மேலே உள்ள "ஊர்த்துவத் தாண்டவம்" திருவாலங்காட்டில் காணக் கிடைப்பது. இந்தத் திருவாலங்காடு, சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில், சென்னைக்கு மேற்கே 37 அல்லது 40 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத் தலம் தான் "ரத்னசபை" ஆகும். இன்னொரு திருவாலங்காடு, ஆடுதுறைக்கு அருகே உள்ளது. அந்தத் தலம் "ரத்னசபை" அல்ல. இன்று அபி அப்பாவுடன் சில சந்தேகங்கள் கேட்கும்போது அவர் ஆடுதுறை அருகே உள்ள தலம் தான் ரத்னசபை என நினைத்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலருக்கும் சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்காகவே மீண்டும் நினைவு படுத்தி உள்ளேன். இங்கே மட்டும் இடக்காலைத் தூக்கி ஆடியபடி நடராஜர் இருப்பார். மற்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தக் கோலத்தைத் தான் நாட்டிய சாஸ்திரத்தில் "லலாட திலகம்" எனச் சொல்லப் படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இறைவன் தன் காதுக் குழையை மாட்டிக் கொள்ளக் காலைத் தூக்கியதாகச் சொல்லப் படுகிறது. அதுவும் சரி அல்ல. வலக்காலைத் தூக்கி அதன் உதவியால் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் அபிநயம் அது. இப்போது இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
*************************************************************************************சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கைலையில் இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து, அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு, அந்தணர்களாக மாறி, அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும், இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். அந்தச் சிவ கணங்களே "தில்லை வாழ் அந்தணர்கள்" என்று கருதப் படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
(தி. 7 ப.39 பா.1)
திருச்சிற்றம்பலம்.
என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கூறுகின்றார். திருஞானசம்மந்தரும் தில்லைவாழ் அந்தணர்களைத் தாம் சிவகணங்களாகவே கண்டதாய்க் கூறுகிறார். நடராஜரையும், சிவகாமசுந்தரி அம்மையையும் தங்களில் ஒருவராகவே காணும் அவர்கள் இன்றுவரை தில்லைச் சிதம்பரம் கோயிலில் நடராஜருக்குப் பூஜை செய்யும் உரிமையையும், கோவிலின் நிர்வாக உரிமையையும் தாங்களே வைத்துக் கொண்டு பணி செய்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களையும், அவர்களின் பணி எத்தகையது என்பதையும் சிறிது பார்க்கலாம்.
5 comments:
பஞ்சகிருத்திய நடனம் என்பது என்ன?...
மதுரைக்காரர்கள் மினாக்ஷியை தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைப்பது நினைவுக்கு வந்தது.
@மதுரையம்பதி, ஐந்து தொழில்களையும் இறைவன் செய்யும் போது ஆடும் நடனம் தான் சிதம்பரத்தின் ஆனந்த நடனம். இது தான் பஞ்ச கிருத்திய நடனம், சிதம்பர ரகசியமும் இதுவே!
தியாகராஜர் இருந்தாடும் அழகர் என்றே அழைக்கப்படுகிறார். நாம் மூச்சு விடும் போது நமது மார்பு எவ்வாறு மேலும் கீழுமாக செல்கின்றதோ அது தான் அஜபா நடனம்.
தங்களின் முழு இடுகையும் கண்டேன். ஆராய்ச்சிகள் செய்து அருமையாக எழுதுகின்றீர்கள்.
திருக்கயிலாய தரிசனக் கட்டுரை அற்புதம். படங்கள் இல்லாமலிருந்தது வேண்டுமென்றால் http://kailashi.blogspot.com ல் இருந்து இறக்கிக் கொள்ளவும்
@மதுரையம்பதி, தியாகராஜர் பற்றிய சந்தேகம் தெளிந்ததா இப்போ?
@கைலாஷி, வாங்க, முதல் வரவுக்கு நன்றி, உங்களோட பதிவுகளுக்கு நான் அப்போ அப்போ வந்து பார்த்துக் கொண்டு புதுசா ஏதும் இருக்கானும் தேடிட்டு வருவேன், படங்கள் எடுத்த வரைக்கும், pdf document -ல் சேர்த்திருக்கிறேன். சில படங்கள் வீணாகி விட்டது. டிஜிட்டல் காமிரா இல்லை எங்களிடம், தவிர, ஃபிலிமும் தீர்ந்து விட்டது, ஆகவே கைலையின் சில தோற்றங்கள் எடுக்க முடியவில்லை. நீங்கள் இந்திய வழி சென்றிருக்கிறீர்கள், என் உடல்நிலை காரணமாக நாங்கள் நேபாள வழியாகச் சென்றோம். இந்திய வழியில் செல்ல முடியவில்லையே என்ற குறை இன்னும் இருக்கிறது, எங்களுடன் இந்திய வழியில் வந்திருந்த யாத்ரீகர்களும் நாங்கள் தங்கின அதே தங்குமிடத்தில் தங்கினார்கள். அவர்கள் சொன்னதில் இருந்து முக்கியமான இடங்களை இந்திய வழியில் தான் பார்க்க முடியும் எனத் தெரிந்தது. உங்கள் பதிவுகள் மூலமும் அறிந்து கொண்டேன். உங்கள் உதவிக்கும் நன்றி. தேவைப் படும்போது படங்கள் இறக்கிக் கொள்கிறேன்.
நன்றி, ஆருத்ரா தரிசன சமயத்தில் நடராஜர் இடுகைகளில் புது பக்கங்கள் இனைக்க ஆண்டவன் ஆனை அப்போது வந்து தரிசனம் பெறவும்.
Post a Comment