
ஊர்த்துவ தாண்டவம் : சிவனின் தாண்டவக் கோலங்களில் குறிப்பிடத் தக்கதான இது, காளிக்கும், இறைவனுக்கும் நடந்த போட்டியைக் குறிப்பதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தக் கோலத்தில் ஆடலரசனின் வலக்காலானது அவரின் திருமுடியைத் தொட்டவாறு காணப் படும். நாட்டிய சாஸ்திர வகைகளில் இது "லலாட திலகா" என்னும் வகையைச் சேர்ந்தது
எனச் சொல்லப் படுகிறது. வலக்காலால் தன் நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ளும் கோலம் எனச் சொல்லப் படுகிறது. இத்தனை மேலே ஒரு பெண்ணான தன்னால் காலைத் தூக்கி ஆட முடியாது என்பதால் காளி வெட்கித் தலை குனிந்து தன் தோல்வியை ஒப்புக்
கொண்டதாயும் சொல்லப் படுகிறது. "சண்ட தாண்டவம்" எனவும் "காளி தாண்டவம்"
எனவும், "சம்ஹார தாண்டவம்" எனவும் அழைக்கப் படும் இந்தக் கோலம்
திருவாலங்காட்டிலும் காணக் கிடைக்கிறது. சிதம்பரத்தில் காளி, சிவனுடன் போட்டி
இட்டுத் தோல்வி அடைந்தாள் எனச் சொல்லப் பட்டாலும், திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ
நடராஜரைக் காணலாம்.

திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது. திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்ட ஐயன், தன் சிரிப்பாலேயே அவர்களை எரித்ததாய்க் கூறப்படும் வேளையில் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தை பிரம்மா தானே படமாய் வரைந்ததாய்ச் சொல்லப் படுகிறது. மிக அரிய வகையான சித்திரங்களையும் இறைவனின் 64 திருவிளையாடல்களைப் பற்றிய அரிய சித்திரங்களையும் இங்கே காணலாம். இங்கே ஒரு தாமிரத்தினால் ஆன சிறிய நடராஜர் திரு உருவம் இருந்திருக்கிறது. நாங்கள் போன போது பார்க்க முடியவில்லை. :( எந்த நேரத்திலும் அழியக் கூடிய கோலத்தில் பாதி நிறம் மங்கியும், சில இடங்களில் நிறம் மங்காமலும் நடராஜர் மிகப் பரிதாபமாய்க் காட்சி அளிக்கிறார். வருகை தரும் மக்கள் தங்களாலான சித்திரங்களை அந்த உயரிய சித்திரங்கள் மீது வரைந்திருப்பதையும் காண முடிகிறது. அரிய பொக்கிஷம் என உணர இன்னும் எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை! :((((((
வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சியின் திருமணத்துக்கு வந்திருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற ரிஷி, முனிவர்கள், தாங்கள் தினசரி தரிசிக்கும் நடராஜத் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் உணவு உண்ண முடியாது எனச் சொல்லவே அவர்களுக்காக ஆடப்பட்டது வெள்ளியம்பலக் கூத்து. இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத் தாண்டவம் எனவும்
அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்". வலக்காலைத் தூக்கி ஆடும் இந்தக் கோலம் மதுரையில் மட்டுமே காணக் கிடைக்கும். யு.எஸ்.ஸில். ஹூஸ்டன் நகரின் மீனாட்சி கோவிலிலும் நடராஜர் வலக்காலைத் தூக்கி ஆடிய வண்ணமே அருள் பாலிக்கிறார்.
இது தவிர, ராமநாதபுரம் மாவட்டத்துத் திரு உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர்
திரு உருவம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்று. இந்த மரகதநடராஜரைச் சுய உருவில் காணவேண்டுமானால், மார்கழித் திருவாதிரை அன்று மட்டுமே காண முடியும். மற்ற நாட்களில் அவர் மேல் சந்தனக் காப்பு சாத்தப் பட்டே காண முடியும். இவரை அன்னையின்
வேண்டுகோளுக்கிணங்கி அறைக்குள் அன்னை மட்டுமே காணுமாறு ஆடியதாய்க் கூறுகின்றனர். "அறைக்குள்" ஆடியது திரு உத்தரகோசமங்கையிலும், "அம்பலத்தில்" சிதம்பரத்திலும் ஆடியதாய்க் கூறப்படுகிறது. இவற்றைத் தவிர எல்லாச் சிவன் கோவில்களிலும் நடராஜ மூர்த்தம் இருந்து வந்தாலும், இந்திரனிடம் இருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியினால் பெறப்பட்ட 7 விதமான நாட்டிய பாவங்களைக் காட்டும் "விடங்க மூர்த்தி"களும் உள்ளனர். நாளை பார்ப்போமா?
2 comments:
இந்த ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தி திருவாலங்காட்டில் மட்டுமே இடது பதம் தூக்கி இருப்பார். மற்ற இடங்களில் வலது பதம் தூக்கி ஆடுவார். இதைக் குறிப்பிட் மறந்து விட்டேன்.
ஒரே ஒரு முறை உத்ரகோசமங்கை நடராஜரை திருவாதிரையன்று கண்டிருக்கிறேன்....அபிஷேக நேரத்தில் அட, அட....நினைவுபடித்தியமைக்கு நன்றி....
ஆமா! ப்ரதோஷகாலத்தில் நந்தியம்பெருமானுடைய இரு கொம்புகளுக்கிடையே நடனமாடியதாக சொல்கிறார்களே...அது எந்த வகை?,அது பற்றி ஏதேனும் செய்திகள் உண்டா?
Post a Comment