எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, July 02, 2008

சிதம்பர ரகசியம் - கேள்விகளும், பதில்களும்

//கீதாம்மா ,
கர்நாடக போர்களின் சமயம் காட்டுராஜா ( மராத்திய மன்னர் )என்பவர் சிதம்பரம் கோயிலில் தன் படையுடன் வந்து தங்கிவிட்டதாக வரலாறு உண்டா ?
மேலும் கோயிலில் நந்தனார் சிலை சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன் கொடிமரத்திற்கு எதிரில் இருந்ததா ?
பதில் தாருங்கள் அம்மா ,
அன்புடன்,
எ.சுகுமாரன் //

மேற்கண்ட கேள்வியைத் திரு சுகுமாரன் கேட்டிருக்கின்றார். சமீபத்தில் சிதம்பரம் சென்றபோது தீட்சிதரிடம் பேசிய வகையில் மேற்படி கேள்விக்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றே தெரிய வந்தது. காட்டு ராஜா (மராத்தியமேலும் மாலிக்காபூர் பற்றியும், அப்போது தான் தமிழ்நாடு வந்த மாலிக்காபூரிடமிருந்து நடராஜரைக் காக்க வேண்டி, தீட்சிதர்கள் போராடியதாயும் தெரிவித்தார். அதற்கான சரித்திரச் சான்றுகள் பற்றி பேராசிரியர் திரு டி.என். சுப்பிரமணியன் அவர்கள் எழுதி இருப்பதாயும் தெரிய வந்தது. மேலும் நந்தனாருக்கு ஒரு போதும் கொடி மரத்திற்கு எதிரே சிலை இருந்ததில்லை எனவும் சொன்னார். தீட்சிதருக்கு 70 வயதுக்குக் கிட்டத்தட்ட ஆகின்றது. ஆகவே கொடி மரத்திற்கு எதிரே நந்தனாருக்குச் சிலை இருந்தாலோ, அப்புறம் அகற்றி இருந்தாலோ, கட்டாயம் தெரிய வந்திருக்கும்.

இதே போல் விஷ்ணுவிற்குப் பிரம்மோற்சவம் நடத்த தற்சமயம் ஏற்பாடுகள் செய்தது பற்றியும் பேசினேன். அது பற்றி தீட்சிதர் கூறியது தவிரவும், வேறு சில தகவல்களும் கிடைத்தன. நண்பர் சிவசிவாவும் அதே போன்ற தகவல் ஒன்றின் குறிப்புக் கொடுத்திருக்கின்றார். அதைப் போய்ப் பார்த்துப் படித்துவிட்டு அது பற்றி எழுதுகின்றேன்.

கீழே உள்ள கேள்விகள் என்னால் கேட்கப் பட்டவை. அதற்கான பதில்கள் எங்கள் தீட்சிதர் சொன்னது:

//வணக்கங்கள் பல. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன். மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா? இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது. மற்றபடி உங்கள் மடல் கண்டு.//

//வணக்கங்கள் பல. சிதம்பரம் நடராஜர் கோயிலில், நந்திக்குப் பின்னால் நின்று கொண்டே ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓதவேண்டுமெனக் கூறுவதற்கு என்ன காரணம் என்பதை உங்களால் கூற முடிந்தால் நன்றி உடையவளாய் இருப்பேன்//



நந்தி குருவாகின்றார் அனைத்துச் சிவனடியார்களுக்கும். மேலும் அனைத்துச்சிவ கணங்களுக்கும் தலைவனும் ஆகின்றார். பதினெட்டுச் சித்தர்களுக்கும் அவரே குரு. அவர் ஈசனிடமிருந்து கற்றுப் பின்னர் சனகாதி முனிவர்கள், சித்தர்கள் நால்வர், அவர்களிடமிருந்து மற்றச் சித்தர்கள், அவர்களிடமிருந்து சிவனடியார்கள் என அனைவரும் வரிசைக்கிரமமாய்ப் பாடம் கற்றதாலே, நந்திக்கு மிஞ்சினவர் யாரும் இல்லை என்பதாலும் நந்திக்குக் கீழே இருந்தே தேவாரம் ஓதுவார்களால் இன்றளவும் ஓதப் பட்டு வருகின்றது. இது அனைத்துச் சிவாலயங்களிலும் காண முடியாது. சிதம்பரம் மட்டுமே கோயில் என்று அழைக்கப் படுவது. ஈசன் தன் ஜீவ சக்தியோடு இங்கே உறைவதாயும், ஈசனே நேரிடையாய்க் கோயில் கொண்டிருப்பதாலேயும், அந்தக் கைலைக்கு இது நிகர் என்று சொல்லுவதாலும் இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான். பொதுவாக இது கோயிலின் பரம்பரை ஓதுவார்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் அப்படித் தான் பாடி வருகின்றார்கள் இன்றளவும். பலமுறைகள் நேரிலே கண்டுள்ளேன்.

//மேலும் அரசகுலத்தினரும், வணிக குலத்தினரும் தவிர, அந்தணர்களால் திருப்பணி செய்யப் பட்டதற்கான சான்றுகள் உள்ளனவா? தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்து வந்த நம்பூதிரிகளே என்பதும் உண்மையா? இதற்கான பதிலை உங்களால் கொடுக்க முடிந்தால் நல்லது. மற்றபடி உங்கள் மடல் கண்டு.///

பல அந்தணர்கள் தங்கள் பெயரையோ, ஊரையோ, கொடுக்கும் பணத்தையோ பற்றி வெளியே சொல்லாமல் திருப்பணிகள் செய்து வருகின்றார்கள். தீட்சிதர்கள் கேரள தேசத்தில் இருந்தெல்லாம் வரவில்லை. திருக்கைலையில் இருந்தே வந்ததாய்ச் சொல்கின்றனர். மேலும் ஈசனைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராய்க் கருதுவதால் கோயிலின் அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே உரியதாகவும் சொல்கின்றனர். இனி அடுத்து, விஷ்ணு கோயில் பற்றிய சில தகவல்களுடன் நாளை சந்திப்போம்.

1 comment:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்கே நந்திக்கும், ஈசனுக்கும், நடுவே அடியார் நின்று ஓதுவது இல்லை. வழிபடும் உரிமையை ஈசனிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற தீட்சிதர்களும், அங்கே வழிபாடு மட்டுமே நடத்துவார்கள். தேவாரம் ஓதுவது கீழே நின்று கொண்டு தான்//

உம்ம்ம்ம்
அப்படியே வைத்துக் கொள்வோம்!

அப்படியாயின் மாணிக்கவாசகர் திருவாசகத்தைச் சிற்றம்பல மேடையில் தானே அமர்ந்து ஓதினார்! அவர் ஓத ஓத, ஈசனே பிரதி எடுத்து, திருகடைக்காப்பிட்டு, திருவாசகம் என்னும் ஒரு வாசகத்துக்குப் பெருமை சேர்த்தார்!

அந்தச் சிற்றம்பல மேடை நந்திகேஸ்வரருக்குப் பின்னாலா உள்ளது? இல்லையே!
அப்போது நந்திக்கு முன்னால் அல்லவா தமிழ் ஓதினார்கள்? இப்போது மட்டும் என்ன நந்திக்குப் பின்னால் நின்று ஓத வேண்டும் என்ற புதுக் கோட்பாடு?

தில்லை அம்பலவாணன் சன்னிதியில் ருத்ரம் சமகம் எங்கிருந்து ஓதப்படுகிறது? நந்திக்கு முன்னா? பின்னா?

இந்தக் கோட்பாடு ஆகமத்திலோ, இல்லை தில்லைக்கு என்று தனியாக உள்ள தந்திரத்திலோ இருக்கா? அதன் வரிகள் அறியக் கிடைக்குமா?

தங்களுக்கு விடையளித்த தீட்சிதருக்கு அடியேன் நன்றிகளைச் சொல்லவும்! ஆத்திரப்படாமல் பொறுமையாகப் பதில் சொல்லி உள்ளார்! அப்படியே அடியேன் கேட்டிருக்கும் கேள்விக்கும் அவர் பதில் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்!