எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, July 18, 2007

சிதம்பர ரகசியம் - கோவிந்த ராஜர் வந்தது எப்படி?

எழுதியே கிட்டத் தட்ட 10 நாள் ஆகிவிட்டது. உடல்நிலையும், வேலைப்பளுவும் தான் முக்கியக் காரணம். மேலும் அதிகம் யாரும் படிக்கிறாப்போலவும் தெரிவதில்லை, அதனால் ஏற்பட்ட மனச்சோர்வும் ஒரு காரணம். என்றாலும் எழுதி முடித்துவிடுவேன். நான் மட்டுமே படிச்சால் கூட. மதுரையம்பதி பின்னூட்டம் கொடுக்கலைனால் கூடப் படிப்பார்னு நம்பறேன். இனி, சிதம்பரம் போகலாம்.
*************************************************************************************

சரித்திரபூர்வமாக இந்தக் கோவில் 2-ம் நந்திவர்மன் காலத்தில் புதுப்பிக்கப் பட்டதாய்த் தெரிகிறது. திருச்சித்திரக் கூடம் என வைஷ்ணவர்களால் அழைக்கப் படும் இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. திருமங்கை ஆழ்வாராலும், குலசேகர ஆழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்தக் கோயில், அவர்களால் பாடப் பட்ட திருமொழியிலும் தீட்சிதர்கள் வழிபாடு செய்தது பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. குலசேகர ஆழ்வார் ராமபக்தியில் சிறந்தவர், ராமரைத் தொழுது வருவதே பிறவிப் பெரும்பயன் என நினைத்தவர், இந்தக் கோயில் கோவிந்தராஜப் பெருமாள் ராமர்தான் என மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்திருக்கிறார். அந்த ஸ்ரீராமன் தான் கோவிந்தராஜராக வந்திருப்பதாய் மனப்பூர்வமாக நம்பி வழிபாடு செய்து வந்துள்ளார்.

என்றாலும் சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை நடராஜருக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துப் பெருமாளை அவரின் பரிவார தேவதைகளில் ஒருவராகவே நினைத்து ஆராதித்து வந்திருக்கிறார்கள். காஞ்சியில் உள்ள சிவ- ஏகாம்பரநாதருக்கு விஷ்ணு பரிவார தேவதை என அங்கே உள்ள ஆதிசைவ குருக்கள் வைத்து வழிபாடு செய்வதைப் போல (இது பற்றிய உண்மையான தகவல் எனக்கு இன்னும் தெரியாது, கேட்டுத் தான் சொல்லவேண்டும்) சிதம்பரத்திலும், நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண வந்த பரிவார தேவதைகளில் ஒருவராகவே விஷ்ணுவை வழிபாடு செய்தனர். கிட்டத் தட்ட 10-ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது.

கோவிலின் நிர்வாகஸ்தர்களுக்குள் சிவன் கோவிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள், விஷ்ணு கோவிலைப் புறக்கணிப்பதாயும், வழிபாடு சரிவர நடைபெறவில்லை எனவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்தன. விஜயநகர சாம்ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் அச்சுத ராயன் என்பவன் காலத்தில் விஷ்ணு கோவில் புதுப்பிக்கப் பட்டும் வைஷ்ணவர்களின் ஆதிக்கத்தில் ஒப்படைக்கப் பட்டது. அத்தோடு நில்லாமல் "வைகானச சூத்ரம்" முறையில் வழிபாடுகள் நடத்தவும் ஆணை இட்டதாய்த் தெரிகிறது. இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களாய்த் த்வஜஸ்தம்ப மண்டபத்தின் கிழக்கே இருப்பதாயும் சொல்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க நாயன்மார்களில் முக்கியமான நால்வர்களின், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியவர்களில் முதல் மூவரின் பாடல்களில் சிதம்பரம் விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப் படவில்லை எனவும், மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர். மாணிக்கவாசகரின் திருச்சிற்றம்பலக்கோவையில் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாயும் சொல்கின்றனர். இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை. கூகிளில் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் போடுகிறேன்.

8 comments:

அபி அப்பா said...

என்ன கீதாம்மா இப்படி சொல்லிட்டீங்க! யாரும் படிப்பது போல தெரியலையா? ஹிட் கவுண்டர் போட்டு பாருங்க அப்ப தெரியும். கமெண்ட் போடலன்னா படிக்கலைன்னு அர்த்தமா? ரொம்ப ஆர்வமா படிக்கிறோம் இந்த தொடரினை. நான் ஏற்கனவே சொன்னது போல இதை புத்தகமாக கொண்டு வந்து இலவசமாக கொடுப்பது என் பணி! தொடர்ந்து எழுதுங்க! ஆர்வமா படிக்க நாங்க இருக்கோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது முதலில் தீட்சிதர்களால் தான் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது//

மூவாயிர நான் மறையாளர் நாளும்
முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ர கூடம் சென்று சேர் மின்களே
என்பது திருமங்கை பாசுரம் கீதாம்மா! அதில் தில்லை மூவாயிரவர் கையாலே வழிபாடு நடக்கும் கோவிந்தராஜப் பெருமாளைப் பற்றிச் சொல்கிறார் ஆழ்வார்!

//மாணிக்கவாசகரின் பாடல்களிலேயே விஷ்ணு கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவதாயும் சொல்கின்றனர்...இங்கே எனக்கு திருக்கோவையார் கிடைக்கவில்லை//

திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் "வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றிலில் அம் மாயவனே" என்று பாடுகிறார்!
கிடந்த கோலம் என்றும் வரங்கள் அருள்பவன் என்றும் குறிக்கிறார் கீதாம்மா!

இப்படி ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஒருங்கே பாடிய பெருமை, ஒரு சில திவ்ய தேசங்களுக்கு மட்டுமே உண்டு!

//வைகானச சூத்ரம்//
="வைகானச ஆகமம்"??

மெளலி (மதுரையம்பதி) said...

// மதுரையம்பதி பின்னூட்டம் கொடுக்கலைனால் கூடப் படிப்பார்னு நம்பறேன்//

அடடா!!! தவறு என்னுதுதான், நானும் வைரல் அட்டாக்-ல இருந்ததால் படித்தேனே தவிர, பின்னூட்டம் தரவில்லை....மன்னிக்கவும்....

மேடம், முடிந்த சமயத்தில் எழுதுங்கள் கண்டிப்பாக படிக்க ஆளிருக்கிறது.....

Geetha Sambasivam said...

@அபி அப்பா, வரீங்கன்னா சந்தோஷம் தான். இருந்தாலும் வந்ததுக்கு ஒரு "உள்ளேன் அம்மா" போடலாம் இல்லை? :P

@மதுரையம்பதி, உடம்பு இப்போப் பரவாயில்லையா? ரொம்ப நாளா அதான் காணோமா உங்களை? உடம்பைப் பார்த்துக்குங்க, பின்னூட்டம் மெதுவாப் போடுங்க, நான் பதிவு எழுதற வேகம் அப்படி ஒண்ணும் நல்லா இல்லையே! என்ன செய்யறது?

@கண்ணன், உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன், நீங்கள் இதைஎல்லாம் ஒரு பதிவாகவே போட்டு அனைவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கலாமே, எத்தனை விஷயங்கள்? ஆனால் சென்னையில் என்றால் எந்தப் புத்தகம் தேவையோ, அதை எப்படியாவது வாங்கி அதிலே ஆதாரங்களைப் பார்த்துக் கொள்ள முடியும், இங்கே கூகிளில் அதுவும் இந்தக் கணினியில் சில வலைப்பக்கங்கள் வருவதே இல்லை, பார்ர்க்க முடிகிறதில்லை. :D

Geetha Sambasivam said...

வைகானச ஆகமம் தான் வைகானச சூத்திரம் என்று குறிப்பிட்டுள்ளேன், கண்ணன், இன்னொன்று பாஞ்சராத்திர முறை, உங்களுக்குத் தெரியாதது இல்லை. :D

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா / கே.ஆர்.எஸ்,

வைகானசம், பாஞ்சராத்திரத்திரம் இரண்டும் வைணவ முறை வழிபாடுதானே.....என்ன வேறுபாடு?.... விளக்குவீர்களா?....

Geetha Sambasivam said...

மதுரையம்பதி, இது ராமானுஜரைப்பின்பற்றுகிறவர்களும், ஸ்ரீமத் வேதாந்த தேசிகரைப் பின்பற்றுபவர்களும் ஏற்படுத்திய வேறுபாடுன்னு நினைக்கிறேன். ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்தியது "பாஞ்சராத்திரம்"ங்கிற வரை தெரியும். மற்றது பதில் கிடைத்ததும் சொல்கிறேன்.

ஜெயஸ்ரீ said...

//மேலும் அதிகம் யாரும் படிக்கிறாப்போலவும் தெரிவதில்லை //

என்ன இப்படி சொல்லிட்டீங்க ? விடாம
படிக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்க