எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, June 05, 2012

நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! அச்வாரூடர்!


அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது இறைவன் குதிரை வியாபாரியாய் வந்த கோலத்தை.  இதை அச்வாரூடர் என்றும் கூறுவார்கள்.  இவரைக்குறித்து அறியும் முன்னர் இறைவன் அச்வாரூடராய் வர நேர்ந்த காரணத்தையும், எவருக்காக அச்வாரூடராய் வந்தார் என்பதையும் அறிய வேண்டும்.  “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது ஆன்றோர் வாக்கு.  அத்தகைய திருவாசகத்தை நமக்குத் தந்தவர் மாணிக்க வாசகர்.  மாணிக்க வாசகர் என்ற பெயர் இவரின் மாணிக்கம் போன்ற அதே சமயம் மனதையும் உருக்கும் வாசகங்களினால் ஏற்பட்டதே ஆகும்.  இவரின் இயற்பெயர் என்னவென ஒருவரும் அறியவில்லை.  இவரின் காலமும் சரிவரத் தெரியவில்லை.  எனினும் முதல் மூவருக்கு முந்தியவர் என்பது ஆன்றோர் கருத்து. மதுரைக்கு வடகிழக்கே திருவாதவூர் என்னும் ஊர் உள்ளது.  வாயு வழிபட்ட இந்தத் தலத்தின் ஈசன் வாதபுரீஸ்வரர் ஆவார்.  இவ்வூரில் அமாத்ய பிராம்மண குலத்தில் தோன்றியவரே மாணிக்க வாசகர்.  தகப்பனார் பெயர் சம்புபாதசிருதர், தாயார் சிவஞானவதி அம்மை.  இவரின் உண்மையான பெயர் என்னவென்று தெரியாத காரணத்தால் இவரைத் திருவாதவூரர் என்றே அழைத்தனர்.

வாதவூரர் அறிவாற்றலும், இயல்பாகவே கைவரப் பெற்ற சிவபக்திச் செல்வமும், அதனால் விளைந்த ஞானத்தோடும் விளங்கினார்.  இவரைப் பற்றிக் கேள்விப் பட்ட அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனது முதலமைச்சராக ஆக்கிக் கொண்டான். இவருக்குத் “தென்னவன் பிரமராயன்” என்னும் பட்டமும் அளித்துச் சிறப்பித்தான்.  அமைச்சர் பதவியைச் செவ்வனே நிறைவேற்றி வந்தார் வாதவூரார்.  ஆனாலும் அவர் மனம் இவ்வுலக வாழ்க்கையிலும், அமைச்சர் பதவிக்குரிய சுகபோகங்களிலும் லயிக்கவே இல்லை.  தக்கதொரு குரு கிடைத்தால் அவர் மூலம் பிறவிப் பெரும்பயனை அடையவே விரும்பினார்.  சிவலோக சாம்ராஜ்யத்தைக் குறித்தே சிந்தித்து வந்தார்.

மன்னன் தன் குதிரைப் படையை விரிவு செய்து மேலும் பல புதிய குதிரைகளைச் சேர்க்க விரும்பினான்.  அந்தச் சமயம் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் அரபு நாட்டில் இருந்து வந்து இறங்கி இருப்பதாய்ச் சில தூதுவர்கள் தெரிவிக்க மன்னனும் அவற்றைத் தன் படைக்குச் சேர்க்க விருப்பம் கொண்டான்.  அரசன் முதலமைச்சராகிய வாதவூரரைப் பார்த்து, கருவூலத்தில் இருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கீழைக் கடற்கரைக்கு வந்திருக்கும் குதிரைகளைப் பார்த்து வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டான்.   வாதவூராரும் மன்னனின் விருப்பத்திற்கிணங்கக் கருவூலத்திலிருந்து வேண்டிய பொருளைப் பெற்றுக் கொண்டு குதிரைகள் வாங்கப் புறப்பட்டார்.   சுந்தரேஸ்வரரை வணங்கிவிட்டுப் பயணம் புறப்பட்ட அவர் பயணத்தில் திருப்பெருந்துறை என்னும் ஊரை அடைந்தார்.  அவ்வூரை நெருங்க, நெருங்க அவருக்குத் தம் பிறவிப் பயன் பூர்த்தி அடையப் போகிறது என்ற எண்ணமே மேலோங்கியது.   ஆம், இறைவன் திருவாதவூரரைத் தடுத்தாட்கொள்ள விரும்பினான்.

திருப்பெருந்துறையின் ஒரு சோலையில் குருந்த மரத்தடியில் சிவகணங்களெல்லாம் சீடர்களாகக் காட்சி கொடுக்க ஈசன் மானுட வடிவம் தாங்கி அங்கே அமர்ந்திருந்தார்.  சிவ நாமம் எங்கும் ஒலித்தது.  அந்தச் சிவநாமம் காதில் விழ விழ திருவாதவூரருக்கு மனம் பொங்கியது.  எல்லையில்லாப் பேரின்பம் உண்டாயிற்று.  ஆஹா, என்ன காரியம் செய்யத் துணிந்தோம்! மன்னனுக்குக் குதிரைகள் வாங்கிக் கொடுத்து அவன் படை பலத்தைப்பெருக்குவதன் மூலம் போர்களும் பெருகுமே.  உயிர்கள் சேதமடையுமே!  பலரும் உயிர் துறப்பரே.  ஒரு மன்னனின் வெற்றிக்காக இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் அன்றோ பலியாகும்? வேண்டாம், வேண்டாம். உலகில் சிவநாமம் எங்கும் ஒலித்த வண்ணம் சிவபக்திச் செல்வம் பல்கிப் பெருகி அன்பும், அறமும் செழிக்க வேண்டும் என்று எண்ணினார். அங்குள்ள திருக்குளத்தில் நீராடி, திருநீறு தரித்துக் கொண்டு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருக்கும் சோலையை நோக்கி நடந்தார்.

அங்கே குருந்த மரத்தடியில் ஞானகுருநாதனாகப் பரம்பொருளே வீற்றிருந்தார்.  வலக்கை சின் முத்திரை காட்ட சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியே அங்கே அமர்ந்திருந்தார்.  திருவாதவூரர் அவரைக் கண்டதும் மெய் சிலிர்த்து, மேனியெல்லாம் புளகாங்கிதம் பொங்க, வணங்கினார்.  அவரின் செவியில் ஈசன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, முக்திப் பேறும் அருளினார்.  திருவாதவூரரின் அகஒளி ஜோதி மயமாய்ப் பிரகாசித்தது.  அகத்தினுள்ளே உள்ளொளியில் சிவபக்தி சாம்ராஜ்யத்தைக் கண்ட திருவாதவூரர் அக்கணமே துறவுக் கோலம் பூண்டார்.  அமைச்சர் பணியை உதறினார்.  ஈசன் மேல் அருந்தமிழ்ப் பாமாலைகளைச் சூட்டி வணங்கினார்.   மனதை உருக்கும் மணி மணியான வாசகங்கள் நிறைந்த அந்தப் பாடல்களைக் கேட்ட ஈசன், “இன்று முதல் நீ மாணிக்க வாசகன்!” என்றும் பெயரைச் சூட்டினார்.

No comments: