
"எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம் சிவானந்த லஹர், சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி, இந்திய அணுசக்தித் துறை, இந்திய அரசாங்கம்). இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தரவேண்டும்? நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்??
கிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும், அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும், சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது.
பன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப் பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும், மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும், இயங்குவதும், பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படைத் தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.
நடராஜ வடிவின் உட்பொருள்: ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது.
நடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும்போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல்,அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும்போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் , ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.
(இன்னும் தொடரும்)
3 comments:
உடுக்கை சத்தமும் பெரு வெடிப்பு சத்தமும் same க இறுக்கம் என்று நினைகிறேன்.
big bang நடந்த பொழுது சிவபெருமான் எங்கு இருந்தார்
யாமறியோம் பராபரமே!
Post a Comment