எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, February 08, 2008

சிதம்பர ரகசியம்- தியாகராஜரும் நடராஜரும்


தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ, மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை, பொன்னம்பலம் என்றால் திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத் தியாகராஜர், "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று துவங்கச் செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே, சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை ஆரம்பிக்கும்போது நடராஜர், "உலகெலாம்" என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர் இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து, பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப் படுவதோடு, இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப் படுகிறது. அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே, சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடப் பட்டதாயும் சொல்லப் படுகிறது. இதைத் தான் "அறையில் இருந்தாலும் அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும்" என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள். ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப் பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப் படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின் சந்தனக் காப்பு களையப் பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.

ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை "அஜபா நடனம்" என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப் படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீசக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில் ஆறுமுறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப் படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு உஷத் காலம் என்று கணக்கிடப் படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப் பூஜையாகக் கணக்கிடப் படுகிறது. மாசி-பங்குனியில் செய்யப் படுவது காலசந்தி, அல்லது பகலின் ஆரம்பம் எனக் கொண்டால், சித்திரையில் செய்யப் படுவது, உச்சிக்காலம் அல்லது நடுப்பகல் என்றும், ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும், ஆவணி மாதம் நடப்பது இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும், புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம் அல்லது நடு இரவு எனவும் அழைக்கப் படுகிறது.

17 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உத்திரகோசமங்கை, அபிடேக காலங்களின் தகவல்களுக்கு நன்றி கீதாம்மா!

//பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை//

பஞ்சபூதத் தலங்களில் ஆரூரா?
பிருத்வி/நிலம்/உலகம் காஞ்சிபுரம் அல்லவா?
மற்றவை முறையே
ஆகாயம்=தில்லை
நீர்=ஆனைக்கா
நெருப்பு=அண்ணாமலை
வாயு=காளத்தி

//திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை "அஜபா நடனம்" என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப் படாதது என்று பொருள்//

நீங்கள் சொல்வது போல் அஜபா = ஜபிக்கப்படாத என்பது தான் பொருள்.
தியானம், ஜபம் என்ற இரண்டு வழிமுறைகள்.
திருப்பாவையை வைத்து விளக்கணும்னா
வாயினால் பாடி = ஜபம்
மனத்தினால் சிந்திக்க = தியானம்

பெருமாள் சிவபெருமானின் திருநடனத்தை மனத்தில் வைத்து தியானிக்க, மூச்சுக் காற்றின் ஏற்ற இறக்கம் போல், சிவனாரும் மனதில் ஏறி ஏறி இறங்கியதால் வந்த நடனம் அஜபா நடனம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார்//

இல்லை!
தியாகராஜப் பெருமான் முக்கியத்துவம் வாய்ந்த உற்சவ மூர்த்தியே!
மூலவர் வான்மீகநாதர் எனப்படும் புற்றிடங்கொண்ட பெருமான்!

அவருக்கு இடப்பக்கம் தியாகராஜர்-பிரபலமான உற்சவ மூர்த்தி!
அவருக்கு வலப்புறம் வீதிவிடங்கர் என்னும் லிங்கம். இவருக்குத் தான் தினம் அபிடேகம்!

Yogi said...

// பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். //

எங்கள் ஊர் இராமநாதபுரத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் தான் திருஉத்திரகோசமங்கை உள்ளது.

// இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப் படுகிறது. //
இந்த மரகத நடராஜர் சிலை எப்பொழுதும் சந்தனக் காப்பு செய்யப்பட்டிருக்கும். வருடம் ஒருமுறை மட்டுமே காப்பு களையப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் காப்பு சாத்தப்படும். இந்தப் பூஜை 'ஆருத்ரா தரிசனம்' அன்று நடைபெறும். மரகதசிலையாதலால் மேளதாளங்கள் எதுவும் இன்றி பூஜை நடைபெறும். அன்று எங்கள் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை.

jeevagv said...

//இவர் திருமேனியில் ஸ்ரீசக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. //
இங்கே நீங்கள் குறிப்பிடுவது, மரகத நடராஜரின் திருமேனியிலா? அதனால் தான் சந்தனக் காப்போ?

jeevagv said...

சிவ தலங்களில் மூலாதரத் தலம் திருவாரூர் என்று படித்திருக்கிறேன் (அதனால் தான் திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது பிறப்பு என்பது தியானத்தில் மூலாதாரத்தில் நுழைவது என்ற பொருளில்).
இதர சக்ரங்களில் சிவ தலங்கள்:

சுவாஷ்ட்டானம் - திருஆனைக்கா

மணிபூரகம் - திருவண்ணாமலை

அனகதம் - சிதம்பரம்

விசுக்தி - திருக்காளத்தி

ஆக்கினை - காசி.

குமரன் (Kumaran) said...

தில்லையைப் பற்றியும் திருவாரூரைப் பற்றியும் அருமையான செய்திகளை அறிந்து கொண்டேன் கீதாம்மா. மிக்க நன்றி.

திவாண்ணா said...

சர நாராயணப்பெருமாள் கோவிலில்தானே?
சிவ வைணவ ஒற்றுமை காட்டும் இன்னொரு தலம். அங்கே அப்படிப்பட்ட கோவில்களின் பட்டியல் படித்ததாக ஞாபகம். தசரதர் புத்திர காமேஷ்டி செய்த இடம் என்றும் நினைவு. சரிதானே பொன்வண்டு அம்மா?

Geetha Sambasivam said...

//இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீசக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே //

ஜீவா, தியாகராஜரை அல்லவா சொல்லி இருக்கேன்? நீங்க கேட்பது மரகதநடராஜர் திரு உத்தரகோசமங்கையில். நான் இன்னும் கொஞ்சம் விளக்கி இருக்கலாமோ என்னமோ? எல்லாரும் பதிவு பெரிசா இருக்குனு சொல்றதாலே கொஞ்சம் குறைச்சுட்டேன். அதான் குழப்பம் வந்திருக்கு உங்களுக்கு. :D

Geetha Sambasivam said...

கேஆர் எஸ், திருவாரூர் பஞ்சபூதத்தலங்களில் பிருத்வித் தலம் என்பது தான் எனக்கும் தெரியும், சிலர் காஞ்சியையும் சொல்லுகிறார்கள். இது பற்றி முத்தமிழில் கூட ஒரு விவாதம் நடந்தது. அநேகமாய் ஷைலஜாவுக்கு இன்னும் நல்லாத் தெரியும்னு நம்பறேன். என் கணவரும் திருவாரூர் ப்ருத்வித் தலம்னு தான் சொன்னார்.

Geetha Sambasivam said...

//தியாகராஜப் பெருமான் முக்கியத்துவம் வாய்ந்த உற்சவ மூர்த்தியே!
மூலவர் வான்மீகநாதர் எனப்படும் புற்றிடங்கொண்ட பெருமான்!//

இது நானும் படிச்சிருக்கேன், என்றாலும் முசுகுந்தச் சக்கரவர்த்தி காலத்தில் பூஜித்து வந்தது தியாகராஜரைத் தான் என்றும், வீதி விடங்கரும், வன்மீகநாதரும் பின்னர் வந்தவர்கள் எனச் சொல்கின்றனர். ஆதாரம் கிடைக்கலை, கிடைத்தால் போடறேன். :))))))

Geetha Sambasivam said...

@பொன்வண்டு,
@குமரன்,
@திவா, நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

//ஒரு வருஷத்தில் ஆறுமுறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப் படுகிறது//

இது புதிய செய்தி. நன்றி.

ஆமாம், ஆரூரை பஞ்சபூத தலம் என்று பழைய-தஞ்சாவூர் மாவட்டக்காரர்கள் சொல்லிக் கொள்வது உண்டு.ஆனால் காஞ்சியினை பிருத்வி தலம் என்று புராணங்களில் சொல்லப்பட்டது போல இந்த் க்ஷேத்திரத்தினை பிருத்வீ தலம் என்று சொன்னதாக தெரியவில்லை.

//தியாகராஜப் பெருமான் முக்கியத்துவம் வாய்ந்த உற்சவ மூர்த்தியே!//

ஆமாம், இந்த விக்ரகம் தான் இந்திரனிடமிருந்து முசுகுந்த சோழன் பெற்றதாக சொல்லப்படுவது. இதன் தொடர்பாக கிடைத்த மற்ற 6 தியாகராஜ விக்ரகங்களை மற்ற விடங்க க்ஷேத்திரங்களில் காணலாம். சப்த விடங்க க்ஷேத்திரங்களில் திருவாரூர் முதலாவது என்று நினைக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//உத்திரகோசமங்கை, அபிடேக காலங்களின் தகவல்களுக்கு நன்றி கீதாம்மா!//

கேஆரெஸ் அண்ணே, அது திருவாரூர் அபிஷேக காலங்கள். உத்திர கோசமங்கையில் வருடத்தில் ஓரே ஒரு நாள் தான் சந்தனம் கலைத்து அபிஷேகம்.

என் புரிதல் சரிதானே கீதாம்மா?

S.Muruganandam said...

நடராஜருக்கு அடுத்து தியாகராஜர் தானே, அருமையான தொடர்ச்சி கீதா சாம்பசிவம் அம்மா. மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கின்றேன்.

காஞ்சியில் அன்னை காமாட்சி மணலால் சிவலிங்கம் உருவாக்கியதால் காஞ்சி சக்தி பிருத்விதலம் என்பார்கள். திருவாரூர் வான்மீக நாதர் சுயம்பு வெண்மணலால் ஆனவர் என்பதால் திருவாரூரை சிவ பிருத்வி தலம் என்பாரும் உண்டு.

தில்லை ஆடுவதற்கு முன் சிவ பெருமான் இங்கு கோவில் கொண்டதால், ஆதி கோவில் என்ற படி இத்தலத்தில் திருச்சிற்றம்பலம் சொல்லும் வழக்கம் கிடையாது.

S.Muruganandam said...

ஜீவா அவர்கள் கூறிய மூலாதரத்தலங்களுள் ஒன்று குறைகின்றது அது அம்மையப்பர் நித்ய வாசம் செய்யும் திருக்கயிலை.

ஆதாரத்தலங்களுள் திருக்கயிலை சகஸ்ராரம்.

திருக்கயிலை நாதனை தரிசிக்க வாருங்கள்
http://kailashi.blogspot.com

உண்மைத்தமிழன் said...

நன்றி கீதாம்மா..
நடராஜனையும், அம்மையையும் உங்கள் வாக்கிலேயே கண்டு கொண்டேன்.
வாழ்க வளமுடன்
தொடரட்டும் உங்களது ஆன்மீகச் சுற்றுலா.

Local Packers and Movers bangalore said...

Packers And Movers in Bangalore would recognize introducing ourselves as the head pressing and moving online alliance working eagerly since long time. We are not announcing this isolated yet rather resulting to getting respects from our customers.
http://packersmoversbangalore.in/packers-and-movers-hosakerehalli-bangalore
http://packersmoversbangalore.in/