கைலைப் பயணம் என்பது என்னோட சின்ன வயசிலே இருந்தே ஆசை. முதல் முதல் எம்.என். நம்பியார் போனதைப்பத்தி ஆனந்த விகடனில் வந்திருந்தது,. அப்போ எல்லாம் போகமுடியும்னு நினைக்கவில்லை.
இப்போப் போயிட்டு வந்தாச்சு. எழுதியும் முடிச்சாச்சு. நடுவில் என்னோட உடல்நிலை காரணமாயும் கணினி பிரச்னையாலும் தொய்வு ஏற்பட்டாலும் ஓரளவு சீராக நினைவு இருந்தவற்றைத் தொகுத்திருக்கிறேன்.
திரு எஸ்.கே. அவர்கள் அவசரம் அவசரமாய் முடித்து விட்டேன் என்கிறார்.
பொற்கொடியோ என்றால் ரொம்பவே கஷ்டப்பட்டு, ஏன் போனோம்னு
நினைக்கிறாப்பலே இருந்தது போலிருக்கு என்று கேட்கிறாள். முக்திநாத் தரிசனத்தைப் பற்றி எழுதும்போது அதற்கு மேல் எழுத விஷயம் இல்லை. ஏனெனில் நாங்கள் அவசரம் அவசரமாய்த் தான் பார்த்தோம். திரும்பினோம். இன்னும் சொல்லப் போனால் விமான நிலையத்தில் 3 மணி நேரம் ஹெலிகாப்டர் வராமல் காத்துக் கிடந்தோம். அந்த நேரம் கூட அங்கே
செலவழிக்கவில்லை. ஆகவே கட்டுரையிலும் என் மனத்தில் உள்ள அந்த
அவசரத் தன்மை வெளிப்பட்டு விட்டது. இருந்தாலும் எழுதும்போதும் நினைத்துக் கொண்டேன். இதை ஏன் சீக்கிரம் முடிச்சுட்டீங்கன்னு யாராவது
கேட்பாங்களோன்னு. கொஞ்சம் சந்தோஷம் தான், இந்த மட்டும் நல்லா இல்லைன்னு சொல்லாமல் இப்படிக் கேட்டது. எஸ்.கே. அவர்களுக்கு என்னோட நன்றிகள். போர்க்கொடிக்கு (ஹிஹிஹி, பொற்கொடிக்கு) பயம் எல்லாம் ஒண்ணும் வேணாம். தைரியமாப் போகலாம். போயிட்டு வாங்க, வாழ்த்துக்கள்!
நாங்கள் குழுவோடு பயணமே செய்யாத காரணத்தால் எங்களுக்குக் குறைகள் அதிகமாய்த் தெரிந்திருக்கலாம். ஆனால் கைலைப் பயணம் குழுவாய்த் தான் போக முடியும். இந்தியா வழி போனால் கொஞ்சம்
கஷ்டமாய் இருந்தாலும், பிரயாண நேரம் அதிகமாய் இருந்தாலும், அது தான்
சரியானது. ஏனெனில் எங்களுக்கு மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவ உதவி
ஏதும் கிட்டாமல் காயம் பட்டுக் கொண்டவரும் சரி,. மற்ற உபாதைகளில்
தவித்தவர்களும் சரி, ரொம்பவே தவித்தார்கள். ஒரு மருத்துவர் இருந்தால்
குறைந்த பட்சமாய் உதவியாவது கிட்டுமே என,ஸ்ரீலட்சுமியின் மறைவுக்குப் பின் அது எல்லாருக்கும் ரொம்பவே குறையாகவே இருந்தது. நேபாளம் வழி செல்பவர்கள் நேபாளத்தில் இருந்தாவது மருத்துவர் யாரையாவது அழைத்துச் செல்லவேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்களிடம்வாக்குறுதி வாங்கிக் கொள்ள வேண்டும் அதே மாதிரி மானசரோவரில் பூஜைகள், ஹோமங்கள் செய்யவும் நேபாளத்தில் இருந்தாவது அழைத்துச் செல்ல வேண்டும். இதையும் "எக்கோ ட்ரக்" ட்ராவல்ஸ்காரரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவ உதவியும் கேட்கவேண்டும். நான் இதில் உள்ள குறைகளைத் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டுவதின் நோக்கமே நாங்கள் செய்த
தவறு மற்றவர்கள் செய்யக் கூடாது என்றுதான்.
மற்றபடி கைலைப் பயணத்திற்கு வண்டி ஏறியதில் இருந்து சாப்பாடோ, டீ,
காப்பியோ, பாலோ குறைவில்லை. ரொம்பவே நன்றாகவும், தாராளமாயும்
கொடுக்கிறார்கள். மானசரோவரில் புனித நீர்அவரவர் நல்ல கேனாய்க்கொண்டு போய் எடுத்து வைத்துக் கொள்வதே நலம்.
அவர்கள் சேமித்து வைத்துக் கொடுக்கிற புனித நீருக்கு ரூ.50/ம், கேனுக்கு ரூ.50/ம் கொடுக்க வேண்டி உள்ளது. அப்படியும் அநேகரோட
கேன் உடைந்து தண்ணீர் கொட்டி விட்டது. ஆகவே இதையும் தெளிவாக்கிக்
கொள்ளவும். தங்குமிடங்கள் எங்களுக்குக் கூடியவரை மட் ஹவுஸ் எனப்படும் களிமண்ணாலாகிய வீடுகள் கிடைத்தன. சில சமயங்களில் அதுவும் கிடைக்காது. அப்போது டெண்டில் படுக்கவும், ஸ்லீப்பிங்
பாகில் படுக்கவும் தயாராக இருக்கவேண்டும். ஜெர்கின் போன்றவை
சொந்தமாய் வாங்கிக் கொள்வதே நல்லது. ஏனெனில் அவர்கள் கொடுப்பது
வாடகையும் அதிகம். தொலைந்து போனால் அபராதமும் அதிகம்.
சொந்தமாய் வாங்கினால் மிஞ்சிப் போனால் 1,000/-ரூ அல்லது 1,500/-க்குள் வட இந்தியாவில் அதுவும் டெல்லியில் தாராளமாய்க் கிடைக்கும். வட இந்திய திருத்தலங்களில் யாத்திரை செய்யும்போதும் பயன் படும். அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத் இவற்றுக்கு மே மாதம் சென்றால் கூட இவை எல்லாம் தேவைப் படும். பெண்கள் இயற்கை உபாதைக்குக் கூடியவரை குழுவாகப் போவதே நல்லது. மறைவிடங்களோ, கழிப்பிடங்களோ, தண்ணீர் வசதியோ கிடையாது. ஆகையால் எல்லாம் எதிர்பார்த்தே போகவேண்டும்.
இந்தத் திருக்கைலைப் பயணத்தைக் கேலி செய்தவர்களும் உண்டு. ஒரு
பனிமலையைப் போய் சிவன் என்று சொல்கிறாளே என்றவர்களும் உண்டு.அது நாம் பார்க்கும் கோணத்தில் தான் உள்ளது. இறை உணர்வு நம்பிக்கையோடு சேர்ந்தது. அதை உணரத் தான் முடியுமே தவிரப்
புரிந்து கொள்ளவோ புரிய வைக்கவோ முடியாது. பொதுவாக நம் முன்னோர்கள் இயற்கையோடு இசைந்தே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். நாமும் அப்படித்தான் வாழ்கிறோம். ஆகவே இயற்கையின் ஒரு
அதிசயமான கைலை மலையை இறை வடிவில் காண்பது எவ்வாறு தவறு? மேலும் சங்க காலத்திலேயே சிவன், முருகன், திருமால் வழிபாடு இருந்து வந்துள்ளது. ஆகையால் இது ஒன்றும் புதுமை அல்ல. எங்களோடு வந்த வெளிநாட்டுக் காரர்கள் எங்களுடன் பூஜையிலும் கலந்து கொண்டு,
ரட்சைக் கயிறு கட்டிவிடச் சொல்லிக் கட்டிக் கொண்டு, எங்களைப் போலவே
"ஓம் நமச்சிவாயா" சொல்லிக் கொண்டு எங்களில் ஒருவராகவே இருந்தனர்.
இந்தக் கைலைப் பயணத்திற்குச் செலவு நிறையவே ஆகிறது. அதற்கும் தயாராக இருக்க வேண்டும். கர்நாடக அரசும், குஜராத் அரசும், இப்போது புதிதாக பாண்டிச்சேரி அரசும் இந்தக் கைலைப் பயணம் மேற்கொள்ளும்
யாத்திரீகர்களுக்குப் பண உதவி செய்கிறது. அம்மாதிரி மத்திய அரசும் செய்யலாம், செய்ய முடியும் என்பதே என் வேண்டுகோள். தற்சமயம் இந்தியச் சீன எல்லையில் கைலைப் பயணத்திற்கு உள்ள சாலையைச் செப்பனிடப் போவதாய் அறிவித்திருக்கும் இந்திய அரசு, சீன அரசுடன் பேசிச் சீனாவில் கைலைப் பயணம் மேற்கொள்ளும் நீண்ட மலைச் சாலைகளையும் இரண்டு அரசும் சேர்ந்து செப்பனிட்டு யாத்திரீகர்கள் வந்து தங்க வசதியும், கழிப்பிடங்களும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள். ஏனெனில் அதிகம் கைலைப் பயணம் மேற்கொள்ளுவது இந்தியர்கள் தான்.
அனைவரின் ஆதரவாலும், கைலை நாதனின் அருளாலும் இந்தத் தொடரை
ஒரு மாதிரியாக முடித்து விட்டேன். அடுத்துச் "சிதம்பரம்" பற்றிப் படித்துக்
கொண்டிருக்கிறேன். நேரம் வந்தால் ஆரம்பிக்கவேண்டும். தொடராகத் தான்
எழுத முடியும். விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அதற்கு வேண்டிய உடல் நலத்தையும், மனோநலத்தையும் கொடுக்கும்படி அந்தக் கைலை நாதனை வேண்டிக் கொண்டு இதை முடிக்கிறேன்.
ஓம் நமச்சிவாயா!
10 comments:
கீதா அம்மா!
கைலையாத்திரைத் தொடர் முழுவதுமாகப் படித்தேன். உங்கள் எழுத்துநடையும், குறிப்பிட்ட விபரங்களும், உண்மையில் நாமே யணம் செய்த அனுபவத்தைத் தந்திருந்தது. பாராட்டுக்களும், நன்றிகளும்.
கீதா, பெரும்பாலும் தொடர்ந்து படித்து வந்தேன். ஆனால் நடுவில் சிலசமயங்களில் விட்டுப் போனது.
பிடிஎஃப் பைலாய் மாற்றி உங்க பதிவில் ஓரமாய் போட்டு வைத்தால் மொத்தமாய் படிக்க விரும்புபவர்களுக்கு செளகரியமாய் இருக்கும் இல்லையா? எப்படி என்ன வென்று உங்க சிஷ்ய கோடிகளிடம் கேளுங்க. எனக்கும் இன்னொரு முறை படிக்க ஆவலாய் இருக்கிறது. அது என்னவோ சின்ன வயசில் இருந்தே மானசரோவர் ஏரியைப் பார்க்க வேண்டும் என்று ஒரு தாகம். ஹூம்,
இப்பத்தான் கடவுள் நம்பிக்கையில்லை என்று மங்கை பதிவில் சொல்லிவிட்டு, இங்க இப்படியான்னு கேட்காதீங்க :-)
ரொம்பவே நன்றி மலைநாடான். ஆரம்பத்தில் இருந்தே நீங்க கொடுத்த ஆதரவுக்கும், உதவிகளுக்கும் ரொம்பவே நன்றி.
@உஷா, நீங்க படிச்சது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. கொஞ்சம் விமரிசனம் செய்திருக்கலாம். பரவாயில்லை. pdf document with pictures-க்கு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மற்றபடி கடவுள் நம்பிக்கைக்கும் இதை நீங்க படித்துக் கருத்துச் சொல்றதுக்கும் சம்மந்தம் இல்லை. தாராளமாய்ச் சொல்லலாம். :D
அருமையாக இருந்தது தொடர். நன்றி. இந்த தொடர்தான் எனக்கு உங்களை அறிமுகம் செய்தது.....
தொடர் சார்பாக ஒரு அஷ்டாங்க ந்மஸ்காரம்....உங்களுக்கும்,உங்கள் கணவருக்கும்.
Maami, Just superb.ahzga arumaiya you have given us all the details and I felt as though I've travelled along with you.Thanks a lot.Poittu vandhavangalai saevicha romba vishaesham,they say.Andha bagyam yenakkum seekiram kidaikum yengira edhir parpil ,ippo ungalukkum Maama kum shashtanga Namaskaram panni kiren.
மதுரையம்பதி, அதான் வரமாட்டேன்னு சொல்லிட்டீங்களே! :D போகட்டும், முடிஞ்சப்போ வாங்க!
எஸ்.கே. எம். எப்போ வரீங்க? எப்போ பின்னூட்டம் கொடுக்கறீங்க? ஒண்ணுமே புரியலை! கைலைப் பயணம் போயிட்டு வந்ததாலே தான் என்னைப் பார்க்க வரும் நபர்கள் அதிகமாயிட்டு இருக்காங்க. பேசாமல் ஒரு சிறப்புத் தரிசனம் டிக்கெட் போட்டுடலாமான்னு இருக்கேன். :D
இப்போதுதான் கடைசி பகுதியையும் படித்து முடித்தேன்.
தொடர் முழுதும் விருவிருப்பாகவும், சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது.
மேலும் இடையே, கையிலைப் பயணம் பற்றியதொரு ஹாலிவுட் வீடியோ படத்தை பார்க்கும் போது, கூடவே தொடர் படிக்கவும், அந்த படத்திற்கு தொடர் பின்புலமாய் அமைந்ததும் நன்றாக இருந்தது.
பெரும்பாலும், இந்த தொடர் பதிவுகளை, என் மனைவி வாசித்துக் கேட்கும் பேறு பெற்றேன்!
இன்னைக்கு நேரம் கெடச்சது.படிச்சு முடிச்சுட்டேன்.
கைலைநாதனை கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க.எனக்கும் கைலைக்கு போகணும்னு ஆசை.ஆசைய கொடுத்த அவனே நிறைவேத்தியும் வைப்பான்னு வேண்டிக்கிட்டு இருக்கேன்.
உங்களுக்கு என்னோட பணிவான வணக்கங்கள்.
--rkp--
முக்திநாத் செல்வது தொடர்பாக தேடும் பொழுது உங்களின் இந்த கட்டுரைத்தொடர் கிடைத்தது. மிகவும் பயன்படக்கூடிய விசயங்களைத் தமிழில் எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
--சரவணன்
Thank you madam for sharing your travel experience. It is really very handy for everyone who plan to visit mount Kailas.
Post a Comment