
ஆனால் தேவர்களோ அமுதம் உண்டதன் மூலம் அமரத்துவம் பெற்றனர் என்பதைப் படித்திருக்கிறோம். தேவர்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. நம்மைப்போலவே அவர்களும் என்றாலும் அமரத்துவம் அவர்களை நம்மிலிருந்து வேறுபடுத்திக்காட்டும். இத்தகைய நிலையை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பதைப்பார்ப்போமா! பிரஜாபதியான காச்யபரின் குழந்தைகளே தேவர்களும், அசுரர்களும். இவ்வுலக நியதிக்கேற்ப சகோதரச் சண்டை எப்போதும், எந்நேரமும். தேவர்கள் அசுரர்களுடனான சண்டையில் ஒரு சமயம் ஜெயித்தாலும் தோல்வியும் வாட்டியது. மேலும் எப்படிப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தாலும் சிதையாத உறுதியான தேகம், இறவாப் பெருநிலை அடையவேண்டும் என யோசித்தனர்.
பிரஜாபதிக்கெல்லாம் மூலகர்த்தாவான பிரம்மனிடம் சென்று தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். அவரோ மஹாவிஷ்ணுவைப்பிரார்த்திக்கச் சொன்னார். அவரது திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும் என்றார். அதற்கு மஹாவிஷ்ணுவின் உதவி இல்லாமல் இயலாது என்றார். அமிர்தம் கிடைத்ததோ அளவற்ற வலிமையும், இறவா நிலையும் பெறலாம் என ஆலோசனை கூறினார். தேவர்கள் அனைவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று பாற்கடலைக்கடைய வேண்டும் என உதவி கேட்டு நின்றனர். மஹாவிஷ்ணுவோ பாற்கடலைத் தேவர்களால் மட்டும் தனியாய்க் கடையமுடியாது என்றும், அசுரர்களையும் உதவிக்கு அழைக்குமாறு கூறினார். அசுரர்களும் தேவர்களுக்குக் கிடைக்கப்போகும் அமிர்தத்தில் பங்கு கொடுக்குமாறு ஆகிவிடுமே என தேவர்கள் பயந்தனர். மஹாவிஷ்ணுவோ தைரியமாய் அழைக்குமாறும், அசுரர்கள் அமிர்தம் உண்ணாமல் இருப்பது தம் பொறுப்பு எனவும் உறுதி கொடுத்தார்.

அதன் மேல் அசுரர்களையும் அழைத்தனர். இருவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைய முடிவு செய்தனர். மத்து வேண்டுமே. மந்திரமலை மத்தானது. ஆனால் மந்திரமலையைப் பெயர்க்க முடியவில்லை. மீண்டும் மஹாவிஷ்ணு உதவிக்கு வந்தார். கருடன் மூலம் மந்திரமலை பாற்கடலுக்கு வந்து சேர்ந்தது. மத்தைச் சுற்றக் கயிற்றுக்கு எங்கே போவது?? இவ்வளவு பெரிய மலைக்குச் சாதாரணக் கயிறு போதாதே? யோசித்துவிட்டு தங்கள் சகோதர முறையாகும் அஷ்டமா நாகங்களின் ஒன்றான வாசுகியைப் போய்க் கேட்டனர். வாசுகியும் கயிறாக இருக்கச் சம்மதம் கொடுத்தது. வாசுகியை மந்தரமலையைச் சுற்றிக் கட்டித் தலைப்பக்கம் தேவர்களும், வால் பக்கம் அசுரர்களும் நிற்க அசுரர்களோ பெரும் வீரர்களும் தேவர்களை வென்றவர்களும் ஆன தாங்கள் வால்பக்கம் நிற்பது தங்கள் வீரத்துக்கு இழுக்கு எனக் கருத, மாற்றி நின்று கொண்டனர். கடைய ஆரம்பித்தனர். ஆனால் என்ன இது??
மந்தரமலை உள்ளே அழுந்தியது. அசையவே இல்லை. சுற்றிச் சுற்றி வரவேண்டாமோ? மாறாக தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. யோசித்தனர். அடியில் ஏதேனும் வைத்து மலையைத் தாங்கிப் பிடித்தால் மலை உள்ளே அழுந்திக்கொள்ளாது என்ற யோசனை உருவாக என்ன செய்யலாம் என மீண்டும் யோசனை! இவ்வளவு பெரிய மலையை யார் தாங்குவார்கள்?? மஹாவிஷ்ணுவே சரணம்!

ஆனால் பாற்கடலில் இருந்து எதுவும் வரவில்லை. பாற்கடலோ பொங்கித் ததும்ப ஆரம்பித்தது. வாசுகிக்கோ வலி பொறுக்க முடியவில்லை. தனது ஆயிரம் வாய்களாலும் விஷத்தைக் கக்கப் பாற்கடலில் இருந்தும் விஷம் பொங்கிப் பிரவாஹித்தது.