எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, September 30, 2006

34.ஓம் நமச்சிவாயா-5

பசுபதி நாதருக்கு 5 முகங்கள். 4 திசைகளிலும் 4 முகங்கள், மேலும் தலையில் மேலே பார்த்து ஒரு முகம், இதை "அதோ முகம்" என்கிறார்கள். மொத்தம் 5 முகங்கள். திருக்கைலையிலும் கைலை நாதனுக்கு 5 முகங்கள். ஆகவே திருக்கைலைநாதனைத் தரிசிக்கும் சிறப்பு இந்தப் பசுபதி நாதனைத் தரிசிக்கும்போதும் கிடைக்கிறது. கூட்டத்தில் கிடைத்த இடத்தில் நின்று கொண்டோம். நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாம் வெளியில் இருந்து வந்திருக்கிறோம் என்றால் உடனேயே நம்மை முன்னால் பார்க்க விடுவார்கள். நிதானமாகவும் பார்க்க விடுவார்கள். அவசரப் படுத்துவது இல்லை. இங்கே அம்மாதிரி இல்லை என்பதோடு போலீஸ் காவலையும் மீறிச் சிலர் உரிமையோடு கூட்டத்தில் முன்னே போய்ப் பார்த்துக் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். நம்ம தமிழ்நாட்டுக் கோவில் மாதிரித் தான் இருந்தது. மேலும் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது. பல வயதானவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் கூட வந்து தரிசனம் செய்து கோயிலிலேயே இறக்கும் வரைத் தங்குமாறு ஏற்பாடு செய்து தருகிறார்கள். கோவில் நிர்வாகம் இதைச் செய்கிறது. கோயிலின் அர்ச்சகர் ஒரு இந்தியர். கேதார்நாத் கோவிலில் அர்ச்சனை செய்யும் "ராவல்" சமூகத்தைச் சேர்ந்தவர். நல்ல சிவப்பழமாக இருக்கிறார்கள். இது வரை இவரை நியமிக்கும் அதிகாரம் நேபாள மன்னரிடம் இருந்தது. இனிமேல் எப்படியோ தெரியாது.

நாங்கள் வரிசையில் நிற்கும்போது சில அர்ச்சகர்கள் வந்து "ருத்ராபிஷேஹம்" செய்ய வேண்டுமா எனக் கேட்டனர். கட்டணம் ரொம்ப ஜாஸ்தியாக இருந்ததால் நாங்கள் மறுத்து விட்டோம். சுமார் 1/2 மணிக்கும் மேலாக வரிசையில் நின்ற பிறகு ஒரு முகத்தின் தரிசனம் சற்றுக் கிடைத்தது. இறைவனை எவ்வளவு பார்த்தாலும் திருப்தி ஏது? பிறகு ரொம்பக் கஷ்டப்பட்டு மற்ற முகத்தின் தரிசனத்துக்குப் போனோம். 3வது, 4வது முக தரிசனத்துக்குப் போகவே முடியவில்லை. கூட்டம் நெட்டித் தள்ளியது. பின் அங்கிருந்து கிளம்பிச் சற்றுத் தூரத்தில் எல்லாரும் தரையில் பதிக்கப்பட்ட சில வடிவங்களை வணங்குவதைப் பார்த்துவிட்டு, என்ன எனவே தெரியாமல் வணங்கிவிட்டு, காலபைரவரைத் தேடிவிட்டுப் பின் அங்குள்ள 1,008 லிங்கங்களைத் தேடினோம். இதெல்லாம் எங்களுக்குச் சொல்லி வழிகாட்ட வேண்டிய வழிகாட்டியும், திரு மனோஹரும் எங்கள் யாருடனும் வரவே இல்லை. பின்னால்தான் தெரிந்தது தரையில் பதிக்கப்பட்டவை நவக்ரஹங்கள் என்றும், ருத்ராபிஷேஹம் குழுவாக வந்தவர்கள் செய்தால் எல்லாரும் உள்ளே போய்த் தரிசித்திருக்கலாம் என்றும். நாங்கள் 24 பேர் இருந்ததுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு 2 குழுவாகப் போய்த் தரிசித்திருக்கலாம். கூட்டத்தில் இடிபட்டு, மணிக்கணக்காக நின்றிருக்க வேண்டாமே? எங்களில் ஒருவர் கோபத்துடன் இப்போ நாங்கள் போய் ருத்ராபிஷேஹம் செய்து தரிசிக்கிறோம் என்றதற்கு நேரம் ஆகிவிட்டது என்றும் இன்னும் 2 கோவில்கள் போக வேண்டும் என்றும், கைலை யாத்திரை முடிந்து திரும்பி வரும்போது மறுபடி ஒருமுறை தரிசனம் செய்விக்கிறோம் என்றும் கூறவே ஒருமாதிரி சமாதானம் ஆகி எல்லாரும் காரில் ஏறி உட்கார்ந்தோம்.

பின் நாங்கள் போனது "பூடா நீல்கண்ட்" என்னும் கோவில். இந்தக் கோவிலில் ஒரு தடாகத்தின் உள்ளே சிவன்/விஷ்ணு படுத்திருக்கிறார். மிகப் பெரிய உருவம். நஞ்சுண்ட கண்டனான ஈசன் நஞ்சை உண்ட அசதியில் மெதுவாக நடந்து கைலை வரும்போது சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள இங்கே படுத்தாராம். படுத்தவர் மஹாவிஷ்ணுவாக மாறி விட்டார் என்கிறார்கள். உள்ளே கிட்டத்தில் போய்ப் பார்க்க எல்லாவற்றையும் வெளியே வைத்துவிட்டுப் போக வேண்டும். உள்ளே போய்ப் படம் எடுக்க முடியாது. சிலர் வெளியேயே நின்று படம் எடுத்தார்கள். சிவன் ரூபத்திலும், விஷ்ணு ரூபத்திலும் ஏககாலத்தில் தோன்றுவதுதான் இவர் தனிச்சிறப்பு. அங்கேயே பூஜை செய்து பிரசாதம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலேயும் நம் இந்தியாவில் உள்ள மாதிரிக் கதைகள். ஆன்மீக நம்பிக்கைகள். சொல்லப் போனால் நேபாளம் ஒரு குட்டி இந்தியாதான். எல்லா வடமாநில நகரங்களைப் போல்தான் இருக்கிறது. பேச்சிலும், எழுத்திலும் இந்தி ஆதிக்கம் நிறையவே இருக்கிறது. நேபாள மொழியை அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும் அதிகம் புழங்குவதி இந்தி மொழிதான். கலாசாரம், நம்பிக்கைகள், கடவுள் பக்தி இவற்றில் எல்லாம் இந்தியத் தன்மையே மிகுந்து இருக்கிறது. எந்தப்பாட்டுப் பாடினாலும், பஜனை செய்தாலும் கடைசியில் ராமரிடத்திலும், சீதையிடத்திலும் வந்து முடிக்கிறார்கள். ராமாயணமும், ராமரும், சீதையும் தான் முதலில். அவர்களைத் துதி செய்யாமல் இருப்பதில்லை. பரமசிவன் பற்றிப் பாட ஆரம்பித்தால் கூட அதில் ராமரும், சீதையும் வெகு அழகாகவும், ஸ்வாதீனமாகவும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். பொதுவாகப் பக்தி நிறைந்த மக்கள். நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையே சுற்றுலாதான். ஆகவே அதற்கு நிறைய முக்கியத் துவம் இருக்கிறது.

5 comments:

Porkodi (பொற்கொடி) said...

//பல வயசானவங்க// அப்பாட ஒத்துண்டீங்களே ஒரு வழியா :))

Porkodi (பொற்கொடி) said...

ரொம்பவே கஷ்டப்பட்டு தரிசனம் செஞ்சுருக்கீங்க.. பாத்தா அடுத்த பிறவி இல்லங்கறீங்க!! அப்போஒ யாரு எனக்கு பாட்டியா இருக்கறதாம்??

தி. ரா. ச.(T.R.C.) said...

நல்ல சுற்றுலா பயணம். நேபாள் போய் பசுபதிநாத்தை முழுமையா பார்க்கலை.கைலாசம் என்ன ஆகப்போரதோ? சின்னப் பொண்ணுதானே கூட்டத்திலே முன்டி அடிச்சுபோயிருக்கலாமே

Geetha Sambasivam said...

சார்,
4 பக்கம் வாசல், 4 முகம். அதில் இரண்டு முகம் பலபேரால் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம், முண்டி அடிச்சுப் போனாலும் பின்னால் தான் கூட்டம் தள்ளுகிறது. மணிக்கணக்கா வரிசையிலே நின்னால் முடியும். ஆனால் ட்ராவல்ஸ் காரர்கள் விடவில்லையே? அதனால் தான் வேறு யாரும் போகும்போது இந்த மாதிரி மாட்டிக் கொள்ளாமல் பார்த்துப் போக வேண்டும் என்று விவரமாக எழுதுகிறேன்.

Geetha Sambasivam said...

வேதா, சாளக்கிராமம் வாங்கினால் அதற்குத் தகுந்த நியம, நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும். அதனால் அதில் எல்லாம் இறங்கவே இல்லை. நம்மால் முடியாது என்கிற காரியத்தைச் செய்ய வேண்டாமே என்ற நினைப்புத்தான்.