எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, August 20, 2011

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள்வாழ்க! ஸ்ரீசரப மூர்த்தி


சரபர் நரசிம்ம மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர். ஹிரண்யாக்ஷன் இறந்ததும், ஹிரண்யகசிபுவுக்கு விஷ்ணுவின் மீதும் அவர் பக்தர்கள் மேலும் அடங்காத கோபம் வந்தது. அந்தக் கோபம் நாளாவட்டத்தில் வன்மமாக மாறுகிறது. ஆகவே விஷ்ணுவின் பெயரையே குடிமக்கள் சொல்லக் கூடாது; ஆசிரியர்கள் கற்றுத்தரக் கூடாது; என்றெல்லாம் அவன் போட்ட சட்டங்களும், அதை மீறிய அவன் குமாரன் பிரஹலாதன் பற்றியும் நாம் நன்கறிவோம். பிரஹலாதனைக் கொல்ல முயற்சி செய்த ஹிரண்யகசிபுவிடமிருந்து அவனைக்காக்க வேண்டி தோன்றிய நரசிம்மம் ஆனது ஹிரண்யகசிபுவைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடித்த பின்னரும் கோபம் தணியாமல் இருக்கவே ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி சாந்தப் படுத்தச் சென்றாள். ஆனால் அவளாலும் இயலாமல் போகவே தேவர்கள் கவலை கொண்டனர். இதற்குச் சரியான ஆலோசனையை ஈசனாலேயே தர இயலும் என்பதால் ஈசனை நாடுகின்றனர். தன்னால் தான் நரசிம்மத்தின் கோபத்தை அடக்க இயலும் என்று ஈசன் எடுத்த வடிவமே ஸ்ரீசரபமூர்த்தி என்பார்கள். ஒரு சிலர் ஈசன் வீரபத்திரரைப்பணித்ததாகவும், வீரபத்திரரே ஸ்ரீசரபராக மாறினார் எனவும் கூறுகின்றனர். லிங்க புராணத்தில் வீரபத்திரர் சரபராக வந்ததாய்க் குறிக்கப் பட்டிருக்கும் என்றும் தெரிய வருகிறது.

எட்டுக் கால்களோடும், இரண்டு முகங்களோடும், (இரண்டும் சிங்க முகங்கள்) ஆனால் மனித உடலில் பொன்னிறமான இரு இறக்கைகள் பறவைகளைப் போலவும், சிங்கத்தைப் போன்ற கூரிய நகங்களுடன் கூடிய நான்கு கால்கள், வால் நீண்டு விலங்கைப் போலவும் காட்சி கொடுத்த இந்த அதிசய வடிவம் ஸ்ரீசரப மூர்த்தி ஆவார். இவர் பகைவர்களுக்கெல்லாம் பகைவர். நரசிம்மரையே அடக்கியதால் நரசிம்ம சம்ஹாரி என அழைக்கப் படுகிறர். ஸ்ரீ சரபரை வழிபட்டால் இவரின் அளவற்ற சக்தியால் இயற்கைச் சீற்றங்கள், பேராபத்துக்களிலிருந்து தப்பலாம் எனவும், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் அகலும் எனவும் கூறுகின்றனர். மேலும் பரிகாரம் செய்ய முடியாத எந்தக் கஷ்டமானாலும் சரியாகிவிடும் எனவும், மரண பயம் ஏற்படாது எனவும் கூறுகின்றனர்.

இந்த அதி உக்ரமூர்த்தியை ஆகாச பைரவர் எனவும் கூறுகின்றனர். இவருக்கும் ஈசனைப் போல் மூன்று கண்கள் உண்டு. சூரியன், சந்திரன் ஆகிய இருகண்களைத் தவிர அக்னி நெற்றிக்கண்ணாக விளங்குகிறது. இரண்டு இறக்கைகளையும் முறையே காளியாகவும், துர்க்கையாகவும் கூறுவார்கள். நாக்கை பூமியின் பாத வலையம் எனவும், கால் நகங்களில் இந்திரன் இருப்பதாகவும், வயிற்றில் காலாக்னியும், இரு தொடைகளும் முறையே காலன், ம்ருத்யுவாகவும் திகழ்கின்றதாய்ச் சொல்வார்கள். வலிமை வாய்ந்த சரபரைத் துதிப்பதால் கொடிய பகைவனையும் வெல்ல முடியும் என்றும், போர்களில் வெற்றி கிடைக்கும் எனவும் சொல்லப் படுகிறது. பெரும்பாலும் தெலுங்கு பேசும் ஆந்திர மாநிலத்தை ஆண்ட சாளுக்கிய மன்னர்களாலேயே ஸ்ரீ சரபர் வழிபடப் பட்டதாய்த் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் பிற்காலச் சோழர் காலத்திலேயே சரபர் வழிபாடு பிரபலம் அடைந்ததாயும் தெரிய வருகிறது. சிதம்பரம் கோயிலில் சரபருக்கு எனத் தனி சந்நிதி இருப்பதை ஏற்கெனவே சிதம்பர ரகசியம் தொடரில் பார்த்தோம்.

இதைத் தவிர மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் சரபருக்குத் தனி சந்நிதி உண்டு. ஆனால் முதன் முதல் கும்பகோணத்தை அடுத்த வீர சோழீச்சுரம் கோயிலில் தான் சரபருக்கு முதல் சிற்பம் அமைக்கப்பட்டதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கோயிலில் ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜகம்பீர மண்டபம் எனப்படும் வெளி மண்டபத்தில் ஸ்ரீ சரபரை வணங்கிய வண்ணம் நரசிம்மர் காட்சி கொடுப்பதைக் காணலாம். புகைப்படம் எடுக்க முடியவில்லை. ப்ரத்யங்கிரா எனப்படும் காளியும், சூலினி எனப்படும் துர்கையும் இவரின் சக்திகளாய்ச் சொல்லப் படுகிறது.


Wednesday, August 10, 2011

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! பைரவர்!


பைரவர்களின் எட்டு வடிவங்களும், அவருக்கு ஏற்ற பெண் தெய்வங்களும்.

அஷ்டாங்க பைரவர்- பிராம்மி
ருரு பைரவர்- மாஹேஸ்வரி
சந்த பைரவர்- கெளமாரி
க்ரோத பைரவர்- வைஷ்ணவி
உன்மத்த பைரவர்- வாராஹி
கபால பைரவர்-நாரசிம்ஹி
பீஷண பைரவர்- சாமுண்டி
சம்ஹார பைரவர்- சண்டிகா

எட்டு பைரவர்களையும் இயற்கையின் எட்டு சக்திகளாய்க் குறிப்பிடப் படுவது உண்டு. அவை மண், விண், காற்று, நீர், நெருப்பு, சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா. இவர்களில் காசியில் இருப்பவரைக் காலபைரவர் என்று அழைப்பார்கள். ஆனாலும் காசியில் அஷ்ட பைரவர்களுக்கும் எட்டு இடங்களில் சந்நிதி இருப்பதாகவும், தீவிர சிவ பக்தர்கள் இந்த இடங்களுக்கு “அஷ்ட பைரவ யாத்திரை” செல்வதாகவும் அறிகிறோம். சீர்காழியிலும் தோணியப்பர் சந்நிதியின் வெளிப் பிரகாரத்தின் தென்பகுதியில் அஷ்ட பைரவர்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் அஷ்ட பைரவத் தலங்கள் உள்ளன. அவை செட்டிநாடு என அழைக்கப் படும் காரைக்குடிப் பக்கம் திருப்பத்தூர், அழகாபுரி, வைரவன்பட்டி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய இடங்கள் அஷ்ட பைரவத் தலமாகப் போற்றப் படுகிறது. ஆந்திராவின் தேவார வைப்புத்தலமான ராமகிரியில் விஜய பைரவர் என்ற பெயரில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய பைரவர் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதாயும் அறிகிறோம். அங்கே பைரவரின் பீடத்தின் கீழே பைரவ சக்கரமும் ஸ்தாபித்திருப்பதாய் அறிகிறோம்.

தமிழ்நாட்டில் பைரவ வழிபாடு மிகவும் பிரசித்தியாக இருந்தது என்பதற்கு அடையாளமாக, நாயன்மார்களில் முக்கியமானவரான சிறுத்தொண்ட நாயனார், பைரவ சமயத்தைச் சார்ந்திருப்பதை வைத்து அறிகிறோம். மேலும் இயற்பகை நாயனாரும் பைரவ சமயம் என்றும் ஈசன் இவர்களை எல்லாம் பைரவ வடிவிலேயே காட்சி கொடுத்து அருளியதாகவும் அறிகிறோம். வடுகர், க்ஷேத்திரபாலகர் போன்ற பெயர்களும் பைரவருக்கு உரியது. பழைய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே க்ஷேத்திரபாலபுரம் என்ற பெயரில் பைரவருக்குத் தனியாகக் கோயில் உள்ளது. சீர்காழிக் கோயிலில் கட்டுமலையில் தோணியப்பர் சந்நிதிக்கு மேலே உள்ள தென்கோடி விமானத்தின் தேவர் வடுகநாதர், சட்டைநாதர் என்றெல்லாம் வழங்கப் படும் பைரவரே ஆவார். ஆண் மகன் தன் குழந்தைப் பருவத்தைக்கடந்து வாலிபப் பருவத்தை எய்தும் முன்னர் இருக்கும் நிலையே வடுகன் எனப்படும். அந்தக் கோலத்திலேயே இருப்பதால் இவருக்கு வடுகநாதர் என்று பெயர்.

இந்த வடுகநாதர் அத்திமரத்தால் ஆனவர் என்பதால் அவருக்கு அபிஷேஹம் கிடையாது. புனுகு சார்த்துவார்கள். இவருக்குப் பூஜையும் இரவு நேரத்திலேயே நடைபெறும். பெண்கள் தலையில் மலர் சூடிக்கொண்டு இவரைத் தரிசிப்பதைத் தவிர்க்கச் சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் நள்ளிரவு நேரத்தில் வடுக நாதருக்குப் புனுகு சார்த்தி, நெய்யில் வடைமாலை சாற்றி, முழுத்தேங்காயை நிவேதனம் செய்தல் சிறப்பாகச் சொல்லப் படும். மேற்கண்ட எட்டு பைரவர்களைத் தவிர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அனைவரிலும் சிறப்பாக வழிபடுபவர். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் இடப்பக்கம் இருக்கும் விக்கிரஹங்களில் சந்திரசேகரருக்கு அடுத்து ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இடம் பெற்றிருப்பார். ஒரு காலத்தில் இவரே தில்லை வாழ் அந்தணர்களின் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்ததாகச் சொல்கின்றனர். தினசரி காலை சந்நிதி திறக்கையில் அங்கே ஓர் ஓலைச்சுவடியில் பொற்காசுகள் வைக்கப் பட்டிருக்கும் எனவும், அதை தீக்ஷிதர்கள் தங்களுக்குள் குடும்பத் தேவைக்கு ஏற்பப் பிரித்துக்கொள்வார்கள் எனவும் கூறுகின்றனர். இன்றும் பணக் கஷ்டம் ஏற்பட்டால் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு அபிஷேஹ, ஆராதனைகள் செய்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமணம் நிறைவேற வேண்டியும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை, அபிஷேஹம் செய்யலாம். எல்லாச் சிவன் கோயில்களிலும் தினசரி வழிபாடுகள் சூரியனில் ஆரம்பித்து இரவு பைரவரில் முடியும். என்னதான் ஈசனின் அம்சம் என்றாலும் இவரையும் ஈசனாகவே கருதுவார்கள். பைரவர் சந்நிதி கிழக்குப் பார்த்து இருப்பது நல்லதில்லை என்றும் ஐதீகம். பொதுவாக பைரவர் கோயில்களில் வடக்குப்பார்த்தே இருப்பார். தெற்குத் திசையில் சந்நிதி அமைந்திருக்கும்.

அடுத்துப் பார்க்கப் போவது சரபர், ஏனெனில் இவரும் பைரவரின் ஒரு வடிவமே எனக் கருதப்படுகிறார்.