பிட்டைக் கூலியாகப் பெற்ற ஈசன் அதை உண்டார். நீர் அருந்தினார். வைகைக் கரைக்குச் சென்றார். அங்கே போய் மண்வெட்டியால் மண்ணை அள்ளுவது போல் போக்குக் காட்டினார். ஆனால் எதுவும் செய்யவில்லை. பின்னர் திரும்பி வந்து தலையில் சும்மாடு கட்டி இருந்த துணியை எடுத்துக் கீழே விரித்துப் படுத்துவிட்டார்.
3017. வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக் கொட்டுவார் குறைத்து எடுத்துக் கொடு போவார் சுமடு விழத் தட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக் கட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார். 3018. இவ் வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்து இளைத்துக் கை வண்ண மலர் கன்றக் கதிர் முடிமேல் வடு அழுந்த மை வண்ணன் அறியாத மலர் அடி செம் புனல் சுரந்து செவ் வண்ணம் படைப்ப ஒரு செழும் தருவின் மருங்கு அணைந்தார். 3019. தரு மேவும் மலை மகளும் சலமகளும் அறியாமல் திரு மேனி முழுது நிலமகள் தீண்டித் திளைப்பு எய்தக் குரு மேவு மதி முடியைக் கூடை அணை மேல் கிடத்தி வரும் மேரு அனையார் தம் வடிவு உணர்ந்து துயில் கின்றார்.
பின்னர் மீண்டும் எழுந்து மண் அணைப்பவர் போல் கூடையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு ஆற்றின் கரையில் கொட்டுவார். கூடையும் அப்படியே ஆற்றில் விழுந்துவிட்டது போல் பாவனை காட்டுவார். உடனே ஆற்றில் குதித்துச் சென்று நீந்திக் கூடையை எடுத்துக் கொண்டு கரையேறுவார். கரையேறியதும் மீண்டும் பசிக்கிறது எனக் கூறிப் பிட்டை வாங்கி உண்பார். உண்டதும் உறங்குவார். இப்படியே வேலை நடந்து கொண்டிருந்தது. மன்னன் வேலை நடப்பதைப் பார்க்க அங்கே வந்தான். எல்லாருடைய பங்கிலும் மணல் கொட்டி கரை அடைக்கப்பட்டிருக்க வந்தியின் பங்கில் மட்டும் அடைபடாமல் இருப்பதைக் கண்டான். இது யார் பங்கு எனக் கேட்க எல்லாரும் வந்தியின் பங்கு, அவள் ஓர் ஆளை அமர்த்தி அடைக்கச் சொல்லி இருக்கிறாள். ஆனால் அவனோ வந்ததில் இருந்து ஒரு வேலையும் செய்யவில்லை. வேலை செய்பவர்கள் கவனத்தையும் சிதற அடித்துக் கொண்டு இருக்கிறான் எனப் புகார் சொன்னார்கள். மன்னனுக்குக் கோபம் வந்தது. " யார் அவன்? எங்கே இருக்கிறான்?" என்று கேட்க அனைவரும் கரையில் ஒரு பெரிய மரத்தின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்த ஈசனை அடையாளம் காட்டினார்கள்.
அதைக் கண்ட மன்னன் கோபம் பொங்கத் தன் கைப்பிரம்பை எடுத்து அந்த ஆள் எனக் காட்டப்பட்ட ஈசன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடித்தான். அவ்வளவு தான், அருகே இருந்த கூடையை எடுத்து அதை மணலால் நிரப்பி மணலோடு உடைப்பில் கொட்டினான் அந்த ஆள். அடுத்த கணம் ஜோதி வடிவில் மறைந்தான். ஆனால் அவன் அடித்த அடியோ அங்கிருந்த அனைவர் முதுகிலும் பட்டது. பாண்டியன் தன் முதுகில் யாரோ தன்னை ஓங்கி அடித்ததைப்போல் உணர்ந்தான். அங்கிருந்த அமைச்சர்கள், வீரர்கள், கூலியாட்கள், பெண்கள், ஆண்கள் என வேறுபாடில்லாமல் அனைவர் மேலும் பட்டது. அவ்வளவு ஏன் சின்னக் குழந்தைகள் முதுகிலும் சுரீர் என அடி படக் குழந்தைகள் அலறின. குதிரைகள், யானைகள், ஆடுமாடுகள் என அனைத்தின் மேலும் அடி பட்டது. சூரிய சந்திரர் மேலும், நக்ஷத்திரங்கள் மேலும், மலை, மடு, ஆறு, நதி, கால்வாய் என அனைத்தின் மேலும் அடி சுரீர் எனப் பட்டது. வந்தவர் சாதாரண ஆளில்லை என்பதை மன்னன் உணர்ந்தான்.
விண்ணிலிருந்து அசரீரி கேட்டது. "மன்னா! மாணிக்கவாசகர் குற்றமற்றவர். அவர் மாபெரும் சிவத் தொண்டர். அவரைச் சிறையில் அடைத்து வைத்து நீ கொடுமைப் படுத்தியதாலேயே உன்னைச் சோதித்தேன். அவர் உன் கஜானாவின் பணத்தை நமக்காகக் கோயில் எழுப்பச் செலவு செய்திருக்கிறார். நீ அவரை அரச பதவியிலிருந்து விடுவித்து விடு. எம்மைப் பாடிப் பரப்பவே அவர் பிறவி எடுத்திருக்கிறார். இனி எல்லாம் முன்னர் இருந்தது போல் ஆகும்." என்று கூற, மன்னனும் தன் தவறை உணர்ந்து மணிவாசகரிடம் மன்னிப்புக் கேட்டான். மணிவாசகருக்காக ஈசன் குதிரைப் படைத் தலைவனாக வந்த சொரூபமே அச்வாரூடர் ஆகும். இத்துடன் சிவ வடிவங்கள் முடிவடைந்தன. இனி ஸ்ரீரங்கம் பற்றிய ஒரு சிறு தொடர் ஆரம்பிக்கும். கொஞ்சம் அதற்கான முன்னேற்பாடுகளில் இருக்கிறேன். ஆகவே தாமதம் ஆகும்.
3042. வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித் தள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப் பற்றி உள்ளடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து நின்ற கள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி நின்றார். 3043. கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு வாங்கி அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக் கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த சோதி. 3044. பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம் குமரர் மேல் பட்டது ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் பட்டது பருமம் பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் மேல் பட்ட அத் தழும்பு. 3045. பரிதியும் மதியும் பாம்பும் ஐங் கோளும் பல் நிறம் படைத்த நாள் மீனும் இரு நிலம் புனல் கால் எரி கடும் கனல் வான் எனும் ஐம் பூதமும் காரும் சுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும் தொண்டின் மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகன் அடித் தழும்பு.
2 comments:
அடடா, ஆன்மீகத்துக்கே காப்புரிமையா, நல்லா வருவீக, வாழ்க உங்கள் பற்றற்றான் பற்று. பத்திரமா பூட்டுப் போட்டு பூட்டி வையுங்க.
நல்வரவு திரு தேவன், முதல் வருகைக்கு நன்றி. ஆன்மிகத்துக்குப் பூட்டுப் போடவில்லை. என்னோட சில முக்கியமான பதிவுகள் அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணப்படுகின்றன. மூன்று வருடங்களாக உழைத்துப் பலமுறை சிதம்பரம் சென்று பலரைப் பார்த்துப் பேசி எழுதிய சிதம்பர ரகசியம் தொடர் அப்படியே வரிக்கு வரி இளவரசி ஜான்சன் என்பவரின் வலைப்பதில் காணக்கிடைக்கிறது. ஆகவே பூட்டுப் போட்டதைக் குறித்து எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. நன்றி வருகைக்கும், கருத்துப் பதிவுக்கும்.
Post a Comment