எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, September 05, 2010

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி! 2

பொதுவாய் மனிதராய்ப் பிறந்த நாம் அனைவருமே நம் சக்தியை எவ்விதமேனும் வெளிக்காட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். இது அத்தகையதொரு சக்தி அன்று. நம்மை எல்லாம் இயக்கும் அற்புத, ஆநந்த சக்தி. சத்+சித்+ஆநந்தம் அடங்கிய சச்சிதாநந்த வடிவம் இது. வெளியே சலனமே இல்லாமல் அமைதியாகத் தெரியும் இந்தச் சிவ வடிவில் உள்ளே ஞானமாகிய அருள் நிரம்பி விளங்குவது நமக்குப் பார்த்தால் தெரியாது. அநுபவத்தாலேயே புரிந்து கொள்ளவேண்டும். பேராநந்தத்தை உள்ளடக்கிய இந்தச்சக்தியைப் புரிந்து கொள்ள எவ்விதம் நமக்குத் திறமை போதாதோ அவ்விதமே இதை அடக்கிக் கொள்ளும் ஈசனின் தனித் திறமையை வர்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை. மகிமை மிகுந்த இந்த ஆதிகுருவின் திருவுருவம் இல்லாத சிவன் கோயிலக் காண்பது அரிது. முன் காலங்களில் தக்ஷிணாமூர்த்திக்கான தனிக் கோயில்கள் இருந்ததாயும், பிற்காலங்களிலேயே சிவன் கோயில் கருவறையின் தென்பகுதிச் சுவரில் எழுந்தருளச் செய்து வழிபட்டதாகவும் சொல்கின்றனர். சும்மா இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் யோகநிலையில் இருக்கும் ஒரு சொரூபமே தக்ஷிணாமூர்த்தி சொரூபம். வெளியே சும்மா அமர்ந்த வண்ணம் அவன் உள்ளுக்குள் இருக்கும் யோகசக்தியால் நம்மை எல்லாம் ஆட்டி வைக்கிறான். சூத்திரதாரியே இந்த தக்ஷிணாமூர்த்திதான். அம்மையும், அப்பனும் ஐக்கியமாய் இருக்கும் சிவசக்தி ரூபமே தக்ஷிணாமூர்த்தி சொரூபம். லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமாவளி அன்னையை ஸ்வதந்த்ரா, ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்த்தி ரூபிணி! என்று சொல்லுகின்றது. அடுத்த நாமாவளி ஸநகாதி ஸமாராத்யா சிவஜ்ஞாந - ப்ரதாயினிநீ என்று வரும்

தம்முள் பொங்கி வழியும் சிவஞானத்தைத் தம் மெளனத்தாலேயே நமக்குப் புரிய வைத்து வாரி வாரி வழங்கும் சிவஞான சொரூபமான தக்ஷிணாமூர்த்தி வடிவமே தத்துவ விளக்கமாகும். தக்ஷிணாமூர்த்தி வெண்ணிறமானவர். இப்போது அவர் வடிவின் ஒவ்வொரு ரூபத்தையும் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் பார்க்கலாமா?
நடராஜத் திருமேனியின் ஒவ்வொரு ரூபமும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டாற்போலவே இந்த தக்ஷிணாமூர்த்தியும் ஒவ்வொரு அர்த்தம் கொண்டு விளங்குகிறார்.

திருமேனி பளிங்கு போன்ற வெண்ணிறம் கொண்டு தூய்மையை உணர்த்துகிறது.
தக்ஷிணாமூர்த்தியின் அமர்ந்த திருக்கோலத்தில் வலக்காலின் கீழே முயலகன் என்னும் அசுரனை மிதித்த வண்ணம் அமர்ந்திருப்பார். இந்த முயலகன் ஆணவத்தின் வடிவம். அறியாமையின் வடிவம். இந்த ஆணவத்தையும் அறியாமையையுமே தம் திருப்பாதத்தால் மிதித்து நீக்கி ஞானத்தை அருளுகிறார். இடக்கையில் ஒன்றில் சுவடிகள் தென்படும். சிவஞானபோதத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் தக்ஷிணாமூர்த்தியானவர் தம் கையிலுள்ள இந்தச் சுவடிகளின் மூலம் நமக்குப் போதிக்கிறார். சிவஞானபோதத்தை நூல் வடிவாக்கித் தம் கைகளில் ஏந்திக் கொண்டு நமக்குக் கற்பிக்கிறார்.

வலமேல்கரத்தில் உள்ள ருத்திராக்ஷமாலை தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவதாய்ச் சொல்கின்றனர். பஞ்சாக்ஷரத்தை இந்த மாலையின் உதவியால் எண்ணி மேன்மேலும் உருவேற்றித் தியானிக்கவேண்டும். ஞானம் பெறுவதற்கான வழி அதுவே எனச் சொல்கின்றது. வலக்கீழ்க்கரம் சின் முத்திரை காட்டுகிறது. மிகவும் பிரபலமான சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொட்டுக் கொண்டு இருக்கும். மற்ற மூன்று விரல்கள் விலகித் தனியாய் இருக்கும். ஆணவம், கன்மம், மாயை என்னும் இந்த மூன்றையும் அகற்றிவிட்டுத் தன்னைச் சரணடைந்தால் ஒன்றாகலாம் என்பதைக் குறிக்கும் இந்தச் சின் முத்திரை என்பது சிலர் கருத்து.

இடக்கரத்தில் உள்ள அமிர்த கலசத்தால் அனைத்து உயிர்களையும் காத்துப் பேரின்பம் அளிப்பதையும், தீச்சுடர் உயிர்களது பிறவித் தளைகளை நீக்கி உய்யும்பொருட்டுச் செய்யும் சம்ஹாரத்தையும் குறிக்கும். கழுத்திலுள்ள பாம்பு குண்டலினியைக் குறிக்கும். குண்டலினி யோகத்தின் சின்னம் பாம்பு. பாம்பானது சுருண்டு இருப்பது போல் நம்முள்ளே குண்டலினி சக்தியும் சுருண்டு இருக்கிறது. மூலாதாரம் என்னும் சக்கரத்தில் சுருண்டு இருக்கும் அந்தக் குண்டலினியை விழிப்புறச் செய்து பின்னர் அதைச் செயல்படச் செய்து பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்பதே தக்ஷிணாமூர்த்தியின் யோக நிலை குறிப்பதாகும்.

சில தக்ஷிணாமூர்த்தித் திருமேனி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்திலும், சில தக்ஷிணாமூர்த்தித் திருமேனி ஆலமரத்தின் கீழ் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்க விட்டு அமர்ந்த கோலத்திலும் காணமுடியும். பத்மாசனத்தில் இவ்விதம் அமர்ந்த கோலத்தில் இருப்பது யோகியர், ஞாநியர் இதயத்தாமரையில் ஈசன் வீற்றிருப்பதைக் குறிக்கும் என்று சொல்வதுண்டு.

நெற்றிக்கண் காமனை எரித்த கண். நாம் அதை நினைவில் கொண்டு வீடுபேறு அடையவேண்டுமெனில் நம் உள்ளத்தே புலன்களை அடக்கி ஐம்பொறிகளைக் கட்டுப் படுத்திப்பஞ்சாட்சரத்தை ஓதிக் கொண்டே இருத்தல் வேண்டும். ஆலமரத்தின் கீழ் இருப்பதும், அதன் நிழலும் இவ்வுலக வாழ்வு மாயை என்பதை குறிப்பவை. வடக்கு முகமாய்ச் சிவனை வழிபடுவதே சிறப்பு. தருமத்தைக் குறிக்கும் விடைவாகனனை, அனைத்து உயிர்களுக்கும் அவனே தலைவன் என்பதை உணர்த்தவே இந்த தக்ஷிணாமூர்த்தி வடிவம்.

Thursday, September 02, 2010

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! தக்ஷிணாமூர்த்தி!


இது வரையிலும் வீரமான சிவத் திருமேனிகளைத் தரிசித்தோம். இப்போ யோக வடிவிலான தக்ஷிணாமூர்த்தியைத் தரிசித்துவிட்டுப்பின்னர் பைரவரைக் காணலாம். தென்முகக் கடவுள். திருக்கைலை மலையின் தென்முக தரிசனத்திற்கும் தக்ஷிணாமூர்த்தித் திருக்கோலம் என்றே அழைப்பார்கள். பொதுவாகத் தென் திசையை அவ்வளவு நல்லதாக யாரும் நினைப்பதில்லை. தெற்கு என்றாலே ஆகாதது, அழிவைக்குறிக்கும். மரணத்தைத் தரும் யமனுடைய திசை என்றே அனைவரும் விரும்புவதில்லை. அத்தகைய தென் திசையை நோக்கியே இந்த தக்ஷிணாமூர்த்தி எப்போதும் அமர்ந்திருப்பார். மரணத்தை நோக்கி இருக்கும் ஆன்மாக்களின் ஞானத்தைத் தருவதற்கும், அழியாத அமுத வாழ்வைத் தருவதற்கும் வழிபடவேண்டி, தென் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஞான தக்ஷிணாமூர்த்தி. எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும் ஆநந்த நடராஜன் ஆன ஆடல்வல்லான் தென் திசையையே நோக்கி ஆடுகிறான். அதுபோல் அமைதியைப் போதிக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் தென் திசையே.

அஞ்ஞானம் நிறைந்த நம்முள் ஞானம் பெருக நாம் வழிபடவேண்டியவருக்குக் குருவாகக் காட்சி அளிப்பது தக்ஷிணாமூர்த்தியே. ஆதிகுரு என அழைக்கப் படுகிறார். நம் அறியாமையை அகற்றி ஞானத்தைப் போதிக்கும் வடிவில் ஆலமரத்தின் கீழ் அமர்ந்துள்ளார் தக்ஷிணாமூர்த்தி. இவர் வாய் திறந்து எதுவும் பேசுவதில்லை. மெளனம் தான். மெளனமாய் இவர் போதிப்பதையே புரிந்து கொள்கின்றனர் சீடர்கள். சீடர்கள் நான்கு பேர். வயது முதிர்ந்தவர்கள். குருவோ பதினாறு வயது நிரம்பிய இளைஞன். அவனோ வாய் திறந்து பேசுவதில்லை. ஆனாலும் சீடர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆசிரியர்களுக்கெல்லாம் மேம்பட்ட எல்லாம் வல்ல பரம ஆச்சாரியன் போதிக்கவேண்டிய பொருளுக்கு ஏற்ப தன் போதனையை மாற்றிக் கொண்டு இவ்விதம் மெளனத்தின் மூலமே போதிக்கின்றான். சொல்லுக்கும், செயலுக்கும், மனதுக்கும், வாக்குக்கும் எட்டாத பரம்பொருளை எவ்விதம் சொல்லுவது? எந்தச் செயலில் புரிய வைப்பது? எப்படிக் காட்ட முடியும்? ஆகவே மெளனத்தையே தன் பாடமாகப் போதிக்கின்றான் இறைவன். இந்த மெளனத்தின் வாயிலாக சத் சித் ஆநந்தத்தை அநுபூதியாகத் தம் உணர்வினால் வெளிப்படுத்திக் காட்டச் சீடர்களும் அதைப் புரிந்து கொள்கின்றனர். இத்தகைய தெய்வீக அநுபவத்தைப் பெற்ற சீடர்களும் தம் உள்ளங்களில் அதைப் பரிபூரணமாக அநுபவித்து முழுமையாகப் பரவச் செய்து பேரின்ப நிலையை எய்துகின்றனர். மேலும் தக்ஷிணாமூர்த்தி வடிவம் பார்ப்பதற்கு எதுவும் செய்யாது சும்மா இருத்தல் போலத் தெரிந்தாலும் சிவசக்தி அடங்கிய ஐக்கிய வடிவம் அது. இது பற்றி இன்னும் விரிவாய்ப் பார்ப்போமா?