எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, October 30, 2006

45. ஓம் நமச்சிவாயா-16

பிரம்மாவின் புத்திரரான மரீசி மஹரிஷி ஒரு முறைக் கைலையில் பரமேஸ்வரனைக் குறித்துத் தவம் செய்ய முற்பட்டார். அங்கே உள்ள ரிஷி, முனிவர்கள் உதவியுடனும், அன்னையான சர்வேஸ்வரியின் துணையுடனும், 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி சிவனை ஆராதிக்கத் திட்டம் இட்டார். தாந்திரீக முறையில் நீராடிய உடனே ஈர உடைகளோடுதான் வழிபாடு தொடங்க வேண்டும் என்று நியதி. கோடை முடிந்து குளிர்காலம் வந்து கைலையில் உள்ள நீர் முழுதும் பனிக்கட்டியாக மாறி விட்டது. நீராடவோ, மற்ற பூஜா முறைகளுக்கோ ஒரு சொட்டு நீர் கூட இல்லை. எல்லாரும் தண்ணீருக்கு என்ன செய்வது என யோசிக்க மரீசி மஹரிஷி தன் தந்தையான நான்முகனை வேண்ட நான்முகனும் அவர் முன் தோன்றினார். நான்முகனோ கைலைநாதனை வேண்ட அங்கிருந்த பனிக்கட்டிகள் உருகி, ஆறாகப் பெருகி, ஏற்கெனவே தாட்சாயணியின் அங்கம் வீழ்ந்து ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து நிரம்பியது. இது ஓர் அழகிய ஏரியாக உருவெடுத்தது. பிரம்மாவின் கருணையால் உருவான இந்த ஏரி அவருடைய மனதே கருணை பொருந்தியது என நிரூபிக்கும் வண்ணம் "மானசரோவர்" என்று பெயர் பெற்றது. "மான" என்றால் மனதைக் குறிக்கும் சொல். சரோவர் என்றால் பெரிய நீர் நிலை என்று பொருள். இமவான் இதை அறிந்த தத்தாத்ரேயர் அங்கேயே ஒரு குகை ஒன்றில் தவம் செய்துவிட்டு, இமயமலையில் உள்ள மற்ற புண்ணிய ஸ்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு அங்கேயே தங்கி விட்டதாகவும், இன்றைய நாளில் கூட அவரது தரிசனம் காடுகளில் சிலருக்குக் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

மானசரோவர் ஏரியானது உலகிலேயே மிக உயரத்தில் அமைந்தது. சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தின் மேற்குப் பகுதில் அமைந்துள்ளது. திபெத் என்றால் சம்ஸ்க்ருதத்தில் "த்ரிவிஷ்டம்" என்று பொருள் என்றும் அதற்கு "ஸ்வர்க்கம்" என்று அர்த்தம் என்றும் கூறுகிறார்கள். தன்னுடைய கடைசிக்காலத்தில் தன் தவம் முடிந்து அர்ஜுனன் இங்கேதான் இந்திரன் அனுப்பிய ரதத்தில் சென்றதாகக் கூறுகிறார்கள். மானசரோவர் இரு பெரும் மலைகளுக்கு இடையே குன்றுகளால் சூழப்பட்ட பிரதேசத்தில் உள்ளது. இதன் வடக்கே தான் நாம் அடுத்துத் தரிசிக்கப் போகும் திருக்கைலாய மலை. தெற்கே ரகுவம்சத்தில் உதித்த மாந்தாதா என்னும் மன்னன் தவம் இருந்த மாந்தாதா மலை 5 சிகரங்களுடன் காட்சி அளிக்கிறது. இந்த அரசன் ராமருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் ரகுவம்சத்தில் உதித்தவன். கடல் போன்ற இந்தப் பெரிய ஏரியானது 88 கி.மீ சுற்றளவுடன் 24 கி.மீ அகலம் கொண்டது. இதன் பரப்பு 320 சதுர கி.மீ. ஆழம் 90 மீட்டர்கள். இதை ஒரு முறைப் பிரதட்சிணம் செய்ய வண்டியிலேயே எங்களுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆனது. சுற்றி வர 120 மைல்கள். நடந்து சுற்றி வர சுமார் 2 நாட்கள் நமக்குத் தேவைப்படும். ஆனால் திபெத்தியர்கள் ஒரே நாளில் முடிக்கின்றனர். இது போன்பாஸ்" எனப்படும் திபெத்தியருக்கு மட்டும் இல்லாமல் இந்துக்கள், பெளத்தரகள், ஜைனர்கள் எல்லாருக்கும் புனிதமானதாக இருந்து வருகிறது. மானசரோவரின் ஒவ்வொரு பக்கத்துக் கரையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒரு பக்கம் கற்களால் சூழப்பட்ட கரை. ஒரு பக்கம் கடற்கரை போன்ற நீண்ட கரை. இன்னொரு பக்கம் மலைகளால் சூழப்பட்டது. இப்படி ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. கரையில் அலைகள் வந்து மோதுகின்றன. நடுவில் அமைதியாகத் தோற்றம் அளிக்கிறது. ஏரி நீரில் அன்னப் பறவைகள் நீந்துகின்றன. முதலில் நாங்களும் வாத்துக்கள் என்றுதான் நினைத்தோம்.ஆனால் அவை இல்லை. பல பறவைகள் வந்து அங்கே விளையாடிச் செல்கின்றன. கரையில் சில இடங்களில் பல வண்ணங்களில் கற்கள் கிடைக்கின்றன. சிவலிங்க சொரூபமாகக் கருதப்பட்டு பக்தர்களால் அவை கொண்டு வரப்படுகின்றன.

மானசரோவர் இருக்கும் பிராந்தியத்தில் தான் நான்கு முக்கிய நதிகளின் மூலஸ்தானங்கள் இருக்கின்றன. இந்த ஏரிக்குத் தென்கிழக்கே 99 கி.மீ. தொலைவில் "செமாயாங்டுங்" எனும் பனி மூடிய சிகரத்தில் இருந்து "பிரம்ம புத்ரா"வும், வடகிழக்கில் 99 கி.மீ. தூரத்தில் "செஞ்ச்காம்பாப்" என்னும் இடத்தில் இருந்து "சிந்து" நதியும், கிழக்கே 48 கி.மீ. தொலைவில் "டால்ச்சு கோபா" வுக்கு அருகில் இருந்து "சட்லெஜ்" நதியும், தென் கிழக்கே 48 கி.மீ.தூரத்தில் "மாப்சா கங்கோ" என்னும் இடத்தில் இருந்து கர்னாலி நதியும் உற்பத்தி ஆகின்றன. மானசரோவர் சக்தி பீடம் என்று ஏற்கெனவே பார்த்தோம். அங்கே தினமும் பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் 3-00 மணி முதல் 4-00 மணி அளவில் வடக்கே கைலை மலையில் இருந்து ஒரு ஜோதி வந்து ஏரியில் ஐக்கியம் ஆவதாயும்,அது "சிவசக்தி சொரூபம்" என்றும் தினமும் அது நிகழ்வதாகவும் எங்களுக்கு முன்னால் போய்த் திரும்பியவர்கள் சொன்னார்கள். சிலர் தினமும் தேவர்கள் தீப ஒளி போல தீபத்தை ஏற்றி வந்துப் பூஜை செய்வதாயும், கரையில் இருந்து பல விளக்குகள் போல ஒளி தெரிந்து நடு மையத்தில் மறைவதாயும் சொன்னார்கள்.

நாங்கள் ஒரு வழியாக மானசரோவர், கைலை முதல் தரிசனம் செய்யும் இடம் வந்து சேர்ந்தோம். திபெத்திய வழக்கப்படி தோரணங்கள் கட்டப்பட்ட ஒரு கூடார வடிவிலான இடத்தை எல்லா வண்டிகளும் மும்முறை சுற்றி வந்து மானசரோவரின் கரையில் நின்றன. எங்களுக்கு நேர் எதிரே மானசரோவர், வலது பக்கம் கைலை மலை. மானசரோவரில் இருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது என்றார்கள். இதன் நிழல் எப்படி மானசரோவரில் விழும்? எனக்குப் புரியவில்லை. முன்னால் இத்தனை மலைகள் இருக்கின்றனவே, கைலையின் சிகரம் மட்டும் தான் தெரிகிறது, என்று யோசித்தவாறே இருந்தேன். வண்டி ஓட்டிகள் எல்லாரும் கீழே இறங்கி மானசரோவரின் பக்கமும்,கைலையின் பக்கமும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். ஒரு முறை இல்லை மூன்று முறை. சிலர் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டும் செய்தனர். பின்னர் நாங்கள் அனைவரும் வண்டிகளில் ஏறி மானசரோவரின் "பரிக்ரமா" என்று சொல்லப்படும் பிரதட்சிணத்திற்குத் தயார் ஆனோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் குறைவு என்பதாலும், கைலை பரிக்ரமா வேறு இருப்பதாலும் மானசரோவரின் பரிக்ரமாவை நாங்கள் வண்டிகளிலேயே உட்கார்ந்த வண்ணம் செய்தோம். இதிலும் எங்கள் டிரைவர் எல்லாரும் போகும்வழியில் போகாமல் தனிவழியில் சென்றார். ஒரு இடத்தில் மலைப்பாங்கான பாறைகளில் பாதையே இல்லாமல் கிட்டத்தட்ட ஏரிக்குள் சற்றுத் தூரம் காரைச் செலுத்தும்படி ஆயிற்று. பின் நாங்கள் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். "சன்ஸ்கார்" சானலில் தினமும் "கங்கா தீபம்" ஏற்றிப்பாடும் "பரமார்த்த நிகேதனின்" ஸ்வாமிஜி "சிதானந்தாவின்" முயற்சியால் சிலவெளிநாட்டு குஜராத்தியர்களின் பண உதவியால் கட்டப்பட்ட ஆசிரமம், மற்றும் தங்கும் விடுதி. அறைகள், பஜனைக்கூடம், சாப்பிடும் இடம்,சமையல் அறை எல்லாம் நன்றாக இருக்கிறது, கழிப்பிடத்தைத் தவிர. இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று புரியவில்லை. நாங்கள் அங்கு போய் அறைகளுக்குப் போனதும் இரவு 8-00 மணி அளவில் கூட்டுப் பிரார்த்தனை, பஜனை மற்றும் மீட்டிங் என்று அறிவிப்புச் செய்தார்கள்.

3 comments:

Geetha Sambasivam said...

வேதா, குறிப்பெல்லாம் எடுத்துக்கலை. எல்லாம் கேட்டு வச்சுக்கறது தான். அப்போ அப்போ சந்தேகம் உயரத்தில் வந்தா அட்லஸையோ அல்லது எங்களுக்கு ட்ராவல்ஸ்காரர்களால் கொடுக்கப்பட்ட பிரயாண அட்டவணையையோ சரி பார்த்துக் கொள்வேன். மற்றபடி அங்கே போகிறதுக்கு முன்னாலேயே இதன் பிரதட்சிணத்திற்கு 2 நாள் ஆகும் என்றும் காரில் சுற்ற 3 மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதும் தெரியும். போனவர்கள் எழுதியதைப் படிச்சிருக்கேன். அதான் விஷயம்.
ம்ம்ம்ம் இந்த ப்ளாக்குக்குப் பாருங்க எழுதி 2 நாளாச்சு, உங்களைத் தவிர யாரும் வந்து எட்டிக் கூடப்பார்க்கலை. ஆன்மீகம்னால் எல்லாருக்கும் கொஞ்சம் தள்ளுபடியா அல்லது நான் எழுதறது சரியில்லையா புரியலை.

தி. ரா. ச.(T.R.C.) said...

அங்கே தினமும் பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லப்படும் 3-00 மணி முதல் 4-00 மணி அளவில்
பிரும்ம முஹூர்த்தம் என்பது காலை 4.30 Tஓ 6.00 மணிவரை என்றுதான் நான் கேள்விபட்டு இருக்கிறேன். இது ஒரு புதுத் தகவல்.

பயனுள்ள விஷயங்களை எந்த எந்த இடத்தில் சொல்லவேண்டுமோ சரியாகச்சொல்லுகிறீர்கள்.போட்டோ மாத்திரம் போட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்.
கைலசமலையைத்த்தான் பார்க்கமுடியவில்லை சரி பார்த்தவர்களையாவது பார்க்கலாம் என்றால் அதுவும் முடியவில்லை.

Geetha Sambasivam said...

பிடிவாதம் எல்லாம் ஒண்ணும் இல்லை, அதான் போட்டோ ஆல்பம் கொடுத்தேனே? மேலும் எனக்கு உதவி செய்கிறவங்களுக்கு இப்போ வேலைத் தொந்திரவு. அவங்க வேலையிலே இவ்வளவு செய்கிறதே பெரிய விஷயம், அதிலே நாம் வேறே தொந்திரவு செய்ய வேண்டாமேன்னு தான் பேசாம இருக்கேன். நான் ஏதாவது செய்யப் போய் அது எல்லாம் போயிட்டதுன்னா?