எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, December 30, 2006

ஓம் நமச்சிவாயா -23

கைலை மலை பற்றிச் சிலத் தகவல்கள்

இந்த இடத்தில் கைலை மலை பற்றிச் சிலக் குறிப்புக்கள் கொடுக்க நினைக்கிறேன். முன்னாலேயே கொடுத்திருக்க வேண்டும். தொடரில் தொடர்பு விட்டுப் போகக் கூடாது என்று நினைத்ததால் எழுதவில்லை. இப்போ கைலைப் பயணம் முடிந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பும் வழியில் "அஷ்ட பத்" போய்க் கொண்டிருக்கிறோம். அது இருக்கட்டும் தனியாக.

ஏற்கெனவேயே கைலை மலையும் ஒரு சக்தி பீடமாய்க் கருதப் படுகிறது எனத் தெரிவித்திருக்கிறேன். தட்சனின் யாகத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட அன்னையின் உயிரற்ற உடலைத் தோளில் போட்டுக் கொண்டு ஆடிய எம்பெருமான் தென்னாடுடைய சிவனின் கோபம் தணிய மஹாவிஷ்ணு தன் சுதர்ஸன சக்கரத்தால் அன்னையின் உடல் அங்கங்களைத் துண்டு துண்டாக அறுக்க அதிலே அன்னையின் உடல் கொழுப்புப் பூராவும் விழுந்து மூடிக் கொண்ட இடம் தான் திருக்கைலை ஆகும். அந்தக் கொழுப்புத் தான் உறைந்து காலப் போக்கில் பனியாக மாறியதாக சாக்தர்க்ளின் அபிப்பிராயம். திபெத்தின் மேற்குப் பகுதியில் (வடமேற்கு என்றும் சொல்லலாம்) ஒரு மூலையில் உள்ள திருக்கைலாய மலையின் உயரம் 22,028 அடிகளாகும். திபெத்திய பீடபூமியால் சூழப்பட்ட இந்த மலை இந்துக்கள், சமணர்கள், பெளத்தர்கள் எல்லாருக்குமே ஒரு புனித யாத்திரைத் தலமாய் விளங்குகிறது. மற்றச் சுற்று வட்டார மலைகளில் இருந்து பனி கோடை காலத்தில் உருகினாலும் திருக்கைலாய மலையில் மட்டும் பனி உருகுவதில்லை. இந்தப் பனி மூடிய மலையைச் சுற்றி வரும் தூரம் (பரிக்ரமா செய்யும் தூரம்) கிட்டத் தட்ட 52 கிலோ மீட்டர் ஆகும்.

"மஹா நிர்வாண தந்திரம்" என்ற பெளத்த மத நூலின் படி பெளத்தர்களுக்கும், திருக்கைலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களின் கோட்பாட்டின் படி பெளத்தர்கள் அதாவது பிட்சுக்கள் மலையின் உச்சியில் "டொம்சோக்" என்னும் சக்தி வாய்ந்த தெய்வத்தின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. இந்தத் தெய்வம் மூன்று உலகங்களுக்குக் காவல். 12 கரங்கள் உள்ள இந்தத் தெய்வம், தன் கைகளில் அறிவைக் குறிக்கும் வண்ணம் கருவிகளைத் தாங்குகிறது. தேவியின் பெயர் "டோர்ஜி பாஸ்மோ" அல்லது "வஜ்ர வர்ஷி". செந்நிற அழகியான இந்தச் சக்தி வாய்ந்த தேவியான இவள் கையில் வைத்திருக்கும் அரிவாளினால் மனிதர்களின் ஆசைகளை வேரறுக்கிறாள். எல்லாத் திசைகளிலும் இந்த அரிவாள் தகாத ஆசை கொண்டவர்களை வேரறுக்கிறது. தன் இடக்கையால் "டொம்சேக்"கைத் தழுவிய நிலையில் காணப்படுகிறாள். ஆனால் இவள் காமத்தைக் கடந்தவள். "டொம்சேக்கும்" "வஜ்ரவர்ஷி"யான இந்தத் தேவியும் பிரிக்க முடியாதவர்கள். இது கிட்டத் தட்ட நம் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தை எடுத்துரைப்பதாய்த் தோன்றுகிறது.

திபெத்தின் புராணம் என்று அழைக்கப் படும், "காங்குரி கார்ச்சொக்" என்ற நூலில் கைலை மலையில் தான் கற்பக விருட்சம் இருப்பதாயும், மற்ற பகுதிகள் வைரம், வைடூரியம், மரகதம், பொன், வெள்ளி போன்ற நவரத்தினங்கள் நிறைந்ததாயும் கூறப்படுகிறது. இவர்கள் கடவுளும் டொம்சொக் எனப்படும் "தர்மபாலர்" 4 முகங்கள் கொண்டவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் கொண்டவர். அவை முக்காலங்களை உணர்த்துகிறது. புலித்தோல் அணிந்தவர், மண்டையோட்டு மாலை தரித்து, உடுக்கையைக் கையில் வைத்திருப்பவர், திரிசூலத்தைக் "காட்டம்" என்கிறார்கள். அதையும் குறிப்பிடும் இவர்கள் கடவுள் தோற்றத்தில் நம் சிவபெருமானின் வர்ணனையை ஒத்து இருக்கிறது.

ஜைனருக்கோ என்றால் அவர்கள் முதல் தீர்த்தங்கரர் "ரிஷபா நந்தா" இங்கே தான் முக்தி அடைந்ததாகவும் அவருடைய சமாதி மலை உச்சியில் இருப்பதாயும் நம்புகிறார்கள். கைலையை "அஷ்டபாதா" என்று அழைக்கும் அவர்களின் 24-வது தீர்த்தங்கரரான மஹாவீரர் இங்கே ஒரு முறை வருகை புரிந்ததாய்க் கூறுகிறார்கள். இந்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தத்தாத்ரேயர் கைலையில் பரிக்ரமா செய்ததாகவும், இப்போதும் கூட அங்கே உள்ள காடுகளில் மறைந்து இருக்கும் தத்தாத்ரேயர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கிறார்கள். மஹா சிரஞ்சீவியான ஆஞ்சநேயப் பிரபு தன் சுய உருவுடன் கைலை மலைப் பிராந்தியத்தில் உலவிக் கொண்டிருப்பதாயும் சொல்கிறார்கள். கேதார்நாத்தில் உள்ள ஈசான மூலை வழியாக (நான் சென்றதில்லை) ஆதிசங்கர பகவத்பாதர் இமயம் க்டந்து கைலை ஏறி அங்கேயே ஐக்கியமாகி விட்டதாயும் சொல்வார்கள். நான்கு அடுக்குகள் கொண்டதாய்க் கூறப்படும் இந்தக் கைலையின் முதல் மூன்று அடுக்குகளில் யக்ஷர்களும், நான்காம் அடுக்கில் தேவர்கள், கின்னரர்கள், அஸ்வினி தேவர்களும் இருப்பதாயும் கூறுகிறார்கள். பக்கத்தில் உள்ள "அஷ்டப்த்தில்" தான் குபேரன் தன் செல்வத்தோடு வசிப்பதாயும் கூறுவார்கள். எட்டுமலைகள் கொண்ட அந்த மலைத் தொடர்கள் "குபேர பண்டார்" என்று அழைக்கப் படுகிறது.

தமிழ் மணம் நண்பர்கள் எல்லாருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். கைலை பற்றிய தகவல்கள் தொடரும்.
முத்தமிழ்க் குழும நண்பர்கள் எல்லாருக்கும் எங்கள் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

5 comments:

மலைநாடான் said...

அம்மா!

இந்தத் தொடரைத் தொடர்ச்சியாக வாசித்து வருகின்றேன். மிக அருமையாக உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றீர்கள். பணி தொடருங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தமிழில் இச்செய்திகளை அறிய ஆனந்தம். நன்றி,
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

EarthlyTraveler said...

will read leisurely and will comment tomorrow.Ippo just "present"maami--SKM

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி, திரு மலைநாடான் அவர்களுக்கும், ஜீவா மற்றும் SKM ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

EarthlyTraveler said...

என்னென்ன விஷயங்கள்!!!ஆச்சர்யமாகவே உள்ளது இதை எல்லாம் படிக்க படிக்க. அழகாக விரிவாக அருமையாக எழுதுகிறீர்கள் மாமி.உங்கள் ஆசிகளுக்கு நன்றி.--SKM