என்னிடம் கேட்ட மாதிரி ஸ்ரீலட்சுமிக்கும் முடியலைன்னதும் அவரிடமும் திரு கிருஷ்ணா கேட்டார்.
ஸ்ரீலட்சுமி தான் தொடரப் போவதாய் அறிவித்தார். அவருடைய சிநேகிதிகளின் துணையுடன் தான்
வருவதால் தனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை என்றும் தெரிவித்தார். மற்றபேர் எல்லாரும் தொடரப்
போவதாய்ச் சொல்ல, அதற்குள் நாங்கள் இருவரும் கலந்து பேசிக் கொண்டு பிரயாணத்தைத்
தொடருவதில்லை என முடிவு செய்து அதைத் திரு கிருஷ்ணாவிடம் தெரிவித்தோம். அவரும் என்
உடல்நிலையில் தொடருவது ரொம்பவே கஷ்டம் என்றும், நீங்கள் எடுத்தது சரியான முடிவுதான்,
அதனால் சோர்வு அடைய வேண்டாம் என்றும் இரண்டு முகம் தரிசனம் கிடைத்தது அல்லவா?
அதனால் நீங்கள் சந்தோஷமாய்த் திரும்பி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் ஆறுதல்
சொன்னார். நாங்கள் கேம்ப் இறங்கி இருக்கும் இடத்தில் எங்களுக்கு நேர்முகமாய்க் கைலையின் ஒரு
முக தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த முக தரிசனம் ஐயன் தன் சடாமுடியை விரித்துக்
கொண்டு ஆடும் தோற்றம் போலக் காட்சி தந்தது. சுற்றிலும் நட்சத்திரங்கள் மாலை போல அணி
வகுக்க அந்த இருண்ட வானில் வெள்ளை வெளேர் என்ற பனி படர்ந்த கைலைமலைச் சிகரமானது
ஐயனின் இன்னொரு பக்க முகத் தரிசனத்தைக் காட்டி நின்றது. காலைச் சூரிய ஒளியில் அதன்
தரிசனம் வேறு மாதிரிக் காட்சி அளிக்கும் என்றும், "பொன்னார் மேனியனே!" என்று சுந்தரர்
விளித்ததற்கு ஏற்பக் காலைச் சூரியனின் பொற்கிரணங்கள் பட்டுத் தங்கம் போல் தகதகவென்று
ஜொலிக்கும் என்றும் சொன்னார்கள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத செளந்தரியமான காட்சி. ஆனால்
இரு முகம் தான் பார்க்க முடியும் என்பது சற்று வருத்தமாய்த் தான் இருந்தது. இது இப்படி நேரும்
என்றுதான் முன்னாலேயே பசுபதிநாதர் கோவிலில் கூட எங்களால் நின்று கூட மற்ற இரு முக
தரிசனம் காணப் பெற முடியவில்லை போலும். அப்போதே இறைவன் சூசகமாய்த் தெரிவித்தானோ
என்னவோ?
இரவு என் கணவர் அசந்து உறங்க, எங்களுடன் தங்கி இருந்த மற்றப் பெண்கள் உதவ நான்
என்னோட சிலத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். என்னை எழுப்பி உட்கார்த்தி வைக்கத்
திரு ரமேஷ் ரொம்பவே உதவியாக இருந்தார். இரவு போய்ப் பொழுது புலர்ந்ததும் எல்லாரும் கிளம்ப
ஆயத்தமானார்கள். சிலருக்கு முதலில் 7 கி.மீ. நடக்கவேண்டும் என்று தெரியாமல் குதிரையைத்
தேட குதிரை எல்லாம் வேறு இறங்குமுகமாய் இறங்கிப் போக ஆரம்பிக்க எல்லாரும் நடைப்
பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஒவ்வொரு நாள் பரிக்ரமா ஆரம்பிக்கும் முன் காலை உணவுக்குப்
பின் சில ஜூஸ் வகைகள், அல்லது பெப்ஸி, கோலா போன்ற குளிர்பானவகைகள், பிஸ்கட் வகைகள்
முதலியன வழியில் சாப்பிடக் கொடுக்கிறார்கள். உணவு விஷயத்தில் தேவைக்கு மேல் அதிகமாய்த்
தான் கொடுக்கிறார்கள். நம்மால்தான் சாப்பிட முடிவதில்லை. நாங்கள் திரும்பத் தயாராய்
இருந்தோம். என்னால் நிற்க முடியவில்லை. இதிலேயே நதியில் கீழே இறங்கிச் சற்றுத் தூரம் நடந்து
போய் அக்கரையில் இருக்கும் குதிரையில் ஏறிக் கொண்டு போகவேண்டும். எப்படியும் நிற்காமல்
போவதால் 4 மணி நேரமாவது ஆகும். பரிக்ரமாவைத் தொடருகிறவர்கள் கிளம்பிப் போக என்
கணவரின் குதிரையைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிவந்தார்கள். நல்ல வயசான குதிரையாக
இருந்தது. மெதுவாகப் போகிறது. என்னோட குதிரை அதை வம்பிழுக்க, எனக்குப் பயம் வந்தது.
அப்புறம் என் கணவர் இம்முறை கூடவே வந்ததால் என்னோட உதவி ஆளிடம் கடிந்து கொண்டு
கூடவே வந்து எனக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு கூறினார். அதற்குள் என் கணவரின் உதவிக்கு
இருக்கும் பெண்மணி என்னை மிக ஜாக்கிரதையாகக் குதிரையில் ஏற்றி, உட்கார வசதி செய்து
கொடுத்துக் காலையும் சற்றும் அவிழாமல் இருக்கும்படி ,மாட்டி விட்டுத் தான் கூட வருவதாயும்,
பயம் வேண்டாம் என்றும் சைகை செய்தாள்.
எங்கள் பயணம் ஆரம்பித்தது. நதியில் போய்க் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் பைக்
எங்களைக் கடந்து சென்றது. திரு கிருஷ்ணா மோட்டார் பைக்கில் ஆளை அனுப்பி எங்களுக்குத்
திரும்பி தார்ச்சன் கேம்ப் போக மோட்டார் அனுப்ப உதவி செய்வதாய்க் கூறி இருந்ததால் அதான்
போகிறார்கள் என்று நினைத்தோம். அந்த மலைப்பாதையில் அந்த பைக்கில் ஓட்டுநரைத் தவிர
இன்னும் யாரோ இருந்தார்கள். தெரிந்தமுகமாய் இருந்தது. யாரெனத் தெரியவில்லை. ஒரு வழியாக
நாங்கள் 3,4 மணி நேரம் கழித்து முதல் நாள் நாங்கள் குதிரை ஏறின இடம் வந்து சேர்ந்து
குதிரையில் இருந்து நான் இறக்கி விடப்பட்டேன். என் கணவர் வந்து பிடித்துக் கொண்டு என்னை
இறங்க உதவி செய்ததால் சற்று சமாளித்துக் கொண்டேன். ஆனால் உட்கார இடமும் இல்லை.
எங்களுக்காக எந்த வண்டியும் வந்திருக்கவில்லை. மலைவாழ் மக்களுக்கு வேண்டிய சாமான்கள்
கொண்டு வந்த ட்ரக் ஒன்று தான் திரும்பிப் போக ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. யாரை என்ன
கேட்பது ஒன்றும் புரியவில்லை. ஒன்று சீன மொழியில் பேச வேண்டும், அல்லது திபெத்திய மொழி
தெரிந்திருக்க வேண்டும். விழித்துக் கொண்டு இருந்த போது காதில் தேன் பாய்ந்தது போல அந்த
ட்ரக்கில் வந்து பரிக்ரமாவிற்கு இறங்கிய ஒருத்தர் எங்களிடம் ஆங்கிலத்தில் பேசினார். என்னைப்
பார்த்துவிட்டு ஏன் இப்படி நிற்க முடியாமல் நிற்கிறார்கள்? என விசாரிக்க நாங்களும் சொன்னோம்.
உடனேயே எங்கே போகவேண்டும் என்று கேட்டுவிட்டு அந்த ட்ரக் ட்ரைவரிடம் எங்கள் தேவையைச்
சொன்னார். அவரும் சற்றுப் பொறுத்தால் எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டு எங்களை ஏற்றிக்
கொண்டு தார்ச்சன் கேம்பில் விடுவதாயும் அதற்குள் எங்கள் ட்ராவல்ஸ் வண்டியும் வந்துவிட்டால்
நல்லது என்றும் கூறினார். ட்ரக் ட்ரைவர் கொண்டு விட 50 யுவான்கள் கேட்க அப்போது வேறு
வழியும் இல்லை, வேறு எந்த உதவியும் வரவும் வழி இல்லை என்பதால் ஒத்துக் கொண்டோம்.
நிற்க முடியாம நின்ற 1/2 மணி நேரத்திற்குப் பின் அந்த ட்ரக் ட்ரைவர் என்னை மெதுவாய்த் தூக்கி
வண்டியில் உட்கார வைக்க என்கணவரும் உட்கார்ந்து கொள்ள எங்களை தார்ச்சன் கேம்பிற்கு
அழைத்துப் போனார். வழியில் எங்கள் ட்ராவல்ஸ் வண்டி வர, நாங்கள் நிறுத்தி விசாரித்ததற்கு
எங்களைப் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை எனவும் வேறு யாரோ 7 பேர் பாதியில்
திரும்புவதாகவும் அவங்களுக்காக வண்டி செல்வதாயும் கூற எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் இன்னொரு வண்டியுடன் எதிர்ப்பட எங்களை அடையாளம்
கண்டுகொண்டு அவர் விசாரிக்க, நாங்கள் கொடுத்த தகவல் அவருக்கும் புதிதாய் இருந்தது.
எங்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் 7 பேர் திரும்புவதாயும் அவரும் உறுதிப்
படுத்தினார். நாங்கள் அந்த ட்ரக்கிலேயே மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து தார்ச்சன் கேம்ப்
போய்ச் சேர்ந்து அங்கே உள்ள பெண்மணியிடம் சொல்லவே, எங்களுக்கு ஒரு அறையைத் திறந்து
கொடுத்தார் அந்தப் பெண்மணி. பெரிய ஃப்ளாஸ்க் நிறைய வெந்நீரும் கொடுத்துவிட்டு அவர் போக
என் கணவர் எங்கள் குழுவின் ஆட்களைத் தேடிப் போய் நாங்கள் திரும்பி விட்டதை
அறிவித்துவிட்டு சாப்பாடு வேண்டும் என்றும் சொல்லவே வெறும் சாதமும், தயிரும் மட்டும் வாங்கி
வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தோம். அதற்குள் டாக்டர் நர்மதாவைப் பார்த்த நான் அவங்க நிலைமை
ரொம்பவே மோசமாய் இருப்பதை அறிந்து கொண்டேன். அவங்களுக்கு infection ஏற்பட்டு
diarroheaநிற்காமல் போய்க் கொண்டிருந்தது. அவர் கணவர்தான் மோட்டார் பைக்கில் திரும்பி
இருக்கிறார். பிறகு அவர் என்னை மருந்து வேண்டுமா என்று கேட்க நான் வேண்டாம் இருக்கு என்று
சொல்லிவிட்டு மருந்துகளைச் சாப்பிட்டுவிட்டு, வலி குறையவும் மருந்துகள் சாப்பிட்டுவிட்டுப்
படுத்தோம். எங்களுக்குப் பின் சுமார் 2 மணி அளவில் குஜராத்தில் இருந்து வந்திருக்கும்
சிவநாராயணன், இன்னும் 2 பேர், பின் பங்களூரில் இருந்து வந்திருக்கும் மீராவும் அவர் கணவரும்
திரும்பினார்கள். திருமதி மீராவின் கணவருக்கு வீஸிங் ஜாஸ்தி ஆகவே அவர்கள் திரும்பி
இருக்கின்றனர். திரு சிவநாராயணன் குதிரையில் இருந்து விழுந்து அடிபட்டு ரத்தம் வந்து மயக்கம்
வரவே அவரும் மற்ற இருவரும் நடக்க முடியவில்லை என்பதாலும் திரும்பி விட்டனர்.
ஏற்கெனவே செந்திலும் குதிரையில் இருந்து விழுந்திருக்கிறார். ஆனாலும் சமாளித்துக் கொண்டு
போய்க் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்கள். திருமதி ஸ்ரீலட்சுமியும் குதிரையில்
உட்காரமுடியாமல் சரிந்து சரிந்து விழுவதாயும், திருமதி தாரகராமனும் உட்காரமுடியாமல் விழுந்து
விட்டதாயும் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். மறு
நாள் என்ன ஆனது? நாளை பார்ப்போமா?
இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டி இருக்கிறது. கர்நாடக அரசும், குஜராத் அரசும்
கைலைப் பயணம் மேற்கொள்கிற யாத்திரீகர்களுக்கு அவர்கள் எந்த வழியில் போனாலும் சரி,
இந்திய வழியானாலும் சரி, நேபாள வழியானாலும் சரி பண உதவி செய்கிறது. கர்நாடக அரசு நபர்
ஒருத்தருக்கு ரூ.25,000/-ம் கொடுக்கிறது. குஜராத் அரசு ரூ.50,000/- கொடுக்கிறது. இது எந்த அரசு
வந்தாலும், மாறினாலும் தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதனாலே எங்கள் குழுவிலே
கர்நாடகாவில் இருந்தும் சரி, குஜராத்தில் இருந்தும் சரி நிறையப் பேரைப் பார்க்க முடிந்தது.
பாண்டிச்சேரி முதல் மந்திரி தன் சார்பின் நிதி உதவி செய்து ஒருத்தரை அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால் யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பும் இந்திய அரசு எந்த நிதி உதவியும் செய்வதில்லை.
என்ன ஒரு வசதி என்றால் கூடவே நல்ல தரமான வண்டிகளுடன் சமையல்காரர், மருத்துவர்,
மருத்துவ வசதியுடன் கூடிய உபகரணங்கள் என்று பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் உண்டு.
செலவுகளை நாம் பங்கிட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக் கிடைக்கிறதே, அதுவே பெரிசு இல்லையா?
1 comment:
Iam continuously reading your payana katturai maami.Nan yeppovum padippen.
so many hurdles!neega poittu vandhadhaiyae nanum poittu vandha madhiri ninachukiren.Thanks for sharing so many details.--SKM
Post a Comment