எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, August 09, 2007

சிதம்பர ரகசியம் - திருமுறை கண்ட விநாயகர்!




நிருத்த சபையில் சற்று உயரமான இடத்தில் மேற்கே பார்த்துக் கொண்டு ஒரு விநாயகர் சன்னதி காணப்படுகிறது. அந்த விநாயகரைத் தரிசனம் செய்வது என்றால் ஏணியின் படிகளில் ஏறிப் போய்த் தான் பார்க்கவேண்டும். "உச்சிப் பிள்ளையார்" என்று அழைக்கப் படும் இந்த விநாயகரைத் திருமுறை கண்ட விநாயகர் என்றும் சொல்கின்றனர். நாயன்மார்களால் எழுதப் பட்ட "பன்னிரு திருமுறைகள்' இந்தச் சிதம்பரம் கோவிலில் ஒரு அறையில் சுவடிகளாய் அடைபட்டுக் கிடந்தது. பத்தாம் நூற்றாண்டில் "நம்பியாண்டார் நம்பி' அவர்களின் வேண்டுகோளின் பேரில், அந்தச் சுவடிகள் அங்கு இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜன் அந்தச் சுவடிகளை அங்கிருந்து மீட்டு உலகுக்கு அதை அர்ப்பணித்தான். (இது கொஞ்சம் விரிவாய் எழுத நினைத்தேன், நேரம் இன்மையால் சுருக்கி விட்டேன். ) அப்போது நம்பியாண்டார் நம்பியின் வேண்டுதலின் பேரிலும், மன்னனின் வேண்டுதலின் பேரிலும் அவர்களுக்குப் பன்னிரு திருமுறைகள் இருக்குமிடத்தைச் சுட்டிக் காட்டியது இந்த விநாயகர் அருளினால் தான் என்று கூறுகிறார்கள். அன்றிலிருந்து இந்த விநாயகர் "திருமுறை கண்ட விநாயகர்" என அழைக்கப்படுகிறார். இவருக்கு அருகே உள்ள சிவலிங்கத்தைச் சிலர் "தாயுமானவர்" என்றும், வேறு சிலர் "மாயூர நாதன்" என்றும் அழைக்கின்றனர். எப்படி இருந்தாலும் சிவனருள் நமக்கு நிச்சயமாய்க் கிட்டும்.

இதே பிரகாரத்திலேயே தேவார நால்வர் ஆன அப்பர்,சு ந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்காக ஒரு கோவில் கிழக்கே பார்த்துக் காணப்படுகிறது. தினமும் தீவிர சைவர்களும், ஓதுவார்களும் இந்தச் சன்னதியில் அமர்ந்து தேவாரம் ஓதுவது வழக்கம். கோவிலுக்கென்று அமைந்த ஓதுவார்கள் இங்கே ஓதுவதோடு மட்டுமின்றி கனகசபையில் அவர்களுக்கென்று நியமித்த நேரத்தில் கால வழிபாட்டின் போதும், மற்றச் சமயங்களிலும் தேவாரம் ஓதுவது உண்டு. தினந்தோறும் தீட்சிதர்களில் யாராவது ஒருவரால் தேவார நால்வருக்கும் அந்த, அந்தக் கால பூஜைகளும் நடைபெறுகிறது.

அடுத்து வருபவர் ஞானகுருவான தட்சிணாமூர்த்தி. பெயருக்கேற்பத் தென் திசை நோக்கி இருக்கும் இவரின் தோற்றமும், சின்முத்திரை காட்டும் அழகும் எல்லார் மனதையும் கவர வல்லது. சிவனின் பல்வேறுவிதமான லீலா விநோதங்களில் அவர் பல ரூபங்கள் எடுத்தார். அப்படி எடுத்த இந்த ஞான ஸ்வரூபம் மெளனத்தின் மூலமே நமக்கு உண்மையை உணர்த்துகிறது. சனத்குமாரர், சனகர், சனந்தனர், சனாதனர் நால்வருக்கும் மெய்ப்பொருளை அறியும் ஆவல் ஏற்பட்டது, அதற்காக அவர்கள் தகுந்த குருவைத் தேடி அலைந்தபோது ஒரு கல் ஆல மரத்தின் அடியே அவர்கள் ஞான ஸ்வரூபம் ஆன ஒரு இளைஞன் சின்முத்திரை காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கண்டனர்.

அவர்களை அறியாத உணர்வால் தூண்டப் பட்ட நால்வரும் அங்கே அமர்ந்து குரு உபதேசம் பெற முயற்சிக்க, உபதேசம் பெறாமலேயே அந்த ஞானகுருவின் மெளனத்தின் மூலமும், அவர் காட்டிய சின் முத்திரையின் மூலமுமே அவர்கள் மெய்ப்பொருளைக் கண்டறிந்தனர். அன்று முதல் எல்லாச் சிவன் கோவிலிலும் தட்சிணா மூர்த்தி ஸ்வரூபம் ஞானகுருவாக, வழிகாட்டியாக வணங்கப் படுகிறது. குருவாரம், அல்லது வியாழக்கிழமை என்று சொல்லப் படும் கிழமையில் வெள்ளைக் கொண்டைக்கடலையை ஊறவைத்து மாலை கட்டி இந்த தட்சிணாமூர்த்திக்குச் சாற்றி, வழிபட்டால் எல்லா ஞானங்களும் பெறலாம் என்பதோடு அல்லாமல் அஞ்ஞானமும் அகலும். முக்கியமாய்ப் படிப்பு நன்கு வராத மாணவ, மாணவிகள் இவரை வழிபட்டால் நன்கு பலன் பெறலாம். நம்பிக்கைதான் முக்கியம்.

4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா,

ராஜராஜனுக்குத்தான் திருமுறை கிடைத்தது என்பதற்கு ஏதேனும் பாடல்கள் இருக்கிறதா (சிவாஜி நடித்த படத்தில் அப்படி உள்ளது தவிர)...நான் படித்த புத்தகத்தில் அனபாய சோழன் தான் திருமுறைகளைக் கண்டெடுத்ததாக் படித்த ஞாபகம்....

Geetha Sambasivam said...

ராஜராஜனுக்குத் தான் திருமுறை கிடைத்தது, மெளலி. மேலும் அநபாய குலோத்துங்கன் காலத்தில் கம்பரின் ராமாயண அரங்கேற்றம், சேக்கிழாரின் பெரிய புராணம் ஆகியவை வந்து விட்டன என்று படித்த நினைவு. அதற்குப் பல ஆண்டுகள் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட திருமுறைகளைத் தேடித் தொகுத்தவர், நம்பியாண்டார் நம்பி அவர்கள் தான். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் கிடைக்கவில்லை என்றாலும், மதுரை ப்ராஜெக்டில் உமாபதி சிவாசாரியாரின் திருமுறை கண்ட புராணத்தைப் பற்றிய லிங்க நண்பர் ஒருவர் தற்செயலாய்க்கொடுத்திருந்தார். அது தருகிறேன். போய்ப் பார்க்கவும்.

tamilnation.org/literature/pmunicode/mp213.htm

jeevagv said...

ஆதி குருவின் அம்சங்களை விளக்கியதற்கு நன்றி!

Unknown said...

நால்வரை பற்றி வள்ளலார் என்ன?
திருநாவுக்கரசர் தாச மார்க்கத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக தொண்டு செய்து வாழ்ந்தார்! திருஞானசம்பந்தர் சற்புத்திர மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக சிவையால் பாலூட்டி வளர்க்கப்பட்டார்.பிள்ளை கைநோகுமோ என பொற்றாளம் ஒலிக்க அருளினாள்! சுந்தர மூர்த்திகள் சக மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! சிவனே இவனுக்காக தூது சென்றாராம்! சிறந்த தோழர் சிவனுக்கு! மாணிக்கவாசகரோ சன்மார்க்கத்துக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்தார்! நானே நீ நீயே நான் என உணர்ந்தார்! உரைத்தார்! உறைந்தார் ஒளியிலே! இந்நால்வரும் வடலூரரை கவர்ந்த ஞானவான்கள்! திருவருட் பிரகாச வள்ளலார் எப்போதும் திருவாசக பெருமை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார் எனச் சொல்வர்! .... read complete article at
http://gnanasarguru.blogspot.in/2012/11/blog-post_14.html