எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, March 22, 2007

சிதம்பர ரகசியம் -தல புராணம்

சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படி சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது "சிதம்பர மகாத்மியம்" என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில் சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட "ஸ்கந்த மஹாபுராணத்தில்" உள்ள "சனத்குமார சம்ஹிதை" யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம் என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது."மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை வரும். (தொடரும்.)

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

தகவல்களை முடிந்த அளவில் தாருங்கள்.....காத்திருக்கிறோம்.

cheena (சீனா) said...

இத்தனை புத்தகங்கள் படித்தீர்களா - சிதம்பர ரகசியத்தை உலகுகு தெரிவிக்க அரும் பணி செய்கிறீர்கள். தங்களின் உழைப்பும், உளமாற ஈடுபடும் தன்மையும், தவறான தகவல்கள் தந்து விடக் கூடாதே என்பதில் உள்ள முனைப்பும் பாராட்டத்தக்கது. ஆன்மீகத்தொண்டுக்கு வாழ்த்துகள்.

Baskaran said...

Hallo Madam

அருமை . சிவன் ஆசிர்வாதம் தாங்களுக்கு உள்ளது.

நன்றி

பாஸ்கரன்

Geetha Sambasivam said...

ஈசனின் குறைவற்ற ஆசிகள் அனைவருக்குமே உள்ளது தம்பி.