எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, November 06, 2006

ஓம் நமச்சிவாயா-17

மானசரோவர் ஏரிக்கரையில் அன்று சாயங்காலம் போய்ச் சேர்ந்தோம். போகும்போதே ஒரு

பக்கக் கரையில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் கைலை மலையின் நிழல் ஏரியில் விழுந்திருந்தது. அம்மனும், அப்பனும் ஐக்கியமாகி நின்ற காட்சியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றது. உண்மையில் திருக்கைலாயம் கூட ஒரு சக்தி பீடம் தான் என்று சொல்கிறார்கள். அன்னையின் உடல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டபோது உடலின் கொழுப்புப் பூராவும் கைலைமலையில் விழுந்ததாகவும், அதனால் தான் கடும் கோடையில் கூட மற்ற மலைகளில் இருந்து பனி உருகினாலும் கைலை மலையில் பனி உருகாமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து தரிசனம் செய்தால் அர்த்த நாரீஸ்வரர் தரிசனம் என்றும் கூறு கிறார்கள். ஏரியின் அமைதியான கரையை ஒட்டிக் கட்டப் பட்டிருந்த "பரமார்த்த நிகேதன்" ஐச் சேர்ந்த ஆசிரமக் கட்டிடங்களில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

மறுநாள் காலை மானசரோவரில் குளித்துப் பூஜை முதலியன செய்யவும், பின் அன்று மதிய

உணவுக்குப் பின் தயாராகிக் கைலையின் "Base Camp" என்று சொல்லப் படும் தார்ச்சனில்

போய்த் தங்கவும் அதற்கு மறுநாள் காலை "கைலை பரிக்ரமா" செய்யப் போவது பற்றிப் பேசவும் அன்று கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எங்களுக்கு அளிக்கப் பட்ட அட்டவணையில் மானசரோவரில் நீராடி தகுந்த சன்னியாசிகளைக் கொண்டோ அல்லது சிவாச்சாரியார்களைக் கொண்டோ வேள்வி செய்து மூர்த்தங்கள் எடுத்துக் கொள்ளலாம்

என்றும், காசியில் செய்வது போலவே இங்கும் வேணி தானம், தம்பதி பூஜை, தீப வழிபாடு,

முன்னோர் வழிபாடு முதலியவை செய்து தரப்படும் என்று கொடுத்திருந்தார்கள். அது பற்றி

எந்தவிதமான ஏற்பாடும் செய்ததாய்த் தெரியவில்லை. ஏன் எனில் எங்களுடன் எந்த

சிவாச்சாரியாரோ அல்லது சன்னியாசியோ வரவில்லை. பின் என்ன செய்யப் போகிறார்கள்

ஒன்றும் புரியவில்லை. எல்லாரும் அதுபற்றிக் கேட்டதற்குப் பதிலும் இல்லை. பின் கைலை

பரிக்ரமாவிற்கு வேண்டிய குதிரைகளுக்கு அன்றே ஆள் அனுப்பி ஏற்பாடு செய்ய வேண்டும்

என்பதால் பரிக்ரமாவிற்கு யார் யார் வரப் போகிறீர்கள், யார், யார் தங்கப் போகிறீர்கள் என்று

கேட்கப் பட்டது. அநேகமாய் எல்லாரும் போவது என்று முடிவு செய்தோம். டாக்டர்

நர்மதாவையும், இன்னொரு பெண்மணி தன்னால் குதிரைச் சவாரியோ அல்லது நடந்தோ

வரமுடியாது என்றதால் அவரும் தங்கப் போவதாய் முடிவு ஆனது. ஒருத்தருக்கு ஒரு குதிரை,

அதனுடன் குதிரைச் சொந்தக்காரர், நாம் கையில் எடுத்துப் போகும் சாமான்கள் உள்ள பையைச் சுமக்கும் ஒரு பணியாள் தேவைப் படும். கையில் எடுத்துப் போகும் பையில் ஒரு மாற்று உடை, அதிகப்பட்சத் தேவைக்கான உள்ளாடைகள், குளிருக்கான ஆடைகள், மழை

பெய்தால் போட்டுக்கொள்ள ரெயின்கோட், வழியில் சாப்பிட ஏதும் சிற்றுண்டி அல்லது பிஸ்கட்,

கடலை, பாதாம் போன்ற பொருட்கள் அடங்கியது. இதைக் குதிரையில் உட்கார்ந்து போகும்

நாம் சுமக்கமுடியாது என்பதால் அதற்கு ஒரு ஆள் சுமந்து வருவார். இவர் நமக்கு நாம் பரிக்ரமாவில் நடக்கும்போதும் உதவி செய்வார். நம்முடைய உதவி ஆள் நமக்கு மட்டுமே உதவி செய்வார். கூடவே வரும் நம் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உதவ மாட்டார்.

இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒருத்தருக்கு 1,020 யுவான்கள் கணக்குப் போட்டு வாங்கினார்கள்.

எல்லாரும் குறைக்கச் சொன்னதுக்கு இதுவே குறைத்திருப்பதாயும்,,பொதுவாய் 1,200 யுவான்கள் ஆகும் என்றும் சொன்னார்கள். கிட்டத்தட்ட 12,300 இந்திய ரூபாய்கள் ஆனது இருவருக்கு. பணத்தைக் கொடுத்துவிட்டுக் கூட்டுப் பிரார்த்தனை முடிந்து சாப்பிட்டுவிட்டுப் பின் படுக்கப்
போனோம்.

இரவில் வரும் சிவஜோதி எனப்படும் சிவசக்தி ஐக்கியத்தைக் காண எல்லாரும் ஆவலாய் இருந்தோம். இதில் எங்களுக்கு நேரம் தவறாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி 3-30 மணியில் இருந்து 6-00 மணி வரை என்றால் சீன நேரம் மணி காலை ஐந்துக்கு மேல்

ஆகி விடும். நாங்கள் இந்திய நேரமா சீன நேரமா என்ற குழப்பத்தில் இரவு பூரா

விழித்திருந்தோம். கடைசியில் சுமார் 3-30 மணி அளவில் ஒரு நட்சத்திரம் போன்ற ஒன்று

மானசரோவர் ஏரியில் விழுந்ததைச் சிலர் பார்த்தோம். சிலர் அது இல்லை என்று சொன்னார்கள்.

சிலர் அதுதான் என்றார்கள். எப்படியோ ஒரு வித்தியாசமான அனுபவமாய் அமைந்தது,அந்தக்

குளிரில் இரவில் ஏரிக்கரையில் வீசும் காற்றைப் பொருட்படுத்தாமல் உட்கார்ந்து கொண்டு இருந்ததும், ஏரியின் நீர் பல பல வண்ணங்களைக் காட்டிப் பிரதிபலித்ததும். ஏதோ

மர்மத்தைத் தன்னுள் அடக்கி இருப்பதுபோலவும் தோன்றியது. உண்மையில் அந்த இரவில்

வானில் தொட்டுவிடும் போல் தொங்கிய நட்சத்திரங்களும் நட்சத்திர வெளிச்சத்தைப் பிரதி

பலித்த ஏரியும் ஒரு சொர்க்கம் போலக் காட்சி அளித்தது. நட்சத்திரம் மின்னி மின்னி

அடங்கும் போது எங்கே நம்மேல் வந்து விழுமோ என்ற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.

கையால் பறிக்கலாம், பறித்து மாலை தொடுக்கலாம் போல் உள்ள நட்சத்திரங்கள் கொட்டிக்

கிடக்கிற ஆழ்ந்த கரிய நிறம் கொண்ட வானமும், நட்சத்திர ஒளியால் சற்றே மினுமினுக்கும்,

சத்தமில்லாமல் அலைகள் வந்து அடிக்கும் ஏரியும் பார்க்கப் பார்க்க அற்புதமாய் இருந்தது. எங்கே இருந்து இத்தனை நட்சத்திரங்கள் வந்தன என்றே புரியவில்லை. தொட்டு விடும் தூரத்தில் அவை தெரிவதால் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதும் புரிந்தது. ஒருவழியாக எல்லாரும் படுக்கப் போனோம்.

காலை சற்று நேரம் கழித்துத் தான் எழுப்புவோம் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தார்கள்.

காலை "ப்ளாக் டீ"யுடன் எழுப்பினார்கள். சிலருக்குச் சந்தேகம். ஏன் "ப்ளாக் டீ"யுடன்

தினம் எழுப்புகிறார்கள் என்று. அதற்குக் காரணம் அவ்வளவு குளிரில் காலை கறுப்புத் தேநீர்

உடலின் ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து, சுத்தப் படுத்திக் காலை நாம் நம் வேலையைச்

சுறுசுறுப்புடன் செய்யத் தயாராக்குகிறது. இதன்பின் தான் வெந்நீர் கொடுத்துக் காலைக்கடன்கள் முடித்துக் காலை ஆகாரம் கொடுக்கிறார்கள். இன்று மானசரோவரில் குளிப்பதாய் ஏற்பாடு செய்திருப்பதால் ஏரிக்கரையில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்கெனவே இருந்ததில் கொண்டு போயிருந்த பெரிய காஸ் அடுப்பை வைத்துப் பெரிய பாத்திரத்தில் வெந்நீர் போட்டுக்

கொண்டிருந்தார்கள். சக்தி உள்ளவர்கள் முதலில் மானசரோவரில் கரைக்கு அருகேயே உள்ளே அதிகம் போகாமல் இறங்கிக் குளித்துவிட்டுப் பின் அவர்கள் கொடுக்கும் வெந்நீரை வாங்கி

ஊற்றிக் கொண்டுப் பின் அங்கே உடை மாற்றக் கட்டி இருக்கும் டெண்டில் போய் உடை

மாற்றவேண்டும். முடியாதவர்கள் வெந்நீர் மட்டும் வாங்கிக் குளிக்கலாம். என்று சொன்னார்கள். குளிர் அதிகம் என்பதாலேயே சூரியன் வந்ததும் குளிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. எல்லாரும் குளித்துமுடித்துப்பின் பூஜைக்குத் தயார் ஆகும்போது மணி 12-00 ஆகி விட்டது. பூஜைக்கோ அல்லது முன்னோர் வழிபாடு செய்து கொடுப்பதற்கோ ஆள் இல்லை என்ன செய்யப் போகிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. அங்கே ஹோமம் செய்ய ஏரிக்கரையில் அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய பெரிய கற்களைக் கொண்டு வந்து அடுக்கி, எல்லாரும் கொண்டு வந்த சிவன் படங்கள், சிலர் சிவலிங்கம் கொண்டு வந்திருந்தனர். இவற்றை

வாங்கி அலங்காரம் செய்து எல்லாரும் கொண்டு போயிருந்த விளக்கில் நெய் கொண்டு

போயிருந்தோம்,அதில் தீபம் ஏற்றி எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்துத் தயார் ஆனோம்.

2 comments:

மலைநாடான் said...

கீதா அம்மா!

படிப்பவர்கள் தொகை குறைவாக இருக்கிறதென்று கவலைப்படாதீர்கள். உங்கள் பணியை தொடர்ந்து மாறா உற்சாகத்துடன் செய்யுங்கள். அதற்கான பெறுமதி மிக அதிகம்.

பதில்தராவிட்டாலும் கூட இத்தொடரை நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். மிக அருமையாக, பொருத்தமான விளக்கங்களுடன் எழுதிவருகின்றீர்கள். பாராட்டுக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒரு மாதிரியா கைலாசத்துக்கு கூட்டிவந்துட்டீங்க.நல்லா படமா போட்டு மலைய காமிங்க.அதுக்குன்னு வௌவ்வால்மாதிரி தலகீழா தொங்கவைக்க கூடாது.