லிங்கோத்பவர் பத்தின புராணக் கதையைப் பார்த்தோம். இவரைத் தவிர வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்ய ஸ்வாமி சன்னதியும் உள்ளது. ஆறுமுகங்களோடு காட்சி அளிக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்குத் தினமும் கால தீபாராதனை நடராஜருக்குக் காட்டும்போது காலையிலும், மாலையிலும் இந்த இறை ஸ்வரூபங்களுக்கும் காட்டி வழிபாடு நடத்தப்படுகிறது.
பள்ளி அறை: எல்லாச் சிவன் கோவில்களிலும் பள்ளி அறை உண்டு. அவற்றில் சிவனின் உருவம் பிரதிஷ்டை செய்யப் பட்டு பள்ளி அறை மூர்த்தம் தனியாக இருக்கும். ஆனால் இந்தக் கோவில் தமிழ்நாட்டுச் சிவன் கோவில்களுக்கு எல்லாம் தலையாய கோயிலாகக் கருதப் படுவதால் இங்கே நடராஜரின் ரத்தினம் பதித்த தங்கப் பாதுகைகள் தான் தினசரி பள்ளி அறைக்கு எடுத்து வரப் படும். மிக மிக உன்னதமான வேலைப்பாடுடன் கூடிய இந்த அறையில் ஒரு வெள்ளி ஊஞ்சல் இருக்கும். அதில் தான் சிவகாமசுந்தரியோடு நடராஜரின் பிரதிநிதியான தங்கப் பாதுகைகளும் ஒவ்வொரு இரவிலும் கடைசி கால பூஜைக்குப் பின்னர் கொண்டுவரப் படும். தினமும் காலையில் ஒரு தங்கப் பல்லாக்கில் திரும்ப சித்சபைக்கு எடுத்துச் செல்லப் படும்.
ஆகாசலிங்கம்: பள்ளி அறைக்கு மேலே படிகள் ஏறிப் போய்ப் பார்க்கவேண்டும். (நான் இன்னும் பார்க்கவில்லை.)
ஜைமினி:ஜைமினி ரிஷியும் சிதம்பரத்துடன் நேரடியாகச் சம்மந்தப் பட்டவர். பதஞ்சலியையும், வியாக்ரமபாதரையும்போல அவரும் நடராஜரின் "ஆனந்தத் தாண்டவம்" தரிசனத்தைச் சிதம்பரத்தில் கண்டவர். ஆனந்த நடேசனின் தாண்டவம் பற்றி அவர் எழுதிய துதி "வேதபாத ஸ்தவம்" எனப்படும்.
பிக்ஷாடான மூர்த்தி: சிவனின் ஒரு ஸ்வரூபமான இவரும் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். ரிஷி, முனிவர்களின் பல்வேறுவிதமான கோரிக்கைகளுக்காகவும், செயல்களுக்ககவும் பல்வேறு ரூபங்களில் அவ்வப் போது சிவன் எடுத்த ஸ்வரூபங்களில் ஒன்று தாருகா வனத்து ரிஷிகளுக்கக அவர் எடுத்த பிக்ஷாடன ஸ்வரூபம். தாருகாவனத்து ரிஷிகளுக்காக சிவன் பிக்ஷாடனக் கோலத்திலும், விஷ்ணு மோகினிக் கோலத்திலும் நடனம் ஆடி ரிஷிகளின் அகம்பாவத்தைத் தகர்த்தனர். முதன்முதல் சிவன் பிக்ஷாடனக் கோலத்தில் தான் நடனம் ஆடியதாயும் அதுவும் தாருக்கவன ரிஷிகளுக்கு முக்தி கொடுப்பதற்காகவும், அதன் பின்னரே சிதம்பரம் சித்சபையில் பதஞ்சலி முனிவர், வ்யாக்ரபாதர் போன்றவருக்காக ஆடியதாயும் சொல்லப் படுகிறது. தெற்கே பார்த்து பிக்ஷாடனர் கோயில் கொண்டிருக்கிறார்.
கால பைரவர்: எல்லாச் சிவன் கோவிலிலும் வெளிப்பிரகாரத்தில் இருப்பார், காவல் தெய்வம். கோவிலையும், கோவிலின் சொத்துக்களும் இவர் பொறுப்பு என்று சொல்லும் வண்ணம் முன்னாட்களில் கோவிலைப் பூட்டிச் சாவியை இவர் சன்னதியில் வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. இவர் சன்னதியில் இருக்கும் சாவியை யாரும் எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. இவர் கூட இருக்கும் இவரின் வாகனம் ஆன நாயை இவர் ஏவி விட்டு அது வந்து பழிவாங்கும் என்றும் சொல்லப் படுவது உண்டு. காலப் போக்கில் இது மறைந்தாலும் இவரை வணங்குபவர்களுக்கு இவர் எல்லாவிதமான கஷ்டங்களையும் போக்குவார் என்றும், அஷ்டமி நாட்களில் இவரை வணங்குவது விசேஷமாகச் சொல்லப் படுவதும் உண்டு. அதுவும் பெளர்ணமிக்குப் பின்னர் வரும் அஷ்டமி நாளைத் திருமணம் ஆகாத வாலிபர்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்யப் படுகிறது. மேற்கே பார்த்து இவர் இருக்கிறார்.
சூரிய சந்திரர்: நவக்ரஹங்களுக்கு எனத் தனி சன்னதி இருந்தாலும், சூரிய, சந்திரர்க்கு கால பைரவருக்கு அடுத்தாற்போல் உள் பிரகாரத்தில் தனித் தனி சன்னதிகள் இருக்கின்றன.
இவர்களுக்கு அடுத்தாற்போல் வடக்கே பார்த்து தேவார மூவரின் சன்னதி இருக்கின்றது. முறையே அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் கோயில் கொண்டிருக்கிறார்கள்.
5 comments:
//பெளர்ணமிக்குப் பின்னர் வரும் அஷ்டமி நாளைத் திருமணம் ஆகாத வாலிபர்களுக்குச் சிறப்பு வழிபாடு செய்யப் படுகிறது.//
எங்க வீட்டில் தந்திரமா இதை மறைச்சிட்டாங்க, அடுத்த அஷ்டமி(பௌர்ணமிக்கு பின்னாடி வர்றதுதான்) நான் அங்க இருக்கேன். ;)
//தேவார மூவரின் சன்னதி இருக்கின்றது. முறையே அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் கோயில் கொண்டிருக்கிறார்கள்//
சம்பந்தப் பெருமான் எங்கே?
கீதா மேடம், மதுரையிலும் சுந்தரேசனுக்கு வெள்ளி பாதுகைகள் உண். அது ஸ்வாமி சன்னதிலிருந்து வெள்ளிப் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மன் சன்னதியில் உள்ள பள்ளிஅறைக்கு எதிரே அம்மன் சார்பாக வரவேற்ப்பு அளித்து உள்ளே ஊஞ்சலில் உள்ள பள்ளியறை மூர்த்தங்களுக்கருகில் இருத்தப்பட்டு, பின் உபசாரங்கள் நடக்கும்.
இப்பாதுகைகள் காலை திருவனந்தலில் மீண்டும் சுந்தரர் சன்னதி சென்ற பிறகே, மக்களுக்கு தரிசனம் கொடுப்பார்.
இதே போல அம்மன் சன்னதியில் அம்மன் பள்ளியறை செல்வதற்கு அடையாளமாக அவரது மூக்குத்தி பின்புறம் திருப்பபட்ட பின் திறையிட்டுவிடுவார்கள்.....
தாங்கள் சிவன் அருள் பெற்றவர்
எல்லோருக்கும் சிவனருள் நிச்சயம் உண்டு.
Post a Comment