எச்சரிக்கை
ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.
Sunday, November 23, 2008
சிதம்பர ரகசியம்- ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்
சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப் பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760-ம் ஆண்டில் இருந்து 1780-ம் ஆண்டு வரையிலும், கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும், அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753-ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.
1749-ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும், அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும், அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது.இரண்டாம் மைசூர் சண்டையின் போது, கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment