
சிறந்த சிவபக்தர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் தினந்தோறும் ஈசனை வலம் வந்து வணங்கியபின்னரே உணவு உண்ணும் வழக்கமுள்ளவர். ஆனால் ஈசனை மட்டுமே வலம் வந்து வணங்குவாரே தவிர, அருகேயே இருக்கும் அன்னையை வணங்கவே மாட்டார். ஒருநாள் இரண்டு நாள் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அன்னைக்கு ஒருநாளும் அவர் தன்னை வணங்கவே மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டதும், வருத்தமும் கோபமும் வந்ததாம். ஆஹா, வெறும் சிவம் மட்டுமே அவன் இயக்கத்திற்குப் போதுமா? சக்தி தேவையில்லையா? அன்னை பிருங்கி முனிவரின் உடலின் உள்ள சக்தியின் கூறான, ரத்தம், தசை போன்றவற்றை நீக்கி வெறும் எலும்புக்கூடாய் மாற்றினாள். ஆனால் பிருங்கி முனிவரோ அப்போதும் ஈசன் ஒருவனே தன் இறைவன். இதில் எந்த மாற்றமும் இல்லை; சிவன் ஒருவனே பரம்பொருள், என்றே வாழ்ந்து வந்தார். உடலின் இயக்கத்திற்குத் தேவையான சக்தியெல்லாம் போய்விட்டதும் அவரால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. ஈசனை வலம் வராமல் எப்படி உணவு உண்ணுவது? தவித்துப் போனார். ஆனால் அந்த நிலையிலும் ஈசனை வணங்கினார் அவர். ஈசனோ அவருடைய பக்தியைக் கண்டு மனம் இரங்கி அவருக்கு ஊன்றுகோல் ஒன்றைக் கொடுத்து உதவினான்.
அப்படியும் பிருங்கி முனிவர் அன்னையை வணங்கவே இல்லை. அன்னை மனம் வருந்தித் தானும் ஈசனுடன் அவர் உடலிலேயே இடம்பெறவேண்டும் என்னும் ஆசையைத் தெரிவித்தாள். ஈசனும் அதற்கு அவளைத் தவமிருக்கச் சொன்னார். அவ்விதமே அன்னையான பார்வதி தேவி கடுமையாகத் தவம் இருந்தாள். அவர் உடலின் இடப்பாகத்தைப் பெற்றாள். அம்மையும், அப்பனும் சேர்ந்திருக்கும் அந்தக் கோலமே அர்த்தநாரீசுரக் கோலம் ஆகும். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற தலமான திருச்செங்கோடு அர்த்தநாரீசுரத் திருமேனியை மூலவராய்க் கொண்ட தலங்களுள்முதன்மையான தலம் ஆகும். கொடிமாடச் செங்கன்னூர் என்னும் பெயர் கொண்ட இந்தத் தலம் அழகிய மலைக்கோயிலாக அமைந்துள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் ஏற்பட்ட சண்டையில் மேருமலையானது தூக்கி எறியப் பட்டு இங்கே விழுந்த துண்டு சிவந்த நிறத்தில் காணப்பட்டதால் செங்கோடு எனப் பெயர் பெற்றதாய்க் கூறுவார்கள். இங்கே மலையே லிங்கம் என்பதால் மலைக்கு எதிரே நந்தி காணப்படும். இந்தத் தலத்தின் மலையில் ஏறப் படிகள் 1200 இருப்பதாய்த் தெரிய வருகிறது. இங்கே இன்னமும் சென்று தரிசனம் செய்ய இயலவில்லை. மலையின் உயரம் சுமார் இரண்டாயிரம் அடிகள் எனத் தெரிய வருகிறது. அன்னையின் பெயர் பாகம்பிரியாள் எனப்படும். ஈசனின் இடப்பாகத்தை எந்நாளும் பிரியாமல் இருப்பதை இது குறிக்கும். கணவனின் இதயத்தில் இருக்க வேண்டியவள் மனைவியே என்பதற்கேற்ப இதயம் இருக்கும் இடப்பகுதியில் அன்னை இடம் பெற்றாள். இதைத் தவிரவும் திருவண்ணாமலையிலும் அன்னை இடப்பாகம் பெற்றதையே திருக்கார்த்திகைப் பெருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே//
அபிராமி பட்டர் அம்பிகை இடம் கொண்டு சிறந்ததை மேற்கண்ட வண்ணம் பாடித் துதிக்கிறார்.
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே//
அன்னையவள் இடப்பாகம் கொண்டு சிறந்து இருப்பதோடல்லாமல் அண்டமெல்லாம் பழிக்கும்படி பரத்திற்கும் மேல் பரதெய்வமாகச் சிறந்து விளங்குவதையும் இந்தப் பாடல் குறிக்கும். அர்த்த நாரீசுவரரை மேலும் பார்ப்போம்.
7 comments:
http://blogintamil.blogspot.com/2011/06/2_24.html///
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துரை தெரிவிக்கவும். நன்றி..
மாமி
ஆதம்பாக்கம் பரங்கிமலையின் உண்மையான பெயர் பிருங்கி மலை என்பதே, அதுதான் மருவி பரங்கி மலை என்றாகி விட்டது என்று சொல்கிறார்கள், அது உண்மையா, அது பற்றி முடிந்தால் பகிரவும்
http://jaghamani.blogspot.com///
திரு கொழிக்கும் திருச்செங்கோடு என்கிற பதிவும் படித்து கருத்துகூறுமாறு அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
அண்டமெல்லாம் பழிக்கும்படி பரத்திற்கும் மேல் பரதெய்வமாகச் சிறந்து விளங்குவதையும் //
அருமையான அம்பிகைகையின் சிறப்புக்களைக் கூறும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். சிவ சிவ...
வாங்க ராஜராஜேஸ்வரி, அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ராம்ஜி யாஹூ, இந்தக் கதை நானும் செவிவழியாய்க் கேட்டது தான், பரங்கி மலையில் இப்போது சர்ச் தான் இருக்குனு நினைக்கிறேன். சாந்தோம் சர்ச் இப்போது இருக்குமிடத்தில் தான் ஞானசம்பந்தர் காலத்திலே கபாலி குடி இருந்தார் என்பது தெரியும், அது போல் இங்கேயும் இருந்திருக்கலாம். பரங்கி மலைக்குப் போய்ப் பார்க்கணும், பார்த்தால் தான் புரியும். இன்னும் போனதில்லை.
ராஜராஜேஸ்வரி, உங்கள் திருச்செங்கோடுப் பதிவு மிகவும் அருமை. பல புதிய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி அழைப்பிற்கு.
Post a Comment