எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, May 29, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!


12 ராசிகளுக்கும் உரிய 12 நதிகள் வருமாறு:

மேஷம்- கங்கை
ரிஷபம்-நர்மதை
மிதுனம்-சரஸ்வதி
கடகம்-யமுனை
சிம்மம்-கோதாவரி
கன்னி-கிருஷ்ணா
துலாம்-காவேரி
விருச்சிகம்-தாமிரபரணி
தனுசு-சிந்து
மகரம்-துங்கபத்ரா
கும்பம்-பிரம்மபுத்ரா
மீனம்-பிரனீதா

முஹூர்த்தங்கள் அஷ்டமுஹூர்த்தங்கள் எனப் படும். இவற்றிற்குப் பிரதான தீர்த்தவடிவான தெய்வத்தையே புஷ்கரன் என்ற தீர்த்த ராஜனாய் வழிபடுவது வழக்கம். இவர் எப்போதும் பிரம்மாவின் கமண்டலத்திலேயே வாசம் செய்வார். புஷ்கரனைத் தனக்குக் கொடுக்குமாறு வேண்டிக் கேட்டு குரு பகவான் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா புஷ்கர கமண்டலத்தை குருவுக்குக் கொடுக்க முயல, கமண்டலத்தில் இருந்த புஷ்கரன் பிரம்மாவை விட்டுப் பிரிய மறுத்தார். புஷ்கரனைச் சமாதானம் செய்த பிரம்மா குருவின் பார்வை தீர்த்த ராஜனாகிய புஷ்கரன் மேல் பட என்ன வழி என யோசித்து, மேஷம் முதல் மீனம் வரை உள்ள பனிரண்டு ராசிகளிலும் குரு மாறி மாறி இடம் பெயரும் அந்த நாட்களில் இந்தக் குறிப்பிட்ட நதிகளில் புஷ்கரனை வந்து வாசம் செய்யுமாறும் அன்றைய தினம் குருவின் பார்வை மட்டும் அந்த அந்த நதிகளின் மேல் படவும் வழி செய்தார். அரை மனதோடு சம்மதித்தார் குரு. அன்று முதல் மேற்கண்ட வாறு ராசிகளில் குரு பெயரும்போது குறிப்பிட்ட நதிகளில் புஷ்கர குரு பெயர்ச்சி அனுசரிக்கப் படுகின்றது. பல நூற்றாண்டுகளாய் நின்று போன தாமிரபரணி புஷ்கர குரு பெயர்ச்சி யாகம் பாணதீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்து பூந்துறை, குட்டத்துறை முருகர் கோயில் ஆகிய இடங்களில் மீண்டும் தொடங்கி வைத்தது தாமிரபரணி அமைப்பு. இது 20-10-2006-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 3-ம் தேதி இரவு 10-15 மணிக்கு மீண்டும் தொடங்கி கடந்த மூன்று வருடங்களாய் தாமிரபரணி புஷ்கரம் நடைபெற்று வருவதாய் தாமிரபரணி அமைப்பு தெரிவிக்கிறது.ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே ரிஷியான அகத்தியர் மூலம் தமிழ் மொழி சிறப்புப் பெற்றதால் தமிழின் பெருமை வேதங்களுக்கு எல்லாம் மூத்தது எனக் கூறப் படுகின்றது. ஸ்ரீசங்க யோகி வீரசேன மன்னனுக்கு உபதேசிக்கப் பட்டது ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம். அதை ஸ்ரீவேத வியாசர் தன் புத்திரனும், பிறவி ஞானியும் ஆன சுகருக்கு உபதேசித்தார். தேவி மகாத்மியமும் தாமிரபரணி மகாத்மியமும் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். (இது பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.)

இந்தத் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அதை சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மாற்றிய மகான் என். ராமசுப்பிரமணிய ராமாயணியார் அவர்கள் தாமிரபரணிக்கு ஜே, தாமிரபரணிக்கு ஜே என வீடு முழுதும் எழுதி வைத்துள்ளதாக தாமிரபரணி அமைப்பு தெரிவிக்கிறது. இதுவே தாமிரபரணி அமைப்பின் சட்டபூர்வமான கோஷமாகவும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இனி தாமிரபரணிக்கரையில் சில முக்கியக் கோயில்களைப் பற்றிப் பார்ப்போமா? முதலில் நவ திருப்பதிகள்.

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடியில், பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் தாமிரபரணிக்கரையில் தான் ஏற்படப் போவதாய்ச் சொல்லுகின்றது எனக் கூறுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம் இதைக் கூறி உள்ளது. தமிழில் இந்த மகாத்மியத்தை மொழிபெயர்த்து வெளியிடப் பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றது. எந்த அளவுக்கு வெற்றி கிட்டி உள்ளது எனத் தெரியவில்லை.

தாமிரபரணிக்கரையில் விஷ்ணுவின் மஹிமையை விளக்கும் நவ திருப்பதிகளும், சிவனின் மஹிமையை விளக்கும் நவ கைலாயங்களும் அமைந்துள்ளன. ஒரு சில சிவாலயங்கள் மேற்கே பார்த்த வண்ணம் அமைந்துள்ளதாய்க் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூரில் சேர, சோழ, பாண்டீஸ்வரர் ஆலயம் என்னும் மூவேந்தரையும் சிறப்பித்துக் கூறும் ஆலயம் உள்ளது. இங்கே உள்ள முப்பந்தல் என்னும் ஊரில், வருஷம் 365 நாட்களும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது என்றும், சேர, சோழ, பாண்டியர்கள் இந்த முப்பந்தலிலேயே முக்கியமான விஷயங்களைக் கூடி விவாதித்து முடிவெடுப்பனர் என்றும் தெரிய வருகின்றது.

புராணங்களின் கூற்றுப்படி பார்த்தால் குபேரன் இழந்த தன் செல்வத்தை இங்கே தான் அடைந்ததாகவும், தவிரவும் குபேரன் ராஜ ராஜ பதவி பெற்றதாயும், பிரும்மாவிற்கு சிருஷ்டி சாமர்த்தியம் இங்கே ஏற்பட்டதாயும், சிவனின் அம்சங்களில் ஒருவரான ருத்ரர் இங்கேயே சர்வக்ஞதா பிராப்தி அடைந்ததாகவும், வருணன் ஜலேசத்வ பதவி பெற்றதாயும், அஷ்டதிக்பாலர்கள் ஐஸ்வர்ய பதவி அடைந்ததாகவும், சோமன் என்னும் சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த க்ஷயரோகம் நாசம் அடைந்ததாயும், நந்திகேஸ்வரர் பிறப்பும், கபில ரிஷியின் பிறப்பும், சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் பிறப்பும் தாமிரபரணியில் தவம் செய்தமையால் ஏற்பட்ட பெருமைகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றன.

வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றுக்கு உரை எழுதும் முன்னர் பிரம்மாவை வழிபட்டார். பிரம்மா நாதாம்புஜத்தில் தவம் செய்யச் சொல்லுகின்றார். அந்த நாதாம்புஜமே தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சேர்மாதேவி எனப் படும் சேரன் மஹாதேவி. வியாசர் தாமிரபரணியை சாக்ஷாத் அந்த அம்பாளாகவே கருதி வழிபடுகின்றார். அன்னையே தாமிரபரணியாக உருவெடுத்து வந்ததாய் நினைத்து வழிபடும் அவருக்கு ஒருநாள் தாமிரபரணி நதியில் பிரகாசமான தாமரை தென்பட்டது. தாமரைக்கு மேலே அதன் நடுப்பாகத்தில் ஒரு அன்னப் பறவை காட்சி அளித்தது. அந்த அன்னப் பறவை வியாசருக்கு ஞானத்தை உபதேசம் செய்தது. வியாசர் ஞான உபதேசம் பெற்று ஞானோதயம் அடைந்தார். வேதங்கள் தொகுக்கப் பட்டு அனைத்துக்கும் உரையும் எழுதினார்.

தாமிரபரணி நதியைப் பூஜை செய்தால் ஸ்த்ரீஹத்தியும், மஹாபாதகங்களும், மாத்ரு ஹத்தி, பித்ரு சாபம் போன்றவை விலகவும் வழிசெய்கின்றது. இந்த நதியை வழிபட்டதின் மூலம் பகனுக்கு இழந்த கண்கள் திரும்பக் கிடைக்கின்றன. சுதர்சனச் சக்கரமும் விஸ்வே தேவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளனர். மானசாக்கள் தங்கள் நோயையும், பாணாதை பிசாசுத் தன்மையையும், துர்வாச முனிவர் சாபத்தையும், சரஸ்வதி தேவி தன்னுடைய சாபத்தையும் இங்கே தான் போக்கிக் கொண்டனர்.

நம் ஜாதகங்களில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் 12 ராசிகளும், பாரதத்தின் முக்கியப் பனிரண்டு நதிகளின் அடிப்படையிலே ஏற்படுத்தப் பட்டுள்ளதாய்க் கூறுகின்றனர். இந்தப் பனிரண்டு ராசிகளில் குருபகவான் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயருவார். அப்போது குருவின் பார்வை ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு நதியின் மேல் ஏற்படும். இதுவே புஷ்கரம் எனச் சொல்லுகின்றனர். இந்த அடிப்படையில் குருபகவான் பனிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை விருச்சிக ராசிக்கு வரும்போது தாமிரபரணி புஷ்கரம் ஏற்படுகின்றது.

Wednesday, May 27, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!

உலகம்மைக்குத் திருவிளையாடல் புரியும் எண்ணம் வந்துவிட்டது. நமசிவாயக் கவிராயரின் புகழையும் உலகோர் அறியச் செய்யவேண்டும். ஆகவே வெற்றிலைக் காவி எச்சில் பட்ட அந்த ஆடையுடனேயே அம்பாள் சென்று மறைந்தாள். மறுநாள் காலை அர்ச்சகர் கோயிலுக்கு வந்து அம்பாளின் முதல்நாள் அலங்காரத்தைக் களைய முற்படுகையில் ஆடையில் படிந்திருந்த வெற்றிலைக் காவி எச்சில் திவலைகளைக் கண்டு யாரோ, நாத்திகனோ என்னமோ இவ்வாறு செய்திருக்கின்றானே என மனம் வருந்தினார். மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உடனே பிராயச் சித்தம் செய்ய அர்ச்சகருக்குக் கட்டளை இட்டுப் பின்னர் இந்தப் படுபாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிக்கவேண்டும் எனக் கூறி அவ்வாறே நாடெங்கும் தெரியப் படுத்தினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி நமசிவாயக் கவிராயரைப் பற்றிக் கூறி, இது அவரறியாமல் நடந்த ஒன்று என நடந்ததைக் கூற, மன்னன் மறுநாள் காலை கவிராயரை அவைக்கு வரவழைத்தான். என்னதான் அம்பிகையே கனவில் வந்து சொல்லி போயிருந்தாலும் மன்னன் கவிராயரின் பக்தியை அளவிட எண்ணினான்.

அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொற்கம்பிகளால் அதைச் சுற்றிக் கட்டினான். அந்தப் பூச்செண்டு சற்றும் அலுங்காமல் குலுங்காமல் அம்பாளின் கரத்திலிருந்து வருமாறு பாடல் பாடுமாறு கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி ஒன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கையில் இருந்த பூச்செண்டைச் சுற்றிக் கட்டியிருந்த கம்பிகள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இத்தகைய சிறப்புக் கொண்ட தலம் பாபநாசம். நம் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபநாசரைத் தரிசனம் செய்து கொள்ளலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் இந்தத் தலத்தைக் குறித்துப் பாடி இருக்கின்றனர்.

//பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே. //

திருஞானசம்பந்தர் பதிகம்


உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே
திருநாவுக்கரசர் தேவாரம்

மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் இடம் பெற்றிருக்கின்றதாய்த் தெரிந்து கொள்கின்றோம். கோயில் மிகப் பெரிய கோயிலே. கோயிலின் முன் தாமிரபரணி ஆறைக் கண்டாலே மனம் சொல்லவொணா மகிழ்ச்சியில் குதிக்கின்றது. நீராடும் வசதிகளோடு அமைந்துள்ளது. நாங்கள் சென்ற நேரம் உச்சிக்கால வழிபாட்டு நேரம். குருக்கள் நன்றாய், நிதானமாய் வழிபாடுகளை நடத்துகின்றார். அங்கிருந்து மற்ற எந்தக் கோயில்கள் முக்கியம் , எப்போது தரிசனம் செய்யலாம் என்ற தகவல்களையும் தருகின்றார். கோயிலின் சுற்றுப் புறத்தையும், அமைதியையும் பார்த்தால் அங்கேயே ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொண்டுவிட்டால் நல்லா இருக்குமேனு மனதில் ஏக்கம் வருகின்றது.

Monday, May 25, 2009

தாமிரபரணிக்கரையிலே சிலநாட்கள்!

விண்ணில் இருந்து நேரே பூமிக்கு வரும் அம்பைப் போல் நீர் விழுவதால் வானதீர்த்தம் என்றும் பாணதீர்த்தம் எனவும் பெயர்க்காரணம் சொல்கின்றனர். இங்குதான் சாஸ்தா கோயில் இருப்பதாயும், சொரிமுத்தையனார் கோயில் எனப்படும் இதுதான் சாஸ்தா கோயில்களிலேயே முதன்மையானது எனவும் தாமிரபரணி நதியின் நடுவில் இது அமைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். கோயிலைச் சுற்றித் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் எனவும் தைமாத அமாவாசை மற்றும் ஆடி அமாவாசைகளில் இங்கே வழிபாடு சிறப்பு எனவும் சொல்லப் படுகின்றது.

இதற்கடுத்த கல்யாணி தீர்த்தம் பாபநாசம் லோயர் டேமை ஒட்டி இருக்கும் இந்தக் கல்யாணி தீர்த்தத்தைப் பார்க்கவெனச் சிறப்பான தனி மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதாயும், வெள்ளக் காலங்களில் பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் காணப்படும் எனவும் சொல்கின்றனர். அகத்தியருக்குத் திருமணக் காட்சி கொடுத்ததாய்ச் சொல்லப் படும் சரியான இடம் இதுவே எனவும் சொல்கின்றனர்.

அடுத்து வருவது அகத்தியர் அருவி: கல்யாணி தீர்த்தத்தில் இருந்து பெருகும் நீர்ப்பெருக்கு அடர்ந்த பாறைகளைக் கொண்ட ஆற்றின் நடுவே சென்று அகத்தியர் அருவி என்ற பெயரில் விழுவதாயும், இந்த அருவி ஆபத்தில்லாதது எனவும், இங்கேயும் முன்னோர் வழிபாடுகள் செய்வது சிறப்பு என்றும் சொல்லப் படுகின்றது.

அடுத்து வருவது பாபநாசம்: மலை உச்சியில் இருந்து வரும் தாமிரபரணி நதி சமபூமிக்கு வரும் இடமே பாபநாசம் ஆகும். இங்கு சித்திரை முதல்நாள் விஷு அன்று அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்சி கொடுத்தது பெரும் விழாவாக நடக்கின்றது. வேதங்கள் இங்கே இறைவனைக் களாமரங்களாய் நின்று வழிபட்டதாகவும் சொல்லப் படுகின்றது. அதனால் இறைவனுக்கு முக்களா மூர்த்தி என்ற பெயரும் உண்டு. தன்னை அடைந்தாரின் பாவங்களைப் போக்குவதால் பாவநாசர் என்ற பெயரும், விராடபுருஷனாக மஹாவிஷ்ணு இவரை வழிபட்டதால், வயிராசர் என்றும், ஜோதி வடிவில் விளங்குவதால் பரஞ்சோதி எனவும் இறைவன் வழங்கப் படுகின்றார். கோயிலுக்கு நேர் எதிரே தாமிரபரணியானவள் வடக்கு நோக்கித் திரும்பிச் செல்லுகின்றாள். அந்த இடத்தின் அழகை வர்ணிக்க இயலாது. சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, மலையிலிருந்து மெல்ல, மெல்ல தளிர் நடை போட்டு இறங்கும் தாமிரபரணி நீரின் உண்மையான சுவையை அங்கே அறிய முடியும்.

மலைகளின் மூலிகைச் சத்தைத் தன் ஜீவசக்தியாக வைத்துள்ள இந்த நீரை ஒரு வாய் குடித்தாலே அப்பா! என்ன சுவை, நீருக்கு இத்தனை சுவையா என வியக்கத் தோன்றுகிறது. கரும்புச் சாறுபோல் இனிமையான நீர். இதே போல் நீர் மதுரைக்கு அருகே தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கே கொடைக்கானல் மலையில் இருந்து இறங்கும் மஞ்சளாற்றின் நீரும் அருமையான சுவையோடும், மூலிகைத் தன்மை நிறைந்தும் விளங்குகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரே இந்தியாவுக்கு ஒரு அரிய பொக்கிஷம். மலைவளம் மட்டுமின்றி, மூலிகை வளம், நீர்வளம், மண்வளம் என அனைத்தையும் வாரி, வாரி வழங்குகின்றது.

இந்த மலைத் தொடர்களிலேயே அருமையான கோயில்களும், சித்தர்கள் வழிபாடு நடத்திய இடங்களும் அமைந்துள்ளன. பாபநாசம் கோயிலில் பெருமான் கல்யாணசுந்தரராக அகத்தியருக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சிற்பம் கருவறைக்கு நேர் பின்னே காணக் கிடைக்கும். இந்தப் பாபநாசம் கோயில் பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றுண்டு. இங்கே உள்ள இறைவியின் பெயர் லோகநாயகி, உலகம்மை. இந்த ஊருக்கு அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில், நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இறைவன் மேலும், குறிப்பாய் உலகம்மை மேலும் அதீத பக்திப் பெருக்கோடு வாழ்ந்து வந்தார் அவர்.

தினந்தோறும் உலகம்மையின் அர்த்தஜாம வழிபாட்டைக் காணச் செல்லும் வழக்கம் உள்ளவர் இவர். அம்மையைக் கண்ட பரவசத்தில் வழியிலே பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டே வரும் வழக்கம் உள்ளவர். ஒருநாள் இரவு இவ்வாறு பாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அப்போது, தினமும் இவருக்குத் தெரியாமல் இவர் பாடல்களைக் கேட்டுக் கொண்டே பின் தொடரும் உலகம்மை அன்றும் வந்து கொண்டிருந்தாள். கவிராயர் உரக்கப் பாடிவரும்போது தற்செயலாக அவர் வாயில் இருந்த தாம்பூலம், கூடவே வந்து கொண்டிருந்த உலகம்மையின் உடையில் பட்டுத் தெறித்துவிட்டது.

Friday, May 22, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!


தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆகும். தண் பொருநை என அழைக்கப் பட்ட இது காலப் போக்கில் தாமிரபரணி எனத் திரிந்து விட்டது. பொருநை என்பதன் பெயர்க்காரணம் தெரியவில்லை. ஆனால் அகத்தியர் தென்னாடும், வடநாடும் சமானம் ஆக்குவதற்காக த் தென்னாடு வந்தபோது உமை அம்மை அவர் கமண்டலத்தில் கங்கை தீர்த்தத்தை நிரப்பியதாயும், அதையே அவர் இங்கே பொதிகை மலைக்கு வந்ததும், ஆறாக மாற்றியதாகவும் சொல்லப் படுகின்றது. கங்கையின் தெய்வீகத் தன்மை மட்டுமில்லாமல், பொதிகை மலையின் மூலிகைச் செடிகளின் மூலிகைத் தன்மையும் நிறைந்தது தாமிரபரணி. பொதிகை மலையின் உச்சியிலே இருந்து வருகின்றது இந்த நதி. பொதிகை மலையும் மிக மிக மூப்பு வாய்ந்த தொன்மையான மலை எனச் சொல்லப் படுகின்றது.

மேலும் தமிழ் பிறந்தது பொதிகையிலே தான் எனச் சொல்லப் படுகின்றது. தெற்கே இருந்து வருவது தென்றல் என அழைக்கப் பட்டாலும் அது பொதிகையின் உச்சியில் இருந்து வருவதாய்த் தான் சொல்கின்றனர். பொதிகை மலைத் தொடரின் அருவிகளிலே ஒன்றே குற்றாலம் அருவியும் ஆகும். இந்தக் குற்றாலம் அருவியின் ஆறும் தாமிரபரணியிலேயே கலக்கின்றது. இதிலே அகத்தியர் இருந்த மலையை ஏக பொதிகை எனச் சொல்கின்றனர். அகத்தியர் வாழ்ந்த குகையும் அங்கே இருப்பதாயும், இன்னமும் அகத்தியர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கின்றனர். திருக்குற்றாலத்தில் தேனருவிக்கு மேலே பழங்காலத் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ள கல்வெட்டு இருப்பதாயும் தெரிய வருகின்றது. பாணதீர்த்தம் என்பதே இங்கே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தீர்த்தம் ஆகும். அது பாபநாசம் மேலணைக்கும் மேலே இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமையாலும், நேரக் குறைவாலும் மேலே செல்லவில்லை நாங்கள். கீழே உள்ள பாபநாசம் கோயிலுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அது பற்றிப் பின்னால். பாணர்களின் தாகம் தீர்த்ததால் பாணதீர்த்தம்னு சொல்வதாய்க் கேள்விப் படுகின்றோம். என்றாலும் உண்மையான பெயர்க்காரணம் இதுவாய் இருக்காதோ என்றும் தோன்றுகின்றது.

இங்கே பெரும்பாலும் சித்தர்கள் குடி இருந்து தவம் செய்திருக்கின்றனர். இந்தப் பாண தீர்த்தத்துக்கு அருகே உள்ள கல்யாணி தீர்த்தத்திலே மஹாவிஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் ஆகியோருக்கு உருவச் சிலைகள் இருக்கின்றனவாம். இந்தப் பாணதீர்த்தத்துக்கு மேலே உள்ள மொட்டை மேடு என்னும் இடம் துலுக்க மொட்டை என அழைக்கப் படுவதாயும், இதற்கும் மேலே உள்ள பூங்குளமே தாமிரபரணி என்னும் பொருநை பிறக்கும் இடம் எனவும் சொல்கின்றனர். இந்தப் பூங்குளத்தில் இருந்தே தாமிரபரணி பாணதீர்த்தத்துக்கு வருகின்றது. இரு பருவ மழைக்காலங்களிலும் நீர்ப்பிடிப்பு வசதி இருப்பதால் இங்கே கடுங்கோடைக் காலத்திலும் நதியில் நீர் ஓடிக் கொண்டிருக்கும். தாமிரபரணி நதி புறப்படும் இடத்தில் இருந்து கடலில் சென்று கலக்கும் இடம் வரைக்கும் கிட்டத் தட்ட எண்பது மைல்களுக்கு ஓடுகின்றது.


படங்கள் உதவி கூகிளார்: நன்றி.

Thursday, May 07, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

உத்தரவாஹினியாக அதாவது நதிகள் வடக்கு நோக்கிப் பாயும் இடங்கள் எல்லாமே புனிதமாய்க் கருதப் படும். தாமிரபரணி அவ்வாறு உத்தரவாஹினியாகப் பாயும் இடங்கள் பாண தீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்கள் ஆகும். தாமிரபரணி நதி அநந்த காசி, பரம பாவனம், மாலா தாதா, தக்ஷண கங்கை ஆகிய பெயர்களைப் பெற்று இதிஹாசங்களில் சிறப்பாய்ப் போற்றப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் கங்கையின் பாவங்களைப் போக்கும் வல்லமை கொண்டது தாமிரபரணி என்றும் சொல்லப் படுகின்றது.

யம கீதையும், ஹயக்ரீவ துதியும், அகத்திய தோத்திரமும், கங்கா துதி, பிரம்மச்சாரி துதி, வேத வியாச துதி, கசாவதீ ஜபம், விச்வே தேவர்கள் துதி, கெளதம துதி, கபில வாசுதேவ துதி போன்றவைகளில் தாமிரபரணியின் பெருமைகளை உயர்த்திச் சொல்லப் பட்டிருக்கின்றன என அறிகின்றோம். தாமிரபரணி மகாத்மியம் ஓர் பழம்பெரும் ஓலைச் சுவடியில் எழுதப் பட்டிருந்தது. அதில் கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள தாமிர சாகர சங்கம தீர்த்தத்திற்கு வந்ததாய்ச் சொல்லப் பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து பழைய காயல் அருகே தாமிர சாகர சங்கம தீர்த்தம் உள்ளது. இங்கு ஒரு விநாயகர் கோயில் அமைந்துள்ளதாகவும், படகிலேயே இந்த இடத்திற்குச் செல்ல முடியும் என்றும், தாமிரபரணியைக் காக்கும் அமைப்பாளர்கள் சொல்கின்றனர். இங்கே சென்று முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்ய விரும்புவோர் இவர்களைத் தொடர்பு கொண்டால் பயண ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் சொல்கின்றனர்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் தாமிரபரணியை மஹாநதி என வர்ணிக்கப் பட்டுள்ளது. ராமாயணத்தில் தாமிரபரணி பற்றிச் சொல்லப் பட்டிருப்பதின் விளக்கங்கள் கீழே! இது சுக்ரீவன் அனுமன், அங்கதன் போன்றோரை சீதையைத் தேட தென் திசை நோக்கி அனுப்பும்போது அவர்களுக்கு விளக்கப் பட்டது. இதில் இருந்து அன்றைய பாரதத்தின் பூகோளத் தன்மையையும், அதை சுக்ரீவன் நன்கு அறிந்து வைத்திருப்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. [4-41-15b, 16a]

"And when that great-souled Agastya complaisantly permits you, then you shall leave that mountain and cross over the great River Taamraparni, a highly cherished river of crocodiles. [4-41-16b, 17a]

She whose water is overlapped with amazing copses of sandalwood trees and islands that River Taamrapani will be drifting for a rendezvous with her much yearned lover, namely the ocean, as with a young woman who will be coursing to have a rendezvous with her yearned lover. [4-41-17b, 18a]





எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் தவளைகளையும், நீர்வாழ் ஜந்துக்களையும் உண்டாக்கினால் தாமிரபரணியோ கடலில் கலந்து மணிகளையும், முத்துக்களையும் படைக்கின்றாள் என நீலகண்ட தீக்ஷிதர் போற்றுகின்றார். இதனால் தாமிரபரணி கடலில் கலக்கும் இடம் ரத்னாகரம் எனப் போற்றப் படுகின்றது. அகத்திய முனிவரும், சங்க முனிவரும் இன்றளவும் தாமிரபரணி நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. சமுத்திரத்தில் பல நதிகள் அடங்கி உள்ளன. ஆனால் தாமிரபரணியோ தனக்குள் அம்பா சமுத்திரம், கோபால சமுத்திரம், நீலகண்ட சமுத்திரம் போன்றவற்றை அடக்கி உள்ளது.

இந்த நதிக்கரையில் தோன்றிய பல பெரியோர்களில் திருவள்ளுவர், ஒளவையார், நம்மாழ்வார், சிவஞான முனிவர், சிவானந்தர், பனம்பாரனார், திரிகூட ராசப்பக் கவிராயர், வீரபாண்டியன், பரிமேல் அழகர், குலசேகர ஆழ்வார், சேனாவரையர் ஆகியோர் மட்டுமின்றி, நமது தேசீயக் கவியான மஹாகவி பாரதியும் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றியவரே. தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மஹாத்மியம் என்ற ஓலைச்சுவடியில் இருந்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தாமிரபரணி அமைப்பு முயன்று வருகின்றது. இந்த மஹாத்மியத்தில் ராமனின் உத்தரவை மீறிய லக்ஷ்மணன் என்ன பிராயச் சித்தம் செய்தான் எனவும், என்ன தண்டனை கிடைத்தது எனவும் சொல்லப் பட்டிருக்கிறதாய்க் கேள்விப் படுகின்றோம்.

Wednesday, May 06, 2009

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!

தாமிரபரணி மகாத்மியம் நூல் கிடைச்சதும் தான் எழுதணும்னு நினைச்சேன் நவ திருப்பதி பத்தி. ஆனால் புத்தகம் எங்கேயுமே கிடைக்கலை. போயிட்டு வந்து இரண்டு வருஷம் ஆயிடுச்சு. அப்போ எழுதி வச்ச குறிப்புகளும் கிடையாது. கொஞ்சம் நினைவில் இருந்தும், மற்றவை தலங்களின் வரலாற்றில் இருந்துமே எழுதணும். தாமிரபரணி மகாத்மியம் பற்றி ஒரு தளமே இருக்குங்கற தகவலும் பலமாதங்கள் முன்னால் கிடைச்சது. ஆனால் அதிலே விபரங்கள் அதிகமாய் அப்போ இல்லை. இப்போச் சேர்த்திருக்காங்க. முக்கியமாய் வைகாசி விசாகம் அன்னிக்குத் தாமிரபரணி நதியின் பிறந்தநாள்னு சொல்றாங்க. அது பற்றிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கலை. தேடறேன். தாமிரபரணி மகாத்மியம் புத்தகம் வெளியீட்டு விழா நடந்ததாய் தினமலர் செய்தி மட்டும் கிடைச்சது. இந்த வருஷம் தாம் மார்ச் பத்தாம் தேதி நெல்லையப்பர் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்து புத்தக வெளியீடும் நடந்திருக்கின்றது. கூடிய சீக்கிரம் புத்தகம் வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்திருக்கு. அதுக்கு முன்னாலே தாமிரபரணி நதி பற்றிச் சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாமா?

தாமிரபரணி நதி நதிகளுக்கெல்லாம் மூத்தது எனச் சொல்லப் படுகின்றது. எகிப்து நாட்டில் நைல் நதி கலாசாரம் எப்படிச் சிறந்து விளங்கிற்றோ அதே போல் தென்னாட்டில் தாமிரபரணி கலாசாரம் சிறந்து விளங்கி வந்தது. கி.பி 80-ல் பெரிபுளூசு நூலாசிரியரும், கிபி 150-. தாலமியும், கி.மு. 302-ல் மெகஸ்தனீஸும், கி.மு. 273-ல் அசோகச் சக்கரவர்த்தியும் தாமிரபரணி நதியைக் குறிப்பிட்டு எழுதி உள்ளனர். அசோகர் தன் கல்வெட்டில் தாம்பபன்னி என்று இந்த நதியைக் குறிப்பிட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், "பொருநை" என்ற பெயரிலும், சேக்கிழாரின் பெரியபுராணத்தில் "தன்பொருத்தப் புணல்நாடு" என்றும் அழைக்கப் படுகின்றது. முக்கூடல் பள்ளு, கலிங்கத்துப் பரணி, பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல்புராணம், குமரகுருபரரின் மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ் போன்றவற்றில் தாமிரபரணி நதியின் வர்ணனைகளைக் காணலாம். தாமிரபரணி பகுதிகளைப் பற்றி வியாசரின் மஹாபாரதமும், காளிதாசனின் ரகுவம்சத்திலும் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக் கரையின் தென் தமிழ்நாட்டில் முன்னாள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், போர்ச்சுகீசியர்கள், அரேபியர்கள், சீனர்கள் வந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

தாமிரபரணி நதிக்கரையில் இருந்த காயல், கொற்கை, கபாடபுரம், மணலூர் , மணிபுரம் போன்ற நகரங்களின் சிறப்பைப் பற்றி, ரோமாபுரிச் சரித்திரங்களும், யவனர் சரித்திரங்களும் கூறுகின்றன. கம்பராமாயணத்தில் சீதையைத் தேட தெற்கு நோக்கிச் செல்லும் படையில் இருந்த அனுமனிடம், ராமன், தாமிரபரணி நதியைப் பற்றியும் பொதிகை மலை பற்றியும், அகத்தியர் நடத்தும் தமிழ்ச்சங்கம் பற்றியும் கூறுவதாய் வருகின்றது.