
நடராஜர் உருவத்தைச் சிலையாகவோ படமாகவோ நாம் அனைவருமே பார்த்திருக்கோம். ஆனால் சிதம்பரம் நடராஜர் மட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தவர். அவரை நடராஜராஜர், சபாபதி, சபாநாயகர் என்றெல்லாம் அழைப்பது உண்டு. ஏனெனில் எல்லாக் கோயில் நடராஜர்களை விடச் சிதம்பரம் நடராஜர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். ஆடவல்லான் தனக்கெனக் கோயில் கட்டிக் கொண்டு வசிக்க ஆரம்பித்தது நம்மை எல்லாம் ஆட்கொள்ளத் தானே! இப்போது நடராஜரின் உருவ அமைப்பைப் பார்ப்போம். ஆடும் கோலத்தில் இடது பதத்தை மேலே தூக்கிக் கொண்டு ஆடும் இந்த நடராஜரை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் முடிந்த வரை சொல்கிறேன். நாட்டியத்தின் ஆதிகுருவான சிவன் ஆடும் இந்த ஆனந்தத் தாண்டவம் விவரிக்க முடியாத அழகுடனும், அதே சமயம் ஒரு விதமான திகிலுடனும் கூடியதாய்த் தோன்றுகிறதா? எனக்கும் அப்படித்தான். இறைவனின் இந்தப் புனிதமான அசைவுகளில் நம் உள் மனதின் பாவங்கள் பொசுங்கிப் போகும். அவன் அபிநயத்திலோ எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்ததாய் உள்ளது? ஆறு பாவங்களைக் காட்டுகிறது இந்த நாட்டியக் கோலம்.
அவை சிரு்ஷ்டி, ஸம்ஹாரம், வித்யா, அவித்யா, கதி, அகதி போன்றவையாகும். அவன் ஆடவில்லையென்றால் நாம் இயங்குவது எப்படி? உலக நன்மைக்காகவே இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் அவன் ஆடுவது எந்தப் பாடலுக்கு? "ஆகாத பூம்" என்ற தொனிக்கு இடைவிடாது ஆடுகிறான். இப்போ அவன் கோலத்தைப் பார்ப்போம்., வலது மேல் கையில் டமரூ என்று சொல்லப் படும் ஓசை எழுப்பும் கருவி, வலது கீழ்க்கையோ அபயம் காட்டுகிறது. இடது மேல் கையில் நெருப்பும், இடது கீழ்க்கை அவருடைய திருப்பாதத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய வலது கால் பாதம் முயலகனை அழுத்திக் கொண்டிருக்க, இடது காலைத் தூக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். நாகங்களை ஆபரணமாக அணிந்து கொண்டு, மண்டை ஓட்டு மாலை தரித்திருக்கிறார்.
நடராஜ ஸ்வரூபங்கள் அநேகம் இருந்தாலும் இந்த ஆனந்தத் தாண்டவ ஸ்வரூபத்தின் விசே்ஷம் தனி. இது நமக்கு சிருஷ்டியின் தத்துவத்தை உணர்த்துகிறது. சிரு்ஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்ரஹம் போன்ற ஐந்து தொழில்களையும் குறிக்கும். நடராஜர் தெற்கே பார்த்துக் கொண்டும் இருப்பார். இவரின் வடிவே "ஓம்" என்னும் ஓங்கார வடிவானது. ஓங்கார வடிவினுள் உள்ள பஞ்சாட்சர மூர்த்தியான இவரின் இந்தத் தரிசனம் நமக்கு என்ன உணர்த்துகிறது என்றால் முயலகன் போன்ற அசுர மனம் நமக்கு. அது பாம்புகள் போல் சீறிக் கொண்டு மேலெழும்பும். அந்த மனத்தை அடக்க வேண்டும். தியானம் என்ற நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கடைசியில் இறைவனை அடைய வேண்டும்.
இவருடைய நாட்டியம் இவ்வுலகையே ஆட்டுவிக்கிறது. எப்படி என்றால் நம்முடைய மனம் எவ்வளவு வேகமாய்ச் சிந்திக்கிறது? வாயுவேக மனோவேகம் எல்லாம் போதாஅது அல்லவா மனோவேகத்துக்கு. அந்த மனோவேகத்திலும், உடல் உணர்வுகளிலும், சிரிப்புலும், அழுகையிலும், பசியிலும், உணவு உண்ட திருப்தியிலும், ஆடலிலும், பாடலிலும், மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நடராஜர் இருக்கின்றார். இன்னும் கடல் அலைகள் சீறுவதிலும், சூரிய சந்திரர்கள் தோன்றுவதிலும், கிரஹங்களின் சுழற்சியிலும், பூமியின் இடைவிடாத சுற்றுக்களிலும், மஹா ப்ரளயத்திலும், கொடிய தொற்று நோய்கள் தோன்றும்போதும், பூகம்பத்திலும், எரிமலைகளிலும், சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளிலும், புயல் காற்றிலும், அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கும் இடிகளிலும், கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியிலும், பெருமழையிலும், சூறைக் காற்றிலும், பட்சிகளின் கிளுகிளுப்பிலும், விலங்குகளின் சப்தங்களிலும், பூக்கள் பூப்பதிலும், காய், கனிகளிலும், இன்னும் நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்திலும் நிறைந்திருப்பது அவரே!
(இன்னும் வரும்)
