எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, October 04, 2006

36. ஓம் நமச்சிவாயா-7

நாங்க இரண்டு பேரும் குழந்தைகள், மாமியாருடன் போகும்போதோ அல்லது இப்போ நாங்க இரண்டு பேரும் தனியாகப் போகும்போதோ எந்த ஒரு ட்ராவல்ஸ் குழுவுடனும் சேர்ந்து போனது இல்லை. போனது எல்லாம் இந்தியாவுக்குள் என்பதாலும், மொழிப் பிரச்னை இல்லை என்பதாலும் நாங்களாகவே போய்விட்டு வந்திருக்கிறோம். ஆகவே இம்மாதிரிக் குழுவுடன் போவது இது தான் முதல்முறை என்பதால் இம்மாதிரி மீட்டிங் என்பது எங்களுக்குப் புதிசு. ஆனால் கைலை யாத்திரை போகிறவர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், ஒருவேளை அவர்களால் முடியாது என்று தோன்றினால் உடனேயே விலகிக் கொள்ள வசதியாகவும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. நேபாளத்தின் வழியாகப் போகிறவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்கள் வீட்டிலேயே "ட்ரெட் மில்" பயிற்சி எடுத்துக் கொண்டு வருவது நல்லது என்றும், யோகா, தியானம், நடைப் பயிற்சி முதலியன மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது. இதிலே எனக்கு என்னோட மருத்துவர் இதுவரை எடுத்த எல்லா டெஸ்ட்களிலேயும் "ட்ரெட் மில்" மட்டும் வேண்டாம் என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். நான் கைலை யாத்திரை போனதும், வந்ததும் இன்னும் அவருக்குத் தெரியாது. மருத்துவப் பரிசோதனை நம் குடும்ப டாக்டரிடம் மேற்கொண்டு வரச் சொல்கிறார்கள். யாருமே அப்படிச் செய்யவில்லை, நாங்கள் இரண்டு பேரும் உள்பட. சிலர் மட்டும் வீட்டிலேயே ட்ரெட் மில் பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் யோகா,நடைப் பயிற்சி முதலியன மேற்கொண்டிருந்தாலும் அது மட்டும் போதாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் தங்கள் தங்கள் பொறுப்பிலேயே வருமாறு கூறப்பட்டனர். எங்களுடன் வந்த டாக்டர் திருமதி நர்மதா அவர்கள் ஒரு இருதய நோயாளி. திறந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டவர். மேலும் இரண்டு பேர் கணவன், மனைவி இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். சில பேர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் பொதுவாக ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை உடல் நலத்தில் இருந்து வந்தது. ரெயிலில் வந்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து காயம் பட்டிருந்தது.

இம்மாதிரியான ஒரு குழுவாகத் தான் நாங்கள் இருந்தோம். எங்களுடன் கைலை வரை வரப் போகிற "எகோ ட்ரக்" சிப்பந்திகள் அறிமுகம் செய்யப் பட்டனர். பின் பயணம் பற்றி விளக்கப் பட்டது. மறுநாள் செவ்வாய் அன்று காலை நாங்கள் எல்லாரும் கிளம்பி ஹோட்டலில் இருந்து இரண்டு பஸ்களில் சீன எல்லை வரைப் பிரயாணம் செய்ய வேண்டும். அது ஒரு 150 கிலோ மீட்டருக்குக் குறையாது. பின் அங்கிருந்து நட்புப் பாலம் வழியாகக் கால்நடையாக நேபாள, சீன எல்லையைக் கடக்கவேண்டும். பின் அங்கிருந்து குழுவில் 4, 4 பேராகப் பிரிந்து ஒரு வண்டிக்கு 4 பேர் என்று ஒரு டொயோட்டா காரில் திபெத்தில் உள்ள நியாலம் என்னும் ஊரை அடைய வேண்டும். அதுவே சிறிது உயரம் உள்ள ஊர். மறுநாள் போகவேண்டியது இன்னும் உயரம். கால நிலை மாறும். குளிர் அதிகமாகும். ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். சிலருக்கு ஒத்துக் கொள்ளும். சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மயக்கம், வாந்தி போன்றவை வரலாம். அல்லது சுவாசிக்க முடியாமல் போகலாம்.கூடவே எடுத்து வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் கொடுத்தும் சரியாக வில்லை என்றால், gammao bag"-ல் படுக்க வைப்பார்கள். High altitude-ல் இருந்து சாதாரண நிலைக்குக் கொண்டு வரும்.ஆனால் அந்த நபர் திரும்ப மலை ஏற முடியாது. ஒரு முறை கீழே வரும் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் பின் கீழேதான் இறங்க வேண்டும். கூடவே சமையல் காரர்கள், பாத்திரம் தேய்ப்பவர்கள், மற்றும் சாப்பாடு பரிமாறுபவர்கள், போன்றவரும் அவர்களை மேற்பார்வை பார்க்க ஒரு ஆளும், எங்களுக்கு வேண்டியதைக் கவனிக்க ஒரு நம்பகமான ஆளும் நேபாள், சீன எல்லையில் மாறும்போது அங்கே இருக்கும் immigration office மற்றும் மேலே போகப் போகச் சீனமொழி, திபெத் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் ஒரு co-ordinator மற்றும் அன்னபூர்ணா ட்ராவல்ஸின் கைலை மனோஹர் போன்றவர்களும் வருவார்கள். எங்களுக்கு ஒரு சிவப்புப்பையும், தொப்பி ஒன்றும் ட்ராவல்ஸ் காரர்களால் அளிக்கப்படும். இரண்டும் அவர்கள் அன்பளிப்பு. அந்தப்பையில் இரவே கைலை யாத்திரைக்கு வேண்டிய துணிமணிகள் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப் பட்டோம். அவரவர் கையில் மேலும் ஒரு சிறிய பையில் அவரவருக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள், வழியில் சாப்பிட ஏதாவது தின்பண்டங்கள் ஊரில் இருந்தே கொண்டு வரச் சொல்லி விடுகிறார்கள். அவை மற்றும் ஒரு ஸ்டீல் ஃப்ளாஸ்க்கில் வெந்நீர்(இது காலை உணவின் போது எல்லாருக்கும் கொடுக்கப்படும். மீண்டும் இரவு தருவார்கள்). அது தவிர எலக்ட்ரால் பவுடர், க்ளூகோஸ் பவுடர், வயிறு சரியில்லை என்றால் உதவ மாத்திரைகள் போன்றவை வைத்துக் கொள்ள வேண்டும். அது நம் கையிலே நாம் போகும் வண்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர ட்ராவல்ஸ் காரர்களால் குளிருக்குப் போட்டுக் கொள்ளும் ஜெர்கின் வாடகைக்கு அளிக்கப் படுகிறது. போகிற இடத்தில் படுக்கை இல்லை என்றால் என்ன செய்வது? அதற்கு ஒரு "ஸ்லீப்பிங் பாக்" இதுவும்வாடகைக்குத் தான் தரப்படும். இவை தொலைந்தால் கட்ட வேண்டிய பணம் ரூ3,000/-. வாடகை ஜெர்கினுக்கு ரூ500-ம், தூங்கும் பைக்கு ரூ, 250-ம் வாங்குகிறார்கள். நல்லவேளையாக எங்களிடம் சொந்தமாக ஜெர்கின் இருந்ததால் அது வாங்கிக் கொள்ள வில்லை. ஸ்லீப்பிங் பாக் இல்லாமல் முடியாது. ஒருவேளை தங்க "மட் ஹவுஸ்" கிடைக்காமல் கூடாரத்தில் தங்க நேர்ந்தால் என்ன செய்வது? ஆகவே அதை வாங்கிக் கொண்டோம். பணம் மேலே ரூமில் இருந்ததால் ஸ்லீப்பிங் பாக்கைக் கொடுக்கும்படியும், மேலே போய் எடுத்து வந்து யாராவது ஒருத்தர் கொண்டு தருகிறோம் என்று கேட்டதற்குக் கண்டிப்பாக மறுக்கப்பட்டுக் கையில் கொடுத்ததை வாங்கி வைத்து விட்டார்கள். ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இவர்களை நம்பி நாம் கிட்டத்தட்ட 55,000 ரூ கொடுத்துள்ளோம் ஒரு 250/-ரூக்கு நம்பவில்லை. அந்த ஹோட்டலை விட்டு நாங்கள் திடீரென எங்கே போய்விடுவோம். ஒருவிதமான கலக்கத்துடனேயே போய்ப் பணத்தை எடுத்து வந்து கொடுத்து விட்டு வாங்கிக் கொண்டோம். நாம் எடுத்து வைத்துக் கொண்ட பொருட்கள் தவிர மேலும் இருக்கும் துணிமணிகள், மற்ற சாமான்களை நாம் ஏற்கெனவே கொண்டு வந்த பையில் போட்டு வைத்துவிட்டால் ஹோட்டல்காரர்கள் ஒரு அடையாளச் சீட்டுக் கொடுத்துவிட்டுப் பாதுகாப்பாக வைக்கிறார்கள். லாக்கரும் இருப்பதால் தேவைப்பட்ட பணம் எடுத்துக் கொண்டு மிச்சப் பணம், மற்றும் விலை உயர்ந்த நகைகள் போட்டுக் கொண்டு போட்டிருந்தால் அவற்றையும் ஹோட்டலிலேயே லாக்கரில் வைக்கலாம். இரண்டு சாவி போட்டால் மட்டுமே திறக்க முடிந்த அதன் ஒரு சாவியை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாம் கேட்டுக் கொண்டு மீட்டிங் முடிந்து சாமான்களைப் பாக் செய்து அறைக்கு வெளியில் வைக்கச் சொன்னார்கள். கைலை யாத்திரைக்கு வேண்டிய பை(ட்ராவல்ஸ் காரர்கள் கொடுத்த சிவப்பு பை) அறைக்கு வெளியே வைத்தோம். இந்தப் பைகள் ஒரு ட்ரக்கில் மொத்தமாக ஏற்றப்பட்டு எங்கள் கூடவே அந்த ட்ரக் வரும். மற்றொரு ட்ரக்கில் சமையல் சாமான்கள், காஸ் அடுப்புக்கள், சிலிண்டர்கள், பழங்கள், காய்கறிகள், ஊறுகாய் வகைகள், பால் பதப்படுத்தப்பட்டது முதலியன வருகிறது. ஒவ்வொரு நாளும் சாயங்காலம் நாங்கள் தங்கும் கேம்ப் வந்ததும் பைகள் எங்களுக்குக் கொடுக்கப் படும். எல்லாம் முடித்து அன்றிரவு படுக்கும்போது இரவு கிட்டத் தட்ட ஒரு மணி ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் எழுப்பி விடுவார்கள்.

9 comments:

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா சரி த்ரில்லிங்க இருந்துருக்கும் போலிருக்கே :0 அய்யோ சொக்கா எனக்கில்லே எனக்கில்லே.. :(

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா சரி த்ரில்லிங்கா இருந்துருக்கும் போலிருக்கே :0 அய்யோ சொக்கா எனக்கில்லே எனக்கில்லே.. :(

Prasanna Parameswaran said...

கீதா மேடம்: ஒரு வேண்டுகோள்! பதிவுகளை கொஞ்சம் சின்னதா போட்டீங்கன்னா படிக்கறதுக்கு வசதியா இருக்கும்! இது வேகமான உலகம்! பொறுமையா படிக்கறதுக்கு நிறைய பேருக்கு தெரியாது (என்னையும் சேர்த்து!) இன்னொருதடவை படிச்சுட்டு வந்து பின்னூட்டம் இடுகிறேன்! :)

Prasanna Parameswaran said...

அப்பாடி படித்துவிட்டேன்! நல்லாஇருக்கு உங்கள் பயண அனுபவம் மாதிரி தெரியர்து! இப்போதைக்கு இதுக்கு மேல் எதுவும் சொல்ல தெரியலை! மேற்கொண்டு படிவிடுங்கள் படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்!

Porkodi (பொற்கொடி) said...

indian angel, oralavu vishayam solla konjam padhivu perisa than irukum.. illana niraya padhivu agaradoda, each post will have lesser content. porumaiya sat-sun padinga enna madiri :)

Geetha Sambasivam said...

பொற்கொடி, எத்தனை தரம் சொல்லி இருக்கீங்க! அப்புறம் உங்களைப் பத்தியும் ஒரு பதிவு வரப் போகுது. தயாரா இருங்க! :D

Geetha Sambasivam said...

இந்தியத் தேவதைக்கு,
விஷயம் எல்லாம் சொல்லணும்னு எழுத ஆரம்பிச்சாப் பதிவு நீளமாத் தான் இருக்கு. இதனாலேயே சிலபேர் என்னோட பதிவுக்கு வரது இல்லை. அதுவும் தெரியும். ஆனால் எதைக் குறைக்கனு புரியலை. நான் எழுதுவது ஒரு நாள் பூரா நடக்கும் நிகழ்ச்சிகளை. கொஞ்சம் பொறுமையாப் படிங்களேன். வந்ததுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

பொற்கொடி, ரொம்ப நன்றி, உதவிக்கு. ஆனாலும் சிலர் நீளம் என்றுதான் சொல்லுகிறார்கள். முத்தமிழ்க்குழுமத்தில் மட்டும் எத்தனை நீளமான பதிவாய் இருந்தாலும் ஒண்ணும் சொல்றது இல்லை.

Geetha Sambasivam said...

வேதா, இதுக்கே பெண்டு நிமித்திட்டாங்கன்னா உண்மையா பெண்டு நிமிரப்போகும்போது என்ன சொல்வீங்களோ? சாமான் லிஸ்ட் இன்னிக்குக் கொடுக்கிறேன், பாருங்க.