
அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன்
பொங்க வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.
அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல் சாத்தறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.
இப்போதும் கரடி, சிறுத்தைகள், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் காட்டினுள் மறைந்து இருப்பதாகவே சொல்கின்றனர்.

ஒன்பது நரசிம்மர்களில் முதலாவது ஜ்வாலா நரசிம்மர் எனச் சொல்கின்றனர். ஆனால் பயண வசதிக்காக நாங்கள் முதல் நாள் பயணத்தில் ஜீப் என்று பெயரளவில் சொல்லப் படும் வாகனம் செல்லுமிடத்தில் உள்ள நரசிம்மர்களையே தரிசித்தோம். டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடு, முரடான மலைப்பாதை. பாதைனு சும்மாச் சொல்றேன். உண்மையில் அந்த வண்டிகள் சென்று, சென்று ஏற்பட்டதொரு அடையாளமே அவை. அவற்றில் தான் செல்லவேண்டும். என்றாலும் இந்தப் பாதை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இதுக்கு அப்புறம் வரும் பாருங்க ஒரு பாதை. உடம்பையே உலுக்கி எடுக்கும். தூசி பறக்கும். வட மாநிலங்களில் வரும் புழுதிய்புயல் தான் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் வரும். இத்தகையதொரு கடினமான பயணங்களிலே முதலில் நாம் தரிசிப்பது சத்ரவடநரசிம்மர் ஆகும். இந்த ஒன்பது நரசிம்மர்களிலேயே மிக மிக அழகானவர் இவரே.

பட்டாசாரியார் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி போன்றவை சாதிக்கின்றார். இந்தச் சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர். பத்மாசனக் கோலத்துடனேயே பேரழகுக் கோலத்தோடு, இதழ்களில் சிரிப்போடு காட்சி தருகின்றார். அடுத்ததாய்த் தான் மிக, மிகக் கஷ்டமான பயணம் என்னதான் ஜீப்பிலே சென்றாலும் பயணம் மிகக் கடினம்.
ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம். அவை எப்படி அந்தத் தடங்களில் ஓடுகின்றன என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஒரு இடத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தில் குதிக்கும் ஜீப் மற்றொரு இடத்தில் முன் பக்கத்துச் சக்கரங்கள் இரண்டின் உதவியோடு மட்டுமே செல்லுகின்றது. அனைவரும் முன்னால் வளைகின்றோம். பின்னர் செங்குத்தான மேடு வருகின்றது. ஜீப் இப்போது மேட்டில் ஏறுகின்றது. அனைவரும் பின்னால் சரிகின்றோம். இன்னும் ஒரு இடத்தில் இடது பக்கச் சக்கரங்கள் உதவியோடு மட்டுமே செல்லவேண்டி உள்ளது. இந்த அழகில் இரு பக்கமும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள், இலைகள் போன்றவை உரசி ஜன்னல் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகின்றது. ஜீப்பில் ஏறும்போது டிரைவர் பக்கத்து சீட்டோ, அல்லது நடுவிலோ இடம் கிடைக்கவில்லை எங்களுக்கு. பின்னால் நாலு பேர் அமரும் சீட்டில் தான் கிடைத்தது. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. ஆனால் அது எவ்வளவு வசதியாப் போச்சு என்று பிரயாணத்தின் போதே புரிந்தது.
ஜீப் துள்ளித் துள்ளிக் குதிக்கும்போதெல்லாம் நல்லவேளை நான் உட்பக்கமாய் உட்கார்ந்து கொண்டேன் என நினைத்துக் கொண்டேன். என் பக்கத்தில் அமர்ந்த ம.பா.வுக்கும் சரி, எதிரே அமர்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கும் சரி, சமாளிக்கவே முடியலை. பக்கத்தில் இருந்த அவங்க பையர் இடம் மாறி உட்கார முயற்சித்தாலும் நடக்கவில்லை. எப்படியோ இருவரும் சமாளித்தார்கள். கீழே விழுந்துவிடுவோமோ என்ற எண்ணம் பலமுறை தோன்றியது. கொஞ்ச தூரம் போனதும் ஜீப் நின்றது. டிரைவர் அனைவரையும் இறங்கச் சொன்னார். கூட வந்த ஜீப்களும் நின்று அனைவரும் இறங்கினார்கள். ஆனால் கோயில் என்னமோ வரலை.
டிஸ்கி: பொருத்தமான பாசுரங்கள்னு பார்த்துப் போடலை. திருமங்கை ஆழ்வார் சிங்கவேள் குன்றத்தைப் பற்றிப் பாடியது என்ற கோணத்தில் மட்டுமே போடுகின்றேன். நன்றி.