எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, March 01, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 3

இதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா? அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.
வண்டியை விட்டுக் கீழே இறங்கச் சொன்னாங்கனு சொல்லி இருந்தேன் அல்லவா? இது வரை வந்த பாதைகளில் நம்ம எலும்புகள் கழன்று போச்சு என்றால், இங்கே அதை விடக் கொடுமை. வண்டி தன் நாலு சக்கரங்களிலும் செல்லாது. ஒன்று முன் சக்கரத்தில் ஒன்றாலோ அல்லது பின் சக்கரத்தில் ஒன்றாலோ மேலே ஏறிக் கீழேயும் இறங்கணும். பாதையோ என்றால் கேட்கவே வேண்டாம். நடந்தால் முட்டிகள் அன்றே தேய்ந்து போயிடும். அதுவும் முட்டி வலி என்றால் என்னனு தெரியாத என் கணவருக்கு இதுக்கு அப்புறம் முட்டியே தேய்ந்து போய் இன்னமும் வலி இருக்கு முட்டியில். அவ்வளவு கடினமான கரடு, முரடான பாதைகள்.
ஆனாலும் நாங்க ஐந்து வண்டியில் இருந்த மொத்தம் 45 பேரும் இறங்கி நடந்தோம். பக்கத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப்கள் தொடர்ந்தன சில அடி தூரத்தில். கிட்டத் தட்ட ஒரு ஃப்ர்லாங்காவது இப்படிப் போகவேண்டி இருக்கு. நமக்குத் தான் கஷ்டம், ஆனால் அக்கம்பக்கம் உள்ள மக்கள் முதல் நாளே புறப்பட்டு இந்தக் கடினமான பாதையில் கிட்டத் தட்ட ஏழு கிலோமீட்டர்கள், போகவரப் பதினான்கு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, அங்கேயே மரத்தடியில் இரவைக் கழித்து நரசிம்மரை வழிபடுகின்றனர். நாமோ? என்னிக்கோ ஒருநாள் பயணமே முடியலை. கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனால் என்ன அதிசயம்??? அங்கே மாமிச வாடை வருகின்றதே? ஏதேனும் நாட்டார் கோயில் இருக்கோ?? ம்ஹும் இல்லையே? அப்போ இந்த மாமிசம்?? அங்கே ஏறிச் சென்று பார்த்தால் தெரிகிறது.
இதோ ஏறிக் கொஞ்சம் சுமாரான பாதைக்கு வந்துட்டோமே. இனிக்கொஞ்ச தூரத்தில் கோயில் தான். கோயிலில் பட்டாசாரியார் இருப்பாரோ? இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன?? ஆஹா! ஏற்பார், ஏற்பார், தாராளமாய் ஏற்பார். அதுவும் தன் அன்பு மனைவிக்காக ஏற்கின்றார். நரசிம்மர் இங்கே மாப்பிள்ளை ஆச்சே?
இந்த மேடு ஏறி மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.
தேவர்களும் கண்டு அஞ்சும் தன் நரசிம்மத் திருவுருவைக் கண்டு அஞ்சாத இவளே, தன் தக்க துணை எனத் தெளிந்த நரசிம்மமும், அவளை மணக்க இசைய, அந்த மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்தும், கெளரவமும் ஏற்பட்டது. தன் பிரியமான மனைவிக்காகவே மாமிச உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து அவளைச் சாப்பிடச் செய்தாராம் இந்த நரசிம்மர். தங்களில் ஒருத்தியான செஞ்சுலட்சுமி, நரசிம்மரின் கரம் பற்றியதைக் குறித்துக் கர்வம் மிகக் கொண்ட அந்த செஞ்சு இன மக்கள் தங்கள் செஞ்சு லட்சுமிக்குப் பிரியமான உணவு என்ற காரணத்தாலே இன்றும் அவளுக்கு இதைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சனிக்கிழமைகளில் இங்கே அதிகம் பலி இருக்கும் என்று சொல்கின்றனர். நாங்கள் சென்றதும் சனியன்றே. ஆகவே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அநேகமாய் டிராக்டர்களிலேயே வருகின்றனர்.

பவன நதிக்கரையில் கை, கால்கள் சுத்தம் செய்து கொண்டு மேலே ஏறினோம். நரசிம்மர் ஆதிசேஷன் குடையின் கீழ், தன் மனைவியான செஞ்சு லட்சுமியை இடது தொடையில் இருத்திய வண்ணம் காட்சி அளிக்கின்றார். சங்கு, சக்ர,தாரியாய், சாந்த சொரூபத்தில் சுக ஆசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடக்காலை மடித்துக் காட்சி அளிக்கின்றார். வலக்கீழ்க்கரம் நாடி வந்த நமக்கு அபயம் அளிக்க, இடக் கீழ்க் கையால் மனைவியைக் கட்டி அணைத்திருக்கின்றார். இந்தப் பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்டஎண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து நாம் தரிசிக்கப் போவது மாலோல நரசிம்மர்.

மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.

வழக்கம்போலப் பாசுரங்கள் கிடைத்த வண்ணம் போட்டிருக்கேன். நன்றி.

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள் இங்கே பார்க்கவும். சோம்நாத் பற்றிய கட்டுரை கொஞ்சம், கொஞ்சமாய்த் தயார் ஆகின்றது. போட ஆரம்பித்ததும் அறிவிப்பு வரும். நன்றி.

6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

செஞ்சு லக்ஷ்மி நரசிம்ஹருக்கு நமஸ்காரம். மாலோல நரசிம்ஹருக்குக் காத்திருக்கிறேன்.

Raghav said...

செஞ்சுகவல்லி சமேத நரசிம்ஹரை இங்கேயே வணங்கிக்கிறேன் கீதாம்மா..

Raghav said...

கீதாம்மா, என் நண்பன் போன வருடம் சென்று வந்தவன், அவனிடம் கேட்ட போது, மேல் அஹோபிலம் வரை பாதை நன்றாக இருந்ததாக சொன்னானே..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

செஞ்சுலட்சுமியின் மாப்பிள்ளையை மாரி முலை முழைஞ்சில் போய் அருமையாக் கண்டிருக்கீங்க போல, கீதாம்மா! நீங்க எடுத்த படங்களும் போடுங்களேன்!

Geetha Sambasivam said...

வாங்க மெளலி, நன்றி.

ராகவ், முதல் நாள் பயணம் மட்டுமே இது. மறுநாள் நடக்கணும். நீங்க சொல்றாப் போல் மேல் அஹோபிலம் வரையிலும் பேருந்து தான். அதுக்கு அப்புறம் அங்கிருந்து 14 கி.மீட்டருக்கு மேல் நடக்கணும், மலைப்பாதையில்.

Geetha Sambasivam said...

கேஆரெஸ், பிரிண்ட் போடவே இன்னும் கொடுக்கலை, அடுத்தடுத்து ஊர்களுக்குப் போய் வந்ததில் வீட்டில் தங்கிப் போன சில முக்கியமானவற்றை முதலில் பார்த்துட்டு அப்புறம் இதை வச்சுக்கணும். போட்டுட்டுக் கட்டாயமாய் விபரங்களும் கொடுக்கிறேன். எத்தனை வந்திருக்குனும் தெரியலை! :)))))))))