எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, May 18, 2019

மீண்டும் மேல்கோட்டையில் அரங்கன்!

குலசேகரனின் பிரிவை எண்ணி எண்ணி வருந்திய வாசந்திகா ஒருவாறு சமாதானம் அடைந்தாள். இம்மாதிரிக் குலசேகரனைச் சந்திக்க நேர்ந்ததிலும் அவள் தனக்குச் சாதகமாக ஒன்றை அவனிடம் கேட்டுப் பெற்று விட்டாள். ஆகவே அவள் அதிலே சந்தோஷம் அடைந்திருந்ததால் குலசேகரன் உயிரோடும், உடலோடும் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தாள். அவன் சடலத்தைத் தானே எரியூட்ட வேண்டும் என்பதையும் அவள் மறக்கவில்லை. உடலை மெதுவாக வெளியே கொண்டு வந்து ஈரமில்லாமல் மேடாக இருக்கும் பகுதியில் கிடத்தி அங்கே இங்கே சுற்றி அலைந்து தழைகளையும் ஓரளவு ஈரமில்லாமல் இருக்கும் மரக்கட்டைகளையும் கொண்டு வந்து அவன் உடல் மேல் அடுக்கினாள். ஓர் மாபெரும் வீரனுக்கு இத்தகையதொரு விடை கொடுப்பது கொடுமை தான். ஆனால் வேறென்ன செய்ய முடியும்! அரணிக்கட்டைகளைத் தேடி எடுத்து வந்து கடைந்து தீ மூட்டிக் குலசேகரன் உடலுக்குத் தீ வைத்தாள் வாசந்திகா.

இனி அரங்கனை மீண்டும் மேல்கோட்டையில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. ஆகவே மறுநாள் காலையில் குளித்து முடித்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு தன் மார்போடு அணைத்த வண்ணம் மீண்டும் சத்திய மங்கலம் நோக்கிச் சென்றாள். விதவைக் கோலத்தில் ஓர் பெண் கையில் ஓர் விக்ரஹத்தை ஏந்திச் சென்று கொண்டிருந்ததை அனைவரும் அதிசயமாகப் பார்த்தார்கள். வாசந்திகா தன் நிலைமையை எண்ணினாள். அவள் வாழ்க்கையில் முதல் முறை பார்த்த ஆண் மகன் குலசேகரன் தான். அவனை மணந்து நிம்மதியாய் இருக்கலாம் என்னும் அவள் எண்ணம் சீர் குலைந்தது. அதற்கேற்றாற்போல் அவள் சுல்தானியர்களால் சூறையாடப் பட்டாள். ஆனாலும் குலசேகரனிடம் அவள் கொண்ட காதல் மறைய வில்லை. ஆகவே குலசேகரன் அரங்கனைக் கண்டதும் புத்துணர்வு பெற்றிருந்த சமயத்தில் அவனிடம் தன் ஆசையைத் தெரிவித்தாள். முதலில் தயங்கிய குலசேகரன் பின்னர் அரங்கன் திருவுளம் இதுதான் என நினைத்து அவளை அரங்கன் திருமுன்னர் காந்தர்வ விவாஹம் செய்து கொண்டான். நாடு அமைதியான காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகளை இப்போது கடைப்பிடிக்க இயலாது என்பதைக் குலசேகரன் அறிந்திருந்தான். ஆகவே வாசந்திகாவின் இந்த விருப்பம் நிறைவேறட்டும் என எண்ணித் திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவள் விரும்பிய வண்ணம் அவளோடு ஓர் கணவனாக இணையவும் செய்தான்.  அதன் அடையாளம் தன்னுள் ஓர் கருவாக வளரவேண்டுமே என அரங்கனைப் பிரார்த்தித்துக் கொண்டாள் வாசந்திகா.

சுல்தானியர்களை மதுரையை விட்டு விரட்டி அடிக்க ஹொய்சளர்கள் செய்த போர் தோல்வியில் முடிந்ததோடு அல்லாமல் வீரர்கள் நானா திசைகளிலும் சிதறி விட்டனர். ஒரு சில நம்பிக்கைக்குரிய ஊழியர்கள் உதவியுடன் கிருஷ்ணாயி தன் மகனுடன் தப்பித்துத் துளு நாட்டுக்கே சென்று விட்டாள். இங்கே மதுரையில் கொல்லப்பட்ட வீர வல்லாளரின் தோல் உரிக்கப்பட்டு வைக்கோலால் அடைக்கப்பட்டுப் பின்னர் மதுரைக்கோட்டையின் மேல் அதைத்தொங்க விடும்படி அப்போதைய மதுரை சுல்தான் ஆணை இட்டான். அதைப் பார்த்து மகிழவும் செய்தான். இது நடந்த காலகட்டத்தில் தான் மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபின் பதூதா தன் சுற்றுப்பயணத்தின் போது தென்னாட்டுக்கு வந்து மதுரையில் இத்தகையதொரு கொடூரம் நடந்திருப்பதைப் பதிவு  செய்திருக்கிறார்.  ஆனால் இங்கே சுல்தானியர்களோ மேலும் மேலும் அக்கிரமங்களைச் செய்து கொண்டே இருந்தனர். பல கோயில்கள் இடிக்கப்பட்டு விக்ரஹங்கள் நொறுக்கப்பட்டன. மக்களை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர்.  இதை எல்லாம் நேரில் பார்த்த இபின் பதூதா இவற்றை நினைத்து மனம் வருந்தி எழுதி இருக்கிறார்.

அப்போது திடீரென மதுரையைக் கொள்ளை நோயான காலரா தாக்கியது. சுல்தானியர்கள் பலருக்கும் உணவுக் கட்டுப்பாடு இல்லாததால் நோய் தாக்கி இறக்க ஆரம்பித்தனர். நோய்க்குப் பயந்த பலரும் நகரை விட்டு ஓட்டம் பிடித்தனர். மதுரை நகரே சுடுகாடு போல் ஆகி விட்டது. சுல்தானின் குடும்பத்தையும் காலரா நோய் தாக்க சுல்தானின் மகனும், தாயும் முதலில் இறக்க பின் சுல்தானின் மனைவியும் இறந்தாள். கடைசியில் சுல்தான் கியாசுதீனே மரணம் அடைந்தான். இதை இபின் பதூதா இறைவன் கியாசுதீனுக்குக் கொடுத்த தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  சுல்தான் அழிந்தாலும் பரம்பரையிலிருந்த மற்றவர்களால் தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. வாசந்திகா அரங்கனை சத்தியமங்கலத்தில் கொண்டு சேர்த்து விட்டாள். அரங்கனை எடுத்துக்கொண்டு ஶ்ரீரங்கம் சென்றால் சுல்தானியர்கள் என்ன செய்வார்களோ என்னும் பயத்தில் மக்கள் அங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். அரங்கனுக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த கொடவர்கள் வேதாந்த தேசிகரின் அனுமதி பெற்று அரங்கனை சத்தியமங்கலத்திலிருந்து மேல்கோட்டைக்கு எடுத்துச் சென்று விட்டனர்.

இப்போதைக்கு அரங்கன் மேல்கோட்டையில் இருக்கிறான். அரங்கனைத் திருவரங்கம் கொண்டு சேர்க்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு போராடிய மக்கள் அநேகம் பேர் அடியோடு அழிந்து விட்டனர். மேல்கோட்டையில் இருக்கும் அரங்கன் கதி இனி என்ன ஆகப் போகிறதோஎன்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Monday, May 13, 2019

குலசேகரன் மறைந்தான்!

கொட்டும் மழையில் பகல் என்றும் பாராமல், இரவு என்றும் நிற்காமல் ஓட்டமாய் ஓடினாள் வாசந்திகா. சத்தியமங்கலத்தை நோக்கி ஓடினாள். ஒருவழியாக அவள் சத்தியமங்கலத்தை அடைந்த போது நடு நிசி ஆகி விட்டிருந்தது. அரங்கனை எங்கே வைத்திருப்பார்கள் என ஆவலுடன் தேடினாள். மழை இன்னமும் கொட்டிக் கொண்டிருந்தது. கோயிலில் இருக்கிறான் அரங்கன் என்பதைத் தெரிந்து கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள்.  அங்கே அரங்கன் இருந்த மண்டபப் பகுதி திறந்தே இருந்தது. அரங்கனுக்குக் காவல் இருந்த கொடவர்கள் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.  அகல் விளக்கு வெளிச்சத்தில் எளிய உடையில் அரங்கன் அங்கே அருள் பாலித்துக் கொண்டிருந்தான். வாசந்திகாவின் கண்கள் கலங்கின.கொடவர்கள் சப்தம் கேட்டு எழுந்து விடப் போகிறார்களே என்னும் எண்ணத்துடன் சப்தம் போடாமல் அரங்கன் விக்ரஹத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு மார்பில் சார்த்திக் கொண்டாள் வாசந்திகா! அவளுக்கு இருந்த அவசரத்திலும் பரபரப்பிலும் அரங்கனின் கனம் கூடப் பெரியதாகத் தெரியவில்லை. கோயிலுக்கு வெளியே இறங்கிக் குலசேகரனைக் கிடத்தி இருந்த ஊரை நோக்கித் தெற்கு நோக்கி ஓடத்தொடங்கினாள்.

மறுநாள் காலை பொழுது விடியும்போது குலசேகரனை விட்டு விட்டு வந்த சத்திரத்தை அடைந்து விட்டாள்.  ஆவலுடன் குலசேகரன் என்ன நிலைமையில் இருக்கிறான் எனப் பார்த்தாள். "ரங்கா! ரங்கா" என முனகிக் கொண்டிருந்தான் குலசேகரன். அவனிடம், "சுவாமி! சுவாமி! உங்களுக்காகத் திருவரங்கனை இங்கேயே கொண்டு வந்து விட்டேன்!" என்று கூறிய வண்ணம் குலசேகரன் அருகே அரங்கனை எழுந்தருளப்பண்ணி அவன் கைகளை எடுத்து அரங்கன் மேல் வைத்தாள்.  குலசேகரனுக்குக் கரம் பட்டதுமே அரங்கன் தான் என்பது நிச்சயமாகி விட்டது. அத்தனை வேதனையிலும் அவன் முகம் பளிச்சிட, கைகளை நீட்டி அரங்கனை எல்லா இடங்களிலும் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். ஒவ்வொரு பகுதியையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். "வாசந்திகா! வாசந்திகா! நான் பஞ்சுகொண்டானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே இல்லை.  அதை நிறைவேற்றாமலே நான் இறக்கப்போகிறேன். எனக்குப் பின்னால் யாராவது தான் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு செல்லப் பிரயத்தனப்பட வேண்டும். வேறு யாராவது செய்வார்கள். அரங்கா, ரங்கா! ரங்கா! உன்னை உன் சொந்த ராஜ்ஜியத்துக்குள் கொண்டு சேர்க்க முடியாத பாவியாகி விட்டேனே! என்னை மன்னித்து விடு! மன்னித்துவிடு! ரங்கா! ரங்கா!" எனப் புலம்பினான் குலசேகரன்.

அரங்க விக்ரஹத்தைத் தன் ஆவல் தீரத் தழுவிக் கொண்டான். அவன் உடலில் புத்துயிர் பெற்றது போல் இருந்தது. தன் பாவத்தை எல்லாம் அரங்கன் மன்னித்து விட்டான் என எண்ணிக் கொண்டான் குலசேகரன். உடல் வேதனைகள் கூடக் குறைந்த மாதிரி எண்ணிக் கொண்டான். எங்கோ காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். இத்தகையதோர் அதிசய உணர்வோடு மேலும் ஒரு வாரம் குலசேகரன் உயிரோடு இருந்தான். ஆனால் எட்டாம் நாளன்று அவன் உடலில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. திடீரெனச் சோர்வு தலை தூக்கியதோடல்லாமல் வேதனைகள் வெளிப்படையாய்த் தெரிய ஆரம்பித்தன. இரவும், பகலும் தூங்க முடியவில்லை.வாசந்திகாவும் தூங்க வில்லை. நினைவு போய்ப் போய் வந்தது. பல்வேறு நினைவுகளில் மோதுண்டு என்னென்னவோ பிதற்றினான். புலம்பினான்.  வாசந்திகா அவனை விட்டு அகலவில்லை. "சுவாமி!சுவாமி!" எனக் கூறிய வண்ணம் அவன் உடலைத் தடவிக் கொடுத்துக் கொண்டு அவன் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்ல முயன்று எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து கொண்டிருந்தாள் வாசந்திகா.

குலசேகரன் இப்போது புலம்பல்களை நிறுத்தி விட்டான். "ரங்கா! ரங்கா!" என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வரவில்லை. நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. கண்கள் செருகிக் கொள்ள ஆரம்பித்தன. மிகுந்த முயற்சியோடு தன் கைகளை நீட்டினான். அவன் மனதைப் புரிந்து கொண்ட வாசந்திகா அரங்கன் விக்ரஹத்தை அவன் பக்கம் நகர்த்தினாள். கைகளை நீட்டி அரங்கன் விக்ரஹத்தைத் தொட்ட குலசேகரன் முகம் ஒரு கணம் மலர்ந்தது. அப்படியே அவன் கைகள் அரங்கன் விக்ரஹத்தின் பாதங்களைப் பிடித்துக் கொண்டன. குலசேகரனின் அந்திம காலம் நெருங்கி விட்டதைப் புரிந்து கொண்ட வாசந்திகா த்வய மந்திரமான, " ஶ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே! ஶ்ரீமதே நாராயணாய நமஹ!" என்று உச்சரித்துக் கொண்டே இருந்தாள். குலசேகரன் கரங்கள் அரங்கன் பாதங்களைத் தொட்டுக் கொண்டே சிறிது நேரம் இருந்தன. பின்னர் அவன் உடலில் இருந்து ஜீவன் பிரிந்ததும் கரங்கள் தளர்ந்து கீழே விழுந்தன. குலசேகரன் நாராயணனோடு ஐக்கியம் ஆகி விட்டான். மற்ற எவருக்கும் கிடைக்காத புண்ணியப் பேறு அவனுக்கு வாய்த்தது. அரங்கன் காலடிகளில் தன் உயிரை விடும் பேறு அவனுக்குக் கிடைத்தது.

வாசந்திகா அவன் மரணத்தை எதிர்பார்த்திருந்தாலும் அவளால் தாங்க முடியவில்லை. அப்படியே  வேரறுந்த மரம் போல் கீழே விழுந்து அவன் மேல் புரண்டு அழுதாள்.

Tuesday, May 07, 2019

திருவரங்கன் நிலை!

மேற்கே வடகாவேரிக்கரையில் நிழலான ஓர் இடத்தில் குலசேகரனைப் படுக்க வைத்து அவன் உடல் காயங்களுக்கும், கண்ணுக்கும் மூலிகைகளைப் பறித்து வந்து சிகிச்சை செய்தாள் வாசந்திகா.கொஞ்ச நேரம் அவனை அங்கே வைத்திருந்து விட்டு இரவு ஆனதும் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் வாசந்திகா!  கொஞ்ச தூரத்தில் காணப்பட்ட ஓர் சத்திரத்தில் குலசேகரனைப் படுக்க வைத்து மீண்டும் தன் சிகிச்சையைத் தொடர்ந்தாள்.  இரவெல்லாம் கண் விழித்து அவனுக்குப் பணிவிடை செய்தாள். இரண்டு நாட்கள் இவ்விதம் சிகிச்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் அவன் கண் விழிப்பானா? கண்களில் பார்வை இருக்குமா என்றெல்லாம் கவலை அடைந்த வாசந்திகா அவன் உடலைத் தூக்கித் தன் மடியில் போட்டுக் கொண்டு அவனுக்கு விசிறி விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவன் உடல் கொஞ்சம் அசைந்தது.

உடனே, "சுவாமி!சுவாமி!" என்று உரக்கக் கத்திய வண்ணம் அவன் உடலை அசைத்துக் கொடுத்தாள். குலசேகரன் மெல்லிய குரலில் முனகினான். நினைவு வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு, மறுபடி, மறுபடி சுவாமி சுவாமி என்று புலம்பினாள் வாசந்திகா. குலசேகரனுக்குப் பார்வை இருக்கிறதா இல்லையா என்றே அவளுக்குப் புரியவில்லை. அவன் குரல் மெல்லியதாக, "நீ யார்?" என்று அவளைக் கேட்டது. அவள்,"சுவாமி, நான் வாசந்திகா! உங்கள் அடிமை!" என்று கூறினாள். "வாசந்திகா? நீ எப்படி என்னைக் காப்பாற்றினாய்? நான் இப்போது எங்கே இருக்கிறேன்?" என்று குலசேகரன் கேட்க, வாசந்திகா போர்க்களத்திலிருந்து அவனைத் தான் தூக்கி வந்ததாகவும் கண்ணனூருக்கு மேற்கே பல காத தூரங்கள் தாண்டி வந்திருப்பதாகவும் சொன்னாள்.போர் நிலைமை பற்றிக் குலசேகரன் கேட்டதற்கு ஹொய்சளர்கள் அடைந்த தோல்வியைப் பற்றி வாசந்திகா வருத்தத்துடன் கூறினாள்.

அவன் மெல்லக் கைகளை நீட்டி அவளைத் தொட்டான்.அப்போது தான் அவன் பார்வை போய்விட்டதை வாசந்திகா முழுவதுமாகப் புரிந்து கொண்டாள். கண்கள் கண்ணீரை வெள்ளமாகப் பெருக்கின. குலசேகரன் அவளிடம் ,"வாசந்திகா! நீ வாசந்திகா தானே! என்னால் உன்னைப் பார்க்க முடியாது! என் பார்வை போய் விட்டது. உடல் முழுவதும் காயங்களால் ரணம் ஆகி விட்டது. இத்தகைய மோசமான நிலையிலிருந்து நான் மீள்வது கடினம். நான் இனி அதிக நாள் உயிருடன் இருக்க மாட்டேன்."  என்றான்.

வாசந்திகாவும் கண்ணீருடன், "தெரிந்து கொண்டேன் சுவாமி! அதனால் என்ன? நான் இருக்கிறேன் உங்களுக்கு! உங்களுக்குப் பணிவிடை செய்வதைத் தவிர்த்து எனக்கு வேறு என்ன வேலை? அது என் கடமை! என் பாக்கியம்!" என்று சொன்னாள். "வாசந்திகா! இப்போதைக்கு எனக்கு ஓர் ஆசை! அதை நீ நிறைவேற்றித் தருவாயா? ஒரு வேளை இதுவே என் கடைசி ஆசையாகவும் இருக்கலாம்!" என்றான். "கட்டளை இடுங்கள்,சுவாமி!செய்கிறேன்!" என வாசந்திகா கூற, "எனக்கு அரங்கனைப் பார்க்க வேண்டும். இப்போதே கிளம்பி அரங்கனைக் காணப்போக வேண்டும். என் கண்கள் பார்வை அற்றது என நினைக்கிறாயா? பார்வை எனக்குத் தேவை இல்லை. அரங்கன் அருகில் சென்றாலே நான் அவரைத் தரிசித்தாற்போல்தான்!" என்றான்.

அவன் ஆவலை அறிந்த வாசந்திகா மறுநாள் ஆண் உடை அணியாமல் ஒரு பெண்ணாகவே உடை உடுத்துக் கொண்டு அவனைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு ஆவேசம் வந்தவள் போல் மேலும் மேற்கு நோக்கிக் காவிரிக் கரையோடு நடக்க ஆரம்பித்தாள். அரங்கன் சத்தியமங்கலம் வரை வந்திருக்கும் செய்தி அவளுக்குத் தெரிந்திருந்தது.  அவனைத் தூக்கிக் கொண்டு அவள் நடப்பதைக் கண்ட அனைவரும் வியந்தார்கள். ஓர் பெண் பெரும் சுமையான ஓர் ஆண்மகனைத் தோளில் போட்டுக் கொண்டு ஆவேசமாகச் செல்கிறாளே என வியப்புடன் பார்த்தனர். இது எதையும் கவனிக்காமல் வாசந்திகா விரைவாகச்  சென்றாள். ஆங்காங்கே கனி வகைகளையும், புல்லரிசியையும் வைத்து அவனுக்கு உணவு சமைத்துக் கொடுத்தாள். பொதுவாக சத்தியமங்கலம் செல்லும் அந்த வழி ஜனநடமாட்டத்துடன் காணப்படும். ஆனால் இப்போது சுல்தானியர்கள் வரவினாலும் அவர்கள் எங்கும் சுற்றிக்கொண்டே இருப்பதால் போக்குவரத்து குறைந்து விட்டது.

ஆங்காங்கே ஓரிரு பிரயாணிகள் தான் பயணத்தில் இருந்தனர்.  அவர்கள் வாசந்திகா குலசேகரனைத் தூக்கிக் கொண்டு வெறியோடு நடப்பதைக் கண்டு திகைத்தனர். ஆனால் வாசந்திகா எதையும் லட்சியம் செய்யாமல் தன் போக்கில் நடந்து கொண்டிருந்தாள். குலசேகரன் அடிக்கடி சத்தியமங்கலம் வந்து விட்டதா எனக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வாய் குழற ஆரம்பித்து விட்டது.  அதைக் கண்டு வாசந்திகா கவலையுடன், "இதோ! இதோ!" எனச் சொல்லிக் கொண்டு கொஞ்சம் ஓட்டமாக ஓட ஆரம்பித்தாள். அவன் நிலைமை மோசமாக ஆகிக் கொண்டு வருவதை அவள் உணர்ந்து கொண்டாள். சத்தியமங்கலத்தை நெருங்கும்போது திடீரென மழை சோவென்று பெய்ய ஆரம்பித்து விட்டது. அந்த அதிகாலை நேரம் மழை கொட்டியதைக் கண்ட வாசந்திகா பதைப்புடன் சுற்றும் முற்றும் பார்த்து ஓர் பாழடைந்த சத்திரத்தைக் கண்டு அங்கே சென்று குலசேகரனைக் கீழே கிடத்தினாள்.

மழை அன்று முழுவதும் கொட்டித் தீர்த்தது.மறுநாளும் மழை விடவே இல்லை. மேகங்கள் கூடிக் கொண்டு வானம் கருத்தே காணப்பட்டது. வாசந்திகா செய்வதறியாது திகைத்தாள். குலசேகரன் உடல்நிலையோ இன்னும் மோசமானது. ஓர் முடிவுக்கு வந்த வாசந்திகா குலசேகரனைத் துணி போட்டுப் போர்த்திப் பாதுகாப்பாக வைத்து விட்டு கொட்டும் மழையில் இறங்கி ஓடினாள்.

Sunday, May 05, 2019

வல்லாளர் மறைவு!குலசேகரனும் மறைந்தான்!

குலசேகரன் விழும் முன்னரே ஹொய்சளப் படை நிர்மூலம் ஆக்கப்பட்டது. ஹொய்சளப் படையின் தளபதிகளும் தண்டநாயகர்களும் சுல்தானியரால் கொல்லப்பட்டார்கள். வீர வல்லாளர் மட்டும் தப்பி இருந்தார். அவரும் தன்னால் இயன்ற வரைக்கும் போர்க்களத்தில் ஈடு கொடுத்தார். ஆனால் தன் சொந்தப் படை வீரர்களே உயிருக்குப் பயந்து களத்தை விட்டு ஓடுவது கண்டு செய்வதறியாது திகைத்தார். எதிரிகள் அவரையும் துரத்த ஆரம்பிக்கவே தன் குதிரை மீது ஏறிக் களத்தை விட்டு ஓட ஆரம்பித்தார். அவருடைய மெய்க்காப்பாளர்கள் அனைவரும் போரில் மாண்டு விட்டனர். யாருடைய உதவியும் இல்லாமல் தனித்தே தன்னைக் காத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தார். ஆனால் ஓடும் அவரைக் கண்ட சுல்தானியர்கள் அவரைத் துரத்த ஆரம்பித்தனர்.

கியாசுதீனின் மருமகன் ஆன நாசிருதீன் அவரைப் பிடித்து விட்டான். ஆனால் அவர் தான் ஹொய்சள மன்னர் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அவரைக் கொல்ல முயற்சித்தான். அப்போது நாசிருதீனின் வீரர்களில் ஒருவன் இவர் தான் ஹொய்சள அரசர் எனக் கூறவே அவரைக் கொல்லாமல் நிறுத்திவிட்டு அவரைச் சிறைப்படுத்தித் தன்னுடன் அழைத்துச் சென்றான். மதுரையில் கியாசுதீன் முன்னால் அவரை நிறுத்தினான்.இவ்வளவு வருடங்கள் எத்தனை எத்தனையோ போர்க்களங்களில் வெற்றி பெற்று மாபெரும் பெயரோடும் புகழோடும் திகழ்ந்த வீர வல்லாளர் இப்போது சுல்தானின் முன்னால் நிராயுதபாணியாகத்தலை குனிந்து நின்றார். ஆனாலும் அவர் வீரம் குறையவில்லை. ஹொய்சள மன்னர் என அறிந்த கியாசுதீன் அவருக்கு ஆசனம் அளித்து அமரச் செய்து அவரைத் தாங்கள் நல்ல முறையில் நடத்தப் போவதாகவும், ஆகவே கியாசுதீன் கேட்பதை எல்லாம் அவர் தர வேண்டும் எனவும் சொன்னான். அதன்படியே மன்னர் ஒத்துக் கொள்ள, அவருடைய குதிரைப்படைகள், யானைப்படைகள், சொத்துக்கள் என அனைத்தையும் கியாசுதீனுக்குத் தருவதாக ஒத்துக் கொண்டு சாசனம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் மன்னர்.

அரசரின் படைகளிடம் இதைக் காட்டி அனைத்தையும் பெற்றுக்கொண்டு வரும்படி சில வீரர்களை அனுப்பி வைத்த சுல்தான் கண்களைக் காட்ட வீர வல்லாளர் இரு கண்களும் கட்டப்பட்டு வெளியே வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டார். அதை வல்லாளர் ஆக்ஷேபிக்கவே கண் கட்டுகள் அவிழ்த்து விடப்பட்டன. தன்னைச் சுற்றிலும் வீரர்களைப் பார்த்த வல்லாளர் திகைத்து நிற்கவே அவர்கள் அவருடைய கவசங்களைக் கழட்டினார்கள். வல்லாளர் மீண்டும் ஆக்ஷேபம் தெரிவிக்கவே அவர்கள் உரக்கச் சிரித்தார்கள். வல்லாளரை விடுதலை செய்வதாக கியாசுதீன் ஒத்துக் கொண்டதாலேயே தான் தன் சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்ததாக வல்லாளர் கூறிவிட்டு இப்போது தன்னை இப்படி நடத்தக் கூடாது எனக் கடுமையாக ஆக்ஷேபித்தார். வீரர்கள் விடுதலை தானே! ஒரேயடியாக விடுதலை தந்து விடுகிறோம் எனக் கூறிக்கொண்டே ஓர் கூர்வாளால் மன்னரின் மார்பில் வேகமாகப் பாய்ச்ச அதன் வேகம் தாங்க முடியாமல் மன்னர் "ரங்கா!" "ரங்கா!" எனச் சொல்லிக் கொண்டே கீழே விழுந்தார். அவரது ரத்தம் மதுரை மண்ணை நனைத்தது. சிறிது நேரத்தில் அவர் உயிரும் பிரிந்தது. புகழ் வாய்ந்த ஹொய்சள குலத்துக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஹொய்சள அரச வம்சத்தின் மூலம் தாங்கள் சுல்தானியரின் பிடியிலிருந்து மீண்டு விடலாம் எனக் கனவு கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை மேல் மண் விழுந்தது. அரங்கனை அரங்கத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்னும் பலரின் ஆவல் மறைந்து போனது.

இங்கே கண்ணனூர் யுத்த களம்! நடு நிசி! பிறை நிலவின் வெளிச்சத்தில் ஆங்காங்கே வீரர்களின் உடல்கள் கிடந்தது நிழலாகத் தெரிந்தது. ரத்த வாசனைக்குப் பிணம் தின்னிக் கழுகுகளும், ஓநாய்களும் கூட்டமாக வந்து போட்டுக் கொண்டிருந்த சப்தத்தில் உடல் நடுக்கமுற்றது. அப்போது அங்கே ஓர் சுல்தானிய வீரன் யுத்தக்களத்தில் கிடந்த உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டும் அவற்றை நகர்த்திக் கொண்டும் பார்த்த வண்ணம் இது இல்லை! ம்ஹூம், இங்கேயும் இல்லை என முணுமுணுத்துக் கொண்டும் வந்து கொன்டிருந்தான். அரை நாழிகைக்கும் மேலாகத் தேடியும் அவன் தேடிய உடல் அவனுக்குக் கிடைக்கவில்லை. மேலும் மேலும் தேடினான். ஓரிடத்தில் பல உடல்கள் குவியலாகக் கிடந்தன. அங்கே போய் ஆர்வமுடன் தேடினான். ஒரு உடலைக் கண்டு ஆர்வமாக, "சுவாமி!" எனக் கத்திக் கொண்டே அந்த உடலைப்புரட்டித் திருப்பினான்.

ஆஹா! பெண் குரல்! தேடியது ஆண் இல்லை. பெண்! யார் அந்தப் பெண்! உற்றுக் கவனித்தோமெனில் வாசந்திகா என்பது புரியும். ஆம் வாசந்திகா தான் குலசேகரன் வீழ்ந்து விட்ட செய்தியைக் கேட்டதிலிருந்து அரண்மனையிலிருந்து தப்பி ஓடி வந்து அவன் உடலைத் தேடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாகக் கிடைத்து விட்டது. குலசேகரன் உடலைத் தன் மடி மீது வைத்துக் கொண்டு "சுவாமி! சுவாமி" எனப் புலம்பினாள். அழுகை பீறிட்டு வந்தது. அவன் உடல் முழுவதும் ரணமாக இருந்ததோடு அல்லாமல் இரு கண்களும் கூட ரணமாகிக் கிடந்தன.  அவன் உடலில் பல இடங்களில் தைத்த அம்புகள் நுனி குத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தன. அவற்றை மெல்ல அப்புறப்படுத்தினாள் வாசந்திகா. குலசேகரன் இறந்து விட்டானே என்னும் எண்ணத்தில் ஓலமிட்டுக் கதறினாள்! "என்னை விட்டு விட்டுப் போய் விட்டீர்களே!" எனத் தலையில் அடித்ஹ்டுக் கொண்டாள்.

அவன் மார்பில் கைவைத்துப் பார்த்தாள். சுவாசத்தைக் கவனித்தாள். எதுவும் தெரியாமல் நாடியைப் பிடித்துப் பார்த்தால் மெல்லியதாக ஜீவநாடி ஓடுவது புரிந்தது. "சுவாமி, சுவாமி! உங்களை எப்படியேனும் காப்பாற்றி விடுவேன். இறக்க விடமாட்டேன்!" என்று சொல்லிக் கொண்டே அவனை எழுப்பிப் பார்த்தாள். உலுக்கிப் பார்த்தாள். எவ்விதப் பலனும் தெரியவில்லை. பின்னர் சற்று யோசித்துவிட்டு அவனை எப்படியேனும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் வெறியோடு அவனைச் சிரமப்பட்டுத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு "ரங்கா!ரங்கா!" என முணுமுணுத்த வண்ணம் நடக்கத் தொடங்கினாள். மேற்குநோக்கி நடந்தாள் அவள்.

Thursday, May 02, 2019

குலசேகரன் வீழ்ந்தானா?

முதலில் கள்ளர் படைகள் வந்து தாக்குகின்றனர் என்றே நினைத்த ஹொய்சளர்கள் பின்னால் சுதாரித்துக் கொண்டு சுல்தானியர் தாக்குதல் என்பதைப் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் திரும்ப பதிலுக்குத் தாக்கும் வண்ணம் அவர்கள் தயாராக இல்லை. கூக்குரலிட்டி தூரத்தில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே தங்கள் குதிரைகள், ஆயுதங்களைத் தேடி எடுத்தனர். அதற்குள்ளாகப் பல வீரர்கள் கீழே விழுந்து விட்டனர். பரபரப்புடன் அனைவரும் அங்கும் இங்குமாய் ஓடினார்கள். பலருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூடப் புரியாமல் பிரமித்து நின்றார்கள். அவர்களை மற்றவர்கள் தட்டிக்கொடுத்து தன் நிலைக்குக் கொண்டு வர முயற்சித்தார்கள். கவசங்களை மாட்டிக் கொள்வதற்குள்ளாகவே பலரும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் தைத்தும், வாளால் வெட்டப்பட்டும் விழுந்தனர்.

யாரையும் எழுந்திருந்து ஆயுதங்களை எடுக்க விடாமல் சுல்தானியர் கண்ட இடங்களில் எல்லாம் புகுந்து தாக்கினார்கள். படுத்திருப்பவர்கள் அப்படியே பரலோகம் போனார்கள். எழுந்தவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ள நேரமின்றிக் கீழே விழுந்தார்கள். குதிரைகள் பலவும் மேய்ந்து கொண்டிருந்ததால் ஹொய்சள வீரர்களால் அவற்றை உடனடியாகக் கொண்டு வந்து அணி வகுக்க முடியாமல் திணறினார்கள். குதிரைகள் ஒரு பக்கம் ஓட வீரர்கள் ஒரு பக்கம் ஓட நாலாபக்கங்களிலும் வீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போயிற்று. வெளியே கிளம்பிய ஓலங்களினாலும் கூக்குரல்களினாலும் கூடாரங்களில் இருந்த தளபதிகள் வெளியே வந்து நிலைமையைக் கண்டறிந்து திடுக்கிட்டுப் போனார்கள். அவசரமாக ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கவசங்களைத் தரித்துக் கொண்டு போரிடக் கிளம்பினார்கள். வீரர்களை தைரியம் சொல்லித் திரட்டி எதிர்த்துப் போரிடச் சொல்லிக் கொண்டு அவர்களிடம் வந்தார்கள்.

அப்படியும் ஒரு சில வீரர்களையே திரட்ட முடிந்தது. ஆங்காங்கே கூடி நின்ற வீரர்கள் அவரவர் தளபதிகளுடன் சேர்ந்து சுல்தானியர்களுடன் சண்டை இடத் தொடங்கினார்கள். ஆனால் யாருக்கும் அதில் முழு ஆர்வம் இல்லை. போதிய ஆயுதங்களும் இல்லை; வீரர்களும் இல்லை! ஆகவே விரைவில் அவர்களும் அடிபட்டுக் கீழே விழுந்தார்கள். அரை நாழிகைக்குள்ளாக அந்தப் பிரதேசம் முழுவதும் குழப்பத்துடனும் கூப்பாடுகளும், கூக்குரல்களும் நிரம்பி தூசிப்படலம் பரவி என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் புரியாதபடி ஆகி விட்டது. அப்படியும் குலசேகரன் அங்குமிங்குமாக ஓடி வீரர்களை உற்சாகப்படுத்தி ஆங்காங்கே தானும் போரிட்டுக் கொண்டு வாளைச் சக்கரவட்டமாகச் சுழற்றிக் கைபடும் இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தினான். அவன் கண்கள் மன்னர் இருக்குமிடம் நோக்கித் தேடின. பின்னர் மன்னரைக் கண்டு பிடித்துக் கொண்டு அங்கே சென்று விரைவில் இந்தப் போர்க்களத்தை விட்டு மறைந்து சென்றுவிடும்படி அவரை வற்புறுத்தினான்.

மன்னர் போர்க்களத்தை விட்டு வெளியேறும் முன்னர் எதிரிகளின் கைகளில் அவர் மாட்டிக்கொள்ளாவண்ணம் பாசறைக்குச் செல்லும் வழியெல்லாம் வீரர்களை நிறுத்தி ஓர் வியூகம் அமைத்தான். எனினும் எதிர்பாராத தாக்குதலில் நிலை குலைந்து போன ஹொய்சளர்கள் என்னதான் வீரத்தோடு சண்டை போட்டும் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆங்காங்கே வீரர்கள் களத்தை விட்டு ஓடத் தொடங்கினார்கள்.  ஒரு நாழிகைக்குள்ளாக எல்லா வீரர்களும் களத்திலிருந்து தப்பிப் பின் வாங்கி ஓட ஆரம்பித்தார்கள்.சுல்தானியர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு கண்ணில் படும் வீரர்களைக் கொன்று குவித்தார்கள். சண்டை வெளியே நடக்கும் செய்தி உடனடியாகக் கோட்டைக்குள் சென்று அங்கிருந்தும் படையினர் வெளியே வந்து ஆக்ரோஷத்துடன் சண்டை இடத்தொடங்கினார்கள்.

சண்டை தொடங்கி இரண்டு முஹூர்த்த நேரத்தில் ஹொய்சளர்களின் விசுவாசத்திற்குப் பாத்திரமான ஒரு சில தளபதிகள், வீரர்கள் மற்றும் குலசேகரன் மட்டும் எதிர்த்துச் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். இந்த சமயம் யாரும் எதிர்பாராவண்ணம் ஓர் நிகழ்ச்சி நடந்தது. ஹொய்சளப் படையில்  இருந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் வீரர்களில் இருபதினாயிரம் வீரர்கள் சமீபத்தில் துருக்க சமயத்தைத் தழுவிய தமிழ், தெலுங்கு, கன்னட வீரர்கள் இருந்தனர்.இவர்கள் தெலுங்கு நாட்டில் அரசரின் படையில் இருந்தவர்கள். இப்போது வீர வல்லாளரின் வேண்டுகோளுக்கிணங்கி தெலுங்கு நாட்டரசர் அவர்களை உதவிக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால் இந்த வீரர்கள் இப்போது திடீரென சுல்தானியர் பக்கம் வெற்றி கிடைக்கப் போகிறது என்பதை அறிந்து கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். ஹொய்சளப்படையினரின் செயல்பாடுகளை இத்தனை நாட்களில் நன்கு அறிந்து கொண்டிருந்ததால் அவர்களால் வெகு எளிதாக ஹொய்சள வீரர்களையே திருப்பித் தாக்க முடிந்தது.

விரைவில் ஹொய்சளப்படை சின்னாபின்னமாக்கப்பட்டது. அப்படியும் மன்னரைக் காப்பாற்ற வேண்டிப் பாசறைக்கு அருகேயே நின்று கொண்டு போரிட்டான் குலசேகரன். மன்னரையும் கிருஷ்ணாயியையும் உடனே ஓடிவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.  எத்தனை நேரம் தான் தாக்குப் பிடிக்க முடியும்? சுற்றியுள்ள வீரர்கள் ஒவ்வொருவராக விழ ஆரம்பித்து விட்டார்கள். அம்பு எடுத்து வில்லில் தொடுத்து விடுவதற்கு நேரமில்லாமல் தன் வாளை வைத்துக் கொண்டே சக்கரவட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சண்டையிட்டான் குலசேகரன். அவன் அருகே யாருமே நெருங்க முடியாமல் செய்தான். நெருங்கியவர்கள் அவன் வாளால் அடிபட்டுக் கீழே விழுந்தனர்.  குலசேகரனுக்கும் அதிக உழைப்பாலும் ஆவேசமாகப் போரிட்டதாலும் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.  கண் முன்னே எதிரிகள் இருப்பது கூட மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அவன் கண்கள் முன்னே ஹேமலேகாவும், வாசந்திகாவும் அழைப்பது போல் இருந்தது. ஆஹா! வாசந்திகா! அவளைக் காப்பாற்றத் தன்னால் முடியவில்லையே!

அப்போது பார்த்துப் பஞ்சு கொண்டானின் உருவம் அவன் கண் முன்னே தோன்றி, அரங்கன் என்னவானான் எனக் கேட்டது. அவன் கண் முன்னே அரங்கனின் செம்பொன் முகம் குறுஞ்சிரிப்புடன் காணப்பட்டது. என்னைத் தேடி ஏன் வரவில்லை என அரங்கன் கேட்பது போல் இருந்தது. அவன் மனம் அரங்கன் முகத்திலேயே ஆழ்ந்திருக்கக் கைகள் ஓர் இயந்திரம் போல் போர் புரிந்தன. அவன் இயக்கத்தில் தெரிந்த இந்த மாறுபாட்டைக் கண்ட சுல்தானியர் திகைத்தனர். அவன் இயக்கங்கள் தளராமல் அவன் சுழன்று சுழன்று கத்தி வீசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவனை இயக்குவது ஏதோ ஓர் சக்தி எனப் புரிந்து கொண்டனர். சுல்தானியர் பலர் சேர்ந்து விடாமல் அவன் மேல் அம்பு மழை பொழிந்தனர். அடிபட்ட குலசேகரன், "ரங்கா! ரங்கா!" என அழைத்துக் கொண்டே கீழே விழுந்து புரண்டான்.

Wednesday, May 01, 2019

சுல்தானியரின் துரோகமும், குலசேகரன் நிலையும்!

அம்பு ஒன்றில் "போர் செய்ய விருப்பமா? சரணாகதி அடைய விருப்பமா? வேறு எந்த நிபந்தனைகளையும் ஏற்க மாட்டோம்!" என எழுதிய ஓலை ஒன்று கட்டப்பட்டுக் கோட்டைக்குள் அனுப்பப் பட்டது. ஹொய்சளர்கள் தாற்காலிகமாகப் போரை நிறுத்தி விட்டு ஓய்வாக அமர்ந்தார்கள். அனைவரும் ஓரளவு மகிழ்ச்சியுடனே காணப்பட்டார்கள். மறுமொழி தங்களுக்குச் சாதகமாக வரும் என எதிர்பார்த்திருந்தார்கள். அப்போது திடீரெனக் கிழக்கு வாசல் திறந்து வெள்ளைக்கொடி தாங்கிய வீரர்கள் பலர் குதிரைகளில் ஏறிக் களத்துக்கு வந்தார்கள். ஹொய்சள வீரர்கள் வழி விட்டு ஒதுங்கி நிற்க வீர வல்லாளர் இருக்கும் இடம் தேடி அவர்கள் சென்று வணக்கம் தெரிவித்துத் தட்டில் மன்னருக்கான காணிக்கைகளையும் வைத்தார்கள்.

அவர்களில் தலைவன், போரை நிறுத்துவோம் என வேண்டிக் கொண்டான். நிபந்தனை என்ன எனக் கேட்ட மன்னரிடம் சமாதானமாய்ப் போய்விடலாம் என்றான். ஆனால் மன்னர் அதை ஏற்கவில்லை. சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ள முடியாது எனவே, கப்பம் தருவதாகச் சொல்லிப் பார்த்தார்கள். மன்னர் அதையும் ஏற்காமல் கண்ணனூர்க் கோட்டையைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அப்படிக் கோட்டையை ஒப்படைத்தால் மிச்சம் இருக்கும் சுல்தானியரைக் கொல்லாமல் விடுவதாகவும், இல்லை எனில் அனைவரையும் நிர்மூலமாக்கி விட்டுக் கோட்டையைக் கைப்பற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார். அந்த சுல்தானியத் தலைவன் யோசித்துவிட்டுக் கோட்டைக்குள் சென்று மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சொன்னான்.மன்னரும் அதை ஒத்துக்கொள்ளச் சிறிது நேரம் கோட்டைக்குள் சென்று மற்றவர்களுடன் பேசிய சுல்தானியத் தலைவன் வெளியே வந்து தன் தளபதிகள் இம்முடிவைத் தாங்களே தனியாக எடுக்க முடியாது எனவும், மதுரை சுல்தானைக் கேட்டுத் தான் எடுக்க முடியும் என்றும் சொன்னான்.

அதை அப்படியே உண்மை என நம்பிய மன்னரும் ஒத்துக் கொண்டு எத்தனை நாட்களில் மறுமொழி கிடைக்கும் எனக் கேட்கப் பதினைந்து நாட்களுக்குள் சொல்வதாகச் சொன்னான். மன்னர் தம் தளபதிகளுடன் ஆலோசிக்கவே சிலர் ஒத்துக் கொள்ளப் பலர் வேண்டாம் என நிராகரித்தார்கள். குலசேகரன் நிராகரித்தவர்களுள் ஒருவன். அவனுக்குக் கோட்டையை இப்போதே கைப்பற்றிவிட வேண்டும் என்னும் ஆவல். அவகாசம் கொடுத்தால் மதுரையிலிருந்து பெரியதொரு படை வந்து நம்மைத் தாக்கும் எனவும் அவகாசம் கொடுக்கக் கூடாது எனவும் சொன்னான். ஆனால் மன்னரோ பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் கூறி அவர்கள் கேட்டபடியே பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தார். உடனடியாக சுல்தானியர்களின் தூது கோஷ்டி ஒன்று மதுரைக்குப் பயணம் ஆனது.  இரவு பகலாகப் பயணம் செய்தும் ஆறு நாட்கள் ஆகிவிட்டன. அங்கே சென்ற தூது கோஷ்டி சுல்தான் கியாசுதீனைச் சந்தித்துத் தாங்கள் முறியடிக்கப்பட்டதையும் வீர வல்லாளர் கோட்டையைப் பிடிக்கத் தயாராகக் காத்திருப்பதையும் வாய்மொழியாகத் தெரிவித்து விட்டுக் கண்ணனூர்க் கோட்டைத் தளபதியின் கடிதத்தையும் கொடுத்தான்.

அதைப் படித்த கியாசுதீன் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தான். என்ன செய்யலாம் என யோசித்தான். அனைவருக்கும் இந்தச் செய்தியினால் வருத்தம் மேலிட்டது.  தங்களைச் சேர்ந்த மற்ற மக்கள் முன்னிலையிலும் கியாசுதீன் அந்த லிகிதத்தைப் படித்துக் காட்டப் பலரும் வீறு கொண்டு எழுந்தனர். உடனடியாகக் கண்ணனூர்க் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்றனர். விக்ரஹங்களையும், கல்லையும் கும்பிட்டு வருபவர்களுக்கு நாம் எக்காலத்திலும் பணியக் கூடாது என்றனர். கண்ணனூர்க் கோட்டை அவர்கள் வசம் போய்விட்டால் பின்னர் மதுரைக்கு வந்து நம்மையும் தோற்கடிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். அப்படி ஏற்படுவதை நாம் ஒருக்காலும் அனுமதிக்கக் கூடாது! உடனடியாக நாம் கண்ணனூர் புறப்பட்டுச் சென்று நம் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதோடு அல்லாமல் கோட்டையையும் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்.

ஒரு சிலர் ஹொய்சள வீரர்களை அடியோடு அழித்து ஒழிப்பதாக சபதமும் செய்தனர். இன்னும் சிலர் தங்கள் தலைப்பாகைகளைக் கழட்டி அவிழ்த்துத் தங்கள் குதிரைகளின் கழுத்தில் கட்டினார்கள். அப்படிக் கட்டியவர்கள் சுல்தானையும் இந்த சுல்தானிய ராஜ்யத்தையும் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யச் சித்தம் எனத் தெரிவிப்பதாக அர்த்தம். அப்படி அஞ்சா நெஞ்சம் படைத்த சுமார் ஐநூறு வீரர்கள் முன்னணியில் அணிவகுத்தார்கள். படையின் வலப்பக்கம் சைஃபுதீன் பகதூர் என்பவரும் இடப்பக்கம் அல்மாலிக் முகமது என்பவரும் தங்கள் படைகளுடன் அணி வகுக்க நடுவில் கியாசுதீன் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தன் சொந்தப்படையுடன் பங்கு கொள்ள அவர்களுக்கும் பின்னால் மேலும் மூவாயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் அணி வகுத்து வர ஓர் பெரிய படை ஜெயகோஷத்துடன் கண்ணனூரை நோக்கிப் புறப்பட்டது.

எல்லோரும் அதிகமாக வெறியுடன் இருந்தார்கள். எவரும் இரவு, பகல் பார்க்கவில்லை. ஒரே மூச்சாக விரைந்தனர். கிடைத்த குறுக்கு வழிகளில் எல்லாம் சென்றார்கள்.தாங்கள் படை எடுத்து வரும் செய்தி ஹொய்சளர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அதி கவனமாக இருந்தார்கள். ஆகவே விரைவாக ஐந்தாம் நாளே அதிகாலையில் அவர்கள் கண்ணனூரை நெருங்கி விட்டார்கள். வழக்கமாய்க் காவிரியைக் கடக்கும் இடத்தில் கடந்தால் சப்தம் கேட்டு ஹொய்சளர்கள் உஷாராகி விடுவார்கள் என்பதால் மேலும் கிழக்கே சென்று வெகு தொலைவில் காவிரியைக் கடந்தார்கள்.  கிழக்குத் திசையிலிருந்து கண்ணனூருக்கு அணி வகுத்து வந்தார்கள்.

இங்கே ஹொய்சள வீரர்களோ ஆபத்து ஏதும் இல்லை என நினைத்துக் கொஞ்சம் ஆசுவாசமாகவே இருந்தனர். குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. அவை ஒரு பக்கம் மேய்ந்து கொண்டிருக்க வீரர்கள் ஓய்வாகப் படுத்தபடியும் கூட்டமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்போது நடுப்பகல் வேளையாகிவிட்டபடியால் சாப்பாடு முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். தளபதிகள் தங்கள் தங்கள் கூடாரங்களில் மதிய நேரத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள். மன்னரும் தன் கூடாரத்தில் படுத்திருந்தார். திடீர் என "ஹோ"வென இரைச்சல் கேட்க என்ன சப்தம் எனப் புரியாமல் திகைத்த ஹொய்சளர்களை சுல்தானியர்கள் மேலே விழுந்து கண்டபடி தாக்க ஆரம்பித்தார்கள். 

Sunday, April 28, 2019

சுல்தானியர்கள் சமாதானத்துக்கு வருகிறார்களா?

குலசேகரன் அந்தக் கோட்டையில் தான் வாசந்திகா இருக்க வேண்டும் என நினைத்தான். உயிருடன் இருப்பாளா? அல்லது பட்டினிச்சாவில் இறந்துவிட்டாளா?தெரியவில்லை! அவள் உடலும் தூக்கி எறியப் பட்டிருந்தால்? இந்த எண்ணமே அவனை வேதனை செய்தது. அவள் மட்டும் உயிருடன் இருந்தால் ஹொய்சளர்கள் முற்றுகை குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்திருப்பாளே! நானும் இங்கே வந்து போரில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதையும் அறிந்திருப்பாளே! ஆகவே அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டு நம்பிக்கையும் வந்திருக்க வேண்டும். கவலைப்படாமல் அடுத்து ஆகவேண்டியதைப் பார்ப்போம் எனநினைத்தான் குலசேகரன். மறு தினத்தில் இருந்து மறுபடி சடலங்கள் வந்து விழ ஆரம்பித்தன. 

அங்கே கோட்டைக்குள்ளே! பதினான்கு நாட்களுக்கான உணவு மட்டுமே இருக்க சுல்தானியர்கள் மக்களைக் கொன்று எறிந்து கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். இதைக் கண்ட ஹொய்சளர்கள் பரபரப்புடன் பீதியும் அடைந்தனர். குலசேகரனுக்குக் கோட்டையைத் தாக்குவதில் ஆவல் அதிகம் ஆயிற்று. மறுபடி போய் மன்னனைக் கெஞ்சினான். ஆனாலும் மன்னர் அவசரப்படக் கூடாது, இன்னும் இரு நாட்கள் போகட்டும், பொறுத்திருப்போம் என்றே சொன்னார். அதன்படி இரண்டு நாட்கள் சென்று மூன்றாம் நாள் காலை ஹொய்சளப்படை மாபெரும் புயல் போல் கிளம்பியது.  போர் முரசுகள், "தம், தம், தம், " என்று போட்ட சப்தம், எங்கும் நிரம்பி, "யுத்தம், யுத்தம், யுத்தம்" என்று எதிரொலித்தது. ஹொய்சளப்படை கண்ணனூர்க் கோட்டையை நோக்கி முன்னேறியது.

ஹொய்சள வீரர்கள் உணவு கிடைத்தமையால் பூரண ஆரோக்கியத்துடன் இருந்தனர் என்பதோடு அதிகச் சேதமும் கடந்த இரண்டு தாக்குதல்களில் நிகழவில்லை. ஆகவே இன்னமும் லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். அவர்கள் எழுப்பிய ஜெய கோஷங்களால் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. கோட்டை வாயிலை நோக்கிப் படைகள் வேகம் வேகமாகச் சென்றன. அதுவும் இல்லாமல் இத்தனை கால முற்றுகையில் கோட்டைக்குச்  சுற்றிலும் செல்லும் அகழிகளைத் தூர்த்திருந்தனர் ஹொய்சள வீரர்கள். ஆகவே கோட்டைக்கு அருகே போவதற்கு அதிகம் கஷ்டப்படவில்லை.  சுல்தானிய வீரர்கள் வெளியே வருவதற்கு முன்னரே ஹொய்சள வீரர்கள் போரை ஆரம்பித்து விட்டனர். அம்புகளை மழையாகக் கோட்டைச் சுவர் மேல் பொழிந்தார்கள். ஹொய்சள வீரர்களின் அடுத்தடுத்த இடைவெளி காணாத அம்புச் சரங்களால் கோட்டை மறைக்கப்பட்டது. அம்புகள் அனைத்தும் கூடு போல் சென்று மறைத்துக் கொண்டன.  கோட்டை முகடுகள் மீதெல்லாம் அம்புச் சரங்கள்.

ஒரு சிலரின் அம்புகள் கோட்டைக்கு உள்ளேயே போய்ப் பாய்ந்தன. வெளியே வந்த சுல்தானிய வீரர்கள் அரை நாழிகையில் எதிர்த்து நிற்க முடியாமல் கோட்டைக்கு உள்ளே மறைந்து விட்டனர். உடனே ஹொய்சள வீரர்கள் கயிற்றால் ஏணிகள் கட்டி அவற்றின் உதவியோடு கோட்டைச் சுவர் மேல் ஏறி உள்ளே குதிக்க ஆரம்பித்தனர். கோட்டைச் சுவரில் ஆப்புகளைச் சிலர் அறைந்தனர். கோட்டை வாசலை யானைப்படைகள் வந்து வெகு வேகமாகவும் வலிவாகவும் தாக்கியது. யானைகள் கோட்டைக் கதவுகளை மடேர் மடேர் என முட்டின. அன்று பகலுக்குள்ளாகக் கோட்டை ஹொய்சளர் வசம் வந்துவிடுமோ என்று இருந்தது. அனைவரும் உற்சாகத்துடன் போரிட்டார்கள்.  வீர வல்லாளருக்குப் பெருமிதம் தாங்க வில்லை. ஆங்காங்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டும், தானும் எதிரிட்டு வருபவனை வீழ்த்திக் கொண்டும் இருந்தார். அந்த வயதிலும் அவர் உற்சாகம் வீரர்களுக்கு வியப்பையும் அதே சமயம் மேலும் உற்சாகத்தையும் ஊட்டியது. அப்போது பார்த்துக் கோட்டைக்குள்ளிருந்து, "நிறுத்துங்கள், நிறுத்துங்கள்!" என்னும் கூக்குரல் வருவது தெரிந்தது.

வீர வல்லாளர் கூக்குரல் வந்த இடத்தைப் பார்த்தார். கோட்டைச்சுவர் எங்கும் வெள்ளைக் கொடிகள் முளைத்திருந்தன சுல்தானியர் சமாதானம் வேண்டிக் கொள்கிறார்கள் என்பதை மன்னர் புரிந்து கொண்டார். ஹொய்சள வீரர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தளபதிகளும், தண்டநாயகர்களும் வீர வல்லாளரைச் சூழ்ந்து கொண்டார்கள். சமாதானத்துக்கு அவர்கள் மசியவில்லை. போரைத் தொடர வேண்டும். சுல்தானியரை வீழ்த்த வேண்டும் என்று ஆவேசத்துடன் கூவினார்கள். மன்னர் யோசித்தார். குலசேகரனைப் பார்த்தார். குலசேகரனும் போர் புரியவே விரும்பினான். ஆனால் மன்னரோ சரண் அடைந்தால் என்ன செய்வது என யோசித்தார். சரண் அடைவதாகத் தெரிவிக்கட்டும், ஏற்போம். இல்லை எனில் போர்தான் என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டு அப்படியே கோட்டைக்குள் செய்தியும் அனுப்பப் பட்டது. அனைவரும் சரண் அடைய வேண்டும். இல்லையேல் போர் தான் என்பதே அந்தச் செய்தி.