எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, April 23, 2007

சிதம்பர ரகசியம் -9 - ஜெயிக்கப் போறது யாரு?!!!

ஆட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆடப் போவது யாரு? இந்த அகில உலகங்களையும் படைக்கும், காக்கும், அழித்துத் திரும்பப் படைக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனும், நாயகியும். இவங்க ஆடினதைப் பார்க்கப் போவது நாம் எல்லாருமே! ரெண்டு பேருக்கும் போட்டி வேறே யார் பெரியவங்க யார் சின்னவங்கன்னு! ஒண்ணிலே ஒண்ணாக இருக்கும் இவங்களிலே யாரைப் பெரியவங்க யாரைச் சின்னவங்கனு சொல்றது? அதுவும் புரியலை. நடுவர்களோ என்றால் சிவனை மட்டுமல்லாது அன்னையையும் போற்றித் துதிக்கும ்ரிஷி முனிவர்கள். சிவனின் தாண்டவத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பவர்கள். ம்ம்ம்ம், செருமிக் கொண்டு வருகிறாள் காளி யன்னை. இவள் எப்படிப் பட்டவள்? இதோ பாரதி சொல்கிறார்:
"காலமாம் வனத்திலண்டக் கோல மாமரத்தின் மீது
காளி சக்தி என்ற பெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவு மொரு வண்டு-தழல்
காலும் வழி நீலவன்ன மூல அத்து வாக்கனெனனும்
கால்களாறுடையதெனக் கண்டு- மறை
காணு முனிவோருரைத்தார் பண்டு."
ஆட்டம் ஆரமபி்க்கிறது. திக்குகள் எட்டும் அதிருகின்றது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்! இறைவன் பதில் கொடுக்கிறார். "தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்!" அகில உலகும் குலுங்குகிறது. அண்டமே குலுங்க ஆடிய இந்த ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார். காளியவளோ கலங்காமல் ஆடுகிறாள். இறைவனின் ஒவ்வொரு அபிநயத்துக்கும், பாவங்களுக்கும் சரியான பதில் கொடுக்கிறாள். ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையோ என அனைவரும் எண்ணும் வேளையில் இறைவன் செய்த ஒரு காரியத்தில் காளியன்னை வெட்கித் தலை குனிகிறாள். அவளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்படி என்ன செய்தார் ஈசன், சர்வேசன்? ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக் குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க் குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். ஆட்டத்தில் தேர்ச்சி இருந்தாலும் பெண்ணால் இவ்வாறு செய்ய முடியாது அல்லவா? பெண்கள் போன, போகும், போகப் போகிற தூரம் இவ்வளவு என்று வரையறுக்கப் பட்டிருக்கிறதல்லவா? அனைவரையும் படைத்த அன்னையானாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா? அவள் பெண்மை அவளைத் தடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனைப் பார்க்கிறார்கள். அப்போது இறைவன் அவர்களைத் திருவள்ளுவரிடம் போய்க் கேட்கச் சொன்னதாயும் அவர்கள் வள்ளுவரிடம் போய் இறைவன் ஏன் அவ்வாறு பாதி நாட்டியத்தில் செய்தார் எனக் கேட்க அவர் உடனேயே காதுக் குழையைப் போட்டுக் கொண்டாரே அதையா கேட்கிறீர்கள்?எனக் கேட்டதாயும் வள்ளுவரின் பக்தியையும் அவர் இருந்த இடத்திலேயே இறை தரிசனம் கிடைக்கப் பெற்றதில் இருந்து அவருடைய தனித் தன்மை வெளிப்பட்டதாயும் அவர் ஒரு சித்தர் என்றும் செவி வழிச் செய்திகள்.

காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். உடலில் ஒரு பாகம் ஆனவள் இந்த இடத்துக்குச் சண்டை போடுவாளா? எல்லாம் ஒரு நாடகம். நமக்காக. நாம் நம் எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் இறைவன் அவ்வாறு விட்டு விடுவாரா? நீ இந்த ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச் செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான்.
அவனுக்குத் தெரியாதா?
"ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்கு முளவாகும்- ஒன்றே
யாகினாலுகனைத்தும் சாகும்வை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் -இந்த
ாறிவுதான் பரமஞானமாகும்."
இவ்வாறு இறைவனுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விட்டுக் காளி போனதும் இறைவன் அங்கே குடி கொள்கிறான். தேவ சிற்பியான விஸ்வக்ரமா வந்து நடன அரங்கம் எழுப்பித் தருகிறார் இறைவன் ஆட. அதற்கு முதலில் இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியவேண்டும் அல்லவா? அதன் படி தானே நடன அரங்கம் எழும்ப முடியும்? முனிவர்கள் விஸ்வகர்மாவுக்குப் போதிக்க அதைக் கருத்தில் கொண்டு எழுப்புகிறார் "சித் சபை". ஆனால் நாம் முதலில் பார்க்கப் போவது "மூலநாதரை"த் தான். ஆதியில் குடி கொண்ட அவரை விட்டு விட்டு முன்னே போகக் கூடாது அல்லவா?

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

மதுரை மீனாக்ஷி கோவிலில், ஸ்வாமி சன்னிதிக்கு எதிரில் (கொடிமரம் பக்கத்தில்) இருக்கும் காளி சிலை அருகில் ஈஸ்வரன் தனது காலால் காதணியை அணிவது போலும், இதனால் காளி சற்று தலை தாழ்ந்தவாறு இருப்பதாகவும் அருகருகே சிலை இருக்கிறது. இந்தக்காளிக்குத்தான் வெண்ணைக் காப்பு நடக்கும். (தற்போது இதனை நிருத்திவிட்டனர் - பக்தர்கள் வெண்ணையைச் சார்த்தாமல் இறைவி மேல் விட்டு எறிவதாலும், அசுத்தம் எற்படுவதாலும்).

SKM said...

I have read all the episodes.Maami, romba arumaiya you are writing with all the interesting details.

arumai,arumai,arumai.Thanks.

dubukudisciple said...

maami
Subera ezhuthi irukeenga..
ella episodum iniki thaan padichen.. adunala thaaan iniki podaren.. naan ninaichen neenga ooruku poi irukeenga adunala ezhuthalainu

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆஹா நேரவே நாட்டியத்தைப் பார்த்த திருப்தி கிடைத்தது. உங்களுக்காக் எனது அடுத்தபாடல் ஆனந்த நடமாடுவார் தில்லை.உங்கள் பதிவின் தொடக்கமாக.
நல்ல பதிவு.பொன்னம்பலம் மீது எத்தனை ஆணிகள் இருக்கிறது தெரியுமா? அதனுடைய தாத்பர்யம் என்ன என்று எழுதுங்கள்