எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, February 07, 2007

30.ஓம் நமச்சிவாயா

முக்திநாத் தலம் நேபாளத்தில் அமைந்திருந்தாலும் போகிற வழி சற்றுக்
கடினமானது. சுற்றிலும் பனி படர்ந்த மலைகளினால் சூழப் பட்ட
இந்தப்பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 4,000 மீட்டர் உயரத்தில்
இருக்கிறது. காட்மாண்டுவில் இருந்து சாலை வழியாகப் "போக்ரா" என்னும் ஊர் வந்து அங்கிருந்து குதிரை மூலமோ, நடந்தோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ மேலே போய் முக்தி நாதரைத் தரிசனம் செய்யலாம். ஆனால் நாங்கள் காட்மாண்டுவில் இருந்தே ஹெலிகாப்டர் மூலம் செல்லத் தயார் ஆனோம். ஏனெனில் சாலை வழி 3 நாள் பயணம் என்பதோடு அல்லாமல் எங்களில் விமானப் பயணம் மூலம் வந்தவர்களில் 16 பேருக்கு அன்றைய விமானம் மூலம் டெல்லி செல்ல டிக்கெட் தயாராக இருந்தது. ஆகவே
அன்றே போய்விட்டுத் திரும்ப வேண்டும். எதற்கு அறைச் சாவிகளைக் கொடுக்கச் சொல்கிறார்கள் என்பது தெரியாமலேயே சாவிகளைக் கொடுத்து விட்டு விமான நிலையத்திற்குக் கிளம்பினோம். வழியில் தான் தெரிந்தது ஒரு வேளை முக்திநாத்தில் இருந்து நாங்கள் திரும்பத் தாமதம் ஆனால் எங்களுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு
ட்ராவல்ஸ்காரர்கள் வந்து ஒப்படைப்பார்கள் என்று. உடைமைகள் பரவாயில்லை, அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடலாம் தான். ஆனால் நாங்கள் பெரும்பாலான பணத்தை லாக்கரில் வைத்திருந்தோம். சாவி எங்களிடம் இருந்தது. அது இருந்தால் தான் திறக்க முடியும். இல்லாவிட்டால் டெல்லி போய் வீட்டுக்குப் போகக்கூடப் பணம் மைத்துனனைத் தயாராக வைத்திருக்கச் சொல்ல வேண்டும். ஒரே குழப்பமுடன் தான் போனோம். விமானப் பயணம் என்பதால் எல்லாருடைய பாஸ்போர்ட்டுகளும் சோதனை செய்யப் பட்டு விமானச்சீட்டும் கொடுக்கப்பட்டு நாங்கள் ஏற வேண்டிய வாசலில் காத்திருந்தோம். அவ்வளவில் எங்கள் ஒருங்கிணைப்பாளர் சென்று விட நாங்கள் மட்டுமே 24 பேர்கள் காத்திருந்தோம். நேரம் செல்லச் செல்ல விமானம் வரும் அறிகுறியே காணோம். நேரம் நேபாள நேரப்படி 11 ஆனதும் தான் எங்களுக்கான விமானம் வந்தது. உடனேயே அறிவிப்புக் கொடுக்க நாங்கள் எல்லாரும் ஓடிப் போய் ஏறிக் கொண்டோம். 2 விமான ஓட்டிகளைத் தவிர எங்களுக்கு உதவ ஒரு பணியாளும் இருந்தார். சாதாரண விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் உள்ள வித்தியாசங்களைச் சொல்லிவிட்டுக் கட்டாயமாய் சீட்பெல்ட் போட வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டுக் காதில் வைத்துக் கொள்ளப் பஞ்சு போன்றவை கொடுத்தார். ஒரே சத்தம். விமானம் கிளம்பியது. சுற்றிலும் மலைகள், மலைகள், மலைகள். அதில் மிதக்கும் மேகங்கள். நீல வண்ண மேகம், வெள்ளை வெளேரென மேகம். பழுப்பு நிற மேகம். கறுப்பு நிற மேகம்.
கறுப்பு நிற மேகத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது. ஏனெனில் மழை வந்து விட்டால் என்ன செய்வது?பணி ஆள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரம் 40 நிமிடங்கள் என அறிவித்தார். 40 நிமிடங்களுக்குள் அங்கே உள்ள 108
தீர்த்தங்களிலும் குளிக்கிறவர்கள் குளித்து விட்டு ஸ்வாமியையும் தரிசனம்
செய்துவிட்டுக் கிளம்ப வேண்டும். முடியுமா? போய்க் கொண்டிருந்தோம்.

முக்திநாத் 108 வைணவத் திருப்பதிகளில் 106-வதாகப் போற்றப்படுகிறது.
இப்பெருமானைத் திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்களால் மங்களா சாஸனம் செய்யப் பெற்றது என்று சொல்கிறார்கள். மற்றத் திருப்பதிகளையும், பூரி, துவாரகா, அயோத்தி, பத்ரிநாத் போன்ற க்ஷேத்திரங்களையும் தரிசனம் செய்து விட்டே கடைசியில் முக்திநாதரைத் தரிசனம் செய்ய வேண்டுமென வைணவ
சம்பிரதாயப் படி ஐதீகம். நாங்கள் பூரியும், அயோத்தியும் போனது இல்லை. அதனால் என்ன? பரவாயில்லை விடக்கூடாது என முக்தி நாதர் தரிசனத்திற்குத் தயாரானோம்.

தவளகிரி மலைப்பிராந்தியத்தில் உள்ள இந்த முக்தி நாதர் கோவில் இருக்கும் இடத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில் "தாமோதர் குண்டம்" எனப்படும் குண்டம் உள்ளது. முக்திநாத் தலம் "கண்டகி" நதிக்கரையில் உள்ளது. கண்டகி நதி இத்தலத்தை ஒரு மாலை போல் சுற்றிக் கொண்டு ஓடுகிறது. பக்கத்திலேயே சாளக்கிராம மலை உள்ளது. மஹாவிஷ்ணுவே இம்மலையாக அவதாரம் எடுத்ததாய்ச் சொல்கிறார்கள். கண்டகியானது முற்பிறவியில் ஒரு வேசிப் பெண்ணாக இருந்து பின் அவளுடைய வெளிப்படையான மனத்தாலும், அவள் அனுஷ்டித்த தர்மத்தாலும் ஸ்ரீமந்நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்டு எந்நாளும் அவர் பாதங்களைப் பற்றிக் கொண்டு ஓட வரம் கேட்டதினால் "கண்டகி" நதியாக மாறி ஓடுகிறாள்.

கண்டகி நதி பற்றிய கதை தொடரும்.

5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இப்படி கோர்வையாக எப்படித்தான் எழுதுகிறீர்களோ.....மிக அருமை..ஏதோ நானே போய் வந்த உணர்வு...நன்றி...

Porkodi (பொற்கொடி) said...

color color megam unmailaye viyappana anubavam thaan, idha nanum anubavichuttene :) no perumoochu!

வடுவூர் குமார் said...

சரி,அடுத்து போக வேண்டிய இடத்தில் இதையும் சேர்க்கவேண்டும்.

துளசி கோபால் said...

கண்டகியில் சாளக்ராமம் நிறைய இருக்கா? உங்களால் எதாவது எடுக்க முடிஞ்சதா?

ச்சென்னையில் நம்ம கிரி ட்ரேடிங் கடையில் சாளக்ராமம்ன்னு ஒரு கூடை நிறைய வச்சு விக்கறாங்களெ,
அதெல்லாம் நிஜமானதான்னு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு.

உங்க பயணத்தைப் படிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்:-)

Geetha Sambasivam said...

@மதுரையம்பதி, நன்றி.

@போர்க்கொடி, அப்பாடி, இப்போவாவது பெருமூச்சு இல்லையே! :D

@வடுவூர் குமார், வாங்க, வாங்க உங்க முதல் பின்னூட்டம் எங்கேயோ இருக்கு, தேடலை.

@துளசி, சாளக்கிராமம் எடுக்கக் கண்டகியின் உற்பத்தி ஸ்தானத்துக்குக் கிட்டே போகணும். நாங்க அங்கே போக 2 நாளாவது ஆகும். எங்களுக்குக் கொடுக்கப் பட்ட நேரத்துக்குள்ளே முக்திநாத் தரிசனம் மட்டும் செய்ய முடிந்தது. சாளக்கிராமம் வாங்கி வீட்டில் வைப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் நாங்கள் வாங்கவில்லை.