எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, June 12, 2007

20. சிதம்பர ரகசியம் - சித் சபையின் உள்ளே - 3

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்: சித் சபையின் உள்ளே சிவகாம சுந்தரிக்கு இடப்பக்கமாய் மேற்கே பார்த்துக் கொண்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார். எல்லாச் சிவன் கோவில்களிலும் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. ஆனால் இங்கேயோ நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார். இவருடைய வாகனம் ஆன நாய் ஆனது சிவனிற்குக் குடை பிடிக்கும் கணங்களில் ஒருவரான குண்டோதரனின் மறு பிறவி எனச் சொல்லப் படுகிறது. நடராஜருக்குப் பூஜை நடக்கும் கால பூஜையில் ஒருமுறை இவருக்கும் அபிஷேகம், ஆராதனை செய்யப் படுகிறது. நடராஜ தரிசனத்துக்கும், சிதம்பர ரகசிய தரிசனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் இவருடைய தரிசனத்துக்கும் கொடுக்கப் படுகிறது.

எல்லாச் சிவன் கோவில்களிலும் காலபைரவர் தான் காவல் தெய்
வம். சிவனால் நியமிக்கப் பட்ட இவர் சிவனின் அவதாரங்களில் ஒன்றாகவே கருதப் படுகிறார். முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியைக் கால பைரவர் சன்னிதியில் வைத்துவிட்டுப் போய்விடுவார்கள் எனச் சொல்லப் படுகிறது. சிதம்பரம் கோவிலிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தினசரி பூஜை முடிந்ததும், இரவில் கால பைரவர் சந்நிதியில் அன்றைய பூஜை செய்யும் தீட்சிதர் ஒரு தாமிரத் தட்டை வைத்து விட்டு வருவார் எனவும், காலையில் அது தங்கமாய் மாறி இருக்கும் எனவும் நம்பப் படுகிறது. அந்தத் தங்கத் தட்டை வைத்துக் கொண்டுதான் தீட்சிதர்கள் தங்கள் வாழ்நாள் செலவிற்கு வழி பார்த்துக் கொண்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த செவிவழிச் செய்திகளால்தான் இந்த பைரவருக்கு "ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்" என்ற பெயரும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எப்போது நின்றது என்று நிச்சயமாய்க் கூற முடியாத கால கட்டத்திலேயே இந்தப் பழக்கம் நின்று விட்டதாயும் சொல்லப் படுகிறது. இந்த பைரவர் "க்ஷேத்திர பாலகர்" எனவும் சொல்லப் படுகிறார்.

சந்திரசேகரர்: இவரும் சித்சபையின் உள்ளேயே பைரவருக்கு அடுத்து அதே மேற்குத் திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இவரை "நித்யோத்சவ மூர்த்தி" என்று கூறுகிறார்கள். ஏனெனில் நடராஜர் தினமும் அல்லது அடிக்கடி வீதி உலாவோ, அல்லது கோவிலின் உள்ளே வரும் உலவோ மேற்கொள்ளுவது இல்லை. ஆண்டுக்கு இருமுறைதான் நடராஜர் கோவிலை விட்டு வெளியே வருவார். மற்றச் சமயங்களில் நடராஜருக்குப் பதில் இந்த மூர்த்தியின் திரு உருவம்தான் பிரகாரங்களில் உலா வர எடுத்துச் செல்லப் படும். தீர்த்தவாரி, பிரதோஷம், சோமவாரம் போன்ற சமயங்களில் இவர்தான் கோவில் பிரகாரங்களை வலம் வருவார்.

இந்த சந்திரசேகரர் இங்கே சித்சபையின் உள்ளே சிறிய வடிவில் இருக்கிறார். இன்னொரு சந்திரசேகரர் பெரிய மூர்த்தம் அவரும் சோமாஸ்கந்த மூர்த்தியும் தேவசபையில் குடி கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரிய சந்திரசேகரர் முக்கியமான தீர்த்தவாரி உற்சவங்களிலும், சோமாஸ்கந்த மூர்த்தி ப்ரம்மோற்சவங்களிலும் சிதம்பரத்தின் நான்கு ரதவீதிகளையும் வலம் வருவார்கள். இந்த சோமாஸ்கந்த மூர்த்தி பஞ்சமூர்த்திகளில் ஒருவராய்ச் சொல்லப் படுகிறார். இவர்களைத் தவிர நடராஜரின் பிரதிநிதிகளாய் இன்னும் இருவர் இந்த சித்சபையின் உள்ளே இருக்கிறார்கள். ஒருத்தர் "பலிநாதர்". இவர் ப்ரம்மோத்சவங்களில் நடராஜரின் பிரதிநிதியாக ரதவீதிகளை வலம் வருவதோடு அல்லாமல் (அஷ்டத் திக்பாலகர்கள்) எட்டுத்திக்குப் பாலகர்களுக்கும் "பலி" விநியோகம் செய்யும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். இவரை ஹஸ்தராஜா என்றும் அழைக்கிறார்கள். அடுத்த முக்கியமான பிரதிநிதி நடராஜரின் தங்கப் பாதுகைகள் இரண்டு. நடராஜரின் அருகேயே சித்சபையின் உள்ளேயே இவை இடம் பெற்றிருக்கும். நவரத்தினங்கள் பதித்த ஒரு தட்டில் வைக்கப்ப்பட்டிருக்கும் இவை ஒவ்வொருநாள் இரவும் நடராஜரின் பிரதிநிதியாகக் கடைசி கால பூஜைக்குப் பின்னர் "பள்ளி அறைக்கு" எடுத்துச் செல்லப் படுகிறார். இவர் கால்களில் சூட்டப் படும் பூமாலைக்குக் "குஞ்சிதபாதம்" என்று சொல்லப்ப்படுகிறது.

9 comments:

மோகன்தாஸ் said...

நான் செத்தே போய்ட்டேன் ;-), மேலேர்ந்து கீழே வரைக்கும் தேடித்தேடிப் பார்த்துட்டேன்.

ம்ஹூம் ஒன்னும் புரியலை எங்கே சிதம்பர ரகசியத்தை எழுதியிருக்கிறீர்கள் என்று. என்னோட பாஸ்ட் ரீடிங்கில் பிரச்சனை இருக்கலாம்.

தயவு செய்து இந்த பின்னூட்டத்துக்கு பதிலளிக்கும் முகமாய், அந்த முக்கியமான விஷயத்தை பற்றி எழுதிய பர்டிகுலர் பதிவையும், அதில் ரகசியத்தைப் பற்றி சொல்லியிருக்கும் விஷயங்களைச் சுட்டுவீர்களா? ப்ளீஸ்

கீதா சாம்பசிவம் said...

இதிலே இல்லை மோகன் தாஸ், முதலிலேயே எழுதிட்டேனே!

கீதா சாம்பசிவம் said...

மோகன் தாஸ் ,
மறுபடி படிங்க 16ல் இருந்து. நடராஜருக்கு வல்து பக்கமாய் ஒரு திரை தொங்க்விடப் பட்டிருக்கும். அந்தத் திரையைத் திறந்து தீப ஆராதனை காட்டுவார்கள். ஒரு வில்வமாலை தொங்கிக் கொண்டிருக்கும் வெட்டவெளியில் தொங்கிக் கொண்டிருப்பதாய் ஐதீகம். உருவமற்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை அது சுட்டிக் காட்டுகிறது. நம் மனமாகிய உருவெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனையும் சுட்டுவதாய்க் கொள்ளலாம். உண்மையில் நம்முள்ளே இறைவன் உறைந்திருக்கிறான் என்றும் அவன் ஆட்டுவிக்கிறபடி நாம் ஆடுகிறோம் என்பதும் தான் சிதம்பர ரகசியம் மற்றும் நடராஜரின் தத்துவம். கொஞ்சம் எளிமையாகவே சொல்லி இருக்கிறேன்.

மதுரையம்பதி said...

நிறைந்த விஷயங்கள், முன்பு சிதம்பர தரிசனம் செய்திருந்தாலும் தங்களது சில-பல தகவல்கள் முற்றிலும் புதியவை...நன்றி...அடுத்தமுறை இவற்றை பார்க்கையில் இன்னும் நன்றாக புரியும்..

ஆமாம், ஹஸ்தராஜா/பலிநாதர் - என்ன ரூபம்?.... சோமாஸ்கந்த ரூபமா?, இல்லை சந்திர சேகர ரூபமா?, நடராஜ ரூபமா?....

மோகன்தாஸ் said...

இல்லங்க நானும் இந்தப் பகுதியில் மட்டும் தேடலை, எல்லா பதிவுலையும் தான் தேடினேன்.

ஆனால் இப்ப புரிஞ்சிருச்சு நீங்க வில்வ மாலை தொங்கிக் கொண்டிருப்பதைத் தான் சொல்கிறீர்கள் என்பது.

---------------------------

நான் வேற மாதிரி கேள்விப் பட்டிருந்ததால் குழம்பியிருக்கலாம்; நடராஜரின் கால்கள் தரையில் பரவாமல் சிலையிருக்கும்னோ என்னவோ ஒன்றை நான் கேள்விப் பட்டிருந்தேன்.

நாங்க என் ப்ரண்ட்ஸ் எல்லாம் இந்தக் கோவிலுக்கு வந்திருந்தோம், நடராஜரைப் பார்ப்பதற்காகவே. காலேஜ் படிக்கும் பொழுது.

நன்றிகள் விளக்கியதற்கு.

கீதா சாம்பசிவம் said...

மோகன் தாஸ்,
எல்லையில்லா இந்தப் பெருவெளியில் அந்தரத்தில் நின்று நடராஜர் ஆடிக் கொண்டிருப்பதாயும் சொல்லலாம். ஆக்வே நீங்கள் கேள்விப் பட்டதும் ஒரு வகையில் சரியே! ஆனால் சிதம்பரம் கோயிலில் ரகசியம் திறந்து காட்டும்போது நமக்கு வில்வமாலை மட்டும் தான் தெரியும். உருவற்றப் பரம்பொருளின் தெய்வீக ஆன்மா அங்கே உறைந்திருப்பதாயும் கொள்ளலாம். பொதுவாய்க் கடவுள் நீக்கமற நிறைந்திருப்பவர் என்பது தான் இந்த "இந்துமதம்" என்று சொல்லப் படும் மதத்தின் தத்துவம். அதைச் சுட்டுவதே சிதம்பர ரகசியம். பாமர மக்களின் தேவைக்காகவும், செள்கரியத்திற்காகவும், சுலபமான வழிபாட்டிற்காகவும் பிற்காலங்களில் ஏற்பட்டதே உருவ வழிபாடு.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பற்றிய குறிப்புகள் நல்லாக் கொடுத்திருக்கீங்க கீதாம்மா...
அதுவும் நடராஜரின் பக்கத்திலேயே இருக்கிறார்.

பொதுவாக பல சிவாலயங்களில் பைரவர், கால பைரவ மூர்த்தியாகத் தான் இருப்பார்.

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்கிற ரூபத்தில், கையில் சூலம், டமருகம், அமிர்த கலசத்துடன்...
பார்வதியை மடி மேல் இருத்தி அமர்ந்த கோலமாக இருக்கும்.
பொதுவாக அன்னை மடி மீது அமர்ந்த கோலம் சிவனாருக்குக் கிடையாது...இதைத் தவிர!

ஒரு சில வைணவ ஆலயங்களிலும் பைரவர் உண்டு. திருமெய்யம் என்கிற திவ்யதேசத்தில் பெருமாளுக்கு, பைரவர் தான் காவல் தெய்வம்!

கீதா சாம்பசிவம் said...

நடராஜ ரூபம் தான் மதுரையம்பதி! அதனால் தான் ஹஸ்த ராஜா எனச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.

@கண்ணன், ரொம்பவே நன்றி உங்கள் கருத்துக்கு. சிவன் மடியில் அன்னையை உட்கார்த்திய கோலத்தில் உள்ள கோவில் பற்றி எழுதி இருக்கிறேன். பட்டீஸ்வரத்துக்கு அருகில் உள்ளது அந்தக் கோவில். கொஞ்சம் தேடிப் பார்த்துச் சொல்கிறேன். என்ன ஊர்னு. பைரவர் பொதுவாய்க் காவல் தெய்வம்தான். கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தான் இருப்பார். இந்தக் கோவிலில் தான் மூலவரோடு சேர்ந்து இருப்பதோடு அல்லாமல் தினமும் அவருக்குத் தனி வழிபாடும் உண்டு.

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்த சந்திரசேகரர் இங்கே சித்சபையின் உள்ளே சிறிய வடிவில் இருக்கிறார். இன்னொரு சந்திரசேகரர் பெரிய மூர்த்தம் அவரும் சோமாஸ்கந்த மூர்த்தியும் தேவசபையில் குடி கொண்டுள்ளார்கள். இவர்களில் பெரிய சந்திரசேகரர் முக்கியமான தீர்த்தவாரி உற்சவங்களிலும், சோமாஸ்கந்த மூர்த்தி ப்ரம்மோற்சவங்களிலும் சிதம்பரத்தின் நான்கு ரதவீதிகளையும் வலம் வருவார்கள்


THANKS