எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, December 12, 2011

பெரிய பாளையம் பவானி அம்மன் ! வேப்பிலை ஆடை அணியும் பக்தர்கள்!

சென்னையில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பெரியபாளையம். அங்கே உள்ள பவானி அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆனது. அந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடாக வேப்பிலையால் ஆடை அணிந்து கொண்டு நிறைவேற்றுவார்கள். ஆகவே நாங்கள் சுருட்டப்பள்ளி சென்ற போது அங்கேயும் செல்ல நினைத்துச் சென்றோம். நாங்கள் போனபோது சாயங்காலம் தீப ஆராதனை நடந்து கொண்டு இருந்தது. ஆகவே தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். தர்ம தரிசனம் கூட்டம் ஜாஸ்தி இருந்த காரணத்தால் நாங்கள் 5ரூ டிக்கெட் வாங்கிக் கொண்டோம். அதற்கு மேல் இல்லை. 5ரூக்கும் கூட்டம் தான். சற்று நேரத்திற்கு எல்லாம் திரை விலகித் தீப ஆராதனை நடந்தது. நாங்கள் நின்று இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடியவில்லை. சற்றுக் கூட்டம் குறைந்ததும் நாங்கள் பார்க்க வழி கிடைத்தது. பூசாரிகள் விரட்டுகிறார்கள். அதற்குள் அம்மனைப் பார்க்க வேண்டும். அம்மன் மார்பளவு தான் இருக்கிறாள். கீழே உற்சவ அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். அவளும் மார்பளவுதான். எனக்குத் தெரிந்து ரேணுகா தேவிதான் மார்பளவு இருப்பாள். பரசுராமரின் தாய். தாயின் தலையைத் தந்தை சொல் கேட்டு வெட்டும் பரசுராமருக்குத் தந்தை வேண்டும் வரம் கேட்கச் சொல்கிறார். அவர் கேட்பது தன் தாய் உயிர் பெற்று எழ வேண்டும் என்ற வரம் தான். அப்படியே ஆகட்டும் என்று அவர் தந்தை கூற பரசு ராமர் அவசரத்தில் வேறு ஒரு பெண்ணின் தலையைப் பொருத்தி விடுகிறார். தலையுடன் உள்ள ரேணுகா தேவியோ அதனுடன் காட்டில் வாழும் வேடர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் உடலில்லாமல் இருக்கும் ஒரு தெய்வப் பெண்ணாக ஏற்றுக் கொண்டு வேண்டிய பணிவிடை செய்ததாகவும் அதுமுதல் ரேணுகா தேவி காவல் தெய்வமாக ஆனதாகவும் கூறுவார்கள். இன்னும் சிலர் வெட்டுப்பட்டுக் கிடந்த தன் தலையைக் கைகளில் தாங்கி ரேணுகா தேவிக் காயங்களுடன் வேட்டுவர்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் அவர்கள் காப்பாற்றிக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். பரசுராமர் தன் தாயின் தலையைச் சேர்க்கையில் அவசரத்தில் பொருத்திய பெண்ணின் உடல்தான் மாரியம்மன் எனவும் ஒரு கூற்று உண்டு. அம்மன் கையில் சக்கரமும் உள்ளது; கபாலமும் உள்ளது. அந்தக் கபாலத்தில் முப்பெரும் தேவியர் அடக்கம் எனப் படுகிறது. அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்தவள் என்கின்றனர்.


இங்கே கோயில் கொண்டிருப்பது பவானி அம்மனா? ரேணுகா தேவியா?? சந்தேகம் துளைத்தது. ஆகவே கோயில் தல வரலாற்றைக் கேட்டோம். தல வரலாற்றின் மூலம் ரேணுகா தேவியே இங்கே பவானி அம்மன் என்ற பெயரில் வீற்றிருப்பதாய்த் தெரிய வந்தது. தலவரலாறு வருமாறு: ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட நாயுடு வம்சத்தினர் வளையல் வியாபாரம் செய்வார்கள். அவர்கள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வளையல் மூட்டைகளைத் தூக்கி வந்தும் வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் காண முடியாவிட்டாலும் முப்பது வருடங்கள் முன்னர் வரையிலும் வளையல் செட்டி என்று மதுரைப்பக்கம் எல்லாம் உண்டு. வளையல் செட்டிதான் வளைகாப்பு, கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வளையல் அடுக்குவார். அவங்க வளையல் அடுக்க வந்ததும், அடுக்கி விட்டு உடனே குங்குமம், மஞ்சள் கொடுப்பார்கள். தாங்கள் வளையல் அடுக்கிய பெண்ணும், அவள் குலமும் சீரோடும், சிறப்போடும் வாழவேண்டி வாழ்த்தி அளிப்பார்கள். அத்தகைய வளையல் செட்டி ஒருவர் சுமார் முந்நூறு ஆண்டுகள் முன்னர் வளையல் விற்கத் தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு வியாபாரம் முடித்துக்கொண்டு ஆந்திரா திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் பகுதி வந்ததும் மதிய உணவு உண்டதும் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டார்.

பின்னர் எழுந்து அங்கிருந்து கிளம்ப யத்தனித்தபோது அருகிலிருந்த வளையல் மூட்டையைக் காணோம். அதிர்ச்சி அடைந்த அவர் சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கிருந்த ஒரு பெரிய பாம்புப் புற்று அவர் கண்களில் பட்டது. கொஞ்சம் சந்தேகத்தோடு அந்தப் புற்றை எட்டிப் பார்த்தால் வளையல் மூட்டை அதற்குள் கிடந்தது. ஒரு கம்பை எடுத்து அதை எடுக்க முயற்சித்தார். முடியாமல் போகவே அங்கேயே அதை விட்டுவிட்டு ஊர் திரும்பினார். இரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் அம்மன் தோன்றி, “நான் ரேணுகா தேவி. நீ பார்த்த அந்தப்புற்றில் பவானி அம்மனாக வந்து குடி கொண்டிருக்கிறேன். சுயம்புவாக அங்கே நான் கோயில் கொண்டுள்ளேன். நீ உடனே அங்கே வந்து எனக்குக் கோயில் எழுப்பி வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்.” என்றாள். வளையல்காரர் மறுநாளே தன் வளையல் மூட்டை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு புறப்பட்டார். பெரியபாளையம் வந்ததும், புற்றை அதே இடத்தில் கண்டார். ஊர்மக்களிடம் தன் கனவைக் குறித்துக் கூறினார். உடனே அனைவரும் அந்தப்புற்றைத் தோண்ட ஆரம்பித்தனர். ஒரு இடத்தில் புற்றுமண்ணாக இல்லாமல் கல்லில் மோதுவது போல் சப்தம் கேட்டதோடு அல்லாமல் ரத்தமும் பீறிடத் தொடங்கியது. மண்வெட்டியால் தோண்டுவதை நிறுத்திவிட்டுக் கைகளால் பார்த்தபோது சுயம்புவான அம்மன் விக்கிரஹம் அகப்பட்டது. அதன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு இருந்தது. செய்வதறியாது மக்கள் திகைக்க வளையல் வியாபாரி தன்னிடம் இருந்த மஞ்சள், குங்குமத்தை நீர் விட்டுக் குழைத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து அழுத்த ரத்தம் நின்று போனது. அம்மனை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. சுயம்புவான அம்மனுக்கு வெள்ளியில் கவசம் செய்து சார்த்தி இருக்கிறார்கள். அந்தக் கவசத்தின் தலைப்பகுதியை அகற்றிவிட்டுப் பார்த்தால் கடப்பாரையால் போட்ட வெட்டு தெரியும் என்று சொல்கின்றனர்.

ஆக ரேணுகா தேவியே இங்கே பவானி என்ற பெயரில் பவனின் சக்தியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாள் என்று சொல்கின்றனர். கோயில் பல வருடங்கள் வரையிலும் மூலஸ்தானமும், ஒரே ஒரு மண்டபத்துடனும் தான் இருந்திருக்கிறது. நாளாவட்டத்தில் அம்மனின் சக்தி பரவப் பரவ கோயிலும் வளர்ச்சி அடைந்து இன்று பெரிய அளவில் காணப்படுகிறது. கோயிலின் இருபுறமும் இருக்கும் கடைகளைக் கடந்து உள்ளே நுழைந்தால் விநாயகரை வழிபட்டுப் பின்னால் சென்றால் மாதங்கி அம்மன் தரிசனம் கிடைக்கும். அங்கிருந்து நேரே அம்மன் வீற்றிருக்கும் பிராஹார மண்டபத்தை அடையலாம். அம்மனின் தரிசனம் முடித்ததும், வெளிச்சுற்றில் வைத்திருக்கும் உற்சவரைக் காணலாம். வெளிப் பிரஹாரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர், பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், மற்றும் பரசுராமருக்கு ஒரு சந்நிதியும் காணப்படுகிறது. பரசுராமர் இங்கே வந்திருப்பதன் காரணம் இவள் ரேணுகா தேவி என்பதால் இருக்கலாம். நீருக்கான மூர்த்தியாக வழிபடப்படும் பவர் என்ற ஜலமூர்த்தியின் தேவியாகவும் வணங்கப்படுகிறாள். மழை பொழியவும், கோடைக்காலங்களில் காலரா, வைசூரி போன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும் அம்மனுக்கு நேர்ந்து கொள்கின்றனர். இங்குள்ள முக்கியமான பிரார்த்தனை வேப்பிலைகளால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்வது தான்.

No comments: