எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, August 03, 2007

சிதம்பர ரகசியம் -நிருத்த சபைக்கு வந்துட்டோமே!

ஒரு வாரமா எழுத நினைச்சும் ஒண்ணுமே முடியலை. உடம்பு சரியில்லை என்பது ஒரு பக்கம். முக்கியக் குறிப்புக்களை எடுக்க முடியாமல் எங்கேயோ வச்சுட்டு இன்னிக்குத் தான் தேடி எடுக்க முடிஞ்சது. சிலர் தினமும் போடாதே, ஒரு வாரம் ஒண்ணு எழுதுன்னு சொல்றாங்க, விஷயத்தை நாங்க புரிஞ்சுக்க முடியறதில்லைனு அவங்களோட வருத்தம், இன்னும் சிலருக்குத் தினமும் எழுதலியேன்னு. நானும் 2 நாளுக்கு ஒரு முறையாவது எழுதிடணும்னு நினைப்பேன். முடியறதில்லை. இப்போ நிருத்த சபைக்குப் போவோமா?
********************************************************************
நிருத்த சபை என்பது வெளிப் பிரகாரம். இங்கே நாம் இப்போது தரிசிக்கப் போவது பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப் பட்ட சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும். இந்த சோமாஸ்கந்தர் இங்கே வந்ததுக்கும் ஒரு கதை இருக்கிறது.

வனவாசம் செய்து வந்த பஞ்ச பாண்டவர்கள் தருமபுத்திரரின் பிறப்புக்குக் காரணம் ஆன தர்மராஜனின் உபதேசத்தின் பேரில் சிவனைத் துதிக்க நல்ல இடம் தேடினார்கள். அதற்கு அவர்கள் தென்பகுதி தான் உகந்தது என முடிவெடுத்து வந்தபோது சிதம்பரம் பற்றிக் கேள்விப் பட்டு சிதம்பரம் வர "கால முனிவரின்" உபதேசத்தின் பேரில் தாங்கள் இழந்த ராஜ்யத்தைப் பெறுவதற்கும், வாழ்வின் மேன்மைக்கும் சிவபூஜை செய்ய, சிவன் சோமாஸ்கந்தரின் வடிவில் நடனக் கோலத்துடன் அவர்கள் எதிரே தோன்றி அனுக்கிரகம் செய்ததோடு அல்லாமல், ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜ ரூபத்தையும் காட்டி அருளினார். அப்போது முதல் இந்த மூர்த்தம் "பஞ்ச பாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்தி" என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் நிருத்த சபையின் வடபாகத்தில் இவரும் வடக்கே பார்த்துக் கொண்டே காட்சி அளிக்கிறார்.

காலசம்ஹார மூர்த்தி: இவர் பஞ்சபாண்டேஸ்வர அனுக்ரஹ மூர்த்திக்கு அருகேயே மேற்கே பார்த்துக் கொண்டு காணப் படுகிறார். பொதுவாக காலசம்ஹார மூர்த்தி, மார்கண்டேயருடனும், திருக்கடையூருடனுமே தொடர்பு கொண்டிருந்தாலும் இங்கேயும் காணப் படுகிறார்.

அடுத்தது ரொம்ப முக்கியமானவர். சரபர்: இவரைப் பற்றி ஏற்கெனவேயே "திவாகர்' கேட்டிருந்தார். இவருக்கு இங்கே தனிச் சன்னிதியே உள்ளது. தனியான பூஜைகள், அர்ச்சனைகள், அபிஷேஹங்கள் எல்லாம் உண்டு. இவரும் அந்த சிவபெருமானின் ஒரு ஸ்வரூபம் தான் என்றாலும் இவரின் தோற்றம் விசித்திரமாய் இருக்கும். இவர் மனித ரூபத்திலும், பறவைகள் போல் இறக்கைகளுடனும், மிருகங்கள் போன்ற உடல் அமைப்பிலும் காணப் படுவார். இவரின் தோற்றம் பற்றிப் பல புராண்ங்கள், உபனிஷதங்கள், ஆகமங்கள் பலவிதமாய்க் கூறினாலும் காளிகாபுராணம் கூறுவது என்னவென்றால்: நாளை பார்ப்போமா?

1 comment:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, இவ்வளவு நேரம் முழித்திருந்ததுக்கு ஒரு நல்ல பதிவு படிக்க கிடைத்தது....நன்றி....நீங்கள் எழுதியபின் நானும் சரபர் பற்றி சிறிது பகிர்கிறேன்.