
திருக்குளந்தை செல்ல உண்மையாகவே பெருங்குளம் என்னப்படும் ஊரின் பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை! குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப் போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:
“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!” (2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச் சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும் மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம் இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக் கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்
“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!”
மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது. பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வரும்படி அமைந்துள்ளது.
விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும் அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள். அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.
அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.
மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம் வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான். விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும் பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான் பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின் மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக் கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக் கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.
சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக் கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட, அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான். அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர, சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின் பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி அருளினார்.
ஆணவம் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம் நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக் கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம் பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி வழியனுப்புவதும் நடந்து வருகிறது.
பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல் பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர் என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான் என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும், மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார். கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடைப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.