எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, March 02, 2010

நடந்தாய் வாழி காவேரி! காவேரி ஓரம், திருவாரூரின் அவலம்!

தில்லைக்கும் மூத்த தலமாகத் திருவாரூரைக் குறிப்பிடுவதுண்டு. ஆகையால் கோயில் என அழைக்கப்படும் சிதம்பரத்தில் சொல்லும் “திருச்சிற்றம்பலம்” என்னும் வாழ்த்தை இங்கே “ஆருரா! தியாகேசா!” என்று சொல்கிறார்கள். இதைப் பெரிய கோயில் என்றும் சொல்லுவார்கள். ஏழு கோபுரங்கள் நம் உடலின் ஏழு ஆதாரங்களையும் குறிப்பிடுவதாய்ச் சொல்லுவார்கள். நாம் முன்னர் பார்த்த தேவாசிரிய மண்டபத்தின் தூண்கள் அனைத்துமே அடியார்கள் என்பதையும் கண்டோம். இந்த தேவாசிரிய மண்டபத்தை ராஜதானி மண்டபம் என்றும் அழைப்பதாகத் தெரியவருகிறது. வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர். திருவாரூர்த் தேரான ஆழித்தேரில் எழுந்தருளும் தியாகேசரை விழா முடிந்ததும் இந்த மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி மஹாபிஷேஹம் செய்வித்து செங்கோலும் அளிப்பார்களாம். நம்மை எல்லாம் ஆளும் அரசன் அல்லவோ? பக்தர்களுக்காகக் கொடிய விஷத்தை உண்டும், பிரதோஷ காலத்தில் அந்த விஷத்தின் கொடுமை தன்னை மட்டுமில்லாமல் உலகவாசிகளையும் பாதிக்கா வண்ணம் ஆடிய ஆட்டம் தான் என்ன?? ஆகவே இங்கே தினமும் நித்யப் பிரதோஷம், மாலையில் நடைபெறும். அப்போது தேவாதிதேவர்கள் எல்லாம் வந்து ஈசனை வணங்கிச் செல்வதாகவும் ஐதீகம்.

மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தில் ஈசனின் தச அங்கங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். இங்கே தியாகேசனுக்கோ தனியாக தச அங்கங்கள் உண்டு. அவையாவன
1. பெயர் ஆரூரன்
2. நாடு அகளங்க நாடு
3. ஊர் ஆரூர்
4. ஆறு ஆனந்தம்
5. மலை அருள்மலை
6. படை வீரகட்கம்
7. பறை பஞ்சமுக முரசு
8. மாலை செங்கழுநீர்
9. கொடி தியாகக் கொடி
10. குதிரை வேதம்
ஆகியன தியாகேசருக்கு என உள்ள தனியான தச அங்கங்கள் ஆகும். இதைத் தவிர அங்கப் பொருட்கள் பதினாறு விதமாகும். அவையாவன.

மணித்தண்டு,
தியாகக்கொடி
ரத்தின சிம்மாசனம்
செங்கழுநீர் மாலை
வீரகண்டயம்
அஜபா நடனம்
ஐராவணம்
அரதன சிருங்கம்
பஞ்சமுக வாத்தியம்
பாரி நாகஸ்வரம்
சுத்த மத்தளம்
குதிரை வேதம்
சோழ நாடு
ஆரூர்
காவிரி,
பதினெண்வகைப் பண்கள் ஆகியவை பதினாறு விதமான அங்கப் பொருட்கள். தியாகேசரின் சந்நிதியில் திருச்சாலகம் என்னும் தென்றல் தவழும் சாளரம் உள்ளது. மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

மீண்டும் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களைப் பார்க்கலாமா? இவை நாயக்கர் காலத்து ஓவியங்கள் எனப்படுகிறது. ஆரூரின் தலவரலாறு சித்திரிக்கப் பட்டுள்ளது. ஆனால் சரியாகப் பார்க்கமுடியவில்லை. கோயிலின் மத்தியான வழிபாடு முடிந்து கோயில் நடை மூடும் நேரம். ஆகவே ஒரே அவசரம். இங்கே ஓவியனின் கையெழுத்து இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இன்னொரு முறை போனால் நிதானமாய்ப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு மேலே சென்றோம்.

2 comments:

Jayashree said...

"வடகிழக்கில் ஆன்ம சக்தி கூடுவதை யோகசக்தி என்பார்கள். ஆகவே அதை விளக்கும் வண்ணம் இங்கே வடகிழக்குப் பகுதியில் அமைந்த மேடையுடன் காணப்படுவதாயும் சொல்கின்றனர்"

இது நம்ப வழக்குல ஈசான்ய மூலை - சாமி ரூம் அப்படீங்கறமாதிரியா?

""மாலை நேர வழிபாட்டின் போது பதினெட்டு வகை இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றன "" -?? :(( அப்போ இப்போ ? ஒண்ணுமில்லைய்யா?

Geetha Sambasivam said...

வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நாட்கள், கழிச்சு இந்தப் பதிவுப் பக்கம் வந்திருக்கேன். குறிப்புக்களைத் தேடி எடுக்கணும், ஆனால் வழிபாட்டைப் பத்தி நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல முடியும். நாங்க போனப்போ மதியம் வழிபாடு நடந்தது. முதலில் வன்மீகநாதருக்கு நடந்ததும், அப்புறம் பூவம்பலத்தில் விடங்கருக்குப் பண்ணுவாங்களாம். இருந்து பார்னு சொன்னாங்களேனு இருந்தால் கண்ணில் ரத்தமே வந்துட்டது. அவ்வளவு அவசரம், என்னமோ கடனுக்குத்தண்ணியை ஊத்தி அபிஷேஹம்னு பேர் பண்ணி!! ஒண்ணும் கேட்காதீங்க. மறுபடியும் மனசு கனக்கிறது. ஆயிரம் வேலிக்குச் சொந்தக்காரர் தியாகராஜர்! கோயில் இருக்கும் நிலைமையோ???