எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, February 25, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 2

திருமங்கை ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.

அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன்
பொங்க வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல் சாத்தறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.


இப்போதும் கரடி, சிறுத்தைகள், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் காட்டினுள் மறைந்து இருப்பதாகவே சொல்கின்றனர். காட்டினுள் செல்ல வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாது. நாம் செல்லும் பயண அமைப்பாளர்களே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். தனியாகச் செல்லுவது அவ்வளவு உசிதம் அன்று. அஹோபிலம் மடமே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றது. அதற்கு முந்நூறு ரூபாயில் இருந்து செலவு ஆகும். அஹோபிலம் மடத்தின் தொலை பேசி எண்கள்: 08519- 252025, 252045. குமரன் சாப்பிட்டுட்டாக் குளிச்சீங்கனு கேட்டிருக்கார். ஹிஹிஹி, தட்டச்சுப் பிழை அது. குளிச்சுட்டுத் தான் சாப்பிட்டோம். :))))))) எழுதினதைத் திருப்பி ஒருமுறை சரி பார்க்கும் வழக்கமே இல்லை பள்ளி நாட்களில் இருந்து. அப்படி எல்லாம் செஞ்சிருந்தா எங்கேயோ போயிருக்க மாட்டோமா? :)))))))))). இங்கேயும் எழுதிட்டு preview பண்ணறதே இல்லை, கலர் அடித்தால் ஒழிய! :))))))))) இனிமேல் எல்லாப் பதிவுகளிலேயும் கடைசியா E&OE போட்டுடலாமானு யோசிக்கிறேன். :P

ஒன்பது நரசிம்மர்களில் முதலாவது ஜ்வாலா நரசிம்மர் எனச் சொல்கின்றனர். ஆனால் பயண வசதிக்காக நாங்கள் முதல் நாள் பயணத்தில் ஜீப் என்று பெயரளவில் சொல்லப் படும் வாகனம் செல்லுமிடத்தில் உள்ள நரசிம்மர்களையே தரிசித்தோம். டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடு, முரடான மலைப்பாதை. பாதைனு சும்மாச் சொல்றேன். உண்மையில் அந்த வண்டிகள் சென்று, சென்று ஏற்பட்டதொரு அடையாளமே அவை. அவற்றில் தான் செல்லவேண்டும். என்றாலும் இந்தப் பாதை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இதுக்கு அப்புறம் வரும் பாருங்க ஒரு பாதை. உடம்பையே உலுக்கி எடுக்கும். தூசி பறக்கும். வட மாநிலங்களில் வரும் புழுதிய்புயல் தான் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் வரும். இத்தகையதொரு கடினமான பயணங்களிலே முதலில் நாம் தரிசிப்பது சத்ரவடநரசிம்மர் ஆகும். இந்த ஒன்பது நரசிம்மர்களிலேயே மிக மிக அழகானவர் இவரே. குடையைப் போலக் கவிந்த ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால் இவர் சத்ரவட நரசிம்மர் எனப்படுகின்றார். சுந்தர புருஷனாக, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் நம்மைப் பார்த்து "எங்கே வந்தே?" என்று கேட்கும் நம் தாத்தாவைப் போல் சிரித்துக் கொண்டு காட்சி அளிக்கின்றார். தேவ சபையில் உள்ள ஆஹா, ஊஹூ என்னும் இரு கந்தர்வர்களும் கோபத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மத்தின் கோபத்தைத் தம் இசையால் போக்கியதாகவும், அவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இவர் காட்சி அளிப்பதாகவும் ஐதீகம். சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் தொடையில் பதிந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கும் வண்ணமாகவும் காட்சி அளிக்கின்றது. ஆலயத்தின் நுழைவாயிலில் ஆஹா, ஊஹூ இருவரின் உருவங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.

பட்டாசாரியார் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி போன்றவை சாதிக்கின்றார். இந்தச் சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர். பத்மாசனக் கோலத்துடனேயே பேரழகுக் கோலத்தோடு, இதழ்களில் சிரிப்போடு காட்சி தருகின்றார். அடுத்ததாய்த் தான் மிக, மிகக் கஷ்டமான பயணம் என்னதான் ஜீப்பிலே சென்றாலும் பயணம் மிகக் கடினம்.

ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம். அவை எப்படி அந்தத் தடங்களில் ஓடுகின்றன என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஒரு இடத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தில் குதிக்கும் ஜீப் மற்றொரு இடத்தில் முன் பக்கத்துச் சக்கரங்கள் இரண்டின் உதவியோடு மட்டுமே செல்லுகின்றது. அனைவரும் முன்னால் வளைகின்றோம். பின்னர் செங்குத்தான மேடு வருகின்றது. ஜீப் இப்போது மேட்டில் ஏறுகின்றது. அனைவரும் பின்னால் சரிகின்றோம். இன்னும் ஒரு இடத்தில் இடது பக்கச் சக்கரங்கள் உதவியோடு மட்டுமே செல்லவேண்டி உள்ளது. இந்த அழகில் இரு பக்கமும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள், இலைகள் போன்றவை உரசி ஜன்னல் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகின்றது. ஜீப்பில் ஏறும்போது டிரைவர் பக்கத்து சீட்டோ, அல்லது நடுவிலோ இடம் கிடைக்கவில்லை எங்களுக்கு. பின்னால் நாலு பேர் அமரும் சீட்டில் தான் கிடைத்தது. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. ஆனால் அது எவ்வளவு வசதியாப் போச்சு என்று பிரயாணத்தின் போதே புரிந்தது.

ஜீப் துள்ளித் துள்ளிக் குதிக்கும்போதெல்லாம் நல்லவேளை நான் உட்பக்கமாய் உட்கார்ந்து கொண்டேன் என நினைத்துக் கொண்டேன். என் பக்கத்தில் அமர்ந்த ம.பா.வுக்கும் சரி, எதிரே அமர்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கும் சரி, சமாளிக்கவே முடியலை. பக்கத்தில் இருந்த அவங்க பையர் இடம் மாறி உட்கார முயற்சித்தாலும் நடக்கவில்லை. எப்படியோ இருவரும் சமாளித்தார்கள். கீழே விழுந்துவிடுவோமோ என்ற எண்ணம் பலமுறை தோன்றியது. கொஞ்ச தூரம் போனதும் ஜீப் நின்றது. டிரைவர் அனைவரையும் இறங்கச் சொன்னார். கூட வந்த ஜீப்களும் நின்று அனைவரும் இறங்கினார்கள். ஆனால் கோயில் என்னமோ வரலை.

டிஸ்கி: பொருத்தமான பாசுரங்கள்னு பார்த்துப் போடலை. திருமங்கை ஆழ்வார் சிங்கவேள் குன்றத்தைப் பற்றிப் பாடியது என்ற கோணத்தில் மட்டுமே போடுகின்றேன். நன்றி.

12 comments:

மதுரையம்பதி said...

ஹாஹா-ஹுஹு முகஸ்துத்யாய நம: என்று ஒரு நாமாவளி உண்டு...அது நினைவுக்கு வந்தது...

நல்ல அனுபவங்கள், பகிர்கின்றமைக்கு நன்றி.

Raghav said...

முதல் சிங்கம் நல்ல அமைதியா, அழகா சிரிக்கிற முகத்தோட இருக்கிறார். போகப் போக ஆக்ரோஷ சிம்மங்கள் தரிசிப்போம்னு நினைக்கிறேன்.

Raghav said...

ஜீப்லயே அனைத்து நரசிம்மர்களையும் தரிசிக்கலாமாம்மா ?? நான் மலை ஏறனும்ல நினைச்சேன்..

சே.வேங்கடசுப்ரமணியன். said...

புகைப்படங்களை கொஞ்சம் பெரிதாகத்தான் போட்டால் என்ன?

கீதா சாம்பசிவம் said...

@மெளலி, ஹாஹா, ஹூஹூ கதை தெரியுமே தவிர, இப்படி ஒரு நாமாவளி இருக்கிறது தெரியாது. ரொம்ப நன்றி.

கீதா சாம்பசிவம் said...

@ராகவ், இன்னிக்குத் தானே ஆரம்பம்? அப்புறமாய் நடந்தும் தான் போகணும். இது நடந்து செல்லவே முடியாத இடங்கள். வண்டியில் செல்லவே கஷ்டப் படணும். இதிலேயும் கொஞ்ச தூரத்துக்குப் பின்னர் நடக்கணும். அவசரம் வேண்டாம்! :)))))))))

கீதா சாம்பசிவம் said...

வாங்க வேங்கடசுப்ரமணியன், எனக்கு மூத்த அண்ணாவின் பெயரும் இதுவே! :))))))) படங்கள் கூகிளார் தயவு. நாங்க எடுத்தது ப்ரிண்ட் போடக் கொடுத்திருக்கோம். இது முடிக்கிறதுக்குள்ளே வருமானு பார்க்கலாம். :))))))))) கூடிய சீக்கிரம் டிஜிடல் காமிரா வாங்கிடணும்னு, கைலை யாத்திரையிலே இருந்தே சொல்லிட்டிருக்கோம். :))))))))))))))

குமரன் (Kumaran) said...

சத்ரவட நரசிம்மரைத் தரிசித்தேன். நன்றி.

ஆஹா, ஊஹூ கதை நல்லா இருக்கு. :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

சத்ரவட ந்ருசிம்ஹரை தரிசனம் செய்தாயிற்று. இந்தியா வந்தவுடன் அடுத்தது அஹோபிலம்தான்.

கீதா சாம்பசிவம் said...

சரியாப் போச்சு போங்க, கமெண்ட் கொடுத்தால் போகவே மாட்டேங்குதே???? இது போகுதா பார்க்கலாம்! :(

கீதா சாம்பசிவம் said...

ம்ம்ம்ம் போயிடுச்சு, \
குமரன், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

திராச சார், நரசிம்மன் அருள் இருந்தால் எல்லாம் கிடைக்கும். வாழ்த்துகள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம்//

ஏதோ...கேப்டன் படத்துல பாக்குறாப் போலச் சொல்றீங்களே? ஆஹா, ஊஹூ! :)

அஹோபிலம், சிங்கவேள் இதுக்கெல்லாம் பேர்க் காரணம் சொல்லுங்க கீதாம்மா! எனக்குத் தெரிஞ்சி முருகவேள் மட்டும் தானே! :)