எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, November 26, 2006

ஓம் நமச்சிவாயா-20

அந்தக் குதிரைக்கு நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லைனு தெரிஞ்சிருக்கணும். வளையத்தைக் காலில் நானாக மாட்டிக் கொள்ள முயன்றதும் அது என்னைக் கீழே தள்ளி விட்டது.குதிரையின் விலாப் பக்கத்தில் வளையத்தை மாட்டிக்கொள்ள முயன்றபோது நான் கொடுத்த அழுத்தத்தினால் அது ஓட ஆரம்பித்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதெல்லாம் அப்புறம் தான் தெரிந்து கொண்டேன். இப்போக் கீழே விழறதுன்னா எப்படி விழறது? அது ஒரு பெரிய விஷயம். ஒரு பக்கம் நதிக் கரை. நல்ல வேளையா உயர்ந்த கரைப் பக்கத்தில் இருந்து கொஞ்சம் கீழே இறங்கி ஆச்சு. இன்னொரு பக்கம் நெடிது உயர்ந்த மலைகள். இடது பக்கமாய் விழுந்தால் நதியில் விழுந்து அங்கே இருந்து நேரே கைலை தான் போகணும். வலது பக்கமாய் விழுந்தால் மலைப் பாறை மண்டை உடையும். எது தேவலை. யோசிக்கவே நேரம் இல்லை. உடம்பைக் குறுக்கிக் கொண்டேன். என்னோட யோகா பயிற்சி கை கொடுத்தது. நல்லவேளையாக நான் விழுந்தது வலது பக்கமாய்த் தான். அப்படியே உட்கார்ந்த வாறு விழுந்தேன். தலையில் அடி படாமல் இருக்கக் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டபடி விழுந்தேன். அதற்குள் சத்தம் கேட்டுக் குதிரைக்காரி ஓடி வந்தாள். என்னோட உதவி ஆளைக் கூப்பிட்டாள். அது மட்டும் நதியின் உயர்ந்த கரையாக இருந்திருந்தால் அந்தக் குறுகிய இடத்தில் நான் விழுந்திருந்தால் பின்னால் வந்த குதிரைகள் எல்லாம் தமிழ் சினிமா, இந்தி சினிமா வில்லன், வில்லியை மிதிக்கிற மாதிரி மிதித்துக் கொண்டு போக வேண்டி இருக்கும் அல்லது எனக்கு நல்ல அடி பட்டிருக்கும். இப்போதும் அடி பட்டது. ஆனால் இடுப்பில் அடி பட்டது. மண்டை உடைந்து ரத்தம் வராமல் போச்சே என்று சந்தோஷப்பட்டேன்.

ஏற்கெனவே வலது பக்க இடுப்பில் ஏணியில் இருந்து கீழே விழுந்து, மாடு முட்டிக் கீழே விழுந்து, வீட்டிலேயே நடக்கும்போது விழுந்து என்று மேலே மேலே அடி பட்டுக் கொண்டிருந்தது. அதே இடத்தில் இப்போதும் நல்ல அடி. என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை.அசையக் கூட முடியவில்லை. குதிரைக் காரியானால் எழுந்திரு என்கிறாள். இவர் எங்கே போனார் என்றும் தெரியவில்லை. ஒரே ஆத்திரமும், அழுகையுமாக வந்தது. அதற்குள் தாண்டிப் போனவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். அதற்கு இவங்க விட்டால்தானே. இரண்டு பேருமாக என்னை மறுபடி குதிரை மேல் ஏற்றி விட்டார்கள். இத்தனை நேரம் உட்காரக் கஷ்டமாக இல்லை. இப்போ உட்காரவே முடியலை. காலைத் தொங்கப் போடவும் முடியலை. குதிரை நடக்கும் போது எல்லாம் அதன் முதுகெலும்பு பட்டு இன்னும் வலி ஜாஸ்தி ஆகிறது. ரொம்பவே வேதனையாக இருந்தது. ரத்தம் கட்டி வீங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். சற்றுத் தூரம் போனதும் சாப்பாடு சாப்பிட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அங்கே இறங்கச் சொன்னார்கள். எங்கே இறங்கறது? முடியலைன்னு சொன்னேன். உடனேயே பிடித்து இழுத்து இறக்கி விட்டார்கள். வலது காலை ஊன்ற முடியாமல் கால் மடிந்து மறுபடி கீழே விழுந்தேன். (இந்தக் குதிரைக்காரர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாய்த் தான் நடந்து கொள்கிறார்கள். மேலும் நாம் குதிரையில் இருந்து கீழே விழுவது அவர்களுக்கு உற்சாகமாய்ச் சிரிப்பு வருகிற விஷயமாய் இருக்கிறது. இது பற்றி ஏற்கெனவே எங்களுக்குச் சொல்லி அவர்கள் என்ன சொன்னாலும் பேசாமல் இருக்கவேண்டும், அவர்களிடம் கோபமாய்ப் பேசக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தோம்.)நான் மறுபடி கீழே விழுந்த சமயம் எங்கோ இருந்து வந்த என் கணவர், "பார்த்து இறங்கக் கூடாது?" என்றார். உடனேயே கோபமும், அழுகையுமாய் வழியிலேயே கீழே விழுந்ததைச் சொன்னேன். அடி பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அதற்குள் திரு ராமச்சந்திரன் சில வலி நிவாரணி மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்தார். பக்க விளைவுகள் இல்லாதது என்றும், தைரியமாய்ச் சாப்பிடலாம் என்றும் சொன்னார். என் கணவர் எங்கள் இருவருக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு திரு மனோகரனிடமும், கிருஷ்ணாவிடமும் எனக்கு அடிபட்டு வலி அதிகம் இருப்பதைச் சொன்னார். அவர்கள் இங்கே தங்க இடம் ஏதும் இல்லை என்றும் இன்னும் ஒரு 3 மணி நேரம் போனதும்தான் இரவு தங்கப் போகும் கேம்ப் வரும் என்றும் அங்கே வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சாப்பிடும் போதே பனிமழை பொழிய ஆரம்பித்தது. கூரை எதுவும் இல்லாத திறந்த வெளி தான். ஆகவே எல்லாரும் ரெயின்கோட்டைப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கும்போதே காற்று அடிக்க ஆரம்பித்தது. ஒருவழியாகச் சாப்பிட்டோம் என்று பெயர் பண்ணிவிட்டுக் கிளம்பினோம். குதிரைக்காரியிடமும், என்னோட உதவி ஆளிடமும் என் கணவர் எவ்வளவோ சொல்லிப் புரியவைக்க முயன்றார். என்ன புரிஞ்சிண்டாங்களோ தெரியலை.

மூன்று மணி நேரம் கழித்து ஒரு நதிக்கரையில் மறுபடி இறக்கி விட்டார்கள். நதி இப்போது குறுக்காகப் போய்க் கொண்டிருந்தது. நதியின் மறு கரையில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இடத்தில் கரை குதிரை போகிற மாதிரி இல்லை. நாம் தான் இறங்கிப் போக வேண்டும். நதியைக் கடந்து மறு கரை போய் மேட்டில் ஏறிக் கேம்பிற்குப் போகவேண்டும். எல்லாரும் இறங்கிக் கடந்து கொண்டிருந்தார்கள். என்னோட ஹெல்ப்பரை உதவிக்குத் தேடினேன். கையில் ஒரு தடி கொடுத்து விடுகிறார்கள். எல்லாருக்குமே. எங்கெல்லாம் வழுக்குமோ அங்கெல்லாம் தடியின் உதவியுடன் நடக்க வேண்டும். பனியாக இருந்தாலும் தடியை ஊன்றிக் கொண்டு நடக்கலாம். இருந்தாலும் பாறை வழுக்குப் பாறையாக இருந்தால் என்ன செய்வது? அதனால் ஆளைத் தேடினேன். அவன் முன்னாலே போய்விட்டான். எனக்கு ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. எனக்கு முன்னாலே தெலுங்கு எழுத்தாளப் பெண்மணி ஸ்ரீலட்சுமி போய்க் கொண்டிருந்தார். அவரும் தடுமாறிக் கொண்டிருந்தார். ஒரு அடி எடுத்து வைப்பதும், நிற்பதுமாக ரொம்பவே சிரமப்பட்டார். அதற்குள் என் கணவரும் அவருடைய உதவிப் பெண்மணியும் வரவே அந்தப் பெண்மணி முதலில் அவரைக் கொண்டு அக்கரையில் விட்டு விட்டுப் பின் திரும்பி வந்து என்னை அழைத்துக் கொண்டு போனாள். அங்கே கேம்பில் எல்லா இடமும் பூர்த்தி ஆகிக் கொண்டிருந்தது. சற்றுக் கீழே உள்ள ஒரு "மட் ஹவுஸில்" எங்களைப் போய்ப் படுக்குமாறு மனோகரன் கூறவே, சற்றுப் படுக்கை உறுத்தாமல் இருந்தால் பரவாயில்லை. அடி பட்டிருக்கிறது என்று என் கணவர் கூறினார். ஆனால் அவர் நடந்து வருகிறவர்களுக்குத் தான் இந்த இடம்னு சொல்கிற மாதிரிப் பேசாமல் போய்விட்டார். வேறு வழியில்லாமல் அந்த அறைக்கு வந்தோம். கிட்டத் தட்ட 10 பேருக்குப் படுக்கை போட்டிருந்தது. எனக்கு முன்னாலே செந்திலின் நண்பர் ரமேஷ், ஸ்ரீலட்சுமி, அவரின் கூட வந்த செளமினி, கண்ணம்மா, திருமதி லலிதா மற்றும் மதுரையில் இருந்து வந்த அலமேலு ஆகியோர் இருந்தார்கள். ஒரு இரட்டைப்படுக்கையில் எங்களுக்கு இடம் கிடைத்தது. கற்களால் மேடை போல அடுக்கி வைத்து அதன் மேல் விரிப்பை விரித்திருந்தார்கள். போர்த்திக் கொள்ள நல்ல வேளையாக ரஜாய் இருந்தது. எல்லாரும் அதில் படுக்கவே முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலே எங்கள் படுக்கையின் கால்மாட்டில் திருமதி லலிதாவின் படுக்கை, தலைமாட்டில் இன்னும் இரண்டுபேர், பக்கவாட்டில் திருமதி அலமேலு. நாங்கள் இறங்குவது என்றால் யார் காலையோ தலையையோ மிதிக்காமல் இருக்கிறோமா என்று பார்க்கவேண்டும். என் கணவர் போய்ப் படுத்தது தான் இறங்கவே இல்லை மறுநாள் காலை வரை.

அப்போது திரு கிருஷ்ணா வந்து எல்லார் உடல் நலமும் தினசரி கேட்கிற மாதிரி விசாரித்து விட்டு என்னிடம் நீங்கள் தொடர்ந்து வருகிறீர்களா? என்று கேட்டார்.நான் யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் மறுநாள் கிட்டத்தட்ட 7 கி.மீ. முதலில் நடக்கவேண்டும் என்றும், அதன் பின் குதிரையில் போகவேண்டும் என்றும், பின் மறுபடி நடக்கவேண்டும். அது ரொம்பவே கஷ்டமான ஒன்று. எங்கேயும் நடுவில் நிற்க முடியாது. ஒரே செங்குத்துப் பாதை. துணை இல்லாமல் முடியாது யோசித்துச் சொல்லுங்கள். என்று சொன்னார்.

2 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

மேலும் நாம் குதிரையில் இருந்து கீழே விழுவது அவர்களுக்கு உற்சாகமாய்ச் சிரிப்பு வருகிற விஷயமாய் இருக்கிறது.

படிக்கிற எங்களுக்கே சிரிப்பு பிச்சுகிட்டு போறதுன்னா பார்க்கிற அவுங்களுக்கு எப்படி இருந்து இருக்கும். நீங்களும் நகைச்சுவையோடுதான் விவரிக்கறீர்கள்.அது சரி நம்ப சார் இந்த சமயத்தில் எங்கே போனார் ஒரு வேலை பின்னால் மறைவாக இருந்து விடியோவில் எடுத்துக்கொண்டு இருந்தாரோ. அப்பறம் தனியாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

EarthlyTraveler said...

//அதன் பின் குதிரையில் போகவேண்டும் என்றும், பின் மறுபடி நடக்கவேண்டும். அது ரொம்பவே கஷ்டமான ஒன்று. எங்கேயும் நடுவில் நிற்க முடியாது. ஒரே செங்குத்துப் பாதை. துணை இல்லாமல் முடியாது யோசித்துச் சொல்லுங்கள். என்று சொன்னார்.//
இவ்வளவு அடி பட்டு திரும்ப குதிரை,நடை என சொன்னா,OH!MY! ஆனாலும் இந்த பயணம் முடித்து வந்து,அதையும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் என்றால்....HATS OFF TO YOU!
--SKM