எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, September 29, 2006

33. ஓம் நமச்சிவாயா--4.

இந்தியாவில் காலை 4-30 என்றால் நேபாளத்தில் 4-50 ஆகிறது. அந்த அதிகாலையே விடிய ஆரம்பித்து விடுகிறது. எல்லாரும் சுறுசுறுப்பாக வேலை ஆரம்பிக்கிறார்கள். பெண்களும், ஆண்களும் நன்கு குளித்துத் தலை முழுகிக் கையில் ஒரு தட்டு அல்லது கூடையில் பூக்கள், ஒரு கெண்டியில் தண்ணீர் முதலியன எடுத்துக் கொண்டு அவரவருக்குப் பிடித்த கோவிலுக்குப் போகிறார்கள். பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் இலங்கை மக்கள் வாழ்வைப் பற்றி திரு கல்கி எழுதி இருப்பார். மக்கள் சந்தோஷமாகக் கோவிலுக்கும், விளையாட்டுத் திடல் களுக்கும் சென்றார்கள் என. அது நினைவு வந்தது. ஆகவே நாங்கள் கோயிலுக்குப் போகும்போது மணி 9 ஆகி விட்டதால் கோயிலில் கூட்டம் எல்லாம் இருக்காது என நினைத்தோம். அப்புறம் ஒரு விஷயம் மறந்துட்டேனே, அங்கே எல்லாம் தினமும் தெருவைச் சுத்தம் செய்கிறார்கள். நம் நாட்டில் குறிப்பாகச் சென்னையில் பார்க்க முடியாத காட்சியாகையால் எனக்குச் சற்று வியப்பாகவே இருந்தது.

முதலில் நாங்கள் போன கோவில் குஹேஸ்வரி அம்மன் கோயில். சக்தி பீடங்களில் ஒன்று. தட்சனின் மகளான தாட்சாயணி ஈசனை மணக்கிறாள். தட்சனுக்கு மருமகன் எல்லாம் வல்லவர் என்று அறிய முடியாமல் மாயை மறைக்கிறது. அகங்காரத்தில் இருக்கும் தட்சன் ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்கிறான். அந்த யாகத்தில் எல்லா தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய அவிர்ப் பாகத்தைக் கொடுக்கிறான் தட்சன் ஈசனைத் தவிர. ஈசனை யாகத்துக்கு அழைக்கவும் இல்லை. யார் பேச்சையும் செவிமடுக்காத தட்சன் யாகத்தை தொடரும்போது அழைப்பில்லாமல் பிறந்தகம் தானேனு நினைத்துக் கொண்டு வருகிறாள் தாட்சாயணி. அவளை மகள் என்றும் மதிக்காமல் அலட்சியம் செய்கிறான் தட்சன். தாட்சாயணி அவனுக்கு எடுத்துச் சொல்லியும் அலட்சியம் செய்கிறான் தட்சன். மனவேதனையுடன் அந்த யாகத் தீயில் விழுந்து உயிர் விடுகிறாள் தாட்சாயணி. தன் சக்தியை இழந்த சிவனின் உக்கிரத்தை அடக்க முடியவில்லை. தட்சனை அழித்து விட்டு சதியின் உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்க அவர் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அன்னையின் உடலைத் துண்டு துண்டாக்க அது பாரத தேசம் எங்கும் ஒவ்வொரு பாகமும் போய் விழுகிறது. அம்மாதிரி விழுந்த இடங்களை" ஸ்ரீமஹாசக்தி பீடம்" என்று சொல்கிறார்கள். நேபாளத்தில் அம்மாதிரி அன்னையின் ஒரு மார்புப் பகுதி விழுந்த இடம்தான் குஹேஸ்வரி கோவில். நேபாளிகள் இந்தக் கோயிலைக் குயேஸ்வரி மந்திர் என்று அழைக்கிறார்கள்.

பாக்மதி ஆறின் கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குத் தான் முதலில் போனோம். ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், சற்று மேலே படிகள் ஏறிக் கோயிலை அடைய வேண்டும். வழியெல்லாம் நம் முன்னோர்களின் தொந்தரவுதான். ஆகவே விலை உயர்ந்த காமிரா, கைப்பை, மற்றும் முக்கியப் பொருட்களைப் பத்திரமாக வைத்துவிட்டுப் போனோம். உள்ளே குகை போன்ற அறைக்குள் போனதும் ஒரு பள்ளத்தில் அருவமாக அன்னை வீற்றிருக்கிறாள். பிண்டி ஸ்வரூபமாக இருக்கும் அந்த அருவுருவம் தான் அன்னையின் மார்பாகக் கருதப்பட்டுப் பூஜைகள், அலங்காரங்கள, நைவேத்யங்கள் முதலியன அதற்குச் செய்யப் படுகின்றன. பூஜை செய்வது எல்லாம் நேபாளப் பெண்களே. அங்கு அம்மனை மனதாரவேண்டி விட்டுப் பின் ஐயனை தரிசிக்கப் பசுபதிநாத் கோவிலுக்குப் போக வண்டிக்கு விரைந்தோம். நேபாளத்தில் முக்கியமான ஆறுகளாகக் கண்டகி நதியும், அதன் கிளை நதியான பாக்மதியும் இருக்கின்றன. பாக்மதி நதி காட்மாண்டு நகரைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஓடுகிறது. தண்ணீர் ஜில்லோ ஜில். குடிக்கப் பயமாக இருந்தது. எனக்கு" ஜில்லுனு ஒரு தண்ணீர் " குடிக்க ஆசைதான். கைப்பை நிறையக் கொண்டு வந்திருந்த மருந்து வகைகள் அந்த ஆசையைத் தடை செய்தது. எல்லாரும் தண்ணீர் குடிக்கப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பசுபதி நாத் கோவிலுக்குப் போகும் வழி எல்லாம் ஒரே ட்ராபிக் ஜாம். டிரைவர் எப்படியோ சாமர்த்தியமாக வண்டியை ஓட்டினார். மேடு என்றால் ஒரே மேஏஏஏஏஏடு. பள்ளம் என்றால் ஒரே பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளளளளம். மேட்டில் இருந்து பள்ளத்தில் இறங்கும்போது பார்த்தால் பயமாகக் கூட இருந்தது. இன்னும் பயமெல்லாம் இருப்பது அப்போது தெரியாது அல்லவா? பசுபதி நாத் கோவிலில் தோல் சம்மந்தப் பட்ட பொருட்கள் எதுவும் கொண்டு போகத் தடை. ஆகவே அனைவரும் அங்கே எங்கள் ட்ராவல்ஸ் காரர்களுக்குத் தெரிந்த கடையில் ஒரு லாக்கரில் கொண்டு போன பொருட்களை வைத்துப் பூட்டி விட்டுச் சாவியை நம்பிக்கையான ட்ராவல்ஸ்காரரின் பணியாளரிடம் கொடுத்துவிட்டுப் போனோம். மிகப் பெரிய கோவில். புத்தமதப் பகோடாக்கள் போல் வெளியில் இருந்து தெரிந்தாலும், தஞ்சைக் கோவிலின் நந்த அளவில் உள்ள பெரிய நந்தி பிரமிக்க வைக்கிறது. நேபாள ராஜா 2-வது ராம்ஷா என்பவரால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் வைக்கப் பட்ட இந்த நந்தி எம்பெருமான் பித்தளையால் ஆனது. நந்தியைக்கடந்து எதிரே பசுபதிநாதரின் மூலஸ்தானம். சுலபமாகக் கோவிலில் தரிசனம் முடிக்கலாம் என்றால் கூட்டமோ கூட்டம். பெரிய வரிசைகளில் பிரதான 4 வாசல்களிலும் உள்ளூர் மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அன்று சோமவாரம், சிவனின் உகந்த நாள் என்பதால் இவ்வளவு கூட்டம் என்று தெரிந்து கொண்டோம். எல்லார் கையிலும் நெய்த்திரிகளால் நிரப்பப் பட்ட பெரிய தட்டுக்கள், மூங்கிலால் அல்லது பித்தளைத் தட்டுக்கள். தீபங்கள் ஏற்றப்பட்டுக் கையில் அதை எடுத்துக் கொண்டு தீச்சட்டி ஏந்துவது மாதிரி மக்கள் கூட்டம் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டு இருந்தது. கூட்டத்தில் எங்கள் குழு பிரிந்து விட்டது. நாங்களும், வயது முதிர்ந்த டாக்டர் தம்பதியும், பங்களூரில் இருந்து வந்திருந்த சங்கரன் என்ற 76 வயது முதியவரும் தனித்து விடப் பட்டோம். மற்றவர் அவரவருக்குப் பிடித்த வாயிலில் நின்றார்கள் என்பதையும் பார்த்தோம்.

9 comments:

Porkodi (பொற்கொடி) said...

முழுசையும் படிச்சிட்டு நிதானமா பின்னூட்டம் போடறேன் :)

Geetha Sambasivam said...

எப்போ இது முழுசும் முடிஞ்சதுமா? கிழிஞ்சது, அது முடிய எத்தனை நாள் ஆகுதோ? அதுக்குள்ளே பாட்டிக்குக் கை நடுங்குதா?

rnatesan said...

இன்னாம்மா இந்தக் கலக்கு கலக்கி இருக்கிங்க!!நமக்கு இன்னாடான்னா கடலுர விட்ட நவுர முடியலே!!
போட்டொ பிடிச்சி இருந்தா போட்டு இருக்கலாமே!!
இன்னா பண்ரது நடேசன்னு பேர வாச்சிக்கிட்டு ஒரு ஈசனையும் பார்க்க முடியலே!!

தி. ரா. ச.(T.R.C.) said...

எல்லாரும் தண்ணீர் குடிக்கப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதனே பார்ததேன் கூடப்பிறந்த குணம் எங்கே போச்சுன்னு.,கொவிலுக்கு போயாவது
இதெல்லாம் விட்டு விடக்கூடாதா.
பசுபதி நாதரை தொடுவதற்கு அனுமதி உண்டா? ருத்திராக்ஷம் வாங்கினீர்களா?ரொம்ப இன்டெரெஸ்ட்ங்க இருக்கு.இவ்வளவு ஸ்பீடா போறதே.பேஷ் பேஷ்.
அங்கே ஒரு பொன்னு குதிரைமேலே ஏறிஉக்காந்துண்டு பாதளத்தைப் பார்த்த பயத்தில் ஏறின இடத்திலேயே 10நாளா நின்னுன்டு இருக்கு.
இங்கே முதல் போஸ்டுக்கு புளியோதரை எல்லாம் கிடையாது.பொற்கொடி அதுனாலே இந்த பாவ்லா எல்லாம் வேண்டாம். பேசாமே கடைசீல வந்து நில்லு.பொற்கொடிக்கு ஒரு நல்ல ஆப்பு வையுங்கோ.இல்லைனா என்கிட்டே ஒரு நல்ல ஆப்பூ இருக்கு தரட்டுமா?

Porkodi (பொற்கொடி) said...

ஆன்மீகம் எழுதும் போதும் நக்கலு?? இது வரை எழுதினத படிச்சிட்டு வரேன் பாட்டி :))

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. முன்னோர்கள் எல்லாம் உங்கள தரிசனம் பண்ணத் தான் வந்துருப்பாங்க.. நல்லா உபசரிச்சீங்களா?

வெந்நீர் ஊற்றுகள் ஏதும் இல்லியா என்ன அங்க?

Geetha Sambasivam said...

நடேசன் சார்,
முழுசும் படிச்சுட்டு அப்புறம் நான் சொல்லும் யோசனைப் படி போயிட்டு வாங்க. ஃபோட்டோ போட முயற்சி செய்யறேன். சிலது வீணாப் போயிட்டது, பசுபதிநாத் கோவில் ஃபோட்டோ எடுக்க அனுமதி கிடையாது.

Geetha Sambasivam said...

பசுபதி நாதரைத் தொடவா? போய்ப் பார்க்கவே முடியாமக் கூட்டம். இதிலே தொடறது எங்கே? அனுமதி கிடையாது. ருத்ராக்ஷம் எல்லாம் ட்ராவல்ஸ்காரங்க கொடுத்தாங்க. நான் தான் சின்னப் பொண்ணாச்சே, அதனாலே மாமியார்கிட்டே கொடுத்துட்டேன். ஹி,ஹி,ஹி,ஹி.
உங்க சிஷ்யனை எங்கே காணறதே இல்லை? இப்போவெல்லாம்? உங்க வீட்டுக்கு வந்து ஆப்பு வாங்கின அதிர்ச்சியா?

Geetha Sambasivam said...

பொற்கொடி எங்கேனுதான் கேட்டதா(முன்னோர்கள்) எங்க வீட்டுக்காரர் சொன்னார். அது இப்போதான் ப்ளாக் ஆரம்பிச்சிருக்கு. 2 பதிவுக்குள்ளேயே கை நடுங்குதுனு சொல்லிட்டு வரச் சொன்னேன். பார்த்துக்கறேன்னு பல்லைக் காட்டியது.