச் சுட்டுகின்றது. படம் உபயம்:கூகிளார்.

“எங்கே கங்கை, யமுனை மற்றும் புராதனமான ஸரஸ்வதி மூன்றும் சேருகின்றதோ, எங்கே அந்த சர்வேஸ்வரன் ஆன சோமநாதர் கோயில் கொண்டிருக்கின்றாரோ அந்த இடம் என்னைப் புனிதன் ஆக்கட்டும். ஏ, சந்திரா, உன்னுடைய அமுதக் கிரணத்தை இந்திரன் மீது பொழிவாயாக!” இது தான் பொதுவான அர்த்தம். வாங்கப்பா, விஷயம் தெரிஞ்சவங்க வந்து அர்த்தம் சொல்லலாம். சோமநாதர் கோயில், இருக்கும் ஊரும் அவர் பெயராலேயே சோம்நாத் என்றே அழைக்கப்படுகின்றது தற்காலத்தில். ஆனால் பூர்வீகத்தில் இந்த க்ஷேத்திரத்துக்கு பிரபாஸ க்ஷேத்திரம் என்றே பெயர். எப்போது என்று காலம் நிர்ணயிக்க முடியாத காலகட்டத்தில் இருந்தே இங்கே இந்தக் கோயிலில் சோமநாதர் குடி இருக்கின்றார் என்றே சொல்லுகின்றார்கள். இந்தியாவின் பனிரண்டு ஜ்யோதிர்லிங்கங்களில் முதன்மையானது இந்த சோமநாதலிங்கமே. சோமநாத பட்டினம் என்றும் தேவ பட்டினம் என்றும் இது அழைக்கப் பட்டு வந்தது.

இந்த ப்ரபாஸ க்ஷேத்திரம் குஜராத்தின் செளராஷ்டிராவின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணமும் சொல்லுகின்றது. (ஹிஹி, இன்னும் தேடலை, மறந்து போச்சு) ப்ரபாஸ காண்டம் என்ற பெயரிலேயே ஏழாவது(?) காண்டம் உள்ளது ஸ்காந்தத்தில். ப்ரபாஸ காண்டத்தில் முதலில் சோமநாத்தைப் பற்றியும், பின்னர் கிர் மலைக்காடுகள் பற்றியும், பின்னர் மவுண்ட் அபு (அற்புத மலைகள்)பற்றியும், கடைசியில் துவாரகை பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சோமநாத்தில் உள்ள தீர்த்தம் பற்றிச் சொல்லும் அத்தியாயத்தில் இந்த தீர்த்தத்தின் மகிமை பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது. சர்வேஸ்வரன் ஆன ஈசன், இந்தத் தீர்த்தத்தில் உலகின் கடைசிநாள் வரையிலும் அதன் பின்னரும் கூட இருப்பான் எனச் சொல்லப் படுகின்றது. பல்வேறு விதமான பிரம்மாக்கள் வந்து போய்விட்டனர். இப்போது இருப்பது ஏழாவது பிரம்மாவான சதானந்தர். ஆகவே இங்கே உள்ள ஈசனுக்குப் பெயர் சோமநாதர். இதன் முன்னால் இருந்த ஆறு பிரம்மாக்களும் இருந்த சமயம் ஈசனின் பெயர் முறையே ம்ருத்யுஞ்சயர், காலாக்னிருத்ரர், அமிர்தேசர், அநாமயர், க்ரிதிவாஸர், பைரவநாதர். இதன் பின்னர் வரப் போகும் எட்டாவது பிரம்மாவின் பெயர் சதுர்வக்த்ரா, அப்போது ஈசன் பிராணநாதன் என்ற பெயரோடு விளங்குவான். ஈசன் ஒருவனே ஆனால் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றான்.

ரிக்வேதத்தின் இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப் படும் ஸரஸ்வதி நதியானது இமயத்தில் உற்பத்தியாகி, மார்வார், அற்புதா என அழைக்கப் பட்ட அபுமலைத் தொடர்கள் வழியே குஜராத்துக்கு வந்து பிரபாஸக்ஷேத்திரம் ஆன சோம்நாத்தில் கடலுடன் கலந்திருக்கின்றது. இந்தப் பகுதியின் நீள, அகலங்கள் அப்போது 12 யோஜனை அளவில் இருந்திருக்கின்றது. க்ஷேத்திர பீடம் மட்டும் ஐந்து யோஜனைகள். கர்பகிருஹம் மட்டும் இரண்டு மைல் தூரம் இருந்துள்ளது. இந்தக் கோயிலின் கிழக்கே தப்தோடகஸ்வாமியின் கோயிலும், மேற்கே மாதவர் கோயிலும், வடக்கே பத்ரா நதியும், தென்பாகத்தில் கடலும் உள்ளன. வேதகாலத்து ரிஷிகளால் காலாக்னி ருத்ரர் என அறியப் பட்டவர் இங்கே முதலில் பைரவர் என பிரதிஷ்டை செய்யப் பட்டார். அக்னி ஈசானன் என்ற பெயரிலும் இவர் அழைக்கப் பட்டார். ஒவ்வொரு கல்பம் மாறும்போதும் இதே மூர்த்தம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் பட்டு வருகின்றது என பிரபாஸ காண்டம் சொல்லுகின்றது. ஐந்து முகங்கள் கொண்டவர் இந்த லிங்க மூர்த்தம், ஹம்ஸமும், நாதமும் சேர்ந்ததாய்க் கருதப் படுகின்றது. தக்ஷனால் ஏற்பட்ட சாபத்தை நீக்கிக் கொள்ள இந்தக் காலபைரவ லிங்கத்தை வழிபட்டு சந்திரன் வழிபட்டுத் தன் பாவங்களைப் போக்கிக்கொண்டதாயும், தன் பெயரால் இந்த லிங்கம் அழைக்கப் படவேண்டும் என்ற அவன் வேண்டுகோளின்படி அன்று முதல் சோமநாதர் என அழைக்கப் படுவதாயும் சந்திர குலத்தவருக்கு அதன் பின்னர் சோமநாதரே குலதெய்வமாக ஆனார் எனவும் கூறுகின்றார்கள். சந்திரன் முதலில் தங்கத்திலும், பின்னர் ராவணனால் வெள்ளியாலும் அதன் பின்னர் ஸ்ரீகிருஷ்ணரால் சந்தன மரத்திலும் கட்டப் பட்டது. இந்தக் கோயில் பலமுறைகள் அந்நியர் ஆதிக்கத்தில் சிதைக்கப் பட்டது. அதைப் பற்றி வரும் நாட்களில் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் சிதைக்கப் பட்ட கோயிலைக் கட்டியது சோமபுரா ஷில்பாகர் பிராமணர்கள்.

படங்கள் எடுப்பது முற்றிலும் தடை செய்யப் பட்டிருப்பதால் ஓரளவு படங்களே போட முடியும்.

Tuesday, April 07, 2009

துவாரகையில் கிருஷ்ணனைக் காணோம்! 2

அவர் வண்டியைத் தள்ளிச் செல்லும்போது இறைவன் எடையே இல்லாதது போல் மிக மிக லேசாக இருந்தான். ஆகவே வெகு விரைவில் அவர் டகோரை அடைந்து விட்டார். ஆனால் இங்கே துவாரகையிலேயோ, ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது. குக்ளி என அழைக்கப் படும் ஒருவகை அந்தணர்களால் துவாரகைக் கோயில் வழிபாடுகள் நடத்தப்படும். அவர்களுக்கு மறுநாள் விடிந்ததுமே கருவறையில் மூர்த்தத்தைக் காணாமல் கலக்கம் உண்டானது. பின்னர் தீவிர விசாரணைகளின் பேரில் வஜேசிங் பொடானோ தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் எனப் புரிந்தது. அவர்கள் அந்தப் பகுதி அரசன் உதவியுடன், வில் வித்தையில் தேர்ந்த சிலருடன் டகோரை நோக்கிச் சென்றனர். இங்கே டகோரை நெருங்கிக் கொண்டிருந்தது பொடானோவின் வண்டி. நடுவழியில் இளைப்பாற வேண்டி உம்ரேத் என்னும் ஊருக்கு அருகே சற்றே நிறுத்தினார் பொடானோ வண்டியை. உம்ரேத்தில் இன்னமும் இறைவனின் காலடிகள் இருப்பதாய் ஐதீகம். மேலும் பொடானோ நிறுத்தி இருந்த வேப்பமரம் அதன் பின்னர் தன்னுடைய கசப்புத் தன்மை போய் இனிப்பாக மாற ஆரம்பித்ததாயும் சொல்லுகின்றனர்.

இப்போ துவாரகையில் இருந்து வரவங்க கிட்டே இருந்து இந்தக் கிருஷ்ணனை எவ்வாறு மறைப்பது? பொடானோ கலங்கினார். யோசித்தார். பின்னர் தோன்றியது அவருக்கு. கண்ணனை மறைத்து வைக்கச் சரியான இடம் கோமதி குளமே என.

கிருஷ்ணர் கோமதி குளத்தில் மறைத்து வைக்கப் பட்டார். குகுளி பிராமணர்களும் தக்க ஆட்களோடு வந்துவிட்டனர் கிருஷ்ணனைத் தேடி. சண்டை நடக்கின்றது. சண்டையின் முடிவு இருவிதமான வாதங்களாய்ச் சொல்லப் படுகின்றது. ஒரு வாதம், கோமதி குளத்தில் கிருஷ்ணரை மறைத்ததுமே பொடானோ வஜேசிங் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுவிட்டார் எனச் சொல்கின்றது. அதைத் தெரிந்த கூட்டத்தினர் அவரின் விதவை மனைவியிடம் போய்ச் சண்டை போட்டு விக்ரஹத்தைத் திரும்பக் கேட்டதாயும், பின்னர் வஜேசிங்கின் மனைவி மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் விக்ரஹத்திற்குப் பதிலாய்ப் பொன்னைத் தர ஒப்புக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.

இன்னொரு வாதம் கோமதி குளத்தில் விக்ரஹம் ஒளித்து வைக்கப் பட்டதைக் கண்டறிந்த கூட்டத்தினர் விக்ரஹத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட, அப்போது நடந்த சண்டையில் பொடானோ வஜேசிங் இறந்ததாகவும், விக்ரஹத்தின் ஒரு பக்கத்தில் அம்பு பட்டதாகவும், அந்தத் தழும்பு இன்றளவும் விக்ரஹத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர். எது எப்படியோ விக்ரஹம் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால் பொடானோவோ உயிருடன் இல்லை. அவர் மனைவியோ பிடிவாதமாய் மறுக்கின்றாள் கிருஷ்ணரைக் கொடுக்க. பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே அந்தக் கிருஷ்ணர் விக்ரஹத்தின் எடைக்கு எடை பொன்னைப் பெற்றுக் கொண்டு செல்லுமாறு துவாரகா வாசிகளுக்குக் கட்டளை பிறக்கின்றது. அதுவும் கிருஷ்ணரே துவாரகா பிராமணர்களின் கனவில் வந்து சொல்லுகின்றார். மேலும் துவாரகையில் புனர்நிர்மாணம் செய்யவேண்டிய விக்ரஹம் அங்கே உள்ள சாவித்திரி குண்டத்தில் இருந்து கிடைக்கும் எனவும் சொல்கின்றார்.

அரை மனதாய் ஒப்புக் கொண்ட பிராமணர்கள் எடைக்கு எடை பொன்னைக் கேட்கின்றனர். இவ்வளவு ஏழையான ஒருவனிடம் என்ன பொன் இருக்கப் போகின்றது? கடைசியில் விக்ரஹத்தை எடுத்துச் சென்றுவிடலாம் எனவே எண்ணினார்கள். ஆனால் என்ன ஆச்சரியம்? அந்த விதவைப் பெண்மணியின் சிறு மூக்குத்தியை வைத்ததுமே விக்ரஹம் எடை சரிசமமாய் ஆகிவிட்டது. இது ஏமாற்று வேலை எனச் சொன்ன அந்தணர்கள் மீண்டும், மீண்டும் பார்க்கவே அதே தான் எடை நின்றது. வேறு வழியில்லாமல் அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு சென்ற அவர்கள் கிட்டத்தட்டப் பத்து மாதங்கள் அலைந்து திரிந்து கடைசியில் சாவித்திரி குண்டத்தில் இருந்து இப்போது இருக்கும் துவாரகை கிருஷ்ண விக்ரஹத்தைக் கண்டெடுத்தனர். ஆனால் டகோரில் சொல்லுவது என்னவெனில் கிருஷ்ணர் ஒரு நாளில் எட்டில் ஏழு பாகம் டாகோரில் கழித்துவிட்டு மீதி ஒரு பாகத்தை துவாரகையில் கழிக்கின்றார் என்றே சொல்கின்றனர். பொடானோ கிருஷ்ணரை துவாரகையில் இருந்து கொண்டு வந்த வருஷம் கி.பி 1155-ம் வருஷமாய் இருக்கலாம் என பாம்பே கெஜட்டர், கைரா மாவட்டத்தின் தகவல் தெரிவிக்கின்றது. கவி கோபால்தாஸ் என்பவர் சம்வத் வருஷம் 1212 ஆக இருக்கலாம் எனவும் அன்று கார்த்திகை மாதம், பெளர்ணமி, வியாழக்கிழமை எனவும் சொல்லுகின்றார். இதைத் தவிர வேறு சரித்திரச் சான்றுகள் இது உண்மையா எனத் தெரிந்து கொள்ள இல்லை.\

நம்ம கிருஷ்ணரோ சர்வ செளக்கியமாய் டகோரில் கோயில் கொண்டார். அந்தப் பகுதி மக்களுக்கு மிக மிக ஆனந்தம். தற்போது டகோரில் இருக்கும் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது கி.பி. 1722-ம் ஆண்டு. கோபால் ஜகந்நாத் தம்பேகர் என்பவர் சதாராவைச் சேர்ந்தவரும் அப்போதைய பேஷ்வாவின் கஜானா மந்திரியாகவும் இருந்தார். இவரே திருப்பணிகள் செய்திருக்கின்றார். அப்போது சுற்றுவட்டார கிராமங்களின் வரி வசூல் பூராவும் கோயிலின் அன்றாடச் செலவுகளுக்காக இறையிலியாக விடப் பட்டிருந்தது. இந்தியாவின் மேற்கு பாகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கிய புண்ணிய ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. பரோடா மஹாராஜா கெய்க்வாட் ரூ. ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் செலவில் பீடங்களை தங்கத்தாலும், வெள்ளியாலும் அலங்கரித்தார். சில நாட்கள் வரை கோயிலின் தர்மகர்த்தாக்களாய் தம்பேகர் குடும்பமே இருந்து வந்தது. ஆனால் பின்னால் உள்ளூர் மக்களுக்கும் இவர்களுக்கும் மன வேற்றுமை ஏற்படவே வழக்கு ஏற்பட்டு மும்பை கோர்ட்டுக்கு வழக்கு சென்று கோயில் உள்ளூர் மக்கள் கையில் வந்தது.

தற்சமயம் கோயிலை உள்ளூர் மக்களே நிர்வகிக்கின்றனர். எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்தக் கோயில் பரோடாவில் இருந்து ஒன்றரை மணி நேரப் பிரயாணத்தில் உள்ளது. ஆனந்த் இதற்கு மிக அருகில் இருந்தாலும், பரோடாவில் இருந்து சென்றால் ஆனந்தை அடையாமலே செல்லலாம். ஆனால் உம்ரேத் என்னும் ஊரைத் தாண்டியே செல்லவேண்டும். வழியெங்கும் புகையிலைப் பயிர்கள். செழிப்பாய் வளர்ந்து நிற்கின்றன. அந்தப் பகுதியே செல்வச் செழிப்போடு இருப்பது நன்கு தெரிகின்றது. குஜராத்தியர் வெளிநாட்டில் வசித்தாலும், தங்கள் பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்கின்றனர். ஆகையால் சிறு கிராமமாய் இருந்தாலும், தரமான சாலைகள், நல்ல கட்டிட அமைப்புள்ள பள்ளிகள், குடிநீர் வசதி என அடிப்படை வசதிகளோடு காண முடிகின்றது. இறை பக்தியும், கலாசாரம், மொழி ஆகியவற்றைக் காப்பதிலும் அவர்களுக்கு ஒப்புவமை சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக குஜராத்தி மொழியிலேயே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. குழந்தைகளுக்கு எண்கள் குஜராத்தி மற்றும் நமக்குப் பழக்கப்பட்டிருக்கும் ரோமன் எண்கள் இரண்டுமே கற்பிக்கப் படுகின்றன. பெண்களுக்கு அவர்கள் என்ன படிப்புப் படித்தாலும் இலவசம் தான். டாக்டரோ, மருத்துவமோ அல்லது துறைகளில் ஆய்வு செய்வதோ எதுவானாலும் இலவசமே.

இத்தனை இருந்தும் பக்தி செலுத்துவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது. நாங்கள் டகோர் சென்ற அன்று செல்லும்போதும், திரும்பி வரும்போதும் கூட்டம் கூட்டமாய் மக்கள் அனைவரும் சேர்ந்து ஆடிப் பாடிக் கொண்டு பெரிய பதாகைகள், கொடிகள், மற்றும் கோயில் உற்சவங்களுக்குத் தேவைப் படும் பொருட்கள், வழிபாட்டுப் பொருட்கள் என எடுத்துக் கொண்டு வந்ததைப் பார்த்தோம். கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் மிகப் பணம் படைத்தவர்கள் என்பதும், சிலர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கின்றனர் என்பதும் விசாரித்ததில் தெரிய வந்தது. என்றாலும் சற்றும் கூச்சம் இல்லாமல் கிருஷ்ணன் ஒருவனையே நினைந்து கோபியர்களைப் போலவும், கோபர்களைப் போலவும் ஆணும், பெண்ணும் பஜனைப் பாடல்களும் மற்ற வழிபாட்டுப் பாடல்களும் பாடி, ஆடிக் கொண்டு அங்கங்கே நின்று கூட்டமாய்ச் சுற்றி வந்து கும்மி அடித்துக் கொண்டும் சென்று கோயிலை அடைந்தனர். கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் கிருஷ்ணனுக்கே. அவனுக்குச் சமர்ப்பிக்கவே இத்தனையும். கோயிலுக்குக் கொடுப்பதிலோ, பக்தர்களுக்குக் கொடுப்பதிலோ குறையே வைப்பதில்லை.

பல்வேறு வைணவ சம்பிரதாயங்கள் இருக்கின்றன குஜராத்தில். சிலர் ராமானுஜரையும், சிலர் ராமானந்தரையும், சிலர் கபீரையும், சிலர் ஸ்வாமிநாராயணனையும், சிலர் வல்லபாசாரியாரையும் பின்பற்றுகின்றனர். எனினும் கிருஷ்ணன் அனைவருக்கும் பொது. அவனை நினைப்பதிலேயோ, அவனுக்குச் செய்வதிலேயோ அவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. தாங்கள் பெற்ற பிள்ளைகளை விடவும் ஸ்ரீகிருஷ்ணனே அவர்களுக்கு அன்றும், இன்றும், என்றும் முதல் பிள்ளை, மூத்த பிள்ளை. டாகோர் கோயில் எந்தவிதமான வைணவ சம்பிரதாயங்களையும் பின்பற்றாமல் கிருஷ்ணன் ஒருவனை மட்டுமே பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றது.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

அடுத்து ஜெய் சோம்நாத்!

Saturday, April 04, 2009

துவாரகையில் கிருஷ்ணரைக் காணோம்! 1

துவாரகையில் இப்போ இருக்கும் கிருஷ்ணனின் திருமேனி புராதனமான ஒன்றல்ல. துவாரகையில் இருந்த பழைய மூர்த்தம் பரோடாவுக்கு அருகே உள்ள டாகோர் என்னும் ஊருக்குக் கடத்தப் பட்டது. என்ன ஆச்சரியமா இருக்கா? ஆனால் அது தான் உண்மை என்று குஜராத்தியர்கள் சொல்லுகின்றனர். இந்த டாகோர் என்னும் ஊரில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த வஜேசிங் என்னும் பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை பொடானோ என்னும் பெயரிலும் அழைக்கின்றனர். இந்த வஜேசிங் கிருஷ்ணனிடம் மிகவும் பக்தி கொண்டவர். துளசிச் செடியைத் தன் உள்ளங்கைகளில் வைத்து வளர்த்து, அந்தச் செடியை ஒவ்வொரு வருஷமும் இரு முறைகள் டாகோரில் இருந்து துவாரகைக்கு நடைப் பயணமாய்ச் சென்று அங்கே கோயில் கொண்டிருக்கும் ரண்சோட்ராய் ஆன ஸ்ரீகிருஷ்ணனுக்குச் சேர்ப்பித்து வருவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். கிருஷ்ணனை குஜராத்தியர் ரண்சோட்ராய் என்றே அன்புடன் அழைக்கின்றார்கள்.

இப்படிச் சென்று வந்த வஜேசிங்கிற்கு நாளாவட்டத்தில் மூப்பு எய்தவே, அவரால் நடந்து துவாரகை செல்ல முடியவில்லை. ஒரு முறை மிகவும் கஷ்டத்துடன் சென்று வந்த அவர் மறுமுறை செல்லத் தயார் ஆகிக் கொண்டிருந்தபோது கிளம்பும் முன்னர் முதல்நாள் இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் ரண்சோட்ராய் அவர் கனவில் தோன்றி, “வஜேசிங், நீ இனி துயரப் படவேண்டாம். உன் பக்தியில் நான் மனம் மகிழ்ந்தேன். ஆகவே இம்முறை நீ துவாரகை வரும்போது உன்னுடன் நானும் வந்துவிடுகின்றேன். இனி ஒவ்வொரு முறையும் துவாரகை வந்து என்னைத் தரிசனம் செய்ய நீ கஷ்டப் படவேண்டாம்.” என்று சொல்கின்றார். விழித்து எழுந்த வஜேசிங் ஒரு கணம் என்ன நடந்தது என்பதை நம்பவே இல்லை. அவ்வளவில் துவாரகைப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இம்முறை ஒரு வண்டியையும் கூடவே எடுத்துச் சென்றார்.

அந்த வண்டியிலேயே சென்ற அவர் துவாரகையில் கிருஷ்ணர் சந்நிதியை அடைந்து தரிசனம் செய்து கொண்டார். கிருஷ்ணர் எவ்விதம் தன்னுடன் வரப் போகின்றாரோ என்ற கவலையிலும் ஆழ்ந்தார். பின்னர் அவருக்குத் தோன்றியது, நாம் தான் கிருஷ்ணரைத் தூக்கி வரவேண்டும் என. ஆகவே நடு இரவு வரை காத்திருந்து கோயில் பணியாளர்கள் அனைவரும் சென்றதும், மெதுவாய்க் கோயிலுனுள் நுழைந்து, மூலவரைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து தன் வண்டியில் வைத்துத் தானே அதைத் தள்ளவும் ஆரம்பித்தார்.