எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, May 06, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரன் அவளிடமிருந்து விலகித் தன் வேலையைப் பார்க்கச் செல்கையில் அவள் மீண்டும் அவனை அழைத்தாள். என்ன, அபிலாஷிணி எனக் குலசேகரன் கேட்டதற்கு அவன் வில்லில் இருந்து அம்பை விடுவதை அவள் பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகக் கூறக் குலசேகரன் குழந்தைத் தனமான அவள் ஆசைக்குச் சிரித்துவிட்டு வில்லை எடுத்து அம்பைப் பொருத்தி விட்டுக் காட்டினான். அவளும் சிறு குழந்தையைப் போலவே கை தட்டி ஆர்ப்பரித்தாள். குலசேகரன் மீண்டும் கிளம்புகையில் அவள் மீண்டும் குறுக்கிட்டு, "ஐயா, ஹேமலேகா சொன்னதைச் சொல்லவேண்டாமா? அதைக் கேட்காமலே கிளம்புகிறீர்களே?" என்று கேட்கக் குலசேகரனுக்குள் ஆவல் மேலோங்கியது! "என்ன சொன்னாள்?" என ஆவலுடன் கேட்டான். அவனையே பார்த்த அபிலாஷிணி, "இன்று உங்கள் தாயின் திதியாம்! நினைவூட்டியதாகச் சொன்னார்!" என்று சொன்னாள். குலசேகரன் ஒரு கணம் அவளையே பார்த்துவிட்டுப் பின்னர் கொஞ்ச நேரம் யோசித்தான். "சரி அபிலா!" என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அன்று மாலை கையில் சில காசுகளுடன் அந்த ஊர்ச் சத்திரத்துக்குச் சென்று யாரேனும் வயோதிகர்கள் வந்துள்ளனரா என விசாரித்தான். போர்க்காலமாக இருப்பதாலும் அந்நியப் படையெடுப்புத் தொடர்வதாலும் யாத்திரிகர்கள் யாரும் வருவதில்லை என்றனர் அங்குள்ளோர். சத்திரத்துக்கு  விருந்தினர்கள் என்பதே இல்லாமல் போய்விட்டதாகவும் சொன்னார்கள். குலசேகரன் திரும்பி வந்து பல்லக்குத் தூக்கிகளை அழைத்தான். அவர்களுக்கு அந்தக் காசுகளை தானமாக வழங்கினான். பின்னர் கிழக்கே உள்ள வெட்டவெளியில் தன் தாயை நினைத்துப் பிரார்த்தனைகள் செய்தான். அவன் கண்களில் தாயை நினைத்துக் கண்ணீரும் பெருகியது.

பின்னர் அங்கிருந்து எழுந்து வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களின் முன் வாசல் வழியாகவே நடந்தான். அப்போது ஒரு கூடாரத்தின் புறத்தே ஏதோ அசைவு விசித்திரமாகத் தென்பட்டது. திரும்பிப் பார்த்த குலசேகரனுக்கு அங்கே சாளரத்திரையை விலக்கிக் கொண்டு தன்னையே பார்க்கும் ஹேமலேகாவின் முகம் தெரிந்தது. குலசேகரன் உடலில் ஓர் பதட்டம் ஏற்பட்டது. எனினும் சமாளித்துக் கொண்டான். பின்னர் சற்றே குழப்பத்துடன் அவளிடம், "நீங்கள் கொடுத்த நாடகப் பிரதி ஓலைச்சுவடிகளை ராணி கிருஷ்ணாயி எரித்துவிட்டார். மிகவும் வருந்துகிறேன்!" என்று குழறிக் குழறிக் கூறினான். அவள் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள். குலசேகரனுக்கும் மேலே என்ன பேசுவதெனத் தெரியவில்லை. அங்கிருந்து அகன்றான். தன் கூடாரத்துக்குப் போனான். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தவனுக்கு ஹேமலேகா தன்னிடம் பேசவே இல்லை என்பது கொஞ்சம் ஒருமாதிரியாகத் தோன்றியது. ஏன் பேசவில்லை? பயமோ என நினைத்தவன் அங்குள்ள சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம் என நினைத்தான். அப்போது தான் அவனுக்குத் தன் தாயின் திதியை அவள் நினைவூட்டியது அவன் நினைவில் வந்தது. அவளுக்கு ஓர் நன்றி கூடச் சொல்லவில்லையே என நினைத்து வருந்தினான்.

இரு தினங்களில் தீர்த்த யாத்திரைக் குழுவினர் திருவண்ணாமலையை அடைந்தனர். ஹொய்சள அரசர் தன் மனைவியைக் கண்டதும் மனம் மகிழ்ந்து அணைத்துக் கொண்டார். வழியில் பிரச்னை ஒன்றும் இல்லையே எனக் கேட்டார். அதற்கு ராணி கிருஷ்ணாயி அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாண்டிய நாட்டு வீரர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டதாகக் கூறினாள்.யாத்திரையிலிருந்து திரும்பியதும் நன்றி தெரிவிக்கும் விதமாக அரண்மனையில் பற்பல யாகங்கள், ஹோமங்கள் வளர்த்து தானங்களைச் செய்தார்கள். இவை எதிலும் குலசேகரனும் குறளனும் கலந்து கொள்ளவில்லை. சத்திரத்திலேயே தங்கி ஓய்வு எடுத்தார்கள். எல்லா விசேஷங்களும் முடிந்ததும் ஹொய்சள மன்னரைக் கண்டு பேச வேண்டும் என நினைத்தார்கள்.

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

Geetha Sambasivam said...

நன்றி