எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 19, 2016

ஶ்ரீரங்கரங்க நாதனின் பாதம் பணிந்தோம்! சுரதானியின் பக்தி!

அழகிய மணவாளர் விக்ரஹம் இருக்குமிடம் தெரிந்து கொண்ட அந்தப் பெண்மணி மீண்டும் நெடுந்தூரம் பயணம் செய்து தில்லியில் இருந்து ஶ்ரீரங்கம் வந்தடைந்தாள். திருவரங்கம் வந்ததும் கோயில் ஊழியர்களைக் கூட்டி அவர்களிடம் அழகிய மணவாளரின் இருப்பிடத்தைக் குறித்துக் கூறினாள். அவரை எப்பாடு பட்டேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தினாள். அனைவரும் சம்மதித்துப் பாடத்தெரிந்த சிலரும், ஆடத்தெரிந்த சிலரும் ஒன்று கூடினார்கள். சுமார் அறுபது பேர்களை ஆடல், பாடல்களில் தேர்ந்தவர்களாகக் கண்டு எடுத்து அனைவரும் மீண்டும் தில்லி நோக்கிப் பயணித்தார்கள்.

அவர்கள் அனைவரும் உசேன் கசன்பி பாதுஷாவின் மாளிகைக்குச் சென்று பாதுஷா மனம் மகிழும் வண்ணம் ஆடல், பாடல்களில் தங்கள் திறமையைக் காட்டினார்கள். மனம்மகிழ்ந்த பாதுஷா அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை மனம் நிறையும் வண்ணம் கொடுப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட அவர்கள் தங்களுக்கு இந்த விலை மதிக்கக் கூடிய தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள், ஆடை, ஆபரணங்கள் தேவையில்லை என்றும் விலை மதிக்க முடியாத வேறொரு பரிசு பாதுஷாவின் பாதுகாப்பில் இருப்பதாகவும், அது அவர்களைச் சேர்ந்தது தான் என்றும், படையெடுப்பின் போது இங்கே வந்து விட்டது என்றும் அதைத் திரும்பக் கொடுத்தால் போதும் என்றும் இறைஞ்சினார்கள். அப்படிப் பட்ட பரிசு என்ன என்று பாதுஷா கேட்டதற்குத் திருவரங்கன் சிலை தான் என்றனர்.

அதைக் கேட்ட பாதுஷா அந்தச் சிலையில் அப்படி என்ன இருக்கிறது? அதைப் போய்க் கேட்கிறீர்களே என்று சொல்லிவிட்டு அந்தச் சிலை அந்தப்புரத்தில் அவன் மகள் விளையாடுவதற்கு எடுத்துப் போயிருப்பதாகவும் அவளிடமிருந்து அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூறினான்.  சந்தோஷம் அடைந்த நாட்டியராணிகள் அந்தப்புரம் சென்று சுரதானியிடம் விக்ரஹத்தைக் கேட்டு வாங்கச் சென்றார்கள். அங்கே சென்றால் விக்ரஹம் சர்வாலங்கார பூஷிதராக அலங்கரிக்கப் பட்டுச் சுரதானி அதன் எதிரே மெய்ம்மறந்து தன்னையும் இவ்வுலகையும் மறந்து அமர்ந்திருந்தாள்.  அவள் முகமே தெய்விகமாகக் காட்சி அளித்தது. இதைக் கண்ட நாட்டியப் பெண்கள் எப்படி எடுத்துச் செல்வது என்று பயந்து போனார்கள். இந்த அழகிய மணவாளர் தன் அழகால் இந்தத் துலுக்கப் பெண்ணையும் தன் வசப்படுத்தி விட்டாரே எனப் பேசிக் கொண்டார்கள். பின்னர் சாதாரணமாகக் கேட்டால் இவள் தரமாட்டாள் என்பதைப் புரிந்து கொண்டு சுரதானியிடம் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்தார்கள்.

பின்னர் அவளுக்குப் பிரசாதம் கொடுப்பதாக நடித்து அந்தப் பிரசாதத்தில் மயக்க மருந்தைக்கலந்து கொடுத்துவிட்டார்கள். அதை உண்ட சுரதானியும் மயக்கத்தில் ஆழ்ந்து போக விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு அரங்கம் திரும்பினார்கள் நாட்டியராணிகள். ஆனால் இங்கே மயக்கம் தெளிந்து எழுந்த சுரதானியோ விக்ரஹத்தைக் காணாமல் கலக்கம் அடைந்தாள். அழுது புலம்பினாள். அது இல்லாமல் தான் உயிர் வாழ மாட்டேன் என்று தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் முயன்றாள். பாதுஷாவுக்குச் செய்தி போக தன் மகளின் இந்த அதீதக் காதல் அவனை ஆச்சரியப் படுத்தியது.  மகளின் பாசத்தின் ஆழத்தைக் கண்ட அவன் உடனே சிறு படை ஒன்றைத் தயார் செய்து விக்ரஹத்தைத் தூக்கிச் சென்றவர்களைப் பின் தொடருமாறு பணித்தான். சுரதானி தில்லியில் இருக்க மனமின்றித் தானும் அந்தப் படையோடு சென்றாள்.

தில்லி சுல்தான் தங்களைத் தொடருவது கண்டு அந்தப் பாடகர்களின் குழு ஶ்ரீரங்கத்திற்குச் செல்லாமல் வழியிலேயே திருமலைக்குத் திரும்பி விட்டது. அங்கே அழகிய மணவாளரை ஒளித்து வைத்தார்கள். விக்ரஹத்தைத் தேடித் திருவரங்கம் வந்த சுரதானி அங்கே அது இல்லாமல் சோகம் மிகுதியாகத் தன் உயிரை விட்டு விட்டாள். இதை அறிந்த கோயில் ஊழியர்கள் கோயிலின் கர்பகிரஹத்துக்கு எதிரே இருக்கும் அர்ஜுன மண்டபத்தில் இவளுக்காகத் தனி சந்நிதி ஏற்படுத்தினார்கள். இஸ்லாமியர் வழக்கப்படி விக்ரஹ ஆராதனை கூடாது என்பதால் இங்கே துலுக்க நாச்சியார் என்னும் பெயரில் சுரதானிக்கு வண்ணச் சித்திரமே காணப்படுகிறது. அகிலும், சந்தனமும் கலந்த தூபம் போடுவார்கள் இவருக்கு. இவருக்கு அரங்கநாதர் கைலி அணிந்தே காட்சி கொடுத்து அருளுவார்.  நிவேதனமும் சப்பாத்தி, பால், வெண்ணெய் என்று அளிப்பதாகக் கூறுகின்றனர்.

அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இப்படி ஒரு துலுக்க நாச்சியார் சந்நிதி இருக்கிறது. இதைப் போலவே கர்நாடகா மேல்கோட்டையில் செல்வப் பிள்ளையும், அழகர் கோயிலில் கள்ளழகரும் துலுக்க நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

சுரதானியின் பக்தி வியக்க வைக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

Geetha Sambasivam said...

நன்றி சுரேஷ்!

Baskaran said...

kailash yathra when you go back again

Baskaran said...

Dear Madam

சில இடங்கலில் கூறி உள்ளிர்கள் தாங்கள் ஏழதும் கட்டுரைகளுக்கு உங்கள் கணவர் உதவி உள்ளார் என்று. திரு சாம்பசிவம் அவர்களுக்கும் என்னுடயை நன்றியை தெரிவிக்கவும்.

நெல்லைத் தமிழன் said...

எனக்கு உங்கள் மெயில் ஐடி தர இயலுமா? என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. உங்களிடம் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஒன்று கேட்கவேண்டும்.

Geetha Sambasivam said...

@நெல்லைத் தமிழன், sivamgss@gmail.com இதான் என்னோட ஐடி. முன்னெல்லாம் ப்ளாகரிலேயே கிடைச்சது. இப்போல்லாம் கண்ணிலே படுவதே இல்லை.