எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 24, 2007

சிதம்பர ரகசியம் -3 - தல புராணம் - தொடர்ச்சி

புண்டரீகபுர மஹாத்மியம்:

தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் "ரகஸ்ய அத்தியாயம்" என்றும், "பாரத்வாஜ சம்ஹிதை" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், "யந்திர லட்சணம்" "சபா லட்சணம்", "மந்திரபுர சாரம்" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. "சிவ மஹா புராண"த்தில் உள்ள "ஏகாதச ருத்ர சம்ஹிதை"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.

திலவன மஹாத்மியம்:

ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் "சிதம்பர ரகஸ்யம்" பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.

வ்யாக்ரபுர மகாத்மியம்:

இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது.

Thursday, March 22, 2007

சிதம்பர ரகசியம் -தல புராணம்

சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படி சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது "சிதம்பர மகாத்மியம்" என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில் சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட "ஸ்கந்த மஹாபுராணத்தில்" உள்ள "சனத்குமார சம்ஹிதை" யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம் என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது."மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை வரும். (தொடரும்.)

Monday, March 19, 2007

சிதம்பர ரகசியம் -முன்னுரை

ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. ஆனால் அது ஒரு தொடராத் தான் வரும். ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதணும்னு இருக்கேன். அதற்காகவே இந்தப் பதிவுப் பக்கங்களை வேறு ஏதும் எழுதாமல் விட்டு வச்சிருக்கேன். பொதுவாகச் சைவர்களுக்குக் "கோயில்" என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவ கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். கொஞ்சம் ஹோம் வொர்க் செய்ய வேண்டும். ஆகவே சற்று நிதானமாய்த் தான் எழுத வேண்டும். பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.