எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Saturday, June 07, 2008
சிதம்பர ரகசியம் - அரியும், சிவனும் ஒண்ணுதாங்க!!!!
தனக்கென ஒரு மகன் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணுவானவர், இறைவனைக் குறித்துத் துதிக்க, தன்னை ஒதுக்கிவிட்டாரோ என நினைத்த தேவியானவள், மனம் வருந்த, விஷ்ணுவுக்குப் பிள்ளைப் பேறும், கூடவே சிவனையும், தேவியையும் வணங்கித் துதிக்கும்படியான கட்டளையும் கிடைக்கின்றது. அப்போது தனக்குப் பிள்ளைப் பேறு அளித்த சிவனையும் குடும்பத்தோடு பார்க்க விரும்பிய விஷ்ணு, அவ்விதமே இறைவனை வேண்ட இறைவன் காட்சி அளித்த கோலமே சோமாஸ்கந்த கோலம். நடுவிலே ஸ்கந்தன் அமர்ந்திருக்க, இரு பக்கமும் தாய், தந்தையர்கள் இருக்கக் காட்சி கொடுத்த அந்த விக்ரகத்தைப் பூஜித்து விஷ்ணு பெற்ற பிள்ளையே மன்மதன் ஆவான். இந்த மகாவிஷ்ணு எந்நேரமும், இறைவனைத் தன் மூச்சிலேயே நிலை நிறுத்தி, இதயத்திலே வைத்து மானசீகப் பூஜை செய்ய, இறைவன், மகாவிஷ்ணுவின் இதயத்திலே ஆனந்த நடனம் ஆடினார். அப்போது அதற்குத் தாளம் விஷ்ணுவின் மூச்சுக் காற்றே, சற்றும் சத்தமே இல்லாத இந்த மூச்சுக்காற்றின் தாளத்திற்கு ஏற்ப இறைவன் ஆடிய நடனமே "அஜபா நடனம்" என்று சொல்லப் படுகின்றது.
பின்னர் மகாவிஷ்ணு இறைவனின் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவிரும்ப, இறைவன், தான் சிதம்பரம் க்ஷேத்திரத்திலே ஆடப்போவதாயும் ஆகவே அங்கே வந்து காணுமாறும் சொல்லத் தன் பரிவாரங்களோடு சிதம்பரத்திலே எழுந்தருளினார் மகாவிஷ்ணு. இவரே இன்றளவும் கோவிந்தராஜர் என்ற பெயரோடு சிதம்பரம் என்று சைவர்களாலும், திருச்சித்திர கூடம் என்று வைஷ்ணவர்களாலும் அழைக்கப் படும் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ளார். இருவரும் ஒருவரே என்பதே பெரும்பாலான பக்தர்களின் கூற்றும் கூட. இதை மெய்ப்படுத்துவதே போல் பல பக்திமான்களும் பாடியுள்ளனர், போற்றித் துதித்துள்ளனர் இருவரையும் பற்றி. முதலாழ்வார்களின் பாசுரத்தில் காணப்பட்டபடி,
"அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி,
உரைநூல் மறை உறையும் கோயில் -வரை நீர்
கருமம், அழிப்பு, அளிப்பு கையது வேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று"
எனப் பொய்கை ஆழ்வாரும்,
"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற
நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை
ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"
என்று நம்மாழ்வாரும் சொன்னபடிக்குக் காட்சி அளிக்கின்றனர், சிதம்பரத்தில் நடராஜரும், கோவிந்தராஜரும்.
சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும் என இதை முடிக்க எண்ணி உள்ளேன். பல மன்னர்களின் திருப்பணிகளாலும், பல பக்தர்களின் பெரும் முயற்சியாலும் சிதம்பரம் கோயிலின் திருப்பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எப்போது ஆரம்பித்தது, எப்போது கட்டப்பட்டது என்று நிர்ணயம் செய்யமுடியாத காலத்தில் இருந்தே இருப்பதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள், நாளடைவில் ஒவ்வொரு பாகமாய்ச் சேர்க்கப் பட்டு, ஒவ்வொரு பாகமும் ஒவ்வொருவரால் கட்டப் பட்டு இன்று முழுப் பூர்த்தி அடைந்த கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. மாணிக்க வாசகரின் திரு அகவல் ஒன்றிலே அவர் பாடிய வண்ணம்,
"பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி!
நீரிடை நான்காய்த் திகழ்ந்தாய் போற்றி!
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி!
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி!
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி!"
என்னும்படிக்கு, இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்,
நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்,
தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்,
வளியென்று சொல்லப் படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்,
அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன. இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க் காணப்படுகின்றார்.இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் இங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார். திருவீழிமிழலைப் பதிகம் ஒன்றிலே, சொன்னாற்போலே, அரியும், சிவனும் ஒன்றே என்னும் கருத்தைப் பக்தர்களுக்கு நிலைநாட்டவே இவ்விதம் கோயில் கொண்டுள்ளனர் என்றும் சொல்லலாமோ????
"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!
(இது அப்பர் தேவாரம், குறிப்பிட மறந்திருக்கின்றேன், சுட்டிக் காட்டிய ஜீவாவுக்கு நன்றி)
ஓருருவம் மூவுருவம் ஆன நாளோ
நாரணனை இடப்பாகத்து அடைந்தார் போலும்."
என்றும்,
"அரியாகிக் காப்பான், அயனாய்ப் படைப்பான்,
அரனாயழிப்பவனுந்தானே!"
என்று அனைத்துமே அவன் ஒருவனே எனச் சொல்கின்றனர். அரியின் இதயத்தில், அரனும், அரனின் இதயத்தில் அரியும் குடி இருக்கின்றார்கள். இருவரும் ஒருவரே என்பதைச் சொல்லும் வண்ணம், "அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு" என்றும் சொல்லுவதுண்டு. சிவன் எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம் "அலிங்கம்" எனவும், விஷ்ணு எந்தவிதமான ரூபமும் இல்லாதவர் என்பதைக் குறிக்கும் வண்ணம், "அமூர்த்தி" எனவும் சொல்லப் படுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
செய்திகளைம், குறிப்புகளையும், பாக்களையும் படித்து இன்புற்றேன், மிக்க நன்றி!
//"மண்ணினை உண்ட மாயன் தன்னைப் பாகங்கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும்பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றுங்கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தாரிலங்கு மேற்றளியனாரே!//
-இது அப்பர் தேவாரமல்லவா!
//எண்ணினை எண்ண வைத்தார்//
இது எண்-குணமல்லவா!
அஜபா நடனம் பற்றிச் சொன்னமைக்கும் சிதம்பரம்/சித்ரகூடம் பற்றிச் சொன்னமைக்கும் நன்றி கீதாம்மா!
//அரன் நாரணன் நாமம், ஆன் விடை யுன்னூர்தி//
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்தி என்பதே சரி!
உன் பேர் அரன், நாரணன்
உன் ஊர்தி விடை, புள்
என்று இரண்டிரண்டை ஒவ்வொன்றாய்ச் சொல்ல வருகிறார்!
//அரன் நாரணன் நாமம்//
பேர்=சிவன், நாரணன்
//ஆன்விடை புள்ளூர்தி//
ஊர்தி=எருது, கருடன்
//உரை நூல்மறை//
பெரு நூல்கள் =ஆகமம், வேதம்
//உறையும் கோயில் - வரைநீர்//
இடம்=கைலாய வரை, பாற்கடல் நீர்
//கருமம் அழிப்பு அளிப்பு//
தொழில்=அழித்தல், காத்தல்
//கையது வேல் நேமி//
ஆயுதம்=வேல், சக்கரம்
//உருவம் எரிகார்//
உருவம்=கனல் சிவப்பு, மேகக் கருப்பு
//மேனி ஒன்று//
உடல்=ஒன்று தான்!
//சில கேள்விகளுக்குப் பதிலுக்காகக் காத்திருத்தலில் பல நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே பதில் வரும்போது வரட்டும்//
புதசெவி!
என்ன கேள்வி?
என்ன பதில்?
நீங்க கேள்வி கேட்டு, உங்களுக்கே பதில் தரலையா இன்னும்? ஆகா, என்ன ஆணவம், அக்ரமம், அநீதி? :-))
ஐந்து குணங்களையும் பஞ்ச பூதங்களுக்கு வரிசைப்படுத்தி சொன்னதும் நன்றாக இருந்தது!
//அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு//
இதை வாயால் மட்டும் அனைவரும் சொல்லி விடுகிறோம்!
ஆனால் வாயினால் மட்டும் பாடாது, மனத்தினாலும் சேர்ந்து சிந்தித்தால் தான் திருவருள் சித்திக்கும்!
அவ்வண்ணம் உணர்ந்திடிலோ வேதங்களும் கீதங்களும் கொஞ்சும்!
இன்றேல் வெறும் பேதங்களும் வாதங்களும் தான் மிஞ்சும்!
என்ன சொல்லவருகிறீர்கள்: இவரும் ஒருவரே?
இருவரும் ஒருவரென்றால் வெவ்வேறு கோயில்கள் எதற்கு?
வெவ்வேறு மதத் தத்துவங்கள் எதற்கு>
வெவ்வேறு மதச் சாமியார்கள் (ஆச்சாரியர்கள்) எதற்கு?
வெவ்வேறு தனிச்சாமியார்கள் (நாயன்மார்களும் ஆzவார்களும்) எதற்ku?
இரண்டும் ஒன்றாகி விட்டால் ஒரே ஒரு இலாபம்தான். அதாவது, இந்து என்ற single identitity varum. that will help you stand united and powerfully against foreign religions..That is nothing but RSS propoganda. Religion and territorial conquests. Pooh! Nothing to do with Sivan or Vishnu!! Pooh!!
வேரு ஒன்னும் இல்லை!
கீதாம்மா ,
கர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா ?
மேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா ?
பதில் தாருங்கள் அம்மா ,
அன்புடன்,
எ.சுகுமாரன்
amirthamintl@gmail.com
Post a Comment