எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, January 23, 2007

ஓம் நமச்சிவாயா -30

நட்புப் பாலம் வந்ததுமே எங்கள் வண்டி ஓட்டிக்குப் பரிசுப் பொருள் வாங்கிக் கொள்ளப் பணம் உதவி செய்து விட்டு அவரைக் கைகுலுக்கி நன்றி தெரிவித்து விட்டுப் பின் நாங்கள் நடையில் பயணத்தைத் தொடர்ந்தோம். கிட்டத் தட்ட 2 கிலோ மீட்டருக்கு மேல் கடைத் தெருக்களில் நடந்து பின் அங்கே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரவேண்டும். கடைகளில் யாரும் எதுவும் வாங்கும் மனநிலையில் இல்லை. சீக்கிரம் காட்மாண்டு போக வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லாரிடமும். பாஸ்போர்ட் அலுவலகத்தில் எல்லாரும் பழையமுறையில் வரிசையில் நின்று சீனாவை விட்டு வெளியேறுவதற்கான பதிவைச் செய்து கொண்டு மீண்டும் நடந்தோம். இப்போது நேபாளப் பாஸ்போர்ட் அலுவலகத்தில் வந்து சேர்ந்ததற்கான பதிவு செய்து கொள்ள வேண்டும். இது வரை எங்களுக்கு உதவி செய்து வந்த ட்ராவல்ஸ்காரர்கள் இந்த இடத்தில் எங்களை நீங்களே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டதால் சற்றுத் தடுமாறிப் போனோம். பின் அங்கே ஆங்கிலமும், ஹிந்தியும் செல்லும் என்பதால் வழிமுறைகளைக் கேட்டறிந்து பின் அங்கே வந்து சேர்ந்ததற்கான பதிவை முடித்துக் கொண்டு விட்டால் போதும் என்ற நினைப்புடன் எங்களுக்காகத் தயாராக இருக்கும் வண்டிகளை நோக்கி நடந்தோம். வண்டிகள் கிட்டத் தட்டப் பேருந்துகள் தயாராக நின்றன. எல்லாரும் வண்டிகளில் ஏறிக் கொண்டதும் அவை புறப்பட்டன. மீண்டும் ஒரு மலைப் பயணம். மிகுந்த ஆர்வத்துடன் பயணம் செய்யும் எல்லாரும் எப்போது கீழே இறங்குவோம் என்ற மன நிலையில் இருந்தார்கள்.

அப்போது ட்ராவல்ஸ்காரரில் திரு கிருஷ்ணா என்ற எங்கள் ஒருங்கிணைப்பாளர் மறுநாள் எங்களுக்கு எல்லாம் விமானத்தில் டெல்லி திரும்புவதற்கான பயணச்சீட்டு உறுதி செய்யப் பட்டுத் தகவல் வந்து இருப்பதாயும் எங்களில் யார், யார் "முக்தி நாத்" பயணம் செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டார். நாங்கள் எல்லாருமே "முக்தி நாத்" பயணத்தில் ஆர்வமாய் இருந்தோம். அதற்கு அவர் நாளை முக்திநாத் செல்ல ஏற்பாடு செய்யப்படும் ஹெலிகாப்டரில் மொத்தம் 24 பேர்தான் போகலாம் என்றும் அதில் இருவர் விமான ஓட்டிகள், மற்ற இருவர் பயணிகளின் தேவைகளைக் கவனிப்பவர் என்றும் மற்றபடி 20 பேர்தான் போகலாம் என்றும் உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டு தெரிவியுங்கள் என்றும் சொன்னார். இதற்கு நடுவில் ரெயிலில் வந்தவர்களும் மறுநாள் முக்தி நாத் போகவேண்டும் எனத் தெரிவிக்க அவர்களுக்கு ரெயில் கிளம்ப இன்னும் 2 நாள் இருப்பதால் அவர்களைப் பேருந்தில் "போக்ரா" போய் அங்கிருந்து ஹெலிகாப்டரில் அழைத்துப் போவதாய்ச் சொல்லவே ஒரு குழப்பம் வந்தது. ரெயில் பயணிகள் எங்களைப் பிரிக்கிறீர்கள்,விமானப் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எனச் சொல்லவே ஒரே விவாதம் வரவே சிலர் யாருக்கு உடல் நலமில்லையோ அவர்கள் வரவேண்டாம் எனச் சொல்ல நானும் இன்னும் உடல் நலமில்லாத சிலரும் தீவிரமாக மறுத்தோம்.

இது இப்படியே நிற்க, நாங்கள் அங்கே ஒரு மிகச் சிறந்த ஓட்டலில் சாப்பாடு முடித்துக் கொண்டு காட்மாண்டுவிற்கு மாலை 4 மணி அளவில் வந்து சேர்ந்தோம். அங்கே வந்ததும் அறைகள் கொடுத்ததும், மாலை மறுபடி ஒரு மீட்டிங் நடப்பதாயும் அனைவரும் வரவேண்டும் எனவும் கூறினார்கள். சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு கிட்டத் தட்ட 15 நாட்கள் கழித்து எல்லாரும் நன்றாகக் குளித்தோம். கடைகளுக்குச் செல்பவர்களும், தொலைபேசச் செல்பவர்களுமாக ஒரே மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது. மாலை 6-00 மணி அளவில் மீட்டிங் துவங்கியது. பயணிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லாருக்கும் அவரவர் புகைப்படத்துடன் கூடிய கைலை சென்று திரும்பியதற்கான சர்டிஃபிகேட் வழங்கப் பட்டது. பின் மறுநாள் செல்லக் கூடிய பயணத்துக்கான விவாதங்களில் முடிவு ஒன்றும் எட்டப் படாமல் போகவே அவர்கள் 24 பேர் உட்காரக் கூடிய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்வதாய்க் கூறினார்கள். ஒரு ஆளுக்கு இந்திய ரூபாயில் 13,500/- வீதம் எங்கள் இருவருக்குமாக ரூ.27,000/- கொடுத்தோம். பின் மானசரோவரில் இருந்து எடுத்து வந்த புனித நீர் தருவதாய்க் கூறினார்களே என எங்களுக்காகக் கேட்டோம். ஒரு 5 லிட்டர் பிடிக்கக் கூடிய கேன் 100ரூ/- கொடுக்க வேண்டும் எனவும், எங்கள் இருவருக்குமாக 250/-ரூ கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார்கள். அதிகம் 50ரூ ஒரு கேனுக்கு 25ரூ வீதம் 2 கேனுக்கு உள்ள பணம். நாங்கள் எடுத்து வந்த நீரே போதும் என்று சொல்லிவிட்டு கெளரிகுண்ட் நீர் மட்டும் கேட்டு வாங்கிக் கொண்டோம். பின் இரவுச் சாப்பாட்டுக்குப் பின் மறுநாள் காலை 7-30 மணிக்கு ஏர்போர்ட் புறப்பட வேண்டும் என்று சொல்லவே அதற்கும் மறுநாள் டெல்லி போகப்பிரயாணத்திற்குப் பொருட்களைப் பெட்டிகளில் பாக்கிங் செய்யவும் வேண்டும் என்று அறைகளுக்குப் போய் எங்கள் வேலையைத் துவங்கினோம். மறுநாள் காலை 7-30 மணிக்கு எங்கள் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு நாங்கள் விமான நிலையம் போக பேருந்து வரவுக்குக் காத்திருந்தோம். காத்திருப்பின் நடுவில் ட்ராவல்ஸ்காரர் ஏற்பாட்டின் படி கிரிஸ்டல், பவளம், நவரத்தினம், முத்துக்கள் போன்றவற்றால் செய்யப் பட்ட மாலைகள், நெக்லஸ்கள் முதலியனவற்றை விற்பனைக்கு எடுத்துக் கொண்டு சிலர் வந்தனர். எல்லாரும் அவற்றை (விலை கொஞ்சம் நியாயமாயும் இருந்தது) வாங்கினர்.

பேருந்திலேயே போயும் முக்திநாத் போகலாம். அதற்கு மூன்று நாளோ என்னவோ மலைப் ப்யணம் செய்து "போக்ரா" என்னும் ஊரை அடைய வேண்டும். சிலர் இந்த ஊரில் இருந்தே மலை ஏறிப் போய் முக்திநாதரைத் தரிசனம் செய்வார்கள். நடக்க முடியாத சிலர் ஹெலிகாப்டரில் போவார்கள். ஆனால் போக்ராவில் இருந்து ஹெலிகாப்டருக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்பதோடு அல்லாமல் அங்கே இருந்து 5 பேர் அல்லது 10 பேர் மட்டும் போகக் கூடிய ஹெலிகாப்டர்களே கிடைக்கும். போக்ராவிலும் பார்க்கக் கூடிய இடங்கள் இருப்பதால் அவ்வழியே போகிறவர்கள் காத்திருக்கும் நேரம் அங்கே பார்க்கக் கூடிய இடங்களைப் பார்க்க முடியும். ஆனால் முக்திநாத் பயணத்தை முடித்துக் கொண்டு பின் போனால் தான் நல்லது. ஏனெனில் முக்திநாத் பயணம் அது எங்கே இருந்து செய்தாலும் சரி, முற்றிலும் மலைகளுக்கு நடுவே உள்ள அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழி வான் வழி மட்டும் தான். இல்லாவிட்டால் மலை ஏற வேண்டும். இரண்டுமே கடினமானது. ஏனெனில் காலநிலை ஒரு நேரம் போல் மற்ற நேரம் இருக்காது. முக்திநாத் கோவிலுக்கு விமானத்தில் போய் இறங்கும் போது வெயில் அடிக்கும். ஆனால் சில சமயங்களில் திரும்பும் போது மழை வந்து விடும். ஹெலிகாப்டர் கிளம்ப முடியாது. மழை இல்லாமல் மேகங்கள் சூழ்ந்தால் இன்னும் மோசம். மழை என்றாலும் அங்கே எல்லாம் பெய்யும் மழையில் ஒன்றும் செய்ய முடியாது. இது எல்லாம் திரும்பத் திரும்ப எங்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. நம் அதிர்ஷ்டம் எப்படியோ என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஏன் என்றால் அன்றே மாலை நாங்கள் டெல்லி திரும்பவேண்டும். எல்லாரையும் அறைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போகும்படிச் சொல்ல நாங்களும் அறைச் சாவியைக் கொடுத்து விட்டோம். கையில் இருந்த பணத்தை மறுபடி அங்கேயே லாக்கரில் வைத்தோம். பேருந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டு முக்திநாத் போக விமான நிலையம் கிளம்பினோம்.

5 comments:

Porkodi (பொற்கொடி) said...

template mathitingla enna?

Geetha Sambasivam said...

நான் என்னத்தை மாத்தினேன்? யார் யாரோ எனக்காக மாத்திக் கொடுக்கறாங்க. எல்லாம் இந்த "ராம்" வேலைதான். அதான் கொஞ்ச நாளா ஒண்ணும் எழுதாம இருந்தேன். இனிமேல் எழுதணும்

Porkodi (பொற்கொடி) said...

இந்த டெம்ப்ளேட் படிக்க கொஞ்சம் கஷ்டமாயில்லை? இன்னும் கொஞ்சம் மாத்த சொல்லுங்க :)

Geetha Sambasivam said...

நல்ல கதைதான், தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்கச் சொல்றீங்களே? ஹிஹிஹி, ஒரு உதாரணத்துக்குச் சொல்றேன். நான் "ராமை"ச் சொல்லலை. அங்கே போய்ப் போட்டுக் கொடுத்துடாதீங்க! :D

வடுவூர் குமார் said...

இங்கு இவ்வளவு விஷயம் இருக்கா?