எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 04, 2008

சிதம்பர ரகசியம் -அங்கே ஒண்ணும் ரகசியமே இல்லை! :(

வேந்தரே,

தேவாரம் சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் தமிழில் கோயிலின் குறிப்பிட்ட ஓதுவார்களால் பாடப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் தீட்சிதர்களே, நன்கு தேவாரப் பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிரச்னை என்னவென்றால் நடராஜரின் பொன்னம்பலத்துக்கு அருகே உள்ள மேடை போன்ற "கனகசபை"யில் போய்ப் பாடவேண்டும் என்பதே திரு ஆறுமுகம் அவர்களின் கோரிக்கை. ஆனால் அந்த இடத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதாலும், குஞ்சிதபாதம் அபிஷேகங்கள் அங்கே தான் நடக்கும், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம், வழிபாடு நடக்கும், என்பதால் ஓதுவார்கள் கூடக் கீழே நின்றுதான் பாடுவார்கள், ஆகவே நீங்களும், அங்கேயே நின்று பாடுங்கள் என்பது தான் தீட்சிதர்கள் தரப்பில் சொல்லப் படுகிறது, திரும்பத் திரும்ப. ஆனால் தமிழில் பாடுவதையே தீட்சிதர்கள் அனுமதிக்காதது போல் ஒரு தோற்றம் மீண்டும், மீண்டும் உருவாக்கப் படுவது வருத்தத்துக்கு உரியது. பல வருடங்கள் சிதம்பரம் கோயில் சென்று வருகிற முறையில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அங்கு தேவாரம் பாட எந்தத் தடையும் இல்லை என்று.

நம் தமிழ்நாட்டு அசெம்பிளியிலும் சரி, லோக்சபா, ராஜ்யசபாவிலும் சரி, சபாநாயகருக்கு என்று ஒரு தனி மரியாதை கொடுப்பதோடு அல்லாமல், சபாநாயகர் இருக்கையில் பிரதம மந்திரி கூடவோ, அல்லது அசெம்பிளியில் முதல் மந்திரியோ கூட அமருவது மரபை மீறியது என்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ஒருமுறை முன்னாள் முதல்வரின் தோழி அந்த மரபை மீறியதற்கு விமரிசிக்கப் பட்டதையும் நினைவில் கொண்டு, அப்படியே இந்த விஷயத்தையும் பாருங்கள், பிரச்னையில் தீவிரம் எதுவும் இல்லை என்பதும் புரியும், நேற்றுக் கூட எங்கள் குருவும், நான் யாருடைய குறிப்புக்களின் வழிகாட்டுதலில் "சிதம்பர ரகசியம்" தொடரை எழுதுகிறேனோ, அந்த ராமலிங்க தீட்சிதர் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரும் இதையே உறுதி செய்தார். மேலும் யாருக்கேனும் மேலதிகத் தகவல்கள் தேவைப் பட்டால் அவரின் முகவரியைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். தற்சமயம் நான் வெளியில் இருந்து தட்டச்சுகிறேன். ஆகவே சீக்கிரம் அவரின் முகவரியும் மின்னஞ்சல் முகவரியும் தருகிறேன்.






காமேஷின் கேள்வி.
ஆனா எல்லா பிரஸ்ஸும் ஏன் ஒரே மாதிரி தகவலைப்
பரப்ப வேண்டும்.. ?
ஏதாவது ஒரு தினசரி உண்மையை சொல்லாமே.. ?

காமேஷ், எனக்குத் தெரிந்து எல்லாத் தினசரிகளிலும் ஆறுமுகம் அவர்கள் "கனகசபை"யில் தேவாரம் ஓதினார், தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி என்றே சொல்லி இருக்கிறது. ஆனால் அதே தீனசரிகளில் அதே ஆறுமுகம் அவர்கள், தான் தேவாரம் ஓதவில்லை எனவும் சொல்லி இருக்கிறார். ஆகவே உண்மை என்ன என்று யாருக்குத் தெரியும்? தற்சமயம் எந்தப் பத்திரிகை உண்மை சொல்லுகிறது? எல்லாருக்குமே பரபரப்புச் செய்திகளினால் தங்கள் பத்திரிகை விற்கவேண்டும் என்ற வியாபார நோக்கே உள்ளது.

ஆசீப் மீரான் சொல்லுவது:

//கீதாம்மா ரொம்ப நல்லவங்கன்னு மட்டும் தெரியுது
கீதாம்மா சொல்வது மட்டும் உண்மையென்றால் 'சோ'வென்று
கொட்டித் தீர்த்திருப்பார்கள் பத்திரிகையாளர்கள்

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அபிஷேகம்
பிரச்னையில் தீவிரம் எதுவும் இல்லை என்பத//

ஆசீப், உண்மை எது, பொய் எது, நடப்பது எதுவெனத் தெரியாமல் பிறர் சொல்லுவதை நம்பும் அளவுக்கு நான் நல்லவளே இல்லை என்பது தான் நிஜம், தவிர, என் கணவர் பள்ளிப்படிப்பே சிதம்பரம் நாவலர் பள்ளியில் தான். பல வருஷங்களாய்ச் சிதம்பரத்துடனும் கோயிலுடனும் தொடர்புகள் உண்டு. எனக்கும் கல்யாணம் ஆனதில் இருந்து அந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகள் பழக்கமே.
நீங்கள் சொல்லும் "சோ"வென்று கொட்டித் தீர்ப்பவர்களுக்கு அந்தக் கோயிலின் வழிபாட்டு முறைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அதனாலேயே தலையிட்டிருக்காமல் இருக்கலாம் இல்லையா? இனி மேலதிகத் தகவல் வேண்டுவோர் அணுகவேண்டிய முகவரி,

T.Ramalinga Diksthithar, M.A.Litt.,
Research Schollar, "PRATHIBA"
136/55, East Car Street,
Chidambaram-608001.
Tamilnadu. India.
Phone 04144-223507
prathiba2k2005@yahoo.co.in
*************************************************************************************

உண்மையில் நான் இம்மாதிரி ஒரு விளக்கம் கொடுக்கணும்னு நினைக்கலை, ஆனால் முத்தமிழ்க் குழும நண்பர்களுக்குக் கொடுத்த விளக்கம் இது. ஆகவே ரொம்ப மன வருத்தத்துடனேயே இதை இங்கேயும் பதிகிறேன். உண்மை நிலை ஒன்றாக இருக்க யாரோ சிலரால் வேறுமாதிரியாகச் சித்திரிக்கப் படுகிறது. மற்றபடி இதைப் பற்றிய விவாதத்தை இங்கே அனுமதிக்கப் போவதில்லை. ஒரு விளக்கத்துக்காகவே பதியப் பட்டது. கீழ்க்கண்டவைகள் திரு முகமூடி ஒரு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் எழுதி இருக்கிறார். அவர் அனுமதி கிடைத்தால் அதுவும் இங்கே பதியப்படும். நன்றி.

"முகமூடி"யின் பதிவில் இருந்து!


//சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ தெரியாது... ஆனால் தமிழ்... ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால் கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும் இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)...
ஆகவே தமிழ் பதிகங்களை பாட முற்படுவதா



மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜ்ரை காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்... தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல... வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்... ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார் என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை...//

மேற்கண்டவை "முகமூடி" என்பவர் ஒரு வருஷத்துக்கு முன்னர் எழுதிய பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. திரு வெங்கட்ராம் திவாகரும் தேவாரங்கள் பாடப்படுவதாயே கூறி இருக்கிறார். அவரின் அனுமதி கிடைத்தால் அவர் பதிவும் இங்கே போடுவேன். விவாதத்துக்கு அல்ல.

1 comment:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

கீதா,நன்றி.
பொன்னம்பல மேடையில் பாடக் கூடாது எனச் சொல்ல ஒத்துக் கொள்ளவேண்டிய காரணம் வேண்டுமல்லவா?
மேலும் பகதன் பார்க்க வியலா நிலையில் கல்லடித்து நிறுவப்பட்ட நந்தியையே நகர்த்தியவன் இறவன்;அருந்தமிழ் பதிகத்தால் வேண்ட இறந்த பூம்பாவையை உயிர்ப்பித்தவன் இறைவன்.
அந்த தமிழ்க் காதலன் செவியில்,பொன்னம்பலத் தமிழ் கேட்கக் கூடாது என,அதுவும் தமிழகத்தில் சொல்வது அடாவடியாகவும்,அறிவீனமாகவும்தான் தோன்றுகிறது.
உங்களைப் புண்படுத்தும் நோக்கமல்ல எனது கருத்து என்பதை உணர்வீர்கள் என்றே நம்புகிறேன்.